பிச்சாலியில் சூரிய அஸ்தமன் வேளையில்
துங்கபத்ராவின் அழகு

நண்பர் தனுஷ்கோடியும் அடியேனும் பல்வேறு ஆலயங்களுக்கு யாத்திரை செல்வது வழக்கம். அவரிடம் ஒரு தடவை நவபிருந்தாவனம் சென்று தரிசித்து வரலாம் என்று கூறியிருந்தேன் அவரும் காலம் கனியட்டும் என்றார். அவனருளால் தானே அவன் தாள் பணிய முடியும் அது போலவே அந்த மகான்கள் அனுமதித்தால் மட்டுமே நாம் அவர்கள் அருகில் சென்று நாம் அவர்களை வணங்க முடியும் எனவே அந்த நாளுக்காக காத்திருந்தேன். அதிக நாட்கள் காத்திருக்க வைக்கவில்லை அவர்கள். 2011 ஜனவரி முதல் நாள் நவபிருந்தாவனமும் மந்திராலயமும் செல்லலாமா? என்று ஒரு நாள் தனுஷ்கோடி கேட்ட போது உடனே ஒத்துக்கொண்டேன். குடும்பத்தினர் அனைவருடனும் யாத்திரையை மேற்கொள்ள உத்தேசிருந்தேன் அதை தனுஷ்கோடி அவர்களிடமும் கூறினேன் அவரும் ஒத்துக் கொண்டார். அவர் முதலில் இந்த யாத்திரை சென்று வந்த திரு.மோகன் அவர்கள் அனைத்து ஏற்பாட்டையும் கவனித்துக்கொள்வார் என்று கூறினார். மேலும் தாங்கள் குடும்பத்தினருடன் வருவதால் பலர் குடும்ப சகிதமாக வருகின்றனர் மொத்தம் 23 பேர் வருகின்றனர். செல்வதற்கு புகை வண்டி டிக்கெட் முன்பதிவு செய்து விட்டோம் ஆனால் இன்னும் உறுதியாகவில்லை இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளதால் ஆகிவிடும் என்று கூறினார்.
ஆனேகுந்தியின் ஒரு மண்டபம்
சென்னையில் இருந்து ஹோஸ்பெட் செல்வதற்காக முதலில் 12609 பெங்களூர் எக்பிரஸில் பெங்களூருக்கும், பெங்களூரிலிருந்து ஹோஸ்பெட் வரை செல்ல 16592 ஹம்பி எக்ஸ்பிரஸ் வண்டியிலும், பின்னர் மந்திராலயம் செல்ல ஹோஸ்பெட்டிலிருந்து மந்திரலாயம் செல்ல திருப்பதியிலிருந்து கோலாப்பூர் செல்லும் 17415 ஹரிப்ரியா எக்ஸ்பிரஸிலும், மந்திராலயத்திலிருந்து திரும்பி வர மும்பையில் இருந்து சென்னை வரும் 11028 மும்பை மெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். இந்த வழியில்தான் செல்ல முடியுமா இன்னும் வழிகள் உள்ளனவா? என்று மனதில் ஒரு ஐயம் தோன்றுகிறதா? இன்னும் சில வழிகளை காணலாம்.
நவபிருந்தாவனத்தின் ஒரு பக்க
துங்கபத்ரா நதியின் அழகு
சென்னையில் இருந்து நவபிருந்தாவனம் செல்ல மேலே கூறியபடி புகை வண்டியிலும் செல்லலாம் அல்லது சென்னையில் இருந்து குண்டக்கல் சென்று அங்கிருந்து ஹோஸ்பெட் சென்று அங்கிருந்து பேருந்து மூலமும் கார், வேன் மூலமாக ஆனேகுந்தி அடைந்து பின்னர் பரிசல் அல்லது படகு மூலம் துங்கபத்ரை நதியை கடந்து நவபிருந்தாவனத்தை அடையலாம்.
ஹோஸ்பெட்டிலிருந்து கங்காவதி வழியாக ஆனேகுந்தி 45 கி .மீ தூரமாகும். ஹோஸ்பெட்டிலிருந்து முதலில் ஹம்பி சென்று அங்குள்ள விருபாக்ஷீஸ்வரர், சக்ர தீர்த்தம், ஸ்ரீயந்த்ரோத்தாரக ஹனுமான் போன்ற தலங்களை தரிசித்து விட்டு கமலாப்பூர் வழியாக கங்காவதி வந்தும் ஆனேகுந்தி அடையலாம். குண்டக்கல்லில் இருந்து பேருந்து அல்லது சிற்றுந்து மூலம் பெல்லாரி வழியாக கங்காவதி அடைந்து பின்னர் 12 கி.மீ தூரத்தில் உள்ள ஆனேகுந்தி அடைவது இன்னொரு சாலை வழியாகும்.
பெங்களூரிலிருந்து சாலை மார்க்கமாக வருபவர்கள், தும்கூர், சிரா, சித்ரதுர்கா, ஹொசாஹல்லி, கூட்கிலி வழியாக ஆனேகுந்தியை அடையலாம். பெங்களூரிலிருந்து பல் வேறு புகைவண்டிகள் ஹோஸ்பெட்டுக்கு உள்ளன.
ஹைதராபாத்திலிருந்து நவபிருந்தாவனம் சாலை வழியாக வருபவர்கள் மெஹபூப் நகர், ரெய்ச்சூர், மான்வி, கங்காவதி வழியாக ஆனேகுந்தி அடையலாம்.
ஆனேகுந்தியிலிருந்து மந்திராலயம் சாலை வழியாக செல்ல இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று கங்காவதி, சிறுகுப்பா, சிந்தனூர், மான்வி, கல்லூர், பிக்ஷாலயா வழி. இரண்டாவது கங்காவதி ரெய்ச்சூர் வழியாகும். இதுவரை நவபிருந்தாவனத்து மஹான்களைப்பற்றியும் பல்வேறு இடங்களிலிருந்து அங்கு செல்வதற்கான மார்க்கங்களைப்பற்றியும் பார்த்தோம். இனி இந்த க்ஷேத்திரத்திற்கு இவ்வளவு மகிமை வர என்ன காரணம் அடுத்த பதிவில் பார்ப்போமா?
No comments:
Post a Comment