பகல் பத்து ஆறாம் நாள்
திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள்
வைகுண்ட ஏகாதசி வஜ்ரங்கி சேவை
நம் கலியன் குமுதவல்லி நாச்சியாருடன்
ஆழ்வார்களின் திருமொழிகள் சேவிக்கப்படுவதால் "திருமொழித் திருநாள்" என்றும் அழைக்கப்படும் பகல் பத்து உற்சவத்தின் ஆறாம் நாள் முதல் பத்தாம் நாள் வரை திருமங்கையாழ்வாரின் 'பெரிய திருமொழி' சேவிக்கப்படுகின்றது. ஆழ்வார்களில் கடை குட்டி திருமங்கையாழ்வார். அதிகமான திவ்ய தேசங்களை மங்களா சாசனம் செய்தவரும் இவரே. இவருக்கு உள்ள தனி சிறப்பு பெருமாளே இவருக்கு அஷ்டாக்ஷ்ர மந்திரம் உபதேசம் செய்தது. ஆழ்வாருடைய அடியார்க்கடிமையைக் கண்ட இறைவன் இவருக்கு அருள் புரிய எண்ணி திருமணக் கோலத்தில் சிறந்த அணிகலன்களுடன் தானும் பெரிய பிராட்டியுமாக இவர் பதுங்கி இருக்கும் வழியில் வந்தார். திருமணங்கொல்லையில் திருவரசனடியில் பதுங்கியிருந்த பரகாலர் அவர்களை தன் துணைவர்களுடன் வழிப்பறி செய்தார். அப்போது மணமகன் காலிலிருந்த மோதிரம் கழற்ற முடியாமல் போகவே பல்லால் கடித்து வாங்க பெருமாள் இவரை நம் கலியன் என்று அழைத்தார். பறித்த பொருள்களை மூட்டையாகக் கட்டி தூக்க முயன்ற போது மூட்டை இடம் பெயராததால் பரகாலர் மணமகனை "என்ன மந்திரம் செய்தாய்?" என்று வாள் வீசி மிரட்டினார்.
மணமகனான எம்பெருமான் மந்திரத்தை கூறுவதாக அருகே அழைத்து பெரிய திரும்ந்திரம் எனப்படும் அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசித்து பெரிய திருவடி மேல் பிராட்டியுடன் சேவை சாதித்தார். மெய்ப்பொருள் உணர்ந்த பரகாலர் "வாடினேன் வாடி வருந்தினேன் ..... கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்" என்று பாடத் தொடங்கினார்.
6 ம் நாள் முதல் இரண்டு பத்துக்கள் சேவிக்கப்படுகின்றன வட நாட்டுத்திருப்பதிகள் திருப்பிருதி, திருவதரி, திருவதரி ஆசிரமம், திருசாளக்கிரமம், நைமிசாரணியம், சிங்கவேள்குன்றம், திருவேங்கடம் மற்றும் தொண்டை நாட்டுத்திருப்பதிகள் திருவெள்ளூர்,திருவல்லிக்கேணி, திருநீர் மலை, திருகடல்மல்லை, திருவிடவெந்தை, திருவட்டபுயகரம்,திருபரமேச்சுர விண்ணகரம், நடு நாட்டுத் திருப்பதி திருக்கோவலூர் ஆகிய திவ்ய தேசங்களின் பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன.
இன்று திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி பெருமாள் பரமபத நாதன் திருக்கோலம். நெய் தீவட்டியுடன் உட்புறப்பாடு மாலை ஆறு மணிக்கு. கார்த்திகை பௌர்ணமியிலிருந்து தைல காப்பு கண்டிருந்த மூலவர் தரிசனம் இன்று மாலை ஆறு மணி முதல். இன்று முதல் வைகுண்ட ஏகாதசி வரை பெருமாளை மீசை இல்லாமல் சேவிக்க இயலும்.
திருமயிலையில் கேசவப் பெருமாளும் பரமபத நாதன் திருக்கோலம்.
No comments:
Post a Comment