Pages

Sunday, January 3, 2010

நாடி நாடி நவ நரசிங்கர் தரிசனம் -1

ஸ்ரீ அஹோபில திவ்யதேசத்தின் பெருமை - 1

மேல் அஹோபிலம்


அஹோபில யாத்திரையை முடித்தவுடன் இந்த வலைப்பூ ஆரம்பிக்கப்பட்டது. ஆதி காலத்திய பதிவுகள் இந்த திவ்ய தேசத்தை பற்றியும் எழுதப்பட்டன. ஆனால் அது தொடராமல் நின்று விட்டது. இப்போது மறுபடியும் அவரருளால் மீண்டும் துவங்குகின்றது உடன் வந்து தரிசனம் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வேதத்தின் சாரத்தை பக்தர்கள் அனைவருக்கும் புரியும் படி அமுதத் தமிழில் அளிப்பீர் என்ற, அஞ்சன வண்ணன், ஆயர் பெருமான், அடியவர்க்கு மெய்யன், அமரற்கரிய ஆதி பிரான், உம்பர் கோன், எம்பெருமானின் ஆணைப்படி, நீளாதேவி, பஞ்சாயுதங்கள்- சார்ங்கம் என்னும் வில், சுதர்சனம் என்னும் சக்கரம், பாஞ்சஜன்யம் என்னும் சங்கு, நாந்தகம் என்னும் வாள், கௌமோதகி என்னும் கதை, ஸ்ரீவத்ஸம், கௌஸ்துபம், வனமாலி, அனந்தன், கருடன், மற்றும் விஷ்வக்ஷேனர் பன்னிருவரும், கலியுகத்தில் பூமியில் தோன்றி பரந்தாமனின் கல்யாண குண வைபவம் என்னும் கடலை மேகங்களாக்கி அந்த அருள் மேகத்தை பக்தி மழையாக நமக்கு பொழிந்து நமது நெஞ்சங்களிலெல்லாம் பேரானந்தம் பொங்க செய்தார்கள். எம்பெருமானின் பக்தியில் ஆழ்ந்து இருந்ததால் இவர்கள்ஆழ்வார்கள்” எனப்பட்டனர். ஜீவன் பக்தியால் பரமாத்மாவை நெருங்கி, பக்தி பெருக்கினால் தன்னிலும் மேலான பகவானை வாழ்த்துகின்றான் இதுவே மங்களாசாசனம், இவ்வாறு மயர்வற மதி நலம் அருளிய தேவாதி தேவனை, திருமகளும் மண்மகளும் இருபாலும் திகழ மூவுலகும் தனிக்கோல் செலுத்தும் அரங்கனகரப்பனை மங்களாசாசனம் செய்தவர்கள் ஆழ்வார்கள். இந்த ஆழ்வார்கள் அருள் மிகுத்ததொரு வடிவானவர்கள்.


வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்

ஸ்ரீ நம்மாழ்வார்


1. அருள் வடிவு : ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ பூமி, நீளா சமேதனாய் வீற்றிருந்து ஏழுலகமும் தனிக்கோல் செலுத்தும் பிரான், பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகமும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் வடிவிற்கு “அருள் வடிவு” என்று பெயர்.

2. அருள் மிகுத்த வடிவு : ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து தோன்றிய ஸ்ரீந்ருஸிம்ஹ, ஸ்ரீராம, ஸ்ரீகிருஷ்ண திவ்ய அவதாரங்களின் வடிவிற்கு “அருள் மிகுத்த வடிவு” என்று பெயர்.

3. அருள் மிகுத்ததொரு வடிவு : எம்பெருமானுடைய திவ்ய ஆபரணங்கள், திவ்யாயுதங்கள், நித்ய சூரிகள் இவர்களுடைய அபிநவ தசாவதாரம் என்று போற்றப்படும் ஸ்ரீ ஆழ்வார்களின் அவதார வடிவு “அருள் மிகுத்ததொரு வடிவு” என்று போற்றப்படுகின்றது.

இப்படி அருள் மிகுத்ததொரு வடிவாய் தோன்றின ஆழ்வார்களின் அருளிச்செயல்களின் மூலமாக நாம் தெளியாத மறைநிலங்கள் அனைத்தும் தெளியப்பெற்றோம். இவர்கள் வேதாந்த தத்துவத்தையும், பகவத் கீதையின் உபதேச மொழிகளை திவ்ய பிரபந்தங்களின் மூலம் தேனினும் இனிய தமிழ் மொழியில் போதித்த பரமனடியார்கள். இவ்வாறு ஆழ்வார்கள் பன்னிருவரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலங்கள் "திவ்ய தேசங்கள்" ஆகும்.

108 திவ்ய தேசங்களுள் ஸ்ரீவைகுண்டமும், திருப்பாற்கடலும் மானிட உடலுடன் நாம் சேவிக்க முடியாதவை, ஏனென்றால் அவை பூவுலகில் இல்லை. மற்ற 106 திவ்ய தேசங்களுள் பெரும்பாலான திவ்ய தேசங்கள் நமது தமிழ் நாட்டில்தான் உள்ளன. வடநாட்டில் பெரும்பாலும் எம்பெருமான் தோன்றி தன் லீலைகளை நடத்திய பத்ரி, மதுரா, அயோத்தி, நைமிசாரண்யம், சாலக்கிராமம், என்னும் திவ்ய தேசங்கள் உள்ளன.

நமது அண்டை மாநிலமான, ஆந்திர மாநிலத்தில் இரண்டு திவ்ய தேசங்கள் உள்ளன அவற்றுள் முதலாவது கண்கண்ட தெய்வமாய் கலியுக வரதனாய் வேங்கடவனாய் , பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கும் திருப்பதி இரண்டாவது திவ்ய தேசம் அஹோபிலம். ஆகும். அஹோபிலத்தில் பெருமாள் ந்ருஸிம்ஹராய் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கருப்பு மலையில் ( தெலுங்கில் நல்ல கொண்ட) நவ ந்ருஸிம்ஹராய் சேவை சாதிக்கின்றார் பெருமாள். அடர்ந்த கானகம் என்பதால் எப்போது இருட்டாக இருப்பதால் இம்மலைக்கு இந்தப் பெயர் காரணப்பெயராக அமைந்தது. இந்த நவ ந்ருஸிம்ஹர்களையும் சேவிக்கும் அவா கொண்ட அன்பர்கள் தாசனுடன் வர விண்ணப்பிக்கின்றேன்.

பெருமாள் எடுத்த பத்து அவதாரங்கள் தசாவதாரம் என்று மிகவும் பிரபலம் ஆனால் பெருமாள் மொத்தம் 22 அவதாரங்கள் எடுத்தார் என்பது ஐதீகம். அவையாவன மச்சம், கபிலர், கூர்மம், தன்வந்திரி, மோகினி யக்ஞர், தத்தாத்ரேயர், வேத வியாசர், புத்தர், நரநாரயணர், ஹயக்ரீவர், ரிஷபர், அன்னம், பருதூர், வராகம், நரசிம்மம், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி.. இவற்றுள் ஆழ்வார்களின் அருளிச் செயல்களில் வராக, நரசிம்ம, வாமன, இராம , கிருஷ்ண அவதாரங்கள் ஐந்தும் மிகுதியாக கூறப்பட்டுள்ளன.


ஸ்ரீ நரசிம்மர்

பெருமாள் நரசிம்மராக தோன்றிய இடம் தான் அஹோபிலம். இந்த கருப்பு மலையில்தான் க்ருத யுகத்தில் ஹிரண்யகசிபுவின் கோட்டை இருந்தது என்றும், ஒரு பிரதோஷ காலத்தில், தன் மகன் விஷ்ணு பக்தன், ஓம் நமோ நாராயணா” என்று ஓதிக் கொண்டிருக்கும் பிரகலாதனை கொல்ல அவன் எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைந்து விட கோபத்தின் உச்சியில் எங்கிருக்கிறான் உன் நாராயணன்”? என்ற ஹிரண்யனின் கேள்விக்கு, என்னுள்ளும் உள்ளான் உன்னுள்ளும் உள்ளான், எல்லாவாற்றிலும் நீக்கமற நிறைந்திருப்பவர் அவர் என்று "அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்” பதில் கூறிய தன் குழந்தை பக்தனின் சொல்லை நிரூபிக்க உடனே அந்த க்ஷணமே கருடன் மேல் வந்தால் கூட தாமதமாகி விடும் என்பதால் உடனே, தனது மாளிகையின் ஆயிதம் தூணில் ஒரு தூணை ஹுரண்யன் கதையால் ஓங்கி அடிக்க அந்த தூணை பிளந்து கொண்டு ந்ருஸிம்ஹராய் தோன்றி, ஹிரண்யன் பிரம்மாவிடம் பெற்ற வரத்தினை மீறாமல், மனிதனாகவோ, மிருகமாகவோ, தேவராகவோ, பறவையாகவோ இல்லாமலும், நிலத்திலோ, ஆகாயத்திலோ இல்லாமல் தன் தொடையில் வைத்தும், பகலாகவோ இரவாகவோ இல்லாத சந்தியா வேளையில், உள்ளேயோ, வெளியேயோ இல்லாமல் வாசற்படியில் அமர்ந்து, எந்த வித ஆயுதமும் இல்லாமல் தனது வஜ்ர நகங்களினால் இரணியனுடைய வயிற்றைக் கிழித்து அவன் குடலை மாலையாக இட்டுக் கொண்டு அவனை வதம் செய்து, பிரகலாதனது பக்தியின் பெருமையை உலகுக்கு காட்டிய அவதாரம் தான் ஸ்ரீ நரசிம்ம அவதாரம். அந்த ஜ்வாலா ந்ருஸிம்ஹனாகவும் எம்பெருமான் எழுந்தருளியுள்ள தலம் தான் அஹோபிலம். வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன், பெருமாளின் சௌலப்பியத்தை இவ்வாறு மங்களாசாசனம் செய்கின்றார்.

எங்குமுளன் கண்ணனென்ற மகனைக் காய்ந்து

இங்கில்லையாலென்று இரணியன் தூண் புடைப்ப

அங்கப்பொழுதே அவன் வீயத்தோன்றிய என்

சிங்கப்பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே.


மங்கை மடம் ஸ்ரீ நரசிம்மர்

பெருமாளின் அவதாரங்களிலேயே மிகவும் குறுகிய காலம் இருந்த அவதாரம் நரசிம்ம அவதாரம் தான். எந்தத் தூணைத் தட்டுவான் உடனே அங்கிருந்து நாம் தோன்றலாம் என்று பெருமாள் எங்கும் வியாபகமாய் அண்டம் முழுதும் எங்கே தட்டுவான் என்று காத்திருந்தாராம் பெருமாள் பிரகலாதன் வார்த்தைக்காக. “ஓம் நமோ நாராயணா” என்னும் திருநாமத்தை நிலை நாட்டிய அவதாரம், பக்தியின் பெருமையை உணர்த்திய அவதாரம் நரசிம்ம அவதாரம். ஹிரண்யனுக்கு உக்ரம் அதே சமயம் ப்ரகலாதனுக்கு கருணை வடிவம். அது போல ஹிரண்யனுக்கு பலி பீடமான பெருமாளின் தொடை மஹாலக்ஷ்மித் தாயாருக்கு மலர்ப் பீடம். சிலர் ந்ருஸிம்ஹரைப் பார்த்து இவ்வளவு உக்ரமாக உள்ளாரே என்று பயப்படுவார்கள், சுத்தமாக தேவையில்லை, கொடியவர்களுக்குத்தான் அவர் பயங்கரன் ஆனால் தன்னுடைய பக்தர்களுக்கு அவர் பத்ரன் – மங்களங்களை அருளுபவர். “ஸ்வபோதமிவ கேஸரீ” என்றபடி சிங்கம் மற்ற பிராணிகளைத்தான் குரூரமாகப் பார்க்கும் ஆனால் தன் குட்டியை அன்புடன் பார்க்கும் அத்தகைய பக்தவத்ஸலான நரஹரியை பெரியாழ்வார் தம்முடைய திருப்பல்லாண்டிலே இவ்வாறு மங்களாசாசனம் செய்கின்றார்.

அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தவனை

பந்தனைதீரப்பல்லாண்டு பாலாயிரத்தாண்டென்று பாடுதுமே.

மாலைப்பொழுதில் சிங்க உருவில் தோன்றி ஹிரண்யனை அழித்த பெருமாளின் நடுக்கம் தீர பல்லாண்டு பாடுங்கள் என்று கூறுகின்றார். எதற்காக பெருமாளுக்கு நடுக்கம், ஹிரண்யனை வதம் செய்ததற்காகவா? அதுதானே பெருமாளின் மறக்கருணை, தீயவர்களை அழித்து நல்லவர்களை காப்பாற்ற யுகங்கள் தோறும் நான் தோன்றுவேன் என்று கூறிய பெருமாளுக்கு அதற்காக எதற்கு நடுக்கம் வர வேண்டும். ஆனால் “ஓம் நமோ நாராயணா” என்னும் மந்திரத்தையே தன் உயிர் மூச்சாகக் கொண்டிருந்த ப்ரஹலாதனுக்கு, ஹிரண்யன் செய்த கொடுமைகளினால் உண்டான கோபத்தில் தான் பெருமாள் இவ்வாறு நடுக்கம் கொண்டார். ஹிரண்யனை வதம் செய்வதற்கு முன் பெருமாள் அவனது மார்பை தனது வஜ்ர நகங்களால் கிழித்து எங்காவது ஒரு சிறு மூலையிலாவது சிறிது ஈரம் உள்ளதா என்று துழாவிப் பார்த்தாராம் ஆனால் கிஞ்சித்தும் கருணையே இல்லாததால்தான் இறுதியாக அவனை பெருமாள் வதம் செய்தார் என்று பெருமாளின் கருணையை ஆச்சாரியர்கள் விளக்கியுள்ளனர் தங்கள் வியாக்கியானங்களில்.

வைணவத்தின் சிறப்புக் கொள்கைகளுள் ஒன்று பகவானைக் காட்டிலும் பாகவதர்கள் உயர்ந்தவர்கள் என்பதாகும். அது போல பகவத அபசாரத்தை வித பாகவத அபசாரம் கொடிய அபசாரமாகும் இதை வலியுறுத்தும் வகையில் பிரகலாதானை துன்புறுத்திய ஹிரணியனை கொன்று பக்த பிரகலாதனை காத்த அவதாரம் நரசிம்ம அவதாரம். பெருமாள் சர்வ ஸக்தன் ஆயினும் பிரம்மதேவர் ஹிரண்யனுக்கு கொடுத்த வரத்திற்கும் மதிப்புக் கொடுத்தார்.


திருமங்கையாழ்வார்
குமுதவல்லி நாச்சியாருடன்

இத்திவ்யதேசத்தை கலிகன்றி, மங்கை வேந்தன், ஆலி நாடன், திருமங்கை ஆழ்வார் "சிங்கவேள் குன்றம்" என்று மங்களா சாசனம் செய்துள்ளார். இந்த சிங்க வேள் குன்ற திவ்ய தேசத்தில் சீரிய சிங்கப் பெருமாள் சுயம்பு மூர்த்தியாக தோன்றி அருள் பாலிக்கின்றார். இத்திருப்பதி எம்பெருமான் நரசிம்ம மூர்த்தியாக தம் பக்தன் ப்ரகலாதன் பொருட்டு தோன்றி, அவனை நைந்து வந்த அவன் தந்தை இரணியனை பிளந்து மாய்த்த இடம் என்று திருமங்கையாழ்வார் பத்து பாசுரங்களால் நரஹரியை கொண்டாடுகிறார்.


அஹோபில திவ்ய தேசத்தின் பெருமைகள் தொடரும்.......


No comments:

Post a Comment