Friday, June 6, 2014

தென் திருப்பேரை நிகரில் முகில் வண்ணன் கருட சேவை

Visit BlogAdda.com to discover Indian blogs
  ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -12



தாமிரபரணியாற்றின் தென் கரையில் திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில்  திருச்செந்தூருக்கு அருகில், ஆழ்வார் திருநகரியிலிருந்து     5 கி.மீ தொலைவில் தென்திருப்பேரைத்தலம் அமைந்துள்ளது. திருக்கோளூரிலிருந்து பேருந்திலும் நடந்தும் வரலாம்.  வாருங்கள் பெருமாள் ஏன் மகரநெடுங்குழைக்காதர் என்றழைக்கப்படுகின்றார் என்று காணலாம்.

மூலவர்:  மகரநெடுங்குழைக்காதர், உபய நாச்சியார்களுடன் அமர்ந்த திருக்கோலம் கிழக்குப்பார்த்த திருமுக மண்டலம்.
உற்சவர்: நிகரில் முகில் வண்ணன்
தாயார்: குழைக்காது வல்லி, திருப்பேரை நாச்சியார்.
விமானம்: பத்ர விமானம்.
தீர்த்தம்: சுக்ர புஷ்கரணி, சங்க தீர்த்தம், 
பிரத்யட்சம்: சுக்கிரன், ஈசான்ய ருத்திரன், பிரம்மா.
ஆகமம் : வைகானஸம் – சம்பிரதாயம்: தென்கலை.
மங்களாசாசனம்: நம்மாழ்வார் ஒரு பதிகம் (7ம் பத்து -3ம் திருவாய் மொழி)..  
கிரகம்: சுக்கிரன் ஸ்தலம்.


தாய்மாரும் தோழிமாரும்  தடுக்கவும், பராங்குச நாயகியாகிய தலைவி திருப்பேரைக்கு செல்வேன் என்று துணிந்து கூறும்படி பாடியுள்ளார் அதில் ஒரு பாசுரம்

கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடி கார்கடல் வண்ணனோடு என் திறத்துத்
கொண்டு, அலர் தூற்றிற்று; அது முதலாக் கொண்ட என் காதல் உரைக்கில், தோழி,
மண் திணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால்;
தென் திரை சூழ்ந்து அவன் வீற்றிருந்த  தென் திருப்பேரெயில் சேர்வன் – சென்றே.

தோழீ! எம்பெருமானிடத்து நான் கொண்டுள்ள காதலின் தன்மை எவ்வளவு பெரியது தெரியுமா? அவனை நான் காதலித்ததால் என் உடம்பில் பலவகை மெய்ப்பாடுகள் தோன்றின. அவற்றைப் பார்த்த பலரும் ஒன்று கூடி கரிய நிறம் கொண்ட கடல் போன்ற எம்பெருமானிடத்தில் நான் வைத்துள்ள காதலைப் பற்றி இழிவாகப் பேசினார்கள். ஊராரெல்லாம் இதனைக் காரணமாகக் கொண்டு என்னை பழித்தார்கள். இதனால் என் காதல் குறைந்ததா? இல்லை: மாறாக அது மேன் மேலும் வளர்ந்தது, எவ்வளவு பரந்து வளர்ந்தது தெரியுமா?   மண் நிறைந்த இப்பூவுலகமும், ஏழு கடல்களும்,  மற்றும் நீண்ட வானமும், ஆக இவையாவும் எவ்வளவு பெரியவையோ, அவற்றை விடவும் பெரிதாக வளர்ந்து விட்டது. ஆகவே அக்காதலுக்கு உரியவனாகிய பெருமான் வீற்றிருக்கும் தெளிந்த அலைகளையுடய நீர் சூழ்ந்த தென்திருப்பேரெயில் என்னும் தலத்தை நான் அடைவேன்: ஆள் விடுதல், அவன் வரவு பார்த்தல் செய்யாமல் நானே அங்குச் சென்று சேர்வேன்.    



 பூமாதேவி மகரக்குழை அளித்த வரலாறு:  பெண்களுக்கு  பொறாமை மற்றும் கர்வம் கூடாது என்பதை விளக்கும் வகையில் இத்திருக்கோவிலின் தல வரலாறு அமைந்துள்ளது. ஒரு சமயம் மஹாலக்ஷ்மி தன்மை விட பூமாதேவியிடம் பெருமாள் அதிக ஈடுபாடு கொண்டிருப்பதாக நம்பி, துர்வாச முனிவரிடம் தான் பூமாதேவியை விட அழகாக இல்லாதத் காரணத்தால்தான் ஸ்ரீமந்நாராயணன் தன்னை வெறுக்கின்றார். அதனால் பூமாதேவியைப் போலவே அழகும் திறமும் தனக்கு ஏற்பட வேண்டும் என்று கேட்டார்.  துர்வாசரும் பூமாதேவியைக் காண வந்த பொழுது தனது வடிவில் கர்வம் கொண்ட பூமாதேவி பெருமாளின் மடியை விட்டு எழுந்திருக்கவில்லை அவரை உபசரிக்கவில்லை. கோபம் கொண்ட துர்வாசர் “ நீ லக்ஷ்மியின் ரூபத்தை அடையக் கடைவாய்” என்று சபித்தார். பூமிதேவியும் முனிவரிடம் சாப விமோசனம் வேண்ட, தாமிரபரணி நதியின் தென் கரையில் உள்ள ஹரிபதம் என்னும்  க்ஷேத்திரத்தில் சென்று  நதியில் நீராடி தவம் புரிய  உனக்கு சாப விமோசனம் கிட்டும் என்றார்.

துர்வாசர் உபதேசித்த திருவெட்டெழுத்தை ஜபித்துக்கொண்டு பூமிதேவி, ஸ்ரீபேரை(லக்ஷ்மியின் உடல்) என்ற நாமத்தை தரித்து தவம் செய்து வரும் போது ஒரு பங்குனி பௌர்ணமி தினத்தன்று ஜெபம் செய்து ஆற்றின் நீரைக் கையில் எடுத்த போது இரண்டு அழகிய மகர குண்டலங்கள் (மீன் வடிவிலான  காதில் அணியும் ஒரு அணிகலன்) கிட்டியது. உடனே பூமிதேவியும் இவை பெருமாளின் திருக்காதுகளுக்கே இவை உகந்தவை என்று நினைத்தவுடன், பெருமாள் அங்கு தோன்றி பிரியே! அந்த மகர குண்டலங்களை எனக்கு  தர வேண்டும் என்று கூற , அவளும் மகிழ்ச்சியுடன் அவற்றை பெருமாளுக்கு கொடுத்தாள். அவரும் தனது அழகிய நீண்ட திருக்காதுகளில் அவற்றை அணிந்து கொண்டார். தேவர்கள் பூமாரி பொழிந்தனர், தேவ துந்துபிகள் முழங்கின. பூமாதேவியின் திருமேனி முன் போலவே அழகானது.  தேவர்கள் வேண்டிக்கொண்டபடி பெருமாள் மகர நெடுங்குழைக்காதர் என்னும் திருநாமத்துடன் இன்றும் சேவை சாதிக்கின்றார். அந்த தீர்த்தமும் மத்ஸ்ய தீர்த்தம் என்று வழங்கப்படலாயிற்று. இத்தலத்தின் பெயரும் பூமிதேயின் பெயரான திருப்பேரை ஆயிற்று. சோழ நாட்டு திவ்ய தேசங்களில்  திருப்பேர் நகர் என்னும் திவ்ய தேசம் உள்ளதால் இத்தலம் தென்திருப்பேரை என்று அழைக்கப்படுகின்றது.



வருணன் பாசம் பெற்ற வரலாறு: இந்திரனால் தோற்கடிக்கப்பட்ட அசுரர்கள் மேற்கே சென்று வருணனுடன் போரிட்டனர். குருவின் சாபத்தினால் நாகத்தையும் பாசத்தையும் இழந்தார். உடனே அவன் மனைவி குருவை சரணடையக் கூற, அவனுன் குருவிடம் சென்று வேண்ட, அவரும் நீ முன் போல் உன் ஆயுதங்களைப்பெற தெற்கு திக்கில் பார்வதி தேவியின் சரீரத்தில் இருந்து உண்டான் தாமிரபரணி நதி தீரத்தில் உள்ள “ஸ்ரீபேரை” என்னும் தலத்தில் பூமி தேவியுடன் சேவை சாதிக்கும் பெருமாளை திருவெட்டெழுத்தால் வழிபட உன் எண்ணம் நிறைவேறும் என்று அருளினார்.  வருணனும் தென்திருப்பேரை வந்து மகர தீர்த்தத்தில் நீராடி  மகரநெடுங்குழைக்காதரை பங்குனி பௌர்ணமியன்று வழிபட, மாதவன் மகிழ்ந்து தீர்தத்தை தாரையாக விட அது பாசமாயிற்று. அப்பாசத்தைக் கொண்டு வருணன் அசுரர்களை வென்றான். எனவே இத்தலத்திம் மழை வேண்டி செய்யுன் பிரார்த்தணைகள் பொய்ப்பதில்லை.

விதர்ப்ப தேசத்தில் பஞ்சம் நீங்கிய வரலாறு: ஒரு சமயம் விதர்ப்ப தேசத்தில்12 வருடம் மழையில்லாமல் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. எனவே விதர்ப்ப மன்னன் குருவை அழைத்து பரிகாரம் கேட்க, அவரும் தென்திருப்பேரை சென்று மகரநெடுங்குழைக்காதரை பூஜிக்க பஞ்சம் நீங்கும் என்றார். அரசனும்  அவ்வாறே செய்ய பஞ்சம் நீங்கியது.


சுந்தர பாண்டியன் வரலாறு: சுந்தர பாண்டியன் பிள்ளை வரம்வேண்டி பெருமாளுக்கு பூசை செய்வதற்காக 108  அந்தணர்களை அழைத்து வந்தான்.  வரும் வழியில் ஒருவர் காணாமல் போய்விட்டார்.  ஊர் வந்து சேர்ந்தபோது 107 பேர்தான் இருந்தனர். ஆனால் அரசம் வந்து பார்த்தபோது 108 பேர் சரியாக இருந்தனர். பெருமாளே காணாமல் போனவர் வடிவில் வந்து அரசன் முன் தோன்றினார் எனவே பெருமாள் எங்களில் ஒருவர் என்று இந்த ஊர்          அந்தணர்கள்  கூறுகின்றனர். பல அறக்கட்டளைகளை ஏற்படுத்தி பல்வேறு கைங்கரியங்களை செய்து வருகின்றனர்.

இக்கோவில் மிகப்பெரிய கோவில். மூலவர் மகர நெடுங்குழைக்காதர் நீண்ட மீன் போன்ற குழைகளை காதணியாக அணிந்து கொண்டு குழைக்காது நாச்சியார், திருப்பேரை நாச்சியார் இருவருடனும் எழிலாக அமர்ந்த் கோலத்தில் ஈசான்ய ருத்திரருக்கும், பிரம்மனுக்கும் காட்சி தரும் பரமபத திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.


வேதம் ஒதி வரும் வேத வித்களைக் காணவும், குழந்தைகள் விளையாடுவதைக் காணவும் பெருமாள், கருடனை இடப்பக்கமாக விலகி இருக்குமாறு கூறியதால்.கருடாழ்வார் சன்னதி பெருமாளுக்கு நேராக இல்லாமல் இடப்பக்கம் சிறிது விலகி உள்ளது. இதை நம்மாழ்வார்
  
வெள்ளைச்ச்சுரிசங்கொடாழியேந்தித் தாமரைக் கண்ணன் என்னெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற வாற்றைக்காணீர் என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவ வீற்றிருந்த வேதவொலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியுமராத் திருப்பேரெயில் சேர்வன் நானே.

என்ற பாசுரம்  இதையே காட்டுவதாகக் கூறப்படுகின்றது.

இத்தலத்தில்  பங்குனி பிரம்மோற்சவத்தின் போது ஐந்தாம் திருநாள் இரவு பெருமாள் கருட சேவையில் பிரதான வாயிலில் இருந்து வெளி மண்டபத்திற்கு எழுந்தருளும் போது பெருமாளை சேவிக்கும் அழகே அழகு. வார்த்தகளால் வர்ணிக்க முடியாத காட்சி அது.


திருவரங்கனின் அழகை முகில்வண்ணன் (அழகுடையவன்) என்று பாடிய நம்மாழ்வார் தமது  

நகரமும்நாடும்பிறவும்தேர்வேன் நாணெனக்கில்லைஎன்தோழிமீர்காள்
சிகரமணிநெடுமாடநீடு தென்திருபேரெயில்வீற்றிருந்த
மகரநெடுங்குழைக்காதன்மாயன் நூற்றுவரையன்றுமங்கநூற்ற
நிகரில்முகில்வண்ணன்நேமியான் என் நெஞ்சங்கவர்ந்தென்னையூழியானே.
   
என்னும் பாசுரத்தில் நிகரில் முகில் வண்ணன் (ஈடு இணையற்ற அழகுடையவன்) என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.

“கூடுபுனல் துறையும் குழைக்காதன் திருமாலையும் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்று போற்றப்படும் நிகரில் முகில் வண்ணரின் கருட சேவையை இப்பதிவில் கண்டீர்கள் இனி வரும்பதிவில் திருக்கோளூர் நிக்ஷேபவித்தரின் கருட சேவையைக் காணலாம் அன்பர்களே.

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home