
அரியுருவமாகி யெரிவிழித்து கொன்னவிலும் வெஞ்சமத்து கொல்லாதே, வல்லாளன் மன்னு மணிக்குஞ்சி பற்றி வரவீர்த்து தன்னுடைய தாள் மேல் கிடாத்தி, அவனுடைய பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ் படைத்த மின்னிலங்கு மாழிப்படை தடக்கை வீரனை இன்று சேவிக்கப்போகிறோம் என்ற ஆவலில் அதி காலை 5.00 மணிக்கே எழுந்து விட்டோம். இரண்டு நாட்களாக அஹோபிலத்தில் இருந்தும் பாவங்களை எல்லாம் போக்கி மறு பிறவி இல்லாமல் செய்யும் பவநாசினி ஆற்றில் குளிக்கவில்லையே என்று எங்களில் சிலர் பவநாசினி ஆற்றுக்கு குளிக்கச் சென்றோம். இந்த பவநாசினி ஆற்றைப்பற்றி அஹோபில ஷேத்திர மஹாத்மியத்தில் என்ன சொல்லியிருக்கின்றது என்று பார்ப்போமா?
பகவானின் திருவடியினின்றும் வெளிக் கிளம்பிய கங்கை இந்த மலையில் பவநாசினியாக அவதரித்தது. அஹோபில மார்க்கத்தை அடைந்து இந்தப் பவநாசினியைக் கண்ணால் பார்ப்பவன் கோடிக்கணக்கான பிறவியில் செய்த பாவத்தினின்றும் விடுபடுகிறான்.. விஷ்ணுவை நன்கு பூஜித்து அவரது பாத தீர்த்தமான இந்த பவநாசினி தீர்த்தத்தை தலையில் எவன் ப்ரோக்ஷித்துக் கொள்கிறானோ அவன் கங்கையில் ஸ்நானம் செய்த பலனை பெறுகிறான். இந்த தீர்த்தத்தைச் சுத்த மனத்துடன் கையில் எடுத்து இறைவனை ஸ்மரித்து ப்ரோக்ஷித்துக் கொள்பவன் எல்லா பாவங்களினின்றும் விடுபடுகிறான். இந்த தீர்த்தத்தை தலையால் தரித்து பருகுபவன் மனத்திலுள்ள அழுக்கை அகற்றுகிறான். முக்தியையும் பெறுகிறான். இந்த மாதிரி தீர்த்தத்தைக் குடிப்பவனைப் பார்த்தும் பித்ருக்கள் மகிழ்ச்சியடைகின்றனர். பிதாமகர்கள் கூத்தாடுகின்றனர். இந்தத் தீர்த்தத்தின் கரையை அடைபவனே எல்லா பிராயச் சித்தங்களையும் செய்தவனாக ஆகிறான். இந்தத் தீர்த்தத்தைக் கொண்டு சாலக்கிராம பூஜை செய்து, இதைப் பருகுபவன் பிரம்மஹத்தி முதலான பாபங்களினின்றும் விடுபடுகிறான். அந்த க்ஷணத்திலேயே பயனை அளிக்கவல்லது. இந்தத் தீர்த்தம், எல்லா மங்களங்களையும் கொடுக்க வல்லது. மனோ வியாதியையும் உடல் வியாதியையும் அழிக்க வல்லது. எல்லாவற்றுக்கும் மருந்து போன்றது இது. மேலும் துஷ்ட க்ரஹங்களின் கொடுமையையும் மாற்ற வல்லது. அந்த நரசிம்மரின் அருளினால் இவ்வளவு மகிமை வாய்ந்த பவநாசினி தீர்த்தத்தில் நீராடச் சென்றோம்.
பவநாசினி ஆற்றின் கரையோரம் ஜ்வாலா நரசிம்மரை
சேவிக்க செல்கின்றோம்
நேற்றே கவனித்திருந்தோம் அஹோபில நரசிம்மர் ஆலயத்திற்கு அருகில் இரண்டு சிறு அருவிகள் இருந்தன மற்றும் க்ரோடா நரசிம்மர் சன்னதிக்கு அருகில் ஒரு குளம் போல ஆழமில்லாமல் இருந்தது. ஆயினும் காட்டாறு என்பதால் எப்போது வெள்ளம் வரும் என்று தெரியாது என்பதால் சற்று கவனமாகவே குளிக்க வேண்டும், நாங்கள் அருவியில் குளிக்க முடிவு செய்தோம். சிறு வயதில் எங்கள் ஊரின் அருகில் உள்ள திருமூர்த்தி அருவியில் குளித்தது பல வருடங்களுக்குப் பிறகு இப்போது இயற்கையுடன் இனைந்து ஒரு அருவியில் குளிக்கும் வாய்ப்பு கிட்டியது மனதார அருவியில் குளித்தோம். பின்னர் மடத்திற்கு திரும்பி வந்து அனைவருடனும் ஜ்வாலா நரசிம்மரை சேவிக்க கிளம்பினோம். ஆற்றின் ஒரமாகவே சென்றும் ஜ்வாலா நரசிம்மர் குகையை அடையலாம் அல்லது மாலோலன் சன்னதி அருகில் இருந்தும் இன்னோரு பாதை உள்ளது. நாங்கள் ஆற்றின் ஓரப்பாதையிலேயே சென்றோம். அஹோபில நரசிம்மர் ஆலயத்திற்கு அருகில் உள்ள பாலத்தின் மூலமாக ஆற்றைக் கடந்து அப்புறம் சென்று பவநாசினி ஆற்றின் ஓரமாக சென்றோன் சிறிது தூரம் சென்றதும் உக்ர ஸ்தம்பம் கண்ணில் பட்டது. ஹிரண்யன் அரண்மனையின் ஆயிரம் தூண்களும் அழிந்து போக வேத மலையின் உச்சியாக இந்த உக்ர ஸ்தம்பம் மட்டுமே எஞ்சியுள்ளது. அதன் தோற்றமும் ஒரு தூண் போலவே உள்ளது. ஆற்றின் நடுவே உள்ள பாறைகளில் கவனமாக சென்று குகைக்கு அருகே சென்றோம், குகைக்கு முன்னர் ஒரு அருவி கொட்டுகின்றது மட்டும் ஒரு ஆறு ஓடுகின்றது எனவே நாம் ஒரு பெரிய பாலத்தில் ஏறி ஆற்றைக் கடக்க வேண்டி உள்ளது. ஆகவே ஒரு வழி காட்டியுடன் செல்வதே உத்தமம்.
ஜ்வாலா நரசிம்மர் குகைக்கு அருகே உள்ள அருவி
ஜ்வாலா நரசிம்மர் குகையை நெருங்குவதற்கு முன் நாம் அந்த அருவியின் தாரைகளுக்கு பின் செல்ல வேண்டும், சேவார்த்திகளின் பாதுகாப்பிற்காக சங்கிலியால் தடுப்பு அமைத்துள்ளனர். அருவியில் நனைந்து சென்ற போது தன்னை சேவிப்பதற்கு முன் நம்மை தூய்மைப்படுத்துவது போல இருந்தது. அருவியைக் கடந்து குகையை நெருங்கினோம். குகை என்பதால் கோபுரம் எதுவும் இல்லை, குரங்குகள் தொல்லை அதிகம் என்பதாலோ என்னவோ குகைக்கு கம்பி வலை கொண்டு தடுப்பு அமைத்துள்ளனர். கதவும் இருந்தது ஆனால் பூட்டியிருக்கவில்லை. மிக்க ஆனந்ததுடன் உள்ளே சென்று பெருமாளை திவ்யமாக சேவித்தோம்.
மூன்று கோலங்களில் சேவை சாதிக்கின்றார் பெருமாள். வலப்புறம் தூணைப் பிளந்து கொண்டு பிரகலாதனுக்காக நரசிம்ம ரூபத்தில் வெளியே வரும் கோலம். இடப்புறம் அசுரனுடன் சண்டையிட்டுக் கொண்டே அவனது தலைமுடியைப் பிடித்து வாசற்படிக்கு அவனை இழுத்துக்கொண்டு செல்லும் கோலம். நடுவாக எட்டு கரங்களுடன் சுகாசனத்தில் இரணியனை ஆகாயமும், பூமியும் அல்லாத தனது தொடையில் போட்டுக் கொண்டு எந்த ஆயுதமாகவும் இல்லாத தனது கூரிய நகங்களில் அவுணனது மார்பைப் பிளந்து அவனது குடலை மாலையாக அணிந்து கொள்ளும் கோலம்.
பெருமாளின் இடது திருக்கரத்தில் ஓங்கார ரூபியான சங்கும், வலது திருகரத்தில் மிளிரும் சுடராழியும் இலங்குகின்றன. இரு கரங்கள் அவனது பரந்த மார்பைக் கிழிக்கின்றது, இரு கரங்களினால் அவனது தலையையும் , காலையும் அவன் திமிறாத வண்ணம் பிடித்துக் கொண்டிருக்கிறார். மற்ற இரு கரங்களினால் அவனது குடலை மாலையாக அணிந்து கொள்ளும் கோலம். கோடிச் சூரிய பிரகாசத்துடன் விசாலமான நெற்றியும், தீர்க்கமான புருவங்களும், மிகவும் விலாசமான இரு கூற்றங்கொலோ என்னும் படியான ஜ்வாலையை கக்கும் கண்கள், நீண்ட மூக்கு, மதுராதர பல்லவம், கம்புக்ரீவம், விசால வக்ஷஸ்தலம், திரண்ட புஜங்கள், பிடரி மயிர், கோரைப்பற்கள், நாக்கு, கிரீடம், நெற்றிக் கண், வஜ்ர நகங்கள் அனைத்தும் அப்படியே தத்ரூபம். அன்று தன் பக்தன் பிரகலாதனுக்காக இரணியனை பிளந்த அதே கோலத்தில் இன்றும் சேவை சாதிக்கின்றார் ஜ்வாலா நரசிம்மர். அருகில் கை கூப்பி தன் வாக்கைக் காப்பாற்ற வந்து தன் தந்தையை வதம் செய்யும் கருணைக் கடலை கை கூப்பி வணங்கும் பிரகலாதன். சிறிதாக கையை கூப்பிய கோலத்தில் கருடன். ஹிரணியனின் கண்களில் பயத்தியும் அவன் கையில் உள்ள கேடயத்தையும் கூட காணலாம்.
எங்கு பார்த்தாலும் இவர்கள்தான்
எவ்வளவு புண்ணியம் செய்திருந்தால் தங்களுடைய இந்த திவ்ய தரிசனம் இன்று சித்தித்தது என்று ஆனந்த கண்ணீருடன் மனம் உருகி அவர் முன் நின்றோம். கையில் எடுத்து சென்றிருந்த விளக்கில் நெய் ஊற்றி ஏற்றினோம் அவர் சேவை சாதிக்கும் மேடையை தண்ணீர் ஊற்றி கழுவினோம். அனைவரும் கொண்டு வந்திருந்த நிவேதனப் பொருள்களை அவர் முன் சமர்பித்து இருளரிய சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி இனத் துத்தியணி பணமாயிரங்களார்ந்த அரவரசப் பெருஞ்சோதி அனந்தனென்னும் அணிவிளங்குமுயர் வெள்ளை யனைமேவி அஹோபிலம் என்னும் பெருநகருள் தெண்ணீர் பவநாசினி திரைக்கையாலடி வருட அமர்ந்த நாதனே, பூவில் நான்முகனைப் படைத்தவனே, கைம்மா துன்பம் கடிந்த பிரானே, கறந்த பாலுள் நெய்யே போன்றவனே, தேனும், பாலும், கன்னலும் அமுதுமாகி தித்தித்து என் ஊனிலுயுரிலுணர்வினில் நின்றவனே, பூந்துழாய் முடியானே, பொன்னாழிக்கையானே,அரியாகி இரணியனை ஆகம் கீண்டவனே, அவுணன் பொங்கவாகம்வள்ளுகிரால் போழ்ந்த புனிதனே, தூணாயதனூடு அரியாய் வந்து தோன்றி பேணாவவுணனுடலம் பிளந்திட்ட பெருமாளே, மஞ்சாடு வரையேழும், கடல்களேழும், வானகமும், மண்ணகமும், மற்றுமெல்லாம் எஞ்சாமல் வயிறடக்கி ஆலின் மேலோர் இளந்தளிரின் கண் வளர்ந்த ஈசனே, போரார் நெடுவேலோன் பொன் பெயரோனாகத்தை கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு, குடல் மாலை சீரார் திருமார்பின் மேற் கட்டி,செங்குருதி சோராகக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி அரியுருவாய் ஆராவெழுந்தவனே, ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர் ஆகம் வள்ளுகிரால் பிளந்தானே, வேரிமாறாப் பூமேலிருப்பவளுடன்கூடிக் களித்திடும் பொன்னுருவனே, தன் பக்தனான பிரஹலாதனின் வார்த்தையை மெய்பிக்க இங்குளனங்குளெனனென்றுரைக்கக் கூடாமே எங்குமுளானாய் அற்புதமான ரூபத்துடன், நரங்கலந்த சிங்கமாய் ஹிரண்யனின் சபையிலுள்ள பெரிய ஸ்தம்பத்தில் தோன்றிய கருணா முர்த்தியே உன்னுடைய பெருமையை யாரால் கூறால் இயலும் என்றும்
புகுந்திலங்கும் அந்திப்பொழுதத்து அரியா
யிகழ்ந்த யிரணியதாகம் – சுகிர்ந்தெங்கும்
சிந்தபிளந்த திருமால் திருவடியே
வந்தித் தென்னெஞ்சமே வாழ்த்து
என்று பல ஸ்தோத்திரங்களை சொல்லி அவரிடம் சரணாகதி அடைந்து, பின் தேங்காய் பழம் உடைத்து சமர்பித்து கற்பூர தீபம் காட்டி பூஜையை நிறைவு செய்தோம். இவ்வாறாக அனைத்து நரசிம்மர்களின் தரிசனத்தையும் அவர் அருளினால் அற்புதமாக முடித்தோம்.
ஜ்வாலா நரசிம்மரை வணங்குவதால் மறுமையில் முக்தி கிடைக்கும், இம்மையில் பேய், பிசாசு, பூத உபாதைகள் நீங்கும், மன சஞ்சலம் தூர விலகி ஒடும், கிரக தோஷங்கள் நீங்கும். கார்த்திகை மாதத்தில் நெய் அல்லது எண்ணெய் கொண்டு இவருக்கு விளக்கு ஏற்ற உடல் ஒளி பெறும், அழியாத ஞான விளக்கை மனதில் ஏற்றிக் கொண்டவனாவான். நீண்ட ஆயுள். கல்வி , ஸ்வர்யம் பெறுவான்.
No comments:
Post a Comment