Pages

Wednesday, January 27, 2010

நாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -4

அஹோபில யாத்திரை

ஜ்வாலா ந்ருஸிம்ஹர்:



எங்கிருக்கிறான் உன் நாராயணன் என்ற ஹிரண்யனின் அறை கூவலுக்கு பதிலாக தூணிலும் இருப்பார்! துரும்பிலும் இருப்பார் என்றவுடன், கோபத்தின் உச்சியில் அவன் தன் கதையினால் தனது ஆயிரம் தூண்கள் கொண்ட அரண்மனையின் ஒரு தூணை தாக்க அதே நொடி சிம்ஹ முகமும், மனித உடலும், வஜ்ர நகங்களும் கொண்டு தோன்றிய கோலமே ஜ்வாலா ந்ருஸிம்ஹர். தற்போது வேத கிரியில் உக்ர ஸ்தம்பத்தின் கீழே ஒரு குகையில் அமைந்துள்ளது ஜ்வாலா ந்ருஸிம்ஹர் சன்னதி. சன்னதியில் மூன்று கோலங்களில் சேவை சாதிக்கின்றார் பெருமாள். முதலாவது தூணில் இருந்து பிரகலாதன் வார்த்தையை மெய்பிக்க நரசிங்கமாக வெளி வரும் கோலம். இரண்டாவது ஹிரண்யன் பெற்ற வரத்தை முறியடிக்க அவனுடன் போரிட்டுக் கொண்டே அவனது தலை முடியைப் பிடித்து அவனை இழுத்துக் கொண்டு உள்ளும் இல்லாமல் வெளியும் இல்லாத தலை வாயிலுக்கு அவனை இழுத்து செல்லும் கோலம். மூன்றாவது கோலம் எட்டு கரங்களுடன் இரணியனை மடியில் கிடத்தி இரு மேற் கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி இரு கரங்களினால் ஹிரண்யன் காலை அழுத்திப் பிடித்துக் கொண்டு இரு கரங்களால் அவனது குடலை எடுத்து மாலையாகப் போட்டுக் கொள்ளும் உக்ர கோலம். பெருமாள் உக்ரத்துடன் ஸ்தம்பத்தில் இருந்து வெளியே வந்ததால் இவர் ஜ்வாலா ந்ருஸிம்ஹர் என்று அழைக்கப்படுகின்றார்.

அஹோபில (உக்ர) ந்ருஸிம்ஹர்:

உக்ர நரசிம்மரும் செஞ்சு லக்ஷ்மித் தாயாரும்

மேல் அஹோபிலத்தின் முக்கிய கோவில் அஹோபில ந்ருஸிம்ஹர் கோவிலாகும். இவர் உக்ர நரசிம்மர் என்றும் அழைக்கப்படுகின்றார். கருடன் செய்த கடும் தவத்திற்கு மெச்சி இரணியனை தனது மடியில் போட்டு வதை செய்யும் கோலத்தில் சத்திய சொரூபனாக மலைக் குகையில் நெருப்பின் உக்கிரத்தோடு சுயம்புவாக தோன்றிய மூர்த்தி. உக்ர நரசிம்மரின் எதிரே கருடனையும் சேவிக்கலாம். ஆதிசங்கரர் ஸ்தாபித்த லிங்கம், ந்ருஸிம்ஹ சுதர்சன சக்கரம் மற்றும் செஞ்சு லக்ஷ்மி தாயாரை இக்கோவிலில் சேவிக்கலாம்.

மாலோல ந்ருஸிம்ஹர்:


மாதவன் போல மாலோலன். மா – என்றால் திருமகள், லோலா – என்றால் காதல். அதாவது லக்ஷ்மி மேல் காதல் கொண்டவர். மஹாலக்ஷ்மித்தாயாருடன் ஸ்ரீய:ப்பதியாய் லக்ஷ்மி ந்ருஸிம்ஹராக சேவை சாதிக்கின்றார் பெருமாள். பெருமாளின் இடத்தொடையில் அமர்ந்து ஆலிங்கன கோலத்தில் சுகாசனத்தில் அமர்ந்து ஆனந்தமாக சேவை சாதிக்கின்றார். அஹோபில மடத்தின் திருவாதாரன மூர்த்தி இவரே. தானே கனவில் வந்து காட்சியளித்து சந்தேகம் தீர்த்தவர் இவர். அஹோபில மட ஜீயர் சுவாமிகள் தாங்கள் செல்லும் இடமெல்லாம் மாலோல நரசிம்ம உற்சவ மூர்த்தியை தங்களுடன் கொண்டு சென்று தினப்படி ஆராதனை செய்கின்றனர்.

க்ரோடா ந்ருஸிம்ஹர்:



க்ரோடா என்றால் கோரைப்பல். கோல வராகமாக தோன்றி ஹிரண்யனின் தமையன் ஹிரண்யாக்ஷன் பாதாளத்தில் ஒளித்து வைத்த மண்மகள், தனது பிராட்டியாரை தன் கோரைப் பற்களில் எந்தி வந்து தாயாருக்கு சரம ஸ்லோகத்தை உபதேசிக்கும் கோலத்தில் சேவை சாதிக்கின்றார். அருகில் லக்ஷ்மி ந்ருஸிம்ஹரும் சேவை சாதிக்கின்றார்.

காரஞ்ச ந்ருஸிம்ஹர்:



காரஞ்ச என்றால் தெலுங்கில் புங்க மரம் என்று பொருள் அனுமன் செய்த தவத்திற்க்கு மெச்சி இராமனாக சேவை சாதிக்க வனத்தில் சுயம்புவாக தோன்றிய நரசிம்மர். விஷ்ணுவாக அல்ல இராமனாகவே தரிசிக்க விரும்புகின்றேன் என்று அனுமன் வேண்ட, வில் அம்பு தாங்கி இராமராகவும், ஆதி சேஷன் குடை பிடிக்க வைகுண்ட நாதனாகவும் சேவை சாதிக்கின்றார் பெருமாள். இராவண வதத்திற்காக மெச்சி பெருமாள் அனுமனை ஆலிங்கனம் செய்ததால் அனுமனின் கரங்களில் சங்கு சக்கரங்கள் உள்ளன.

பார்கவ நரசிம்மர்:


பார்கவர் என்ற முனிவரை எல்லாரும் அறிவோம், திருமகள் தன் குழந்தையாக வர வேண்டும் என்று தவம் செய்து ஸ்ரீயை மகளாகப் பெற்ற சிறப்புடையவர். இவர் பெருமாளை நரசிம்ம மூர்த்தியாக தரிசிக்க வேண்டும் என்று தவம் செய்ய தோன்றிய மூர்த்தி பார்கவ நரசிம்மர். கீழ் அஹோபிலத்தில் உள்ளது இத்திருக்கோவில் ஒரு சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது. பார்க்கவ புஷ்கரணியும் குன்றின் அடிவாரத்தில் உள்ளது. இரணியனை தன் மடியில் படுக்க வைத்து அவன்து குடலை எடுத்து மாலையாகப் போடும் உக்ர நரசிம்மராக சேவை சாதிக்கின்றார் பார்கவ நரசிம்மர். மேலும் தசாவதார சேவையும் கொடுத்ததால் தாசாவதார அம்சங்களை சேவிக்கலாம். அருகில் கை கூப்பி பெருமாளின் கருணையை வியந்த வண்ணம் ப்ரகலாதன் நிற்கின்றான். ஹிரண்யனின் வலக்கரத்தில் அவனது வாளை காணலாம்.


யோகானந்த ந்ருஸிம்ஹர்:



ப்ரஹலாதனுக்கு குருவாக அமர்ந்து யோகநெறி கற்பித்த நரசிம்மர். ஆதி சேஷன் மேல் கால்களை மடக்கி யோக கோலத்தில் யோக முத்திரையில் சேவை சாதிக்கின்றார் பெருமாள். இவர் சன்னதி அருகில் அன்னதானம் 24 மணி நேரமும் நடந்து கொண்டிருக்கின்றது. அன்னதாதா கட்டிய யோக நரசிம்மர் சன்னதியும் அருகிலேயே உள்ளது.


சத்ரவட ந்ருஸிம்ஹர் :



சத்ரம் என்றால் குடை, வடம் என்றால் ஆலமரம். ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் ஆனந்தமாக அமர்ந்து ஆஹா ஊஹா என்னும் இரு கந்தவர்களின் இனிமையான சங்கீதத்தை செவி மடுத்துக் கொண்டு சேவை சாதிக்கும் சாந்த நரசிம்மர். பத்மாசனத்தில் அமர்ந்து கந்தவர்களின் இசைக்கேற்ப இடது தொடையில் தாளம் போதும் கோலத்தில் அற்புதமாக சேவை சாதிக்கின்றார் பெருமாள், அவரது சிரிப்பு நம்மை வா என்று அழைத்து நலம் விசாரிக்கும் கோலமாக உள்ளது. நவ மூர்த்திகளிலும் பெரிய மூர்த்தி இவர்தான்.


பாவன ந்ருஸிம்ஹர்:




நம்முடைய வினைகளை தீர்த்து இந்த பவசாகரம் என்னும் சுழலில் இருந்து நம்மை கரையேற்றி இப்பிறவிப் பிணியிலிருந்து நம்மை காப்பாற்றுபவர். மாலோல நரசிம்மர் போல லக்ஷ்மி ந்ருஸிம்ஹராக சேவை சாதிப்பவர். லக்ஷ்மித்தாயார் செஞ்சு லக்ஷ்மி, ஆம் மருகன், முருகன் வேடர் குலப் பெண் வள்ளியை திருமணம் செய்து கொண்டது போல செஞ்சு இனத்தில் பிறந்த பெண்ணை திருக்கல்யாணம் செய்து கொண்ட பெருமாள். தனியாக உயர்ந்த மலையில் கோவில் கொண்ட பெருமாள். இன்றும் வேடர் குல மக்கள் தங்கள் குல வழக்கப்படி மாமிசம் படைத்து வழிபட அதை ஏற்றுக் கொண்டு அருள் கொடுக்கும் பெருமாள்.



சாந்த நரசிம்மர்:



இந்த நவ நரசிம்மர்கள் அல்லாது கீழ் அஹோபிலத்தில் பிரகலாத வரதர், சாந்த நரசிம்மர், என்னும் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயமும் உள்ளது. புஷ்கரணியுடன் , ஜெயஸ்தம்பம் என்று விஸ்தாரமாக அமைந்துள்ளது திருக்கோவில். இவ்வாறு பெருமாள் பிரகலாதனுக்காக தூணிலிருந்து வெளி வந்த உக்ர ஸ்தம்பம், இரணியன் வதம், இரத்தம், ஆக்ரோஷம், அடங்காமல் கர்ஜனை செய்தது பின் பிரகலாதனுக்காக சாந்த நரசிம்மராக சேவை சாதித்தது, செஞ்சு இனப் பெண்னைக் கல்யாணம் செய்து கொண்டு மாப்பிள்ளைக் கோலத்தில் அருள் பாலித்தது, என்று எல்லா கோலங்களிலும் சேவை சாதிக்கின்றார் பெருமாள் இத்திவ்ய தேசத்தில். இன்னும் பிரகலாதன் படித்த பள்ளி, அவன் எழுதிய மந்திரங்கள் ஆகியவற்றையும் தரிசிக்கலாம். இதுவரை அஹோபில திவ்ய தேசத்தின் பெருமையையும் அதில் எழுந்தருளி அருள் பாலிக்கும் எம்பெருமான்களையும் பற்றி சுருக்கமாக கண்டோம். இனி இந்த திவ்ய தேச யாத்திரையைப்பற்றி விரிவாக காணலாம்.


No comments:

Post a Comment