சித்திரை திருவாதிரை
தங்கப் பல்லக்கில் இராமானுஜர்
பொலிக பொலிக பொலிக!
போயிற்று வல்லுயிர்ச் சாபம்,
நலியும் நரகமும் நைந்த
நமனுக்கிங் கியாதொன்று மில்லை,
கலியும் கெடும்கண்டு கொள்மின்
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,
மலியப் புகுந்திசை பாடி
யாடி யுழிதரக் கண்டோம்.
தொண்டர்காள்!வாருங்கள் ;துழாயானைத் தொழலாம் என்று நம்மாழ்வார் பாடியபடி இந்த கலியுகத்திலே நாம் எல்லோரும் உய்யவும் விசிஷ்டாத்வைதம் உலமெங்கும் பரவவும், எம்பெருமானின் கருணையினால், ஆதித்ய மஹாராஜாவுக்கும், பூத கணங்களுக்கும் பெருமாள் பிரதக்ஷ்யமான பூதபுரி என்னும் ஸ்ரீபெரும்புதூரிலே இளையழ்வாராக இராமனுஜர் அவதரித்தார்.
திருவல்லிக்கேணியிலே ஆஸுரி கேசவ ஸோமயாஜி, அவரது மனைவி காந்திமதி அம்மையுடன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்த போது பெருமாள் நானே உங்களுக்கு மகனாக வந்து பிறப்பேன் என்று கொடுத்த வாக்கின்படி இராமானுஜராக 1017ம் ஆண்டு சித்திரைத் திங்கள் வளர் பிறை பஞ்சமி வியாழக்கிழமை திருவாதிரை நாளில் திருஅவதாரம் செய்தார் .
தானுகந்த திருமேனி
இராமானுஜர் தனது நூற்றியிரண்டாம் ஆண்டில் தனது கடமையை முடித்து இந்நிலவுலகை விட்டு நீங்கும் தறுவாயில் இவரது சீடரான முதலியாண்டான் வேண்டுகோளின்படி அவர் வடித்த உருவச்சிலையை தானே தழுவித் தந்து, இவரது பிறந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரிலே நாம் எல்லாம் இந்த கலியிலே உய்ய, "தானுகந்த திருமேனி" ஆக கோவில் கொண்டார்."
வருடா வருடம், " காரேய் கருணை எதிராஜர்" திருஅவதார தினம் ஸ்ரீபெரும்புதூரில் பத்து நாள் உற்சவமாக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. பத்தாம் நாள் திருவாதிரை அன்று இராமானுஜர் தனது அவதார ஸ்தலத்திற்கு எழுந்தருளி தொட்டிலில் எழுந்தருளி பால் ஊட்டும் வைபவம் நடைபெறுகின்றது அந்த உற்சவத்தின் சில படங்களே இப்பதிவு.
உற்சவத்தின் பத்து நாட்களும் உடையவர் காலையும் மாலையும் பல் வேறு வாகன சேவை சாதிக்கின்றார், ஆறாம் நாள் வெள்ளை சார்த்தி புறப்பாடு, ஒன்பதாம் நாள் திருத்தேரோட்டம், பத்தாம் நாள் திருஅவதார உற்சவம். கீழே சந்திர பிரபையில் எம்பெருமானார் எழுந்தருளும் அழகை சேவிக்கின்றீர்கள்.
சித்திரை திருவாதிரை, பத்தாம் நாள் காலை 8 மணியளவில் சாற்றுமுறை பின்னர் தங்கப்பல்லக்கில் மாட வீதி வலம் வந்து சேவை சாதிக்கின்றார் கோயில் அண்ணன்.
![]() |
மதியம் சுமார் 1 மணியளவில் திருக்கோவிலுக்கு எதிரே உள்ள தனது அவதார மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார் திருப்பாவை ஜீயர். பின்னர் அவருக்கு அலங்காரம் களையப்பெற்று வெறும் துவராடையுடன் (ஒரே ஒரு பதக்கம் மட்டும் உள்ளது) அவதார மாளிகைக்கு எழுந்தருளுகிறார். இன்று ஒரு நாள் மட்டும் குழந்தையாக யதிராஜர் சேவை சாதிக்கின்றார் ஆகவே இந்த அலங்காரம்.
எந்த வித அலங்காரமும் இல்லாமல் பிறந்த குழவியாக அன்பர்களின் தோளில் ஆடி ஆடி எம்பெருமானார் வரும் அழகு, பிறந்த சிசுவை நாம் எப்படி ஜாக்கிரதையாக, மென்மையாக எடுத்துச் செல்வோமோ, அது போல ஆடாது, அசங்காது அருமையாக ஏழப் பண்ணுகின்றனர் ஸ்ரீவைஷ்ணவர்கள். இந்த மண்டபத்தின் முன் வாயிலில் இருந்து புறப்பட்டு அவதார மாளிகைக்கு சுவாமி எழுந்தருள சுமார் ஒரு மணி நேரம் ஆனது.
இவ்வளவு நேரமும் நமக்கும்இந்த பாக்கியம் கிட்டியதே என்ற ஆனந்தத்துடன், முன்னும் பின்னும் அன்பர் கூட்டம் கை கூப்பி கண்ணீர் மல்க, கருணை வள்ளலை சேவிக்கின்றனர். மண்டபத்தின் தூண்களுக்கு இடையே நடுவே பாஷ்யக்காரர் எழுந்தருளும் அழகை எப்படி வர்ணனை செய்வது. நேரில் பார்த்தால் மட்டுமே அதை உணரலாம்.
அவதார திருஸ்தலத்திற்கு எழுந்தருளுகிறார் உடையவர்
அவதார ஸ்தலத்தில் மண்டபத்தில் திருத்தொட்டில்
உள்ளே புகைப்படம் எடுக்கக்கூடாது என்பதால் மற்ற படங்கள் எடுக்கவில்லை. இராமானுஜரை திருத்தொட்டிலில் எழுந்தருளப் பண்ணி பெரிய வலம்புரி சங்கில் பால் அமுது செய்விக்கின்றனர் பட்டர்கள். பின்னர் அந்தப் பால் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. கண்ணன் உண்ணும் வெண்ணையும் அமுதுபடி ஆனது, அந்த வெண்ணை சிறிது அடியேனுக்கும் கிட்டியது.
இந்த அவதார மாளிகையின் நடுவில் உள்ள மண்டபத்தில் தொட்டில் போடப்பட்டுள்ளது. சுவர்களில் உபய நாச்சியார்களுடன் ஆதிகேசவப் பெருமாளும் மற்றும் 64 சிம்மாசனபதிகளின் சிற்பங்களும் அற்புதமாக அமைந்துள்ளன.
பின்னர் மண்டபத்தில் உள்ள குறட்டில் அவதார நாள் திருமஞ்சனம் நடைபெறுகின்றது. ஒவ்வொரு மாத திருவாதிரையின் போதும் இராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும், இவரது திருமேனியில் பட்ட பால் தீராத நோய்களையெல்லாம் தீர்க்கும் என்பதால் ஒவ்வொரு மாத திருமஞ்சனத்தின் போதும் கூட்டம் அலை மோதும். இன்றோ அவதார திருநாள் சாற்முறையும், ஈர ஆடை தீர்த்தமும் கிடைக்கும் என்பதால் மண்டபம் முழுவதும் நிரம்பி வழிந்தது. காலையில் இருந்தே பலர் இந்த மண்டபத்தில் அமர்ந்திருந்தனர். பின்னர் அலங்காரத்துடன் சேவை சாதிக்கின்றார் எம்பெருமானார்.
No comments:
Post a Comment