Wednesday, April 26, 2017

இராமானுஜர் ஆயிரமாவது ஜன்ம நட்சத்திரம்

Visit BlogAdda.com to discover Indian blogs


இராமானுஜர் அவதரித்த ஸ்ரீபெரும்புதூரின் சிறப்பைக் காண இங்கு செல்லவும்


முந்தைய வருட அவதார நாள் கோலாகலத்தைக் காண இங்கு செல்லவும்

அவதார நாள் உற்சவம்


இராமானுஜரின் ஜன்ம நட்சத்திரத்தை முன்னிட்டு அவர் அவதரித்த ஸ்ரீபெரும்புதூரிலே பெருவிழா வருடாவருடம் நடைபெறுகின்றது. இவ்வருடம் அம்மகானுடைய ஆயிரமாவது வருடம் என்பதால் கூடுதல் சிறப்பு.  இவ்விழாவின் மூன்றாம் நாள் இரவு யாழி வாகன சேவையை கண்டு களியுங்கள் அன்பர்களே. 
ஸ்ரீபெரும்புதூர் தானுகந்த  திருமேனி

தான் நரகத்தை அடைந்தாலும் சரி இந்த கலியுகத்திலே அனைவரும் உய்ய வேண்டும் என்ற பெரும் அவாவினால் தனது குருவினுடைய ஆணையையும் மீறி, எல்லா நலங்களையும் வழங்க வல்ல "ஓம் நமோ நாராயணாய"என்னும் அஷ்டாக்ஷர மந்திரத்தை திருக்கோஷ்ட்டியூர் கோவில் மதில் மேல் ஏறி நின்று அனைவருக்கும் உபதேசித்த பேரருளாளர் தான் ஸ்ரீஇராமானுஜர். வைணவ சம்பிரதாயத்தின் விசிஷ்டாத்வைதக் கொள்கையை     பாரெங்கும் பரப்பியவர் இவர்.



திருக்கோவில்களின் நிர்வாகத்தை சீர்படுத்தி பகவத் கைங்கரியம் சிறப்பாக நடைபெற வழிகோலியவர் இவர். நமக்காகவே அவதரித்து, நமக்காகவே வாழ்ந்து, ஏழை, எளியவர், எந்த ஜாதி, எந்த குலத்தவர் என்று பாராது அனைவரையும் ஒன்றாகவே தனது வாழ் நாளில் பாவித்து, பின்னரும் தனது அளவற்ற கருணையினால் தனது அவதார முடிவில் பரம் பொருளான அந்த திருவரங்கத்து இன்னமுதனும் அழகிய மணவாளனுமான, வைகுண்டநாதனின் திருத்தாள்களில் சேர்ந்து முக்தி பெருநிலை அடையாமல்,  நம்முடனே இருந்து நம் துன்பங்களை தன் தவ வலிமையினால் போக்கி அருள் புரிவதற்காக ஸ்ரீ பெரும்புதூரில் ஜீவ விக்ரகமாக எழுந்தருளி , தம்மை அடைந்தவர் துயரினை உடனுக்குடன் போக்கி திருவருள் புரிந்து வரும் அவதார புருஷராவார் இராமானுஜர்.

இளையபெருமாள், எம்பெருமானார், யதிராஜர், உடையவர், பாஷ்யக்காரர், கோவில் அண்ணன், திருப்பாவை ஜீயர் என்றும் பல்வேறு திருநாமங்களால் அறியப்படும் ஸ்ரீ இராமானுஜரின் வரலாற்றை சிறிது பார்ப்போமா?


                                              எல்லா யுகங்களிலும் பெருமாள் சேவைக்காக
                                                                      அவதரித்தவர் இராமானுஜர்


சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்நின்றால் மரவடியாம் நீள் கடலுள் - என்றும் 
புணையாம் அணி விளக்காம் பூம்பட்டாம்
புல்கும்அணையாம் திருமாற்கு அரவு.

என்றாற் போல பெருமாளுக்கு பாற்கடலிலே படுக்கையாகவும், நடந்தால் குடையாகவும், இருந்தால் ஆசனமாகவும், நின்றால் பாதுகையாகவும், விளங்கும் அனந்தாழ்வார், த்ரேதா யுகத்தில்இராமாவதாரத்தின் போது இலஷ்மணனாக அவதரித்து இராமருக்கு சேவை செய்தார், துவாபர யுகத்தில் அவரே பலராமராக அவதரித்தார். இந்த கலியுகத்திலே நாம் எல்லோரும் உய்யவும் விசிஷ்டாத்வைதம் உலமெங்கும் பரவவும், எம்பெருமானின் கருணையினால், ஆதித்ய மஹாராஜாவுக்கும், பூத கணங்களுக்கும் பெருமாள் பிரதக்ஷ்யமான பூதபுரி என்னும் ஸ்ரீபெரும்புதூரிலே இராமனுஜராக அவதரித்தார். திருவல்லிக்கேணியிலே ஆஸுரி கேசவஸோமயாஜி, அவரது மனைவி காந்திமதி அம்மையுடன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்த போது பெருமாள் நானே உங்களுக்கு மகனாக வந்து பிறப்பேன் என்று கொடுத்த வாக்கின்படி இராமானுஜராக 1017ம் ஆண்டு சித்திரைத் திங்கள் வளர் பிறை பஞ்சமி வியாழக்கிழமை திருவாதிரை நாளில் திருஅவதாரம் செய்தார் .

ஆளவந்தாரின் சீடரான  திருமலை நம்பியின் மருகரான இவர் அந்தணர் குலத்திற்கேற்ற சடங்குகள் முடிக்கப்பெற்று மறைகள் சாத்திரங்கள் கற்றுத் தேர்ந்து பதினாறாம் பிராயத்தில் திருமணம் முடித்து காஞ்சிபுரத்தின் அருகில் உள்ள திருப்புட்குழியில் யாதவப்பிரகாசன் என்னும் அத்வைத பண்டிதரிடம் வேதாந்தம் கற்க சென்றார். ஒரு நாள் "கப்யாசம் புண்டரீகம்" என்ற எம்பெருமானின் கண்களை வர்ணிக்கின்ற சமஸ்கிருத பதத்திற்கு கபி+ஆஸம் என்று பிரித்து குரங்கின் ஆசன வாய் என்று குரு விளக்கம் கொடுத்த போது அவரை திருத்தி "கதிரவனால் புன்னகைக்கும் கவின் மிகுந்த செங்கமலம் போன்றது கரிய மால் விழி அழகு" என்ற சரியானப் பொருளைக்கூறி குருவின் கோபத்திற்கு ஆளானார். வடநாட்டு யாத்திரை (காசி க்ஷேத்திரம்) செல்லும் போது இவரை கொல்லத்திட்டமிட்ட குரு இவரை ஆரண்யத்திலே தனியே விட்டு அகல, பெரிய பிராட்டியாரும், பேரருளாளருமே வேட்டுவ தம்பதிகளாக வந்து இவரை பத்திரமாக காஞ்சி நகர் கொண்டு வந்து புண்ணிய கோடி விமானத்தைக் காட்டி மறைந்தனர். பின் திருமலை நம்பிகளின் ஆலோசனைப்படி பேரருளாளனுக்கு சாலை கிணற்றிலிருந்து திருமஞ்சனத்திற்கு நீர் சுமந்து வரும் சேவையில் ஈடுபட்டார்.



வடநாட்டு யாத்திரையிலிருந்து திரும்பிய யாதவப்பிரகாசரிடமே பின்னும் சீடரானர். சிறிது காலம் சென்ற பின் மேலும் தவறான பொருள் சொன்ன யாதவப்பிரகாசரை விட்டு விலகி திருக்கச்சி நம்பிகளிடம் அறிவுரை பெற்று வரலானார். இராமனுஜரின் புலமையைப் பற்றி அறிந்த ஆளவந்தார் அவரை அழைத்து வர பெரிய நம்பியை காஞ்சி அனுப்பினார். இராமானுஜர் திருவரங்கம் அடைந்த போது ஆளவந்தார் திருநாட்டுக்கு ஏகியிருந்தார். அவரது வலகரத்தில் மூன்று விரல்கள் மடங்கியிருந்தன, அதைக்கண்ட இளையாழ்வார், திருவரங்கத்து பெரியோர்களிடம் என்ன காரணம் என்று வினவ அவர்களும் ஆளவந்தாரின் வியாஸ, பராசர முனிவர்களிடம் கொண்ட நன்றியறிவும், நம்மாழ்வரிடம் பற்றும், பிரம்ம சூத்திரமென்ற நூலுக்கு விசிஷ்டாத்துவைத்திற்கிணங்க பாஷ்யம் எழுத வேண்டும் என்ற மூன்று மனக்குறையுமே இவ்வாறு விளங்குகின்றன என்று கூற இக்குறைகளை இறையருளால் தீர்ப்பதாக எம்பெருமானார் உறுதி கூற மடங்கியிருந்த மூன்று விரலகளும் நீண்டன. ஆளவந்தாரை உயிருடன் காண முடியாத வருத்ததுடன் இவர் காஞ்சி திரும்பினார்.

காஞ்சி திரும்பி மறுபடியும் பேரருளாளனுக்கு திருமஞ்சனத்திற்கு நீர் கைங்கரியம் செய்து வரும் நாளில் திருக்கச்சி நம்பிகளை ஆச்சாரியராகப் பெற எண்ணினார். தான் அந்தணர் அல்லாததால் அவர் அதற்கு இசையவில்லை. ஒருநாள் நம்பிகளை தன்னுடைய வீட்டிற்கு அழைக்க, இசைந்த நம்பிகள், வேறு வழியாக அவர் இல்லம் சென்று தனக்கு பேரருளாளன் திருவாலவட்டப்பணிக்கு சீக்கிரம் செல்ல வேண்டும் எனவே உடனடியாக உணவளிக்க வேண்டி இராமானுஜர் வருவதற்குள் உணவை முடித்து சென்றார். இராமானுஜர் வீடு திரும்புகையில் தம் மனைவி தஞ்சமாம்பாள் நம்பியுண்ட தளிகையை கோலால் தள்ளி, உணவருந்திய இடத்தை பசுஞ்சாணம் கொண்டு தூய்மையாக்கி நீராடி நிற்பதைக் கண்டு தனது எண்ணம் நிறைவேறாமல் செய்துவிட்ட நம்பிகளின் திறமையை வியந்த இராமானுஜர் தனது மனைவியின் செயலுக்காக வருந்தினார்.



திருக்கச்சி நம்பிகள் தனக்கு ஆச்சாரியாராக இசையாததால், அவரிடம் சில கேள்விகள் கொடுத்து அவற்றுக்கு பேரருளாளனிடமே பதில்கள் பெற்றுத் தருமாறு வேண்டி, அவர் மூலமாக பேரருளாளன் பணித்ததாக ஆறு வார்த்தைகள் பெற்றார் அவையாவன,

1. பரத்துவம் நாமே - நாமே சகலத்துக்கும் உயர்ந்த சத்தியமான மூலப்பொருள்.


2.. பேதமே தர்சனம். - ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் அவசியமான பேதம் உண்டு என்பதே உண்மையான தத்துவம்.

3. உபாயமும் பிரபத்தியே. - என்னை அடைய ஒரே நேரான வழி நம்மிடம் அடைக்கலம்.

4. அந்திஸ்மிருதியம் வேண்டா - இப்படி வாழ்பவன் உடல் உயிரை விட்டு பிரியும் காலத்தில் நம்மை துதி செய்ய அவசியம் இல்லை.


5. சரீர அவஸானத்திலே மோக்ஷம் - உடலிலிருந்து உயிர் பிரிந்ததும் அவன் என்னிடம் வந்து சேர்வான்.

6.பெரிய நம்பி திருவடிகளிலே ஆஸ்ரயி - பெரிய நம்பிகளை ஆச்சாரியராகக் கொள்

என்பவை இவ்வார்த்தைகள். பின் திருவரஙகம் பெரிய கோவிலில் உள்ள ஆளவந்தாரின் சீடர்களின் விருப்பத்தற்கிணங்க மதத்தலைவராக திருவரங்கம் செல்லும் வழியில் மதுராந்தகத்தில் ஏரி காத்த இராமர் திருக்கோவிலில் பெரிய நம்பியைக் சந்தித்தார். அந்த திருக்கோவிலிலேயே மகிழ மரத்தடியில் பெரிய நம்பி இராமானுஜருக்கு திருவிலச்சினை செய்து தன்னைவிட ஆளவந்தாரை ஆச்சாரியனாக கொண்டிருக்க வேண்டினார். பின் பெரிய நம்பியிடம் காஞ்சியில் ஆழ்வார்களின் அருளிச்செயல்களையும், ஆளவந்தாரின் கருத்துகளையும் கேட்டறிந்து வந்தார். தனது மனைவியின் குணத்தினால் பெரிதும் துன்பமுற்ற இராமானுஜர், இல்லற வாழ்க்கையை விடுத்து திரிதண்ட சந்நியாசியாக தீட்சை பெற்றார். கூரத்தாழ்வானும், முதலியாண்டானும் இவரது பிரதம சீடர்களானார்கள். துறவிகளில் சிறந்தவராக விளங்கியதால் இவர் யதிராஜர் என்னும் திருநாமம் பெற்றார்.



பின் திருவரங்கம் வந்து மதத்தலைவராக இராமானுஜர் பெரிய பெருமாளை வணங்கும் போது, "போங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் ஆள்கின்ற திருவரங்கன் தமது திருப்பொலிந்த திருவடியை இவரது சென்னி மேல் பொறித்து உபய விபூதி செல்வத்தையும், உமக்கும் உம் உடையாருக்கும் தந்தோம் இனி நம்முடைய திருக்கோவிலை திருப்பணி செய்யக்கடவீர்" (இராமானுஜா! கடல் சுழ்ந்த மண்ணுலகத்தையும், விண்ணுலகத்தையும், நாமே பாதுகாத்து வந்தோம். அந்த சுமையை, உபய விபூதி செல்வத்தையும் உமக்கும் உம்மை சேர்ந்தவர்களையும் தந்தோம் அதை நீ வரித்து நம்முடைய கைங்கரியத்தை நடத்தும் என்று அளித்தார். )என்றதால் இவர் உடையவர் எனப் பெயர் ஏற்படச் செய்தான். இராமானுஜரும் அரங்கன் திருக்கோவிலின் நடைமுறைகளை சீர்ப்படுத்தினார். இவர் வகுத்த நெறிகள் தான் இன்றும் திருவரங்கத்தில் நடைமுறையில் உள்ளது.


திருவரங்கத்திலே வசித்து வரும் போது பெரிய நம்பிகளின் அறிவுரைப்படி ஆளவந்தாரின் சீடரான திருக்கோஷ்ட்டியூர் நம்பிகளிடம் பதினெட்டு முறை விடாது சென்று அவரை வேண்டி கடைசியாக கண்ணனருளிய கீதையின் முக்கிய கூற்றாகிய சரம சுலோகத்தின் சாரமான அவ்வெம்பெருமான்தானே நெறிவாசல் இரண்டுமாவான் என்ற ஆழ்வார்களின் கருத்தே மெய்ப்பொருள் என்று கற்றார். தான் கற்றதை அறிந்து அனைவரும் உய்ய வேண்டும் என்ற அளப்பெரும் கருணையினால் திருக்கோஷ்டியூர் கோவில் திருமதில் மேல் ஏறி நின்று பஞ்சமருக்கும் நலம் தரும் அந்த ஓம் நமோ நாராயண என்னும் சொல்லை உபதேசித்து அருளினார்.  இதையறிந்த திருக்கோஷ்டியூர் நம்பிகள் அவரை ஆனையை மீறியதேன் என்று வினவ, தானொருவன் நரகம் சென்றாலும் சரி மக்களனைவரும் வீடுபேறு பெற வேண்டும் என்பதால் குருவின் ஆனையை மீறியதாக உடையவர் கூறினார். பல்லுயிருக்கும் விண்ணின் தலை நின்று வீடளிக்கும் தன்மையைக் கொண்டாடி திருக்கோட்டியூர் நம்பிகள் இராமானுஜரை என்பெருமானாரே ( எல்லாருக்கும் தலைவர்) என்று ஆனந்தத்துடன்கட்டித்தழுவிக்கொண்டார். இராமானுஜருக்கு    எம்பெருமானார் என்ற பெயர் இவ்வாறு ஏற்பட்டது.



எம்பெருமானார் வியாசரின் பிரம்ம சூத்திரத்துக்கு ஆழ்வார்கள், நாதமுனிகள், ஆளவந்தார் முதலிய முன்னோர்கள் கைக்கொண்ட விசிஷ்டாத்வைதக் கொள்கைகளை நன்கு பரப்பினார். இக்கொள்கைக்கு மாறான கொள்கைகளைப் படைத்த புத்தர், சமணர், அத்வைதிகள் பலரை வாதப்போரில் வென்று அவர்களை வைணவர்களாக்கி விசிஷ்டாத்வைதத்தை நன்கு நிலை பெற செய்தார். இவர் பாரத நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று வைணவ தலங்களை வணங்கி மதத்தை பரப்பினார்.தம் மதக் கொள்கைகளைப் பரப்ப எழுபத்து நான்கு ஸ’ம்ஹாஸனாதிபதிகளை நியமித்து பலதிக்குகளிலும் பரப்பினார்.





எம்பெருமானாகிற பெருங்கடலிலே , நம்மாழ்வாராகிய கருமேகம் படிந்து அப்பெருமானின் திருக்கல்யாண குணங்களாகிய நீரைப்பருகி, நாதமுனிகளாகிற மகாமேருமலையில் பொழிந்து உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி என்ற அருவிகள் மூலம் ஆளவந்தார் என்ற பேராற்றை சேர்ந்து, எம்பெருமானாராகிய வீரநாராயணபுரத்தேரி போன்ற ஏரியிலே வந்து தேங்கி, உடையவரின் žடர்களான வீரநாராயணபுரத்தேரியின் எழுபத்து நான்கு மதகுகள் போன்ற பெரியோர்களின் மூலம் உலகமாகிய கழனிக்குப் ஏறிப்பாய்கின்றது என்று இவ்வுண்மையை உருவகப்படுத்துவர் முன்னோர்.

யாழி வாகன சேவை 


வைணவக்கோட்பாடுகள் வெறும் ஏட்டுச்சுரைக்காய்கள் அல்ல என்பதை தன் வாழ்வின் மூலம் நிருபித்தவர் இராமானுஜர். பஞ்சமருக்கும் அஷ்டாக்ஷ்ர மந்திரத்தை உபதேசித்த வள்ளல் மேலும் பிள்ளையுறங்காவில்லிதாசர் என்ற வேடžடரை அந்தணர்க்கான உடல் தூய்மையை உதறி காவிரியில் நீராடித் திரும்புகையில் கைகோர்த்து அழைத்து சென்றார். தொண்டனூர் அரிசனங்களை திருநாராயணப்புரத்துத் திருக்கோவிலில் வழிபட ஏற்பாடு செய்தவர். அவர்களை திருக்குலத்தார் என்று அழைத்து பெருமைப்படுத்தினார். தாழ்த்தப்பட்ட மக்களை மேல் நிலைக்கு உயர்த்தியவர் இராமானுஜர்

.



தனது வாழ்விலே இராமானுஜர் தான் செய்த புரட்சிகளினால் சந்தித்த எதிர்ப்புக்கள் ஏராளம். அவர் பிச்சை எடுத்து உண்ணும் கொள்கை கொண்டிருந்ததால் அவரை கொல்ல சதி செய்த சிலர் ஒரு பெண்ணிடம் அவருக்கு நஞ்சிட கட்டாயப்படுத்தினர் அப்பெண்மணியும் அவ்வாறே செய்து சடக்கென்று அவர் திருவடிகளில் விழுந்து உண்மையைக் குறிப்பாலுணர்த்தி தன் பிச்சையை விலக்கச் சொன்னாள்.


இவரது சீடர்களில், கூரந்தாழ்வான், முதலியாண்டான் இருவரும் முக்கியமானவர்கள். இவர்களை தனது முக்கோல் மற்றும் பவித்திரம் என்று சிறப்பித்தார் இராமானுஜர். கிருமிகண்ட சோழன் என்ற சோழ மன்னன் சைவம் மங்கி வைணவம் தழைத்தோங்குவதை கண்டு, உடையவரை அழைத்து சிவனில் பெரியவரில்லை என்று எழுதி வாங்க எண்ணிய போது எம்பெருமானாரைக் காக்க கூரத்தாழ்வான் முக்கோல் பிடித்து அரசவைக்கு பெரிய நம்பியுடன் சென்று, நாராயணனே பரன் என்று பலபடியும் எடுத்துரைத்தான். மன்னன் இணங்காமல் சிவனே பரன் என்றெழுதிடச் சொன்னான். அவர் மரக்கால் பெரியது, குறுணி அதைவிடப்பெரியது என்ற பொருளில் "சிவாத் பரதரம் நாஸ்தி, த்ரோணமஸ்தி தத:பரம்" என்று எழுதித் தந்து மன்னனின் கோபத்துள்ளாகி தன் கண்களை இழந்தான். இவரது மற்ற žடர்கள் சைவத்துக்கு சென்று திரும்பிய இவரது சிற்றன்னை மகன் கோவிந்த பட்டர், இவர் துறவறம் பூண்ட போது இவருக்கு எம்பார் என்ற திருநாமத்தை எம்பெருமானர் அருளினார். யஞ்னமூர்த்தி என்ற அத்துவைதவாதி வாதப்போரில் தோற்று, அருளாளப்பெருமாளெம்பெருமானார் என்ற பெயரில் இராமானுஜருக்கு žடரானார். திருக்கோட்டியூர் நம்பிகளால் இராமானுஜருக்கு எதிரிகள் நஞ்சிடும் வாய்ப்பை தவிர்க்க உணவு சமைக்க வந்தவர் கிடம்பியாச்சான். மற்றும் திருக்குருக்கைப்பிரான்பிள்ளான் முதன் முதலாக திருவாய்மொழிக்கு இராமானுஜரின் ஆணையினால் உரையிட்டவர், அனந்தான்பிள்ளை, வடுகநம்பி முதலானோர் இவரது முக்கிய   சீடர்களாவர்.



கிருமிசோழனின் கொடுமையிலிருந்து தப்பிக்க,  சீடர்களின் வேண்டுதலின்படி இராமானுஜர், வெள்ளையாடை உடுத்தி வெளியேறி பன்னிராண்டுகள் தற்கால கர்நாடக மாநிலத்திலுள்ள மேல் கோட்டை திருநாராயணபுரத்தில் வாழ்ந்தார். அத்தலத்தின் உற்சவமூர்த்தியான செல்வப்பிள்ளையை டெல்லிசென்று, துருக்க அரசனிடமிருந்து திரும்பப்பெற்று கோவிலை நன்றாக அமைத்து அங்கும் வைணவத்தை பரப்பினார்.டெல்லி சுல்தான் மகள் செல்லப்பிள்ளையுடனே பின் வர அவளை பீபீ நாச்சியாராக்கி இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கும் உதவியவர். கிருமிகண்டன் பெயருக்கேற்ப கழுத்தில் புழுத்து மாண்டபின் , எம்பெருமனார் திருவரங்கம் திரும்பி தன் தொண்டுகளைத் தொடர்ந்தார்.



கூரத்தழ்வான் காச்மீரம் சென்ற போது ஸரஸ்வதீ பண்டாரம் என்ற நூலை பார்வையிட்டார், அந்த நூலை மனத்தில் நிறுத்தி பின்பு உடையவர் பணிக்க பணிக்க, நாமகளே ஸ்ரீ பாஷ்யம் என்று பெயரிட்ட உடையவரின் பிரும்ம சூத்திர உரைநூலை ஆழ்வான் தானும் ஆராய்ந்து ஓலைப்படுத்தினார். எனவே இவர் பாஷ்யக்காரர் என்று அழைக்கப்படலானார். இவ்வாறாக ஆளவந்தாரின் முக்குறைகளிலொன்றை உடையவர் தீர்த்தருளினார். ஆள்வானுக்கு இரண்டு ஆண் மகவுகள் பிறந்த போது அவர்களுக்கு பராசரன், வேதவியாஸன் என்று பெயரிட்டு இரண்டாம் குறையை நீக்கினார்.கோவிந்த பட்டருக்கு மகன் பிறந்த போது அவருக்கு பராங்குசன் என்ற பெயரிட்டு மூன்றாவது குறையைப் போக்கினார்.



எம்பெருமானார் குளிரருவி திருவேங்கடத்தில் கோவில் கொண்டுள்ள பெருமாள், குறையொன்றுமில்லாத கோவிந்தனான, திருமாலே என்று நிரூபித்து தன் கைகளாலேயே அந்த அர்ச்சாவதார மூர்த்திக்கு சங்கும் சக்கரமும் சமர்பித்தார் திருமாலிருஞ்சோலை அழகருக்கு ஆண்டாள் நாச்சியார்



நாறுநறும் பொழில் மாலிருஞ்சோலைநம்பிக்கு நான்நூறுதடாவில் வெண்னை வாய் நேர்ந்துபராவி வைத்தேன் 
நூறுதடாநிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்

ஏறுதிருவுடையான் இன்றுவந்திவைகொள்ளுங்கொலோ?


என்று விரும்பியபடி நூறு தடா அக்காரவடிசிலும், நூறு தடா வெண்னையும் அமுது செய்வித்து பின்னர் சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாள் திருவாயாலேயே அண்ணா என்றழைக்கப்பட்டு கோவில் அண்ணன் ஆனார். ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை பாசுரங்களின் மீது இராமானுஜர் கொண்டிருந்த அபிமானம் அளப்பரியது, இவர் ஒரு சமயம் திருப்பாவை பாசுரங்களை சேவித்துக் கொண்டு பிச்சை கேட்டு வரும் போது உந்து மதற்களிற்றன் என்னும் பாசுரத்தை சேவித்துக் கொண்டே பெரிய நம்பிகளின் வீட்டின் கதவைத்தட்ட, žரார் வளையொளிப்ப திறந்தேலோரெம்பாவாய் என்ற படி பெரிய நம்பியின் செல்ல மகள் கதவைத் திறக்க ஆண்டாள் நாச்சியாரே வந்து கதவைத் திறப்பதாக எண்ணி மயங்கி விழுந்தார். பின் பெரிய நம்பிகள் வந்து ம்யக்கம் தெளிவித்து உண்மையை உணர்த்தி திருப்பாவை ஜீயர் என்றழைத்து சிறப்பித்தார். . இராமானுஜர் ஆழ்வார்களின் அருளிச்செயல்களான பிரபந்தத்தை இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் அறிந்த அரையர்களின் மூலம் நன்கு பரப்பினார்.

பின்னழகு


இராமானுஜர் வட மொழியில் நித்ய க்ரந்தம், கீதாபாஷ்யம், ஸ்ரீ பாஷ்யம், வேதாந்த ஸாரம், வேதாந்த தீபம், வேதார்த்த ஸங்க்ரஹம், மற்றும் கத்யத்ரயம் என்ற மூன்று உரைநடை நூல்களான ஸ்ரீ வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம், சரணாகதி கத்யம் என்ற ஒன்பது நூல்களை செய்தருளினார்.  ஆழ்வார்கள், நாதமுனிகள், ஆளவந்தார் மூலம் இராமானுசருக்கு எட்டிய வைணவ சமயத்தை திருவரங்கரே எம்பெருமானார் தரிசனமென்று பெயரிட்டார் என்றும் திருக்குறுகூர் நம்பியே இராமானுசரிடம் žடராக ஆசைப்பட்டு திருவிலச்சிணை பெற்று வைணவ நம்பி என்ற திருநாமம் பெற்றார் என்று இராமானுஜரின் புகழ் பரப்பும் வரலாறுகள் செப்புகின்றன.

இவ்வாறு பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையிலும், விசிஷ்டாத்வைதத்தை நாடெங்கும் பரப்பிய புரட்சியாளரான இராமானுஜர் தனது நூற்றியிரண்டாம் ஆண்டில் தனது கடமையை முடித்து இந்நிலவுலகை விட்டு நீங்கும் தறுவாயில் இவரது žடரான முதலியாண்டான் வேண்டுகோளின்படி அவர் வடித்த உருவச்சிலையை தானே தழுவித்தந்து, இவரது பிறந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரிலே நாம் எல்லாம் இந்த கலியிலே உய்ய, "தானுகந்த திருமேனியாய் கோவில் கொண்டார்." இவ்வாறு கோவில் கொண்ட ஒருவாரத்திலேயே இராமானுஜர் நோய்வாய்பட்டு திருநாட்டுக்கேகினார். இவரது விமலசரம விக்கிரகமான பூதவுடலை அரங்கத்து பெரியோர்களும் அவர் žடர்களும் அரங்கன் கோவில் சுற்றிலேயே திருப்பள்ளிப்படுத்தி அவ்விடத்து திருமண்ணால் உருவச்சிலை அமைத்து வழிபடலாயினர் இந்த திருமேனி "தானான திருமேனி" என்றழைக்கப்படுகின்றது. பின்பு திருநாராயணபுரத்து žடர்கள் வழிபடவமைத்த உருவம் "தமருகந்த திருமேனி "என்றழைக்கப்படுகின்றது.


சீராருமெதிராசர் திருவடிகள் வாழிதிருவரையிற்சாற்றிய செந்துவராடை வாழிஏராரும் செய்யவடிவு எப்பொழுதும் வாழிஇலங்கிய முந்நூல் வாழி
இணைத்தோள்கள் வாழி 

சோராத துய்யசெய்ய முகச்சோதி வாழி
தூமுறுவல் வாழி
துணைமலர்க்கண்கள் வாழி
ஈராறு திருநாமமணிந்த எழில் வாழிஇனிதிருப்போடு எழில்ஞான முத்திரை வாழியே.என்று எம்பெருமானாரை வழிபட்டு நன்மையடைவோமாக.

இராமான்

Labels: , , ,

Saturday, April 22, 2017

திருநீர் மலை அரங்கநாதர் கருடசேவை

Visit BlogAdda.com to discover Indian blogs
அழகிய மணவாளப் பெருமாள் - அரங்கநாதர் 

அன்றாயர் குலக்கொடியோடு அணிமாமலர்மங்கையொடு அன்பளவி அவுணர்க்கு
என்தானும்  இரக்கமிலாதவனுக்கு     உறையுமிடமாவது இரும்பொழில் சூழ்
நன்றாய புனல்நறையூர் திருவாலி குடந்தை     தடம்திகழ் கோவல்நகர்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம் மாமலையாவது நீர் மலையே.      (பெ.தி 2.4.1)
பொருள்: கண்ணனாக அவதரித்து போது நப்பின்னை பிராட்டியோடும், திருமகளோடும் அன்புடன் கலந்து, எக்காலத்தும் அசுரர்களிடம் இரக்கமின்றி இருப்பவருக்கு என்றும் இருக்கும் இடமாக இருப்பது திருநீர்மலையாகும். சோலைகளால் சூழப்பட்ட நீர் வளமுடைய திருநறையூர், திருவாலி, திருக்குடந்தை, திருக்கோவலூர் ஆகிய இடங்களில் முறையே நின்றவனும், அமர்ந்தவனும், படுத்தவனும், நடந்தவனுமாகிய பெருமானுக்கு இடமாகிய மலையாக இருப்பது திருநீர்மலையாகும். 

இவ்வாறு  திருமங்கையாழ்வார் மங்கலாசாசனம் செய்த, இத்திவ்யதேசத்தில்  பெருமாள் நின்ற கோலத்தில்  அணி மாமலர் மங்கையுடன் நீர்வண்ணராகவும், இருந்த கோலத்தில் சாந்த நரசிம்மராகவும், அரங்கநாயகித் தாயாருடன் மாணிக்க சயனத்தில் கிடந்த கோலத்தில் அரங்கநாதராகவும், நடந்த கோலத்தில் திரிவிக்கிரமனாகவும் சேவை சாதிக்கும் இத்திருநீர்மலை திவ்யதேசத்தை திருமங்கையாழ்வார் சேவிசிக்க வந்த போது இந்த திவ்யதேசத்தை சுற்றி ஒரே தண்ணீர்க் காடாக இருந்ததாம். எதிரே இருந்த மலையிலே ஆறு மாதம் தண்ணீர் வடிய பரகாலன் தங்கியிருந்தாராம்,  அக்காலத்தில் அவ்வளவு நீர் வளம் மிகுந்த பகுதியாக இப்பகுதி இருந்துள்ளது. அவ்வாறு பெருமாளை தரிசிக்க திருமங்கை மன்னன் தங்கிய ஊர் திருமங்கையாழ்வார்புரம் என்று அழைக்கப்படுகின்றது.


கொடி மரம் நீர்வண்ணருக்கு .. ராஜகோபுரம் இராமருக்கு 


இத்திருநீர்மலை திவ்ய தேசத்தில் பெருமாள்களை சேவித்தால் திருநறையூர், திருவாலி, திருக்குடந்தை, திருக்கோவலூர் ஆகிய நான்கு திவ்ய தேசப்பெருமாள்களை சேவித்ததற்கு சமம் என்று  திருமங்கையாழ்வார் பாடியுள்ளார்.

பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள்- பயின்றது
அணி திகழுஞ் சோலை அணிநீர்மலையே
மணித்திகழும் வண்தடக்கைமால்  ( இ.தி. 46)

பொருள்: நீலமணி போல் விளங்குபவனும் வள்ளன்மையாய் நீண்ட திருக்கைகளை உடையவனுமான எம்பெருமான், நித்தியவாசம் செய்தருளுமிடம் திருவரங்கமும், திருக்கோட்டியூருமாம்; அநாதிகாலம் நித்திய வாசம் செய்யுமிடமும் திருமலையுமாம்; பலநாள் பயின்றதுவும் அழகு விளங்குகின்ற சோலைகளையுடைய இந்நிலவுலகுக்கு அலங்காரமான திருநீர்மலையாம்  என்று   முதலாழ்வாரான பூதத்தாழ்வார்  இத்திவ்விய தேசத்தை பூலோக வைகுண்டமாம்  திருவரங்கம், திருக்கோட்டியூர், திருவேங்கடம் ஆகிய திவ்ய தேசங்களுக்கு இணையானது என்று மங்கலாசாசனம் செய்துள்ளார்.


நீர்வண்ணர் சன்னதி நுழைவாயில் 


இப் பெருமாளின் அழகில் மிகவும் ஈடுபட்ட திருமங்கை மன்னன் 19 பாசுரங்கள் பாடியுள்ளார்.  அதுவும் தன்னை பரகாலநாயகியாக பாவித்து

                      நீர்வண்ணன் நீர் மலைக்கே போவேனென்றும். . . .

வருநல்தொல்கதி ஆகிய மைந்தனை
நெருநல் கண்டது நீர்மலை . . . .

அலங்கெழு தடக்கை ஆயன்வாயாம்பற்கு
அழியுமால் என்னுள்ளம் என்னும்
புழங்கெழு பொருநீப்புட்குழிபாடும்
போதுமோ நீர்மலைக்கு? என்னும்  . . . . .

அருவிசோர் வேங்கடம் நீர்மலை யென்று வாய்
வெருவினாள் மெய்யம் வினவியிருக்கிறாள் ….

மாலிருஞ்சோலைமணாளர் வந்து என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்
நீர்மலையார் கொல் . . .

என்றெல்லாம்  நீர்வண்ணப்பெருமாளின்  சௌந்தர்யத்தில் திளைத்து பாசுரங்கள் பாடியுள்ளார்  மங்கை மன்னர்,



மேலும் சிறிய திருமடலில்

சீரார் திருவேங்கடமே திருக்கோவ லூரே மதிட்கட்சியூரகமே பேரகமே
பேராமருதிறுத்தான் வெள்ளறையே வெஃகாவே பேராலி தண்கால் நறையூர் திருப்புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் – கணமங்கை காரார்மணிக் கண்ணணூர் விண்ணகரம்
சீரார் கணபுரம் சேறை திருவழுந்தூர் காரார் குடந்தை கடிகை கடல்மல்லை
ஏரார் பொழில்சூழ் இடவெந்தை நீர்மலை சீராரும் மாலிருஞ்சோலை திருமோகூர்……… 

என்று எம்பெருமானின் இருப்பிடங்களை பட்டியலிடுகின்றார்  திருமங்கையாழ்வார்.


மலைக்கோவில் செல்லும்   படிகள் 

பெரிய திருமடலில்
அன்னவனை ஆதனூராண்டளக்குமையனை
நென்னலையின்றினை நாளையை -நீர்மலை மேல்
மன்னுமறை நான்குமானானை புல்லாணித்
தென்னன் தமிழை....     என்று கொண்டாடுகின்றார் குமுதவல்லி மணாளர்.

இத்தலத்தை சேவித்தால் 108 திவ்ய தேசங்களில் நான்கு திவ்ய தேசங்களை ஒருங்கே சேவித்த பலன் கிடைக்கும் ஒப்பற்ற திருத்தலம். திருமால் நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என நான்கு திருக்கோலத்தில் அருள் புரியும் அற்புத திருத்தலம். திருமால் 108 திவ்ய தேசங்களிலும் இந்நான்கு திருக்கோலத்தில் மட்டுமே சேவை சாதிக்கிறார். இத்தகு சிறப்பு வாய்ந்த காட்சியாக நான்கு மூர்த்திகளையும் ஒருங்கே காணக் கிடைப்பது புண்ணியம் நிறைந்த ஒன்றாகும்.

 மாணிக்க சயனத்தில் அரங்கநாதர்

நான்கு புண்ணிய தீர்த்தங்களை ஒருங்கே பெற்றுள்ள மகிமை வாய்ந்த திருத்தலம்.சுமார் 2000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த திருத்தலம்.108 திவ்ய தேசங்களில் 61வது திவ்ய தேசமாகும். பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார், மங்கலாசாசனம் செய்த திருத்தலம். பிரம்மாண்ட புராணத்தில் இத்தலத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன.  இவ்வாறு ஏராளமான பெருமைகளையும் சிறப்புகளையும் உள்ளடக்கிய அற்புத திருத்தலம் இது.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமியை தரிசிக்க எண்ணிய "பிருகு முனிவர்" மற்றும் "மார்க்கண்டேய முனிவர்" நீர் சூழ்ந்த இந்த மலையின் மீது நீண்ட காலம் தவம் செய்தனர். அவர்களின் தவத்திற்கு இரங்கித்  திருமால்" மாணிக்க  சயனத்தில்  அரங்கநாதர் திருக்கோலத்தில் காட்சி தந்து அருளினார். நீர்  சூழ்ந்த மலை என்பதால் இவ்விடம் "நீர்மலை" என்றும் திருமால் வந்து அவதரித்த மலை என்பதால் "திருநீர்மலை" என்றும் பெயர் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. பழங்காலத்தில் இவ்வூர் தோயாசம், காண்டவ வனம்தோயாத்ரி க்ஷேத்திரம் என பல பெயர்களால் அழைக்கப்பட்டிருக்கின்றது. தோ என்றால் தண்ணீர் த்ரி என்றால் மலை அதாவது தண்ணீர் சூழ்ந்த மலை.



நீர்வண்ணர் விமானம் 

அரங்கநாதராக பெருமாள் சேவை சாதிப்பதால் “மத்ய அரங்கம்” என்றும் அழைக்கப்படுகின்றது இத்தலம். மலைக்கோவிலுக்கு செல்ல சுமார் 200 படிகள் ஏறிச்செல்ல வேண்டும். மலை மேல் உள்ள கோவிலில்  அரங்கநாதர் தெற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன்  கோவில் கொண்டு அருள்கிறார். அவர் காலடியில் ஸ்ரீதேவி பூதேவி ஆகியோர் வீற்றிருக்கின்றனர். நாபிக் கமலத்தில் பிரம்மன். இவர்களை சேவித்த வண்ணம் பிருகு முனிவர் மற்றும் மார்க்கண்டேய முனிவர் ஆலய முகப்பில் உள்ளனர். அரங்கநாதர் சுயம்பு திருமேனி எனவே அவருக்கு திருமஞ்சனம் கிடையாது தைலக்காப்பு மட்டும் தான். சங்கு சக்கரத்துடன் கூடிய சதுர் புஜத்துடன் மாணிக்க சயனத்தில் சேவை சாதிக்கின்றார். திருமகளான இலட்சுமி தாயார் அருள்மிகு அரங்கநாயகி தாயார் என்ற திருநாமத்தில் கிழக்கு நோக்கி தனிச் சன்னதி கொண்டு அருள்கின்றார். மூலவர் அருள்மிகு அரங்கநாதர் மலையின் மீதும் உற்சவர் அழகிய மணவாளப் பெருமாள் மலை அடிவாரத்திலும் எழுந்தருளியிருக்கிறார்கள். இங்கு அருள்மிகு அரங்கநாதர் சுவாமியே முதல் மூர்த்தியாக விளங்குகிறார்.


கருட சேவைக்கு புறப்படும் அழகிய மணவாளர் 

திரிவிக்கிரமன் இடது காலை உயர்த்தி உலகத்தை அளக்கும் "வாமன அவதாரம்" திருக்கோலத்தில் தனி சன்னதியில் சேவை சாதிக்கிறார்.. இவ்வடிவத்தை திருமங்கையாழ்வார் "நடந்தான்" என்று பாடுகிறார்.





பின்னழகு 

துவாபர யுகத்தில் அகோபிலம் மற்றும் திருநீர் மலைகள் மட்டும் இருந்தன, பிரளயம் முடிந்தபின் அர்சுனனுக்காக நரசிம்மர் இம்மலையில் சேவை சாதித்தார். இங்கு நரசிம்ம சுவாமி பால நரசிம்மராக சேவை சாதித்தருள்கின்றார். அழகிய வடிவத்தில் வீற்றிருந்த கோலத்தில் (அமர்ந்த கோலத்தில்) கிழக்கு திசை நோக்கி தனி சன்னதியில் அருள்கின்றார். இரணியனை சம்ஹாரம் செய்த நரசிம்மர் உக்கிரமாக இருந்தார். பெருமாளின் உக்கிர கோலத்தைக் கண்டு பிரகலாதன் பயந்தார். அவருக்காக அவனைப் போலவே வா என்று அழைக்கும் ஆவாஹன முத்திரையுடன் பால ரூபத்தில் சேவை சாதிக்கின்றார். இவருக்கு பின்புறம் நரசிம்மர் சுயரூபத்துடன் இரண்டு கரங்களுடன் சேவை சாதிக்கின்றார். பால ரூபம், சுய ரூபம் என்று இரு வடிவங்களில் நரசிம்மரை தரிசிக்கலாம்


ஸ்தலாதிபதி நீர்வண்ணப் பெருமாள்  நின்ற திருக்கோலத்தில் மலை அடிவாரத்தில் கிழக்கு நோக்கியவாறு தனிச் சன்னதி கொண்டு அருள் பாலிக்கிறார். பெரும்பாலான கோயில்களில் கொடிமரம், பலிபீடம், கோபுரம் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும். ஆனால் இங்கே கொடி மரமும் பலிபீடமும் இராசகோபுரத்தை விட்டு சற்று விலகி தனியே அமையப் பெற்றுள்ளன. கோபுரம் இராமருக்கு கொடிமரம் நீர் வண்ணருக்கும் என்று  அமைந்திருப்பது ஒரு சிறப்பு. 


கருட சேவைக்கு  காத்திருக்கும்  பக்தர்கள் 



கருடசேவை 

நீர்வண்ணப் பெருமாள் உடன் உறையும் இலட்சுமி பிராட்டிக்கு "அணிமாமலர் மங்கை தாயார்" என்பது திருநாமம். கிழக்கு நோக்கியவாறு தனி சன்னதியில் அருள்கின்றாள். ஆண்டாள் நாச்சியாருக்கும் தனி சன்னதி உள்ளது.



கற்பூர ஆரத்தி 


"ஸ்ரீமத் இராமாயணம்" இயற்றிய வால்மீகி முனிவருக்கு ஒரு முறை அருள்மிகு இராமபிரானை திருமணக் கோலத்தில் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. உடனே திருநீர்மலை அடிவாரம் வந்து இராமபிரானை மனதில் நிறுத்தி தியானித்தார். அவருக்கு தவத்திற்கு இரங்கி  அரங்கநாதர் இராமபிரானாகவும், இலட்சுமி தாயார் சீதா தேவியாகவும், ஆதிசேசன் இலக்குவனாகவும், பெருமாளின் ஆயுதங்களான சங்கு, சக்கரங்கள் பரத சத்ருக்கணனாகவும், விஷ்வக்சேனர் சுக்ரீவனாகவும், கருடன் அனுமனாகவும் "திருமண கோலத்தில்" எழுந்தருளி காட்சி தந்ததாக தல வரலாறு கூறுகிறது. இராமர் கருவறையில் வால்மீகி முனிவரையும் சேவிக்கலாம்.  இவருக்கு "நீல முகில் வண்ணர் " என்றும் இன்னொரு திருநாமம். திருநீர்மலை முதல் பாசுரத்தில் தாயாரை  அணிமாமலர் மங்கை என்று மங்கலாசாசனம் செய்த ஆழ்வார் ஐந்தாம் பாசுரத்தில்

மாலும் கடலார மலைகுவடிட்டு அணைகட்டி வரம்புருவ மதிசேர்
கோலமதிலாய இலங்கைகெடப் படை தொட்டு ஒருகால் அமரிலதிர
காலமிதுவென்று அயன் வாளியினால் கதிர்நீள்முடி பத்தும் அறுத்தமரும்
நீலமுகில்வண்ணனெமக்கிறைவர்க்கு இடம் மாமலையாவது நீர்மலையே (பெ.தி 2-4-5)

பொருள்: முன்னர் கடல் நிறையும்படி மலைகளைப் போட்டு அக்கரையிலே சென்று சேரும்படி அணையை அமைத்து மதில்களை உடைய இலங்கை நகர் அழியும்படி படைக்கலங்களை நடத்தி போரில் அதிரும்படி செய்தவன். மேலும் இராவணனை முடிப்பதற்கு  இதுவே தக்க சமயம் என்று கருதி பிரம்மாஸ்திரத்தினால் அவன் தலைகள் பத்தையும் வெட்டி, திரு அயோத்தியில் எழுந்தருளியுள்ள  நீல மேகம் போலவும் நிறமுடைய  நம் தலைவனான பெருமானுக்கு இடம் திருநீர்மலையாகும்
என்று மங்கலாசாசனம் செய்கின்றார். 




 இத்தலத்தின்
மூலவர்கள் : நீர் வண்ணர், அரங்கநாதர், சாந்த நரசிம்மர், திரிவிக்கிரமன், இராமர்
தாயார்: அணிமா மலர் மங்கை, அரங்க நாயகி.
சயனம் : மாணிக்க சயனம்
விமானம்: தோயகிரி விமானம்.
தீர்த்தம் : மணிகர்ணிகா தடாகம், க்ஷீர புஷ்கரிணி, காருண்ய புஷ்கரிணி, ஸித்த  புஷ்கரிணி, ஸ்வர்ண புஷ்கரிணி.
தல விருட்சம் : வெப்பால மரம்.
மங்கலாசாசனம்: திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார்.

ஒரே திருக்குளத்தில் நான்கு தீர்த்தங்கள் அமைந்துள்ளது இத்தலத்தின்  இன்னுமொரு  தனி சிறப்பு. தடாகத்தின் மத்தியில் நீராழி மண்டபம் உள்ளது.  இக்கோயிலின் எதிரிலுள்ள மணிகர்ணிகா தடாகத்தில் க்ஷீர புஷ்கரிணி, காருண்ய புஷ்கரிணி, ஸித்த  புஷ்கரிணி, ஸ்வர்ண புஷ்கரிணி என்று நான்கு தீர்த்தங்கள். இரு பிரம்மோற்சவங்களின் போதும், வைகுண்ட ஏகாதசிக்கு மறு நாள் ஆகிய மூன்று நாட்களில் தீர்த்தவாரி நடைபெறுகின்றது. இத்தீர்த்தவாரி "முக்கோடி துவாதசி தீர்த்தவாரி" என்றழைக்கப்படுகின்றது. 



வருடத்தில் இரண்டு பிரம்மோற்சவங்கள். பங்குனி திருவோண நாளை தீர்த்த நாளாகக் கொண்டு பிரம்மோற்சவம் நீர்வண்ணருக்கு, சித்திரை திருவோண நாளை தீர்த்த நாளாக கொண்டு பிரம்மோற்சவம் அரங்கநாதருக்கு. சித்திரை மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் கொடியேற்றத்தன்றும், கொடி இறக்கத்தன்றும் பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் நடைபெறும் அரங்கநாதர் அரங்கநாயகித்தா யார்  திருக்கல்யாணம் ஆகிய  மூன்று நாட்களிலும் அழகிய மணவாளப் பெருமாள் மலையின் மீது எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இம்மூன்று நாட்கள்  மட்டுமே உற்சவரையும் மூலவரையும் ஒரே நேரத்தில் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் மூலவர் மலை மீதும் உற்சவர் மலை அடிவாரத்திலும் சேவை சாதிக்கின்றனர்.



மலையில் உள்ள அரங்கநாதருக்கு சித்திரையிலும் மலை அடிவாரத்திலுள்ள நீர்வண்ணப் பெருமாளுக்கு பங்குனியிலும் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. அழகிய மணவாளப் பெருமாள் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று பரமபதவாசல் சேவை தந்தருள்கிறார். மாசி மகத்தன்று இவரே கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். இரதசப்தமியன்று ஏழு வாகனங்களில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்..  சித்திரை உத்திரத்தன்று நீர்வண்ணர் – அணிமாமலர்த் தாயார் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது. மேலும் தை மாத இரத சப்தமியன்றும், மாசி மகத்தன்றும் கருட சேவை தந்தருளுகின்றார். நரசிம்ம சுவாமிக்கு ஆனி மாதத்திலும் உலகளந்த பெருமாளுக்கு ஆடி மாதத்திலும் ஒரு நாள்  உற்சவம் நடைபெறுகின்றது. அன்று அடிவாரத்திற்கு எழுந்தருளி கருட சேவை தந்தருளுகின்றனர். 

கதியேலில்லை நின்னருளல்லது எனக்கு
நிதியே! திருநீர்மலை நித்திலத்தொத்தே!
பதியே! பரவித்தொழும் தொண்டர்தமக்குக்
கதியே! உன்னைக்கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே (பெ.தி 7-1-7)

பொருள்: அன்பர்களுக்கு வைத்தமாநிதி போன்றவனே! திருநீர்மலையில் எழுந்தருளியுள்ள முத்து மாலை போன்றவனே! அடியேனுக்கு உன் அருள் அல்லாமல் வேறொரு புகல் இல்லை.  திருத்தலங்களை ஏத்தித்தொழுகின்ற பாகவதர்களுக்கு கதியானவனே! உன்னைக் கண்டு கொண்டு பிழைத்துப் போனேன் என்று திருமங்கையாழ்வார் தனது ஆச்சார்யனான திருநறையூர் நம்பியை மங்களாசாசனம் செய்த போது பாடியுள்ள இத்தலத்தில் வைகாசன ஆகமப்படி பூசைகள் நடைபெறுவதால் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு தங்க கருட சேவை தந்தருளுகிறார். பள்ளியறையிலிருந்து எழுந்தருளி முதலில் ஊஞ்சல் சேவை தந்தருளுகின்றார். பின்னர் ஒய்யாளி சேவை பல்வேறு நடைகளில்  பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றார். பின்னர் கருட வாகனத்தில் சேவை சாதித்து மாட வீதி வலம் வருகின்றார். இரவு சுமார் பத்து மணி அளவில் ஆரம்பமாகும் கருடசேவை புறப்பாடு திருக்கோயிலை வந்து சேரும் போது அதிகாலை ஆகிவிடுமாம்.



இவ்வாறு இத்தலத்தில் பல்வேறு கருடசேவைகளை கண்டு களிக்கலாம் சமயம் கிட்டும் போது இத்தலம்  சென்று ஒரு கருட சேவையை கண்டு களியுங்கள் அன்பர்களே. .   

Labels: , , , ,