Wednesday, October 28, 2009

நித்ய கருட சேவை -1



சென்றால் குடையாம் இருந்தால் சிங்காதனமாம்

நின்றால் மரவடியாம் நீள்கடலுள் – என்றும்

புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம்புல்கும்

அணையாம் திருமாற்கு அரவு.


என்று ஆதிசேஷனாகிய நாகம் திருமாலுக்கு செய்யும் சேவைகளை பட்டியலிடுகின்றார் பொய்கையாழ்வார். அது போல யாரும் பெரிய திருவடியாம் கருடன் செய்யும் சேவையை பாடவில்லையென்றாலும் நாம் அவை என்னவென்று பார்ப்போமா?

திருவல்லிக்கேணி தெள்ளிய சிங்கர் கருட சேவை

அவுணரை கொல்ல செல்கையில் மேலப்பாம்

வெற்றிக் கொடியாம் குளிர் விசிறியாம் – காய்சின

பறவையாம் பரி பூணாத இரதமாம்

உற்ற துணைவனாம் திருமாற்கு புள்ளரையன்.

என்றபடி பெருமாள் அசுரரை கொல்லச் செல்லும் போது, "மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும் மேலாப்பின் கீழ் வருவானை" என்று ஆண்டாள் நாச்சியார் பாடியபடி அவருக்கு குடையாய் நிழல் தருபவனும், தனது பெரிய சிறகுகளால் பெருமாளூக்கு ஆலவட்ட கைங்கரியம் செய்து அவரை குளிர்விப்பவனும், அவரது திருவடிகளை தாங்கும் வாகனமாயும், அவரது தலைக்கு மேலே வெற்றிக் கொடியாகவும், பல சமயங்களில் பெருமாளுக்கு சிரமம் தராமல் தானே சென்று பகைவர்களை கொத்தி புரட்டி எடுத்து விடுகின்ற காய்சினப் பறவையாகவும், ( பரனூர் மகான் பெருமாள் இதை நகைச்சுவையாக பெருமாள் பல சமயம் கருடனை அனுப்பி விட்டு தான் ஹாயாக அமர்ந்து விடுவார் எல்லாவற்றையும் கருடன் கவனித்துக் கொள்வான் என்று கூறுவார்), பெருமாள் எங்கு செல்ல விழைகின்றாறோ அங்கு அவரை அந்த க்ஷணமே கூட்டிச் செல்கின்ற குதிரை பூட்டாத நாராயண ரதமாகவும், பெருமாள் எங்கு சென்றாலும் அவருக்கு உற்ற துணைவனாயும் விளங்குபவன் சுபர்ணன் என்னும் அழகிய சிறகுகளை உடைய கருடன்.

பார்த்தசாரதிப்பெருமாள் கருட சேவை

அநேகமாக அனைத்து தலங்களிலும் நின்ற கோலத்தில் அஞ்சலி ஹஸ்தத்துடன் ( பெருமாளை வணங்கிய நிலையில்) பெருமாளுக்கு எதிரில் கருடன் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பார். மிக சில ஸ்தலங்களில் மட்டும்தான் பெருமாளுடன் கருவறையிலேயே தோளோடு தோள் இணைந்து தோழனாய் கருடன் சேவை சாதிக்கின்றான். அவ்வாறு கருடன் சேவை சாதிக்கும் சில ஸ்தலங்களை அடுத்து வரும் பதிவுகளில் காணலாம்.

"நித்ய கருட சேவை" என்று பெயரிடப்பட்டுள்ளதால் பெருமாள் கருட வாகனத்தில் மேலிருந்து கஜேந்திர வரதனாக தினமும் சேவை சாதிக்கும் ஒரு திவ்ய தேசத்தைப்பற்றி பார்ப்போம். அந்த திவ்ய தேசம் தான் திருவல்லிக்கேணி. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த பெருமாள் இவர்.

இத்திவ்ய தேசத்தில் நெடியானாய் நின்ற கோலத்தில், சாரதிக்கு உரிய முறுக்கு மீசையுடன் வலக்கையில் சங்கமேந்தி சக்கரம் இல்லாமல் வேங்கட கிருஷ்ணன் என்று மூலவராயும், திருமுக மண்டலத்தில் பீஷ்மரின் அம்பு காயங்களுடன் பார்த்தசாரதி என்று உற்சவராயும், வால்மிகி முனிவர் வணங்கும் இராமனாய், மைதிலி மற்றும் தம்பி இலக்குவனோடும் சக்கரவர்த்தி திருமகனும், பள்ளி கொண்ட ஸ்ரீமந்நாதராய் அரங்கனாகவும், பிரகலாதனுக்கு அருள் புரிந்து யோக நிலையில் அமர்ந்த தெள்ளிய சிங்கராகவும், நித்ய கருட சேவை வழங்கும் கஜேந்திர வரதராகவும் பெருமாள் ஐந்து கோலங்களில் சேவை சாதிக்கின்றார்.

கஜேந்திர வரதர் சன்னதி உள் பிரகாரத்தில் தென் கிழக்கு மூலையில் தனி சன்னதியாக அமைந்துள்ளது. இவருக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் வைகாசி திருவோணத்தை ஒட்டி பத்து நாள் நிகழ்ச்சியாக நடைபெறுகின்றது. வைகானச ஆகமப்படி உற்சவங்கள் நடைபெறுவதால் மூன்றாம் நாள் அதிகாலை கோபுர வாசல் தரிசனத்துடன் கருட சேவை எல்லா பெருமாள்களின் பிரம்மோற்சவத்தின் போதும் நடைபெறுகின்றது. கஜேந்திர வரதர் ஹஸ்த நட்சத்திரத்தன்று் மாலை புறப்பாடு கண்டருளுகிறார். கஜேந்திர மோக்ஷ உற்சவம் ஆடி கருடன் என்று ஆடிப் பௌர்ணமியன்று நடைபெறுகின்றது. பங்குனி உற்சவ திருக்கல்யாண உற்சவத்தின் போது மாலை ஸ்ரீரங்கநாத சுவாமி கண்ணாடி கருட சேவை தந்தருளுகின்றார்

இவ்வாறு நித்ய கருட சேவை தந்தருளும் கஜேந்திர வரதரை திருமங்கையாழ்வார் இவ்வாறு மங்களாசாசனம் செய்துள்ளார்


மீனமர் பொய்கை நான்மலர்கொய்வான் வேட்கையினோடு சென்றிழிந்த

கானமர் வேழம் கையெடுத்தலற கராஅதன்காலினைகதுவ

ஆனையின் துயரம் தீரப்புள்ளூர்ந்து சென்றுநின்று ஆழிதொட்டானை

தேனமர்சோலை மாடமாமயிலைத் திருவல்லிக்கேணி கண்டேனே.


கஜேந்திர மோக்ஷ சிற்பம் ( ஆதி கேசவப்பெருமாள் பல்லக்கு)

பெருமாளின் புஷப கைங்கர்யத்திற்காக வேண்டி, கயல் மீன்கள் துள்ளி விளையாடும் தடாகத்திலிருந்து தினம் தாமரை மலர்களை பறித்து வந்த, காட்டில் உற்சாகமாகச் சுற்றித் திரியும், கஜேந்திரன் என்ற யானையின் காலை, ஒரு சமயம் புலால் உண்ணும் முதலையொன்று கவ்வ, அப்போது அந்த கஜேந்திரன் தன் தும்பிக்கையைஉயர்த்தி, "ஆதிமூலமே" என்று பெருங்குரலெடுத்து அலற, கருடனில் விரைந்து பறந்து வந்த பெருமாள், தன் சக்ராயுதத்தை வீசி முதலையை அழித்து, அந்த யானையை துயரிலிருந்துக் காத்தார். இவ்வாறு அடியவர் துயர் தீர்க்கும் அப்பேர்ப்பட்ட வரதராஜப் பெருமாளை, தேன் மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலைகள் சூழ்ந்த, மாடங்கள் மிகு மாமயிலைக்கு அருகில் உள்ள, திருவல்லிக்கேணியில்நான் கண்டேனே ! என்று மயிலாப்பூரில் உள்ள திருவல்லிக்கேணியென்று பாடுகிறார் திருமங்கை மன்னன்.

குறிப்பு: : ஆழி தொட்டானை' என்பதற்கு 'யானைக்கு பாதிப்பு இல்லா வண்ணம், முதலை மட்டும் அழியும்படியாக திருச்சக்கரத்தை வீசிய எம்பெருமான்” என்றுபொருள் கொள்க !

பாசுரச் சிறப்பு: முக்கூரார், தனது உபன்யாசத்தின் போது கஜேந்திரனைக் காக்கபெருமாள் கொண்ட அவசரத்தை சுவைபட இவ்வாறு கூறுவார் ! 'ஆதிமூலமே' என்ற கஜேந்திரனின் அலறலைக் கேட்ட மாத்திரத்தில், வைகுண்டத்தில்பிராட்டியுடன் அளவளாவிக் கொண்டிருந்த பெருமாள் அவசர அவசரமாகக்கிளம்ப யத்தனித்தபோது, அவரது உத்தரீயம் (மேல் துணி) தாயாரின் கையில்சிக்கிக் கொள்ள, பெருமாளின் எண்ணம் புரிந்த கருடன் அவரை விட வேகமாகபறந்து வந்து அவர் முன் நிற்க, சக்ராயுதமானது, பெருமாள் கருடன் மேலேறிபயணத்தைத் தொடங்கி விட்டபடியால், தானாகவே பறந்து வந்து அவரது வலதுதிருக்கரத்தில் சரியாக அமர்ந்து கொள்ள, பகவான் அதிவிரைவில் சென்று, கஜேந்திரனுக்கு அபயம் அளித்ததாக அழகாக பாசுர விளக்கம் கூறுவார் !

திருவல்லிக்கேணி சக்கரவர்த்தி திருமகன் கருடசேவை

தன்னை வேண்டி அழைத்த அடியவரைக் காக்க விரைந்த பெருமாளுக்கு, கருடனின் உதவியோ, சக்கரத்தின் தேவையோ தோன்றவே இல்லை ! அபயம்அளிப்பது ஒன்றே குறி ! அப்பேர்ப்பட்ட கருணாமூர்த்தி எம்பெருமான் ஆவார் ! கீழே விழுந்து அடிபட்டு அழும் குழந்தையை, கையில் ஏந்தி ஆசுவாசப்படுத்திஆறுதல் சொல்ல எப்படி ஒரு தாய் அவசரமாக ஓடி வருவாளோ, அது போலவே, எம்பெருமான் ஓடோடி வந்து, தன் அடியாரின் துயர் தீர்த்து அபயம் அளிப்பார் என்பது திண்ணம். வேண்டியதெல்லாம் பூரண சரணாகதி ஒன்றுதான், நான், எனது என்றிருக்கும் வரையில் அவர் அருள் கிட்டாது. நீயே சரணம் என்று சரணமடைவதே உய்ய வழி .

சோள சிம்ம புரம் என்னும் திருக்கடிகையில் காஞ்சி வரதர் தனது அன்பரான தொட்டாச்சாரியாருக்கு வைகாசி கருட சேவை காட்சியை தக்கான் குளக்கரையை அளித்ததை அனைவரும் அறிவோம், அறியாதவர்கள் இங்கு கிளிக்கவும்.

எங்கே வரதர்!

இவ்வாறு கச்சி வரதன் அளித்த அற்புத கருட சேவையை எப்போதும் அனைவரும் சேவிக்கும் பொருட்டு தக்கான் குளக்கரையில் வரதர் ஆலயம் உள்ளது. அங்கும் நாம் தினமும் மோட்சமளிக்கும் கருடசேவையை தரிசிக்கலாம்.

அடுத்த பதிவில் கருடன் பெருமாளுடன் சேவை சாதிக்கும் சில ஸ்தலங்களுடன் சந்திப்போமா அன்பர்களே.

Labels: , , , ,

Monday, October 12, 2009

அதிசயமாய் வரும் தீபாவளி



இந்த வருடம் நாம் கொண்டாடும் தீபாவளி ஒரு அதிசய தீபாவளி. ஆம் முன்னூறு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இதுமாதிரி புரட்டாசி மாதத்திலேயே தீபாவளி வரும். அதுவும் இந்த வருடம் திருமாலுக்கு மிகவும் உகந்த புரட்டாசி சனிக்கிழமையன்று தீபாவளி வருகின்றது. அநேகமாக எல்லா ஆண்டும் நான்கு சனிக்கிழமைதான் வரும். அதிசயமாக சில ஆண்டுகள் மட்டுமே ஐந்து சனிக்கழமைகள் வரும். இந்த வருடம் அம்மனுக்கு உகந்த ஆடி வெள்ளியும் ஐந்து தடவை வந்தது. அது போலவே பெருமாளுக்கு உரிய புரட்டாசி சனிக்கிழமையும் சேர்ந்து வந்துள்ளது. இந்த வருட நிறை சனிக்கிழமையன்று தீபாவளி இணைந்து வருவது மிகவும் சிறப்பு. இதுவே புரட்டாசி மாதத்தின் நிறை நாள். இந்தியாவெங்கும் ஸ்ரீ கிருஷ்ணரையும், ஸ்ரீ இராமரையும், ஸ்ரீ மஹா லக்ஷ்மியையும் வழிபடும் இந்த சிறந்த நன்னாளில் கண்கண்ட தெய்வம் கலியுக வரதன் திருமலையப்பன், ஸ்ரீநிவாஸன், ஏழுமலைவாசன், வேங்கடாசலபதி தங்கள் அனைவருக்கும் அனைத்து நலங்களையும், வளங்களையும் வழங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு தங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். எங்கள் குடும்பத்தினரும் தங்கள் உளம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர்.

Wish you and your family a very Happy Deepavali.

பண்டிகை ஒன்றென்றாலும் அதை கொண்டாடும் காரணமும், கொண்டாடும் விதமும் மாறுபடுகின்றது இந்தியாவிலேயே. இருந்தாலும் வெளி நாடுகளிலும் இது போல பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகின்றது அவற்றை பற்றியும் பார்ப்போம்.


கிருஷ்ண பரமாத்மாவும் சத்யபாமையும்
நரகாசுரனுடன் போர் செய்யும் குறு ஓவியம்

தென்னிந்தியர்களாகிய நாம் தீபாவளியை நரக சதுர்த்தசி என்று அமாவாசைக்கு முதல் நாள் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, தாயார் சத்யபாமையுடன் சென்று நரகாசுரனை வதம் செய்ததை கொண்டாடும் வகையில் கங்கா ஸ்நானம் சூரியோதயத்திற்க்கு முன்னர் செய்து புத்தாடை அணிந்து, இனிப்பு சாப்பிட்டு, பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்கின்றோம்.

குஜராத் மக்களுக்கு தீபாவளிதான் வருடப்பிறப்பு . அங்கு இத்திருவிழா லக்ஷ்மி பூஜை, புது கணக்கு ஆரம்பித்தல் என்று வெகு சிறப்பாக அமாவாசை தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெறுகின்றது. குஜராத் என்றாலே இனிப்புதான் ஐந்து நாட்கள் ஆனந்தமாக கொண்டாடுகின்றர் இவர்கள் முழு விடுமுறையுடன். இவர்கள் தீபாவளியன்று தங்கள் இல்லம் முழுவதும் வண்ண வண்ண தீபங்கள் ஏற்றுகின்றனர் தீபாவளி என்றால் தீப+ ஆவளி அதாவது தீப வரிசை என்று பொருளல்லவா? தீபம் ஏற்றுவதற்கான காரணம் என்ன என்பதை பின்னர் பார்ப்போம்.

நமது நாட்டின் மேற்குப் பகுதியில் இருந்து கிழக்குப் பகுதிக்கு சென்றால் அங்கே வேறு விதமான கொண்டாட்டம் இவர்கள் தீபாவளியை மஹாநிசா என்று கொண்டாடுகின்றனர். அசுர இரத்தம் குடித்ததால் காளி தேவிக்கு ஏற்பட்ட ஆங்காரத்தை சிவபெருமான் தணித்த தினம் என்பதால்அமாவாசை இரவில் காளி பூஜை பிரபலம் விடிய விடிய வெகு சிரத்தையுடன் சிவபெருமானின் மேல் முண்ட மாலையுடன் நடனமாடும் தக்ஷிண காளி ரூப சிலை பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றனர் சமஷ்டி பூர்வமாக. இன்று நாம் கார்த்திகை தீபத்தன்று வீடெங்கும் தீபம் ஏற்றுவது போல தீபம் ஏற்றுகின்றனர். குறிப்பாக மேற்கு வங்காளத்திலும் அசாமிலும் வீட்டின் முன்னர் வாழை மரம் கட்டி அதில் மூங்கில் பத்தைகளை செருகியும். வீட்டின் மதில் சுவர் முழுவதும் வாழைமட்டை வைத்து அதில் மூங்கில் பத்தைகளை செருகியும் தீபம் ஏற்றும் ஒரு அழகே அழகு. ஒரே சொர்க்க பூமி போல அந்த அமாவாசை கும்மிருட்டில் தீபங்கள் ஒளிரும் காட்சி. மேலும் இளம்பெண்கள் இரவில் தீபங்களை ஏற்றி அதை ஆற்றில் மிதக்க விடுகின்றனர்.



விளக்கொளியில் ஸ்ரீராமர்


சரி இனி வடநாடு செல்வோமா?. விஜயதசமியன்று ஸ்ரீஇராமர் இராவணனை வென்ற நாள், அந்த விஜய கோதண்டராமர், தாயார் சீதாதேவியுடனும், இளையவன் இலக்குவனோடும் அயோத்திக்கு திரும்பிய நாள்தான் தீபாவளித் திருநாள். வெற்றி இராவனாக திரும்பி வந்த தம் அண்ணலை அயோத்தி நகர மக்கள் தங்கள் இல்லங்கள் தோறும் தீபங்கள் ஏற்றி வரவேற்றனராம் இன்றும் அதுபோலவே வடநாடெங்கும் தங்கள் இல்லம் முழுவதும் தீபங்கள் ஏற்றி தீபாவளியை சிறப்பாக கொண்டாடுகின்றனர். தீபாவளியை சம்பந்தப்படுத்தி கூறப்படும் அனைத்து கதைகளும் தீமைகள் அனைத்தும் கடைசியில் இறைவனால் அழிக்கப்பட்டுவிடும் என்பதையே சுட்டிக்காட்டுகின்றன. மேலும் விளக்கு அஞ்ஞான இருளை அகற்றி ஞானத்தை வழங்குகின்றது என்பதைக்குறிக்கின்றது.


இந்திய தபால் தலை

சீக்கியர்களின் மதகுருவான குருகோவிந்த்சிங், முகலாய மன்னன் ஜஹாங்கீரின் சிரையில் இருந்து விடுபட்டு தீபாவளி அன்று அமிர்தசரஸ்க்கு வந்தார். அதைக் கொண்டாடும் வகையில் அமிதசரஸ் பொற்கோவிலில் சிறப்பு தீப அலங்காரங்கள் செய்கின்றனர்.

ஜைனர்கள் தீபாவளி நாளை மஹாவீரர் பரிநிர்வாணம்(வீடுபேறு) அடைந்த நாளாக கொண்டாடுகின்றார்கள்.


அன்னபூரணி

அன்னபூர்ணே சதாபூர்ணே
சங்கர பிராண வல்லபே

ஞான வைராக்ய சித்யர்த்தம்
பிக்ஷாம் தேஹி ச பார்வதி.




முக்தி நகரமாம் வாரணாசியில் தங்க அன்னபூரணி தீபாவளியன்று லட்டுத்தேரில் வலம் வருகின்றாள். வருடத்தில் தீபாவளி சமயத்தில் மட்டுமே நாம் தங்க அன்னபூரணியை நாம் தரிசனம் செய்ய முடியும்.

எங்கள் இல்ல அன்னபூரணி

பார்வதி தேவி கேதார கௌரி விரதம் 21 நாள் இருந்து விரதம் முடித்து இறைவனின் உடலில் இடப்பாகம் பெற்றது ஐப்பசி அமாவாசை அன்றுதான். இன்றும் பலர் தம் இல்லங்களில் கேதார கௌரி விரத நோன்பு கும்பிடுகின்றனர்.

தீபாவளியன்றுதான் செல்வத்திற்கு அதிபதியான குபேரன் சிவபெருமானை வழிபட்டு பொக்கிஷங்களை பெற்றார். அதனால் தீபாவளியன்று பல்வேறு பலகாரங்களுடன் காசு, பணம் வைத்து குபேர பூஜை செய்வது உண்டு. இந்த பூஜை செய்வதால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

இவ்வாறு இந்திய நாடெங்கும் கொண்டாடப்படும் தீபாவளியைப் போல மற்ற நாடுகளிலும் எவ்வாறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றது என்று பார்ப்போமா?

நேபாள நாட்டில் தீபாவளியை "தீஹார்" என்ற பெயரில் 5 நாள் விழாவாக கொண்டாடுகின்றனர். இதில் லக்ஷ்மி பூஜை சிறப்பிடம் பெறுகின்றது.

பர்மாவின் “தாங்கீஜீ” என்ற விழாவும், சீனாவின் “நஹீம்-ஹீபா" என்ற விழாவும், தாய்லாந்தின் “லாய் கிரதோஸ்” என்ற விழாவும், ஜப்பானின் “டோரா நாகாஷி” , ஸ்வீடனின் “லூசியா”, இங்கிலாந்தின் "கைப்பாக்கல்" என்ற விழாவும் நம் தீபாவளியைப் போலவே விளக்கு வரிசைகளுடன் கொண்டாடப்படுகின்றது.


சிங்கப்பூர் வெளியிட்ட தபால் தலை

தீபாவளிப் பண்டிகையை சிறப்பித்து தபால் தலை வெளியிட்ட முதல் நாடு சிங்கப்பூர் ஆகும் அமெரிக்காவும் தபால் தலை வெளியிட்டுள்ளது. .

Thursday, October 8, 2009

ஸ்ரீ சத்ய நாராயணப் பெருமாள் கருட சேவை-2

சென்னை மேற்கு மாம்பலம் சத்ய நாராயணப் பெருமாள் திருக்கோவிலில் பௌர்ணமி தினத்தன்று நடை பெறும் சத்ய நாராயண பூஜை சிறப்பாக நடைபெறுகின்றது. அன்னவரத்தில் உள்ள சத்ய நாராயணப் பெருமாளே இங்கு எழுந்தருளி அருள் பாலிப்பதால் இப்பூசை மிகவும் சிறப்பு பெற்றது ஆகும். இப்பூஜையின் மகத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்வோமா?


பௌர்ணமியன்று காலையில் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறுகின்றது. பின் காலை பத்து மணியளவில் சத்ய நாராயண பூஜை நடைபெறுகின்றது. மாலை பெருமாள் புறப்பாடு நடைபெறுகின்றது. சத்ய நாராயண பூஜையின் போது பாராயணம் செய்யப்படும் கதைகளைப் பார்போமா?


ஒரு சமயம் நைமிசாரண்யத்திலே, சனகாதி முனிவர்கள் ஸூ பௌராணகரிடம், சுவாமி விரும்பிய பலத்தை வரத்தாலும் தபஸ்ஸாலும் விரைவில் பெரும் வகை என்ன? என்று வினவ, ஸூதரும் , எம்பெருமான் நாரத முனிவருக்கு கூறிய சத்ய நாராயண விரத மகிமையைப்பற்றி கூறுகின்றார்.


கருட சேவை க்கு முன்னர் ஊஞ்சல் சேவை

தந்தருளும் சத்யநாராயணப் பெருமாள்

கலியுகத்திலே பூலோகத்திற்கு வந்த நாரதர் அவர்கள் படும் துன்பத்தைக் கண்டு வருந்தி பிறர்க்கருள் புரிய நாரதர், " இவர்களது துன்பத்தைத் துடைக்கும் வழி என்ன"? என எம்பெருமானிடம் வினவ, மஹா விஷ்ணுவும், ' உன்னிடம் அன்பால் ஸத்ய நாராயண விரதத்தைப் பற்றி சொல்லுகின்றேன் கேள். ஏதேனும் ஒரு தினத்தில் சுற்றம் சூழ அந்தணர்களுடன் இவ்விரதத்தை செய்யலாம். பக்தியுடன் நிவேதனங்களை ஸமர்பிக்க வேண்டும். கோதுமை மாவு, அரிசிமாவு, பால், நெய், சர்க்கரை, பஷணங்கள், முதலியவற்றை நிவேதனம் செய்து, அந்தணனிடம் விரத மகிமையைக் கேட்டு தக்ஷிணை அளித்து அனைவருக்கும் போஜனம் செய்வித்து வீடு திரும்ப வேண்டும்'. "இந்த கலியுகத்திலே ப்ரதக்ஷ்யமாக பலனளிக்க வல்லதாம்" என்று கூறினார்.


ஒரு சமயம் காசி நகரில் ஒரு ஏழை அந்தணன் பசி தாகத்தினால் மிகவும் வாடி துன்பப்பட்ட போது அவனுக்காக இரங்கி பகவான் கிழரூபத்தில் வந்து, அந்த அந்தணனுக்கு சத்ய நாராயண பூஜையின் மகிமையும், அந்த விரதத்தை அனுஷ்டிக்கும் முறையையும் கூறி மறைய, அந்த அந்தணனும் விரதத்தை முறையாக செய்து முடித்தான். பின் பெருமாளின் அருளால் துயர் நீங்கி செல்வந்தன் ஆனான். இறுதியில் அவனுக்கு முக்தியும் கிட்டியது.


ஒரு சமயம் ஒரு ஏழை அந்தணனின் வீட்டில் நடை பெற்ற சத்ய நாராயண பூஜையில் ஒரு விறகு வெட்டியும் கலந்து கொண்டு, பிரசாதத்தையும் புசிக்க அடுத்த நாள் அணைத்து விறகுகளும் விற்று தீர்ந்து விட்டன. சத்ய நாராயண விரதத்தின் மகிமையை உணர்ந்த விறகு வெட்டி, பிராமணனிடம் இவ்விரதத்தை கடைப்பிடிக்கும் முறையைக் கேட்டு, தானும் பின் இப்பூஜையை செய்து செல்வந்தன் ஆனான் அவனுக்கும் மோட்சம் கிட்டியது.


ஊஞ்சல் சேவை பின்னழகு


உல்காமுகன் என்ற மன்னனின் இராணி சத்ய நாராயண விரதத்தைசய்வதை கண்ட ஒரு வணிகன் வந்து கேட்க சந்தான சம்பத்துக்களை விரும்பி செய்வதாக இராணியும் கூறினாள். வணிகனும் புத்ர பாக்கியம் உண்டானால் விரதம் இருப்பதாக கூற பெண் மகவும் பிறந்தது. அவனும் மணைவியிடம் பெண்ணுக்கு கல்யாணம் முடிந்தவுடன் பூஜை செய்வதாக கூறி மறந்து விட்டான். ஒரு நாள் மருமகனுடன் வியாபாரம் செய்ய ரத்ந்ஸார நகரம் சென்று ஒரு சத்திரத்தில் இரவு தங்கினான். அந்த இரவில் அரண்மனையில் கொள்ளையடித்த பொருட்களை அந்த சத்திரத்திலே போட்டு விட்டு கொள்ளையர்கள் சென்று விட, காலையில் காவலர்கள் இருவரையும் அரண்மணையில் கொள்ளையடித்ததாக கைது செய்து சிறையிலடைத்தனர். அங்கே மனைவியும் மகளும் எல்லா பொருள்களையும் களவு கொடுத்து உண்ண உணவின்றி தவித்தனர். ஒரு நாள் மகள் ஒரு பிராமணன் வீட்டில் சத்ய நாராயண பூஜை நடப்பதை பார்த்து , பிரசாதம் புசித்து வந்து தானும் பூஜை செய்ய , பகவான் மன்னன் கனவில் தோன்றி உண்மையைக் கூற இருவரும் விடுதலை அடைந்தனர்.


அரசன் கொடுத்த பொன்னையும், வெள்ளியையும் இருவரும் ஒரு ஓடம் ஏறி நகரம் செல்ல, பகவானும் ஒரு பிரம்மச்சாரி வேடத்தில் வந்து ஓடத்தில் என்ன என்று வினவ, எல்லாமே கொடி, இலை என்க, அவ்வாறே ஆகுக என. எல்லா தங்கமும் வெள்ளியும் இலையும் கொடியுமாகியது. மருமகன் பிரம்மச்சாரியை சரணடைந்து வேண்ட சரியாயிற்று.


லக்ஷ்மி ஹாரம் அணிந்து அஞ்சிறைப் புள் ஊர்ந்து

அருள் பாலிக்கும் சத்ய நாராயணப் பெருமாள்




நகர் சென்றதும், சத்ய நாராயண பூஜை செய்து கொண்டிருந்த மகள் மருமகன் வந்த செய்தி கேட்டவுடன் பிரசாதத்தை சுவீகரிக்காமல் மறக்க , பகவான் மருமகனுடன் ஒடத்தை மூழ்கும்படி செய்ய , அவளும் மூழ்க முயல, வணிகன் சத்ய நாராயண பூஜை செய்ய நேர்ந்து கொள்ள, வணிகனே உன் மகள் பிரசாதம் உட்கொள்ள மறந்து விட்டாள். அது பெரிய அபராதம். இவள் பிரசாதம் சுவீகரித்துக் கொண்டவுடன் தன் கணவனை காண்பாள் என்று அசரீரி கூற , அவ்வாறே அவளும் பிரசாதம் சுவிகரித்தவுடன் ஓடத்துடன் தன் கணவனைக் கண்டாள். சத்ய நாராயண பூஜை செய்வதால் இக மற்றும் பர சுகங்கள் இரண்டும் கிடைக்கின்றன. பௌர்ணமி மற்றும் சங்கராந்தி தினங்களில் செய்யும் பூஜை மிகவும் சிறந்தது.

துங்கத்வஜன் என்ற மன்னன் ஒரு சமயம் காட்டிலே வேட்டையாடசென்றபோது அங்கு இடையர்கள் சத்ய நாராயண பூஜை செய்வதை பார்த்தான். அவர்கள் பூஜை பிரசாதத்தை கொடுக்க மன்னன் அதை உதாžனம் செய்ய அவனுடைய 100 பிள்ளைகளும் உடனே மாண்டனர். அவனது தன தான்ய சம்பத்தும் அழிந்தது. தன் தவறை உணர்ந்த மன்னன் பின் சத்ய நாராண பூஜை செய்து சம்பத்தையும் புதல்வர்களையும் திரும்பப் பெற்றான். சத்ய நாராயண பூஜை செய்து அதன் சரித்திரத்தையும் ச்ரவணம் செய்பவன் ஸத்ய நாராயணர், ஸத்ய தேவர், சத்யர், காமி தேவன் என்று அன்புடன் அழைக்கப்படும் சுவாமியின் அனுகிரகம் பெற்று , ஏழ்மை விலகும், சிறை தண்டனை பெற்றவன் விடுதலை அடைவான், பயம் நீங்கும், விரும்பிய அனைத்தும் கிடைக்கும். இந்த ஆறு கதைகளும் சத்ய நாராயண பூஜையின் போது ச்ரவணம் செய்யப்படுகின்றன.


உம்பராலறியலாகா ஒளியுளார் ஆணைக்காகி

செம்புலாலுண்டு வாழும் முதலை மேல் சீறி வந்த

எம்பருமான் புண்டரீகப் பாவை சேர் மார்பன் கருட சேவை



இனி சத்ய நாராயண பூஜை செய்தவர்கள் அடுத்த பிறவியில் பெற்ற பேற்றைக் காண்போமா? அந்தணன் குசேலாராக ப்பிறந்து கிருஷ்ணரின் நன்பனும் ஆகி பெரும் பேறு பெற்றான். விறகு வெட்டி குகனாகப் பிறந்து இராம பிரானுக்கு சேவை செய்யும் பாக்கியம் பெற்ரான். உல்காமுகன் தசரத மஹாராஜாவாகப் பிறந்து அரங்கனாதரின் திவ்ய கடாக்ஷம் பெற்று முக்தியும் அடைந்தான். வணிகன் மோத்வஜனாக பிறந்து உடலை அறுத்துத் தந்து மோட்சலோகமும் போனான். துங்கத்வஜன் நான்முகனானன்.





விண்ணுளார் வியப்பவந்து ஆனைக் கருளையீந்த
கண்ணன்
பன்றியாய் அன்று பாரகங்கீண்ட
பாழியானாழியான்


பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் மாலை கருட சேவையன்று எப்போதும் போல் முதலில் பக்தி உலாத்தல் கண்டருளி திருக்கோவிலிலிருந்து வாகன மண்டபத்திற்கு நடையலங்காரத்துடன் எழுந்தருளுகின்றார் சத்யநாராயணப் பெருமாள். பின் வாகன மண்டபத்தில் ஊஞ்சல் சேவை தந்தருளுகின்றார். அங்கு உபயதாரர்களுக்கு மரியாதையுன் செய்யப்படுகின்றது. பின் கருட வாகனத்தில் எம்பெருமானின் அலங்காரம் நடக்கின்றது. வெளியே புள்ளூர்தியில் பெருமாளை தரிசிக்க அன்பர்கள் தவம் கிடக்கின்றனர். அலங்காரம் முடிந்து திரை விலக்கப்படுகின்றது திவ்ய தரிசனம் கண்டு ஆனந்தம் அடைகின்றனர் அன்பர்கள். பின்னர் . ஆச்சாரியார் வேதாந்த தேசிகர் மூலவரின் லக்ஷ்மி ஹாரஹ்த்துடன் எழுந்தருளுகின்றார். பின்னர் லக்ஷ்மி ஹாரம் பெருமாளுக்கு சார்த்தப்பட்டு தீபாராதணை நடை பெறுகின்றத. பக்தர்கள் அனைவரும் ஆனந்த பராவசத்தில் கண்ணீர் மல்க பெருமாளை சேவிக்கின்றனர். இந்த வருடம் சிறப்பாக அஹோபில மட ஜீயர்களும் எழுந்தருளி சத்ய நாராயணப் பெருமாளை மங்களாசாசனம் செய்தனர்.

இப்புதிய தங்க முலாம் கருட வாகனத்தை அன்பர்கள் சென்ற சம்ப்ரோக்ஷணத்தின் போது சமர்பித்தனர். எல்லா உற்சவங்களும் வெகு சிறப்பாக இத்திருக்கோவிலில் நடைபெறும் சிறப்பை சமயம் கிடைத்தால் வந்து சேவித்து சத்ய ஸ்ரீ மஹா லக்ஷ்மி சமேத சத்ய நாராயணர் அருள் பெறுமாறு பிரார்த்திக்கின்றேன்.


கருட சேவை பின்னழகு

தாழைத்தண்ணாம்பல் தடம்பெரும் பொய்கைவாய்

வாழுமுதலை வலைப்பட்டு வாதிப்புண்

வேழந்துயர்கெட விண்ணோர் பெருமானாய்

ஆழிப்பணி கொண்டானாலின்று முற்றும்


அதற்கருள் செய்தானாலின்று முற்றும்.

Saturday, October 3, 2009

ஸ்ரீ சத்ய நாராயணப் பெருமாள் கருட சேவை-1

ஸ்ரீயப்பதியாய், அவாப்த ஸமஸ்த காமனாய், ஸகல கல்யாண குணாத்மனாய், ஸ்ரீ வைகுண்ட நிகேதானாய் ஸ்ரீ பூமி, நீளா தேவி ஸமேத ஸ்ரீ நாராயணன், உலகோர் உய்யுமாறு ஸ்ரீ மஹா லக்ஷ்மி ஸமேத ஸ்ரீ சத்ய நாராயண பெருமான் எழுந்தருளி அருள் பாலிக்கும் தலம்தான் மாபில ஷேத்திரம் என்று அழைக்கப்படும் சென்னை மேற்கு மாம்பல சத்யநராயண திருக்கோவில் ஆகும். கொண்டு பக்தர்களை காக்கும் சத்ய நாராயணப் பெருமாள் ஆலயம் ஆகும்.

ஆந்திர மாநிலம் அன்னவரத்தில் மலைக் கோவில் கொண்டு சேவை சாதிக்கும் சத்ய நாராயணப் பெருமாளை இங்கு நாம் எல்லாரும் சேவித்து, அருள் பெருமாறு 1956 ஆண்டு பிரதிஷ்டை செய்தவர் P.V. சேஷாத்திரி பட்டர் ஆவார். பின் 1976 , 1998. 2008 ஆண்டுகளில் இத்திருக்கோவிலுக்கு சம்பரோஷணம் நடை பெற்றது. சமீபத்திலே நிறுவப்பட்ட ஆலயம் என்றாலும் தன் கருணையினாலும் மகிமையினாலும் அனேக பக்தர்களை தன்னிடம் ஈர்த்து அருள் பாலிக்கின்றார் ஸ்ரீசத்ய நாராயணர். ஒவ்வொரு நாளும் அதிகமாகிக் கொண்டு செல்லும் பதர்களின் கூட்டமே இந்த பெருமாளின் சக்திக்கு ஒரு சான்று.

மூலவர் ஸ்ரீ சத்ய நாராயணப் பெருமாள், வடக்கு நோக்கிய திருமுக மண்டலம், பிரசன்ன வதனத்துடனும், கமல நயனங்களுடன், பவழம் போல சிவந்த இதழில் குமிண் சிரிப்புடன், நிர்மலமான பட்டுப் பீதாம்பரங்களுடன், கிரீட, ஹார, கேயூர கடகாதி திவ்ய ஆபரணங்களுடன், சங்கும், சக்கரமும், கதையும் தாங்கி அபய ஹஸ்தத்துடன் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றனர் . முத்தங்கியில் பெருமாளையும், தாயாரையும் தரிசிக்க ஆயிரம் கண் கூடப் போதாது அவ்வளவு சௌந்தர்யம் எம்பெருமானுக்கும் தாயாருக்கும். கல்யாணக் கோலமாக பெருமாளுக்கு வலப்பக்கத்தில் பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் மேல் கரமிரண்டிலும் பத்ம மலரை ஏந்தி கீழ் கரங்களில் அபய, வரத ஹஸ்தங்களுடன் நமக்கு பதினாறு செல்வங்க€ளையும் வழங்கும் ஐஸ்வர்ய லக்ஷ்மியாய் மஹா லக்ஷ்மித் தாயார் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள்.

சக்ரவர்த்தி திருமகன் கையிலே வில்லேந்தி கோதண்ட ராமராக, அன்னை ஜானகி, மற்றும் இளைய பெருமாளுடன் தனி சன்னதியிலும் , சிறிய திருவடியாம் மாருதி வலக்கையிலே சஞ்žவி மலையையும் இடக்கையில் சௌகந்தி மலரையும் ஏந்திய வண்ணம் சஞ்சிவி ஆஞ்சனேயராகவும் சேவை சாதிக்கின்றனர். லக்ஷ்மி நரசிம்மருக்கும், சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் ஆண்டாள் நாச்சியாருக்கும் தனி சன்னதிகள் உள்ளன. சகல கலைகளையும் நமக்கு வழங்க வல்ல சரஸ்வதி தாயாருக்கே குருவான லக்ஷ்மி ஹயகிரீவருக்கும் ஒரு சன்னதி இத்தலத்திலே உள்ளது. வியாழக்கிழமையன்று ஏல மாலை சார்த்தி இவரை வழிபட்டால் மாணவர்களுக்கு நன்றாகக் கல்வி விருத்தியடையும் என்பது ஐதீகம். முன் பக்கம் அறு கோண சக்கரத்தில் பதினாறு கரங்களுடன் சக்கரத்தழ்வாரும், பின் பக்கம் முக்கோண சக்கரத்தில் யோக நரசிம்மரும் விள்ங்கும் சக்கரத்தாழ்வாருக்கும் தனி சன்னதி உள்ளது. வடகலை சம்பிரதாய இத்திருக்கோவிலில், வைகாசான ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன.

வருடம் முழுவதும் கோலாகலமாக பல்வேறு உற்சவங்கள் நடைபெறுகின்றது இத்திருக்கோவிலில். தமிழ் வருடப்பிறப்பன்று புஷ்பாங்கியில் பெருமாளும் தாயாரும் சேவை சாதிக்கின்றனர், மற்றும் இரவு புஷ்பப்பல்லக்கிலே ஊர்வலம் வருகின்றார். ஆனி மாதம் அவதார உற்சவத்தையொட்டி 10 நாள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. பத்து நாட்களும் காலையும் மாலையும் பெருமாள் பல் வேறு வாகனங்களில் எழுந்தருளி சேவை சாதிப்பதுடன், பத்தி உலாத்தலும், ஊஞ்சல் சேவையும் தந்தருளுகின்றார். திவ்ய தேசங்களிலே உள்ளது போல் பெருமாள் சத்ய கோடி விமானத்ததில் 10 நாள் இரவு சேவை சாதிக்கின்றார். பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு கருட சேவை கண்டருளுகின்றார் சத்ய நாராயணப் பெருமாள் அந்த கருட சேவையின் சில காட்சிகளை இப்பதிவில் காணுகின்றீர்கள். இக்கருடன் பழைய கருடன் 2008ம் ஆண்டு நடைபெற்ற சம்ப்ரோக்ஷணத்தின் போது அன்பர்கள் புது கருடன் சமர்ப்பணம் செய்தனர் அக்கருடசேவையை அடுத்த பதிவில் காணலாம்.

பையுடை நாகப்படையானில் எழிலாக பவனி வரும்
சத்ய நாராயணப் பெருமாள்

திருமலையில் எவ்வாறி மலையப்ப சுவாமி மூலவரின் லக்ஷ்மி ஹாரம் அணிந்து மூலவராக சேவை சாதிக்கின்றாரோ, அது போலவே சத்ய நாராயணப் பெருமாளும் லக்ஷ்மி ஹாரம் அணிந்து செங்கோல் தாங்கி ஓடும் புள்ளேறி நாம் எல்லோரும் உய்ய பவனி வரும் அழகை எப்படி வர்ணிப்பது என்றே புரியவில்லை தாங்களே கண்டு மகிழுங்கள்.



விநதை சிறுவன் மேல் லோக சரண்யன்

பதகமுதலைவாய்ப் பட்டகளிறு

கதறி கை கூப்பி என் கண்ணா! கண்ணா! வென்ன

உதவ புள்ளூர்ந்து அங்குயர் தீர்த்த

எம் முகில் வண்ணன், குன்றெடுத்த குடமாடீ அங்கமலக்கண்ணன் கருடனில் ஆரோகணித்து எழிலாக மாட வீதி வலம் வரும் அழகு.


பன்றியுமாமையும் மீனமுமாகிய பாற்கடல் வண்ணர்
ஸத்ய
நாராயணர், ஸத்ய தேவர், சத்யர், காம தேவர்
எரிசினப் பறவையேறி ஊர்ந்து வரும் அழகு





அஞ்சுடராழி கையகத்தேந்தும்
அஞ்சனவண்ணரின் பின்னழகு


ஆடியிலே ஆடிப்பூர பத்து நாள் உற்சவத்தின் போது மாலை பல் வேறு அலங்காரத்தில் ஆண்டாள் நாச்சியாருடன் சேவை சாதிக்கின்றார் பெருமாள். புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு அலங்காரத்தில் மூலவரும் உற்சவரும் சேவை சாதிக்கின்றனர். நவராத்திரியின் போது பத்து நாட்களும் பெருமாளும் தசாவதார மூர்த்தியாக, தாயாருடன் கொலுக் காட்சி தருகின்றார், இது இத்தலத்தின் ஒரு சிறப்பு. விஜய தசமியன்று குதிரை வாகனத்தில் எழுந்தருளி வன்னி மரத்தில் அம்பு போடுகின்றார் பெருமாள். ஐப்பசியில் பவித்ரோத்ஸவம் நடைபெறுகின்றது. மார்கழியில் 21 நாள் அத்யயன உற்சவத்தில் பல் வேறு கோலங்களில் சேவை சாதிக்கும் பெருமாள், வைகுண்ட ஏகாதசியன்று பெருமாளும் தாயாரும் புஷ்பாங்கியிலே சேவைசாதிக்கின்றனர். .இராப்பத்து உற்சவத்தின் போது பரமபத வாசல் வழியாக வெளிவந்து பல் வேறு நடையழகை நமக்கு காண்பிக்கிறார்.. நம்மாழ்வார் மோட்சமும் சிறப்பாக நடைபெறுகின்றது. போகியன்று ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது. மற்றும் ஸ்ரீ இராம நவமி 10 நாள் உற்சவத்தின் போது இராமாயணத்தின் பல் வேறு நிகழ்ச்சிகளை உணர்த்தும் வகையில் ஸ்ரீ ராமருக்கு அலங்காரம் நடைபெறுகின்றது. மேலும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஜயந்தி 10 நாள் உற்சவமும், ஸ்ரீ ஜயந்தி, அனுமந் ஜயந்தி, தீபாவளிப் புறப்பாடு, கனுப் பொங்கல், கார்த்திகை தீபம், பங்குனி உத்திர திருக்கல்யாணம் முதலிய பண்டிகைகள் ஒரு நாள் உற்சவமாக சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இந்த உற்சவங்களின் ஸ்ரீ சத்ய நாராயணர், உபய நாச்சியார்கள், தாயார் ஆகியோர்களின் திவ்ய அழகைக் கண்டு அனுபவிக்க ஆயிரம் கண் தேவை. இவ்வாறு ஆண்டுக்கு ஏறக்குறைய 200 நாட்கள் உற்சவமாகவே திகழ்கின்றன இத்திருகோவிலில்.

இவ்வாலயத்திற்கே உரித்தான பிரத்யேக பூஜை பௌர்ணமி தினத்தன்று நடை பெறும் சத்ய நாராயண பூஜை ஆகும். இப்பூஜையின் மகத்துவத்தைப் பற்றி அடுத்த பதிவில் புது கருடனில் பெருமாள் பவனி வரும் காட்சிகளுடன் கண்டு அனுபவிக்கலாம் வந்து சேவியுங்கள் அன்பர்களே.

Wednesday, September 9, 2009

ஆவணியில் ரோகிணி நீ பிறந்த திருநன்னாள்

எல்லாருக்கும் இனிய கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள் உங்கள் அனைவரின் இல்லங்களிலும் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ ருக்மிணித் தாயாருடன் தன் பிஞ்சுப்பாதங்கள் பதித்து நடந்து வந்து எல்லா நலங்களையும் வளங்களையும் வழங்க பிரார்த்திக்கின்றேன்.

இந்த வருடம் இரட்டிப்பு சந்தோஷம் கோகுலாஷ்டமி இரண்டு தடவை கொண்டாடும் வாய்ப்பு கிட்டியதல்லவா? சந்திரனை (சந்திரமானம்) அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் வட மாநில மாதங்களின்படி ச்ரவண மாதத்தின் அஷ்டமி திதி போன மாதம் வந்தது அன்றும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடினோம். சூரியனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் (சௌரமானம்) நம் தமிழ் மாதத்தின் ஆவணி மாத அஷ்டமி தி்னமான இன்று இன்னொரு முறை கொண்டாடுகின்றோம். இன்றும் பல் வேறு ஆலயங்களின் ஸ்ரீ கிருஷ்ணரின் பல் வேறு லீலைகளை விளக்கும் படங்கள் மற்றும் பாசுரங்கள் கண்டு எம்பெருமான் அருள் பெறுங்கள் அன்பர்களே.

சென்னை மேற்கு மாம்பலம் கோதண்டராமர்

புன்னைமர வாகன சேவை



எல்லே! ஈதென்னஇளமை? எம்மனைமார்காணிலொட்டார்

பொல்லாங்கீதென்றுகருதாய் பூங்குருந்தேறியிருத்தி

வில்லாலிலங்கை யழித்தாய்! நீ வேண்டியதெல்லாம்தருவோம்

பல்லாருங்காணாமேபோவோம் பட்டைப்பணிந்தருளாயே.

- நாச்சியார் திருமொழி

*********


சென்னை மேற்கு மாம்பலம் சத்ய நாராயணப் பெருமாள்
வெண்ணெய்த் தாழி கிருஷ்ணன் கோலம்
( பிரம்மோற்சவம்)


கன்னலிலட்டுவத்தோடுசீடை காரெள்ளினுண்டைகலத்திலிட்டு

என்னகமென்றுநான்வைத்துப்போந்தேன் இவன்புக்கவற்றைப் பெறுத்திப்போந்தான்

பின்னுமகம்புக்குறியைநோக்கிப் புறங்கொளி வெண்ணையும்சோதிக்கின்றான்

உன்மகன் தன்னையசோதைநங்காய்! கூவிக்கொள்ளாயிவையும்சிலவே.

- பெரியாழ்வார் திருமொழி


வெண்ணெய்த்தாழி கண்ணன் பின்னழகு

********

நுங்கம்பாக்கம் ஸ்ரீநிவாசப் பெருமாள்
தவழும் கண்ணன் திருக்கோலம்


வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய்

தேனாகிப் பாலாம் திருமாலே! - ஆனாச்சி

வெண்ணெய் விழுங்க நிறையுமோ?

முன்னொருநாள்
மண்ணையுமிழ்ந்தவயிறு.


தாழியில்வெண்ணெய் தடங்கையாரவிழுங்கிய

பேழைவயிற்றெம்பிரான்கண்டாய் உன்னைக்கூவுகின்றான்

ஆழிகொண்டுன்னையெறியும் ஐயுறவில்லைகாண்

வாழவுறுதியேல் மாமதீ! மகிழ்ந்தோடிவா.

- பெரியாழ்வார் திருமொழி


****************

கோசை என்று வழங்கப்படும் கோயம்பேடு
வைகுண்டவாசப் பெருமாள்
தவழும் கண்ணன் கோலம்



சீதக்கடல் உள்ளமுதன்ன தேவகி

கோதைக்குழலாள் அசோதைக்குப் போதந்த

பேதைக்குழவி பிடித்து சுவைத்துண்னும்

பாதக்கமலங்கள் காணீரே பவளவாயீர்! வந்து காணீரே.


உழந்தாள்நறுநெய் ஒரோர்தடாவுண்ண

இழந்தாளெரிலினாலீர்த்து எழில் மத்தின்

பழந்தாம்பாலோச்சப் பயத்தால் தவழ்ந்தான்

முழந்தாளிருந்தவாகாணீரே முகிழ்முலையீர்! வந்து காணிரே.

- பெரியாழ்வார் திருமொழி


**********

சத்ய நாராயணர் முரளி கிருஷ்ணர் கோலம்


இடவணரையிடத்தோளொடுசாய்த்து இருகைகூடப்புருவம்நெரிந்தேற

குடவயிறுபடவாய்கடைகூடக் கோவிந்தன்குழல்கொடுஊதினபோது

மடமயில்களொடுமான்பிணைபோலே மங்கைமார்கள்மலர்க்கூந்தலவிழ

உடைநெகிழவோர்கையால்துகில்பற்றி ஒல்கியோரிக்கணோடநின்றனரே.

கண்ணன் காலை மடித்து ஒய்யாரமாக கையில் வேய்ங்குழல் கொண்டு நாச்சிமார்களுடன் சேவை சாதிக்கும் அழகை என்ன சொல்லி வர்ணிக்க?

********

சத்ய நாராயணர் ஏணிக் கண்ணன் கோலம்




பல்லவி
எல்லையில்லாத விஷமக் காரன்டீ!


எத்தனையடி இவனுகென பக்ஷணங்கள் தின்ன

ஏராளமும் நானாவகை வைத்திருந்தும் என்ன

வித்தகமுள்ள ஒத்தவயது தோழரொடும் முன்ன

வெண்ணை களவாடுறானே என்னடி நான் பண்ண ? (எ)

அனுபல்லவி

பொல்லாத்தனமுள்ள செய்கையினைக் கண்டால் பொங்குதடி கோபம்

புன்னகை பூத்த முகத்தினைக் கண்டாலோ மங்குதடி - தாபம்


எல்லாத்துக்கும் மேலே ஒன்று சொல்வேனடி யாருக்குமில்லாத லாபம்

எங்கள் குலத்துக்கு வந்ததாலே இந்த ஈரேழுபுவனங்களுக்கும் ப்ரதாபம் (எ)

சரணம்
புண்ணியனுக்கு பாலூட்ட எண்ணினாலோ
பொங்குதடி ஒர் அச்சம் அந்த

பூதனைக்கு வந்த கதியாகுமோ என்ற

எண்ணம் தானாகுது மிச்சம்


பண்ணின தான தருமங்கள் யாவுமே
பலனாச்சேடி போடி உச்சம்


பாக்கியம் எண்ணினால் எனக்கு இந்த
ஈரேழு பதினாலு லோகமும் துச்சம். (எ)


-ஊத்துக்காடு ஸ்ரீ வெங்கடசுப்பையர்


கண்னன் இங்கே ஏணிப்படி மேலே ஏறி வெண்ணெய் களவாடச் செல்லும் காட்சி கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் அலங்காரம்.

********
திருமயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்
ஸ்ரீநிவாசப்பெருமாள்
கோபால கிருஷ்ணர் கோலம்




பிரம்மோற்சவ சமயத்தில் பெருமாள் பவனி வரும் போது அதே போல அலங்காரம் செய்த சிறு பெருமாள்களை சிறுவர்கள் அப்படியே அலங்கரித்து ஏளப்பண்ணுவார்கள் கீழே காணும் படங்கள் எல்லாம் சிறுவர்களின் ஆராதனைப் பெருமாள்கள்.


சிறுவிரல்கள் தடவிப்பரிமாறச்
செங்கண்கோடச்செய்யவாய்கொப்பளிப்ப

குறுவெயர்ப்புருவம்கூடலிப்பக் கோவிந்தன்குழல்கொடூதினபோது

பறவையின்கணங்கள்கூடுதுறந்து வந்துசூழ்ந்துபடுகாடுகிடப்ப

கறவையின்கணங்கள் கால் பரப்பிட்டுக் கவிழ்ந்திறங்கிச் செவியாட்டகில்லாவே.



இங்கே பாருங்கள் மிக்க சிரத்தையுடன் பின்னழகிற்கு சடை வைத்து எம் கிருஷ்ணனுக்கு அலங்கரித்து கொண்டு வந்த அழகை. மிக்க சிரத்தை எடுத்துக் கொண்டு வரும் ஒரு பக்தியை என்னவென்று சொல்ல.


*********

மேற்கு மாம்பலம் கோதண்டராமர் ஆலயம்
நவநீத கிருஷ்ணர் காளிங்க நர்த்தன திருக்கோலம்


ஆய்ச்சிமார்களும் ஆயருமஞ்சிட பூத்தநீள்

கடம்பேறிப் புகப்பாய்ந்து
வாய்த்த

காளியன்மேல் நடமாடிய

கூத்தனார்வரில் கூடிடுகூடலே.

- நாச்சியார் திருமொழி

பல்லவி

வையமளந்து வானளந்த ஓ.... மாதவா
வரதாபயகரம் தரு கருமுகில் வர்ண (வை)

அனுபல்லவி

செய்யத் தாமரை சீரடி கொண்டு
சீறிய காளிய மேலாடியது கண்டு
உய்யத் தானாசை கொண்டு உள்ளம் கண்டு
உரிமை பெற தானுமாடியது உண்டு உலகீ
ரேழையும் உண்டு உளமாயையற தரிசனம் அதுதரு

தாம் திஜ்ஜணு திகி தஜ்ஜணு திமி திமி திர் ரீ தைய
தாம் திஜ்ஜணு திகி தஜ்ஜணு ணந்தம் ணந்
தம் பாரிஜாத கந்தம் . . . . . . . .
கிடத்தக திரிஜமுணந்தரிகுகு குந்தம் ஜந்தரி திரிதிலான

தித்திளாங்கு தையத் தையத் தித்ஜையத கஜ்ஜையததிரி
சையத்தைய புவனங்களும் உய்ய (வை)



காயாமலர் நிறவா! கருமுகில்போலுருவா!

கானகமாமடுவில் காளியனுச்சியிலே


தூயநடம்பயிலும் சுந்தரவென்சிறுவா!


துங்கமதக்கரியின் கொம்புபறித்தவனே!


என்னங்க நிஜமாகவே அன்று பெரியாழ்வார் பாடியபடி கண்ணன் அன்று ஆடிய ஆடல் கண்ணில் தோன்றுகின்றதா?

*********

சத்யநாராயணப் பெருமாள்
ஊஞ்சல் கண்ணன் கோலம்


கன்றினைவாலோலைகட்டிக் கனிகளுதிரவெறிந்து

பின்தொடார்ந்தோடியோர்பாம்பைப் பிடித்துக்கொண்டாட்டினாய்போலும்

நின்திறத்தேனல்லேன்நம்பி! நீபிறந்ததிருநன்னாள்

நன்றுநீ நீராடவேண்டும் நாரணா! ஓடாதேவாராய்.

********

சத்ய நாராயணர் கோபால கிருஷ்ணர் கோலம்


சீலைக்குதம்பையொருகா தொருகாதுசெந்நிறமேல்தோன்றிப்பூ

கோலப்பனைக் கச்சும்கூறையுடையும் குளிர்முத்தின்கோடாலமும்

காலிப்பின்னேவருகின்ற கடல்வண்ணன்வேடத்தைவந்துகாணீர்

ஞாலத்துப்புத்திரனைப்பெற்றார் நங்கைமீர்! நானே மற்றாருமில்லை.

கோபாலகிருஷ்ணருடன் உபய நாச்சியார்களுடன் ஆண்டாள் நாச்சியாரும் பகல் பத்து உற்சவத்தின் போது சேவை சாதிக்கும் அழகை காண்கின்றீர்கள்.



அதே கோபால கிருஷ்ணர் திருக்கோலம் உபய நாச்சியார்கள், ஆண்டாள் நாச்சியாருடன் பெரிய பிராட்டி அகலகில்லேன் இறையுமென்று உறையும் திருமகளும் சேர்ந்து சேவை சாதிக்கின்றார்.






உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன்.


********


Labels: , , ,

Saturday, August 15, 2009

அட்ரா சக்கை நமக்கும் கூட விருது ! ! !


நம்பமுடியவில்லைதான் ஆயினும் உண்மை. கவிதாயினி கவிநயா அவர்கள் மிக்க அன்பு கூர்ந்து அடியேனின் வலைப்பூவும் சுவாராசியமான வலைப்பூ என்று விருது கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்சமயம் அலுவலக வேலைப் பளு அதிகமாகி விட்டதால் அதிக நேரம் வலைப் பக்கம் செலவிட முடியாததால் எதோ இத்தனை நாளும் ஏதோ கிறுக்கிக் கொண்டு இருந்ததையும் நிறுத்திக் கொள்ளலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்த போது இந்த விருதைக் கொடுத்து இன்னும் சிறிது காலம் உங்கள் முடிவை தள்ளிப் போடுங்கள் என்று சொல்லாமல் சொல்லியிருக்கின்றார்கள்.

இவ்விருதை வாங்கியவர்களுக்கும் ஒரு பொறுப்பு உண்டு அதாவது அதை மேலும் ஆறு பேருக்கு பகிர்ந்து தர வேண்டும் என்பதுதான். எனவே அடியேன் தேர்ந்தெடுத்த ஆறு பேர்.

குமரன் அவர்கள். கவிநயா அவர்கள் தனக்கு கிடைத்த இரு விருதுகளில் இவருக்கு நல்ல நண்பர் என்னும் விருதை அளித்தார். என்னுடைய பதிவுகள் சுவாரசியமானது இல்லையா? என்று சிறு ஆதங்கப்பட்டிருந்தார் எனவே இவருக்கு அடியேன் இவ்விருதை வழங்குகின்றேன்.

என்ன அவருக்கு தகுதியில்லையா? என்று யாரோ பல்லைக் கடிக்கும் சத்தம் கேட்கின்றது, கோபப்படாதீர்கள் ஐயா, குன்றின் மேல் இட்ட விளக்காகத்தான் குமரன் ஐயா ஒளி விடுகின்றாரே. ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிடுகின்றேன். தமிழ் மணத்தின் நட்சத்திரமாக இரண்டு தடவை இருந்தவர்கள் மிகச் சிலரே அவர்களுள் இவர் ஒருவர். குமரன் ஐயா ஆன்மீகம் மற்றும் தமிழ் இலக்கியம் குறித்து இன்னும் பல ஆயிரம் பதிவுகள் இட வேண்டுகிறேன்.

சிவமுருகன் அவர்கள். மதுரை மீனாக்ஷி அம்மனைப் பற்றியும் அம்மன் திருக்கோவிலைப் பற்றியும் இவர் எழுதிய வலைப்பூ ஒரு Phd பட்டத்தை இவருக்கு பெற்று தந்திருக்கும் அனைத்து படங்களையும் வலையில் தேடி தேனி போல சேகரித்து தந்த அவருக்கு வாழ்த்துக்கள். ஐயா தங்களுடைய சேவை இன்னும் தொடரவேண்டுமென்று அந்த அங்கயற்கண்ணி அம்மையிடம் வேண்டிக்கொள்கிறேன்.

மதுரையம்பதி என்னும் சந்திரமௌலி ஐயா அவர்கள். மிகவும் சுவையாக சமஸ்கிருத ஸ்லோகங்களுக்கு இவர் தரும் விளக்கங்களுக்காகவே இவர் வலைப்பூ பக்கம் அடிக்கடி செல்லுவேன். இவரின் சௌந்தர்ய லஹரி வலைப்பூ அடியேனுக்கு மிகவும் பிடித்தது நீங்களும் சென்று பாருங்களேன். மௌலி ஐயா அன்னை நீங்கள் இன்னும் பல்லாயிரம் பதிவுகள் எழுத அருள் புரியட்டும்.

தி.ர.ச என்றழைக்ப்படும் சந்திரசேகரன் ஐயா அவர்கள். முருகன் அருள் முன்னிற்கும் என்று முருகன் பாட்டுகளை அளிப்பவர். திருப்புகழின் விளக்கங்களுக்காவே இவரது பதிவுகளுக்கு அவசியம் அனைவரும் செல்ல வேண்டும். நமசிவாய வாழ்க என்னும் சிவன் பாட்டு, கண்ணன் பாட்டு. முருகனருள் என்னும் முருகன் பாட்டு மற்றும் இசை இன்பம் என்னும் பாடல் வலைப்பூ அனைத்திலும் இவர் பங்களிப்பு உண்டு. ஐயா அந்த ஆறுபடையப்பன் தங்களுக்கு நல்லருள் வழங்க பிரார்த்திக்கின்றேன்.

ச்சின்னப்பையன் . வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள். ஆகவே நீங்கள் சிரிக்க வேண்டும் என்றால் இவர் வலைப்பூவிற்க்கு செல்லுங்கள். நிச்சயம் ஏமாற மாட்டீர்கள்.

பழமைபேசி. எல்லாரும் புதுமையாக மாற வேண்டும் என்று அலையும் இந்த நாகரீக காலத்தில் பழமையிலும் அர்த்தம் உண்டு என்று அருமையாக எழுதி வருபவர். கொங்கு நாட்டுக்காரர் , பல தமிழ் சொற்களுக்கு அருமையான விளக்கங்கள் தருபவர். கவி காளமேகத்துடன் இவர் உரையாடும் உரையாடல் அத்தனையும் சுவையானவை. தமிழ் ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் தவறாமல் செல்லவேண்டிய பதிவுகள்.

இன்னும் பலருக்கு கொடுக்க ஆசை தான் ஆயினும் நேரமின்மை காரணமாக இத்துடன் நிறைவு செய்து கொள்கிறேன் இவர்கள் அறுவரும் ஆறு ஆறு பேருக்கு அளித்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.

Thursday, August 13, 2009

கண்ணன் கேசவன் நம்பி பிறந்தனன்

முதல் பதிவில் பல படங்களை இணைக்க முடியவில்லை எனவே இந்த கோகுலாஷ்டமி இரண்டாம் பதிவு.

குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி



இப்பதிவில் பல்வேறு காலங்களில் எப்படி கோகுலாஷ்டமி கொண்டாடினோம் என்பதை கூற முயற்சி செய்துள்ளேன். கோகுலாஷ்டமி என்றாலே சிறு வயதிலே எப்போதும் ஆனந்தம் தான் எனென்றால் அன்று பள்ளிக்கு விடுமுறை நாள் அல்லவா. தெரிந்தும் தெரியாத வயதில் எங்கள் ஊர் உடுமலைப்பேட்டையில் பஜனை கோயில் என்று அழைக்கப்படும் நவநீத கிருஷ்ணர் கோவிலில் பத்து நாட்கள் உற்சவம் கண்டு களித்தோம். ஜென்மாஷ்டமியன்று மாலை குழந்தை கிருஷ்ணன் அலங்காரம் அடுத்த நாள் தவழும் கண்ணன் கோலம், பின்னர் காலிப்பின் செல்லும் கோபாலர், வேணு கோபாலர், கோவர்த்தன கிரி கிருஷ்ணர், காளிய மர்த்தனர், ஏழாம் நாள் உறியடி உற்சவம் உறிக்கோலுடன் கிருஷ்ணர் எழுந்தருள உறியடி உற்சவம் நடை பெறும். உறி மேலும் கீழும் வௌம் போது கையில் கோல் கொண்டு அடிக்க வரும் போது தண்ணீர் இரு பக்கம் இருந்தும் அவர் மேல் வீசுவார்கள் கடைசியாக அவர் உறியடித்து விடுவார். உறியடு பார்ப்பதே ஒரு ஆனந்தம், தினம் ஒரு அலங்காரத்தில் திவ்ய பிரபந்தம், தாலாட்டு, லாலி மங்களம் கேட்டருளுவார் பெருமாள். பின்னர் பிரசாதம் பெற்று வீடு திரும்புவோம். பத்தாம் நாள் இரவு வழுக்கு மரம் ஏறும் வைபவம். நெடிதுயர்ந்த வழுக்கு மரத்தில் மேலே பரிசுப் பொருள் கட்டப்படும், மரத்தின் மேல் விளக்கெண்ணையும் கடுகும் (நன்றாக வழுக்குவதற்காக) கலந்து பூசி விடுவர். முதலில் ஏறுபவர்கள் வழுக்கி விழுவதைப் பார்த்து சிரிப்போம். மெள்ள மெள்ள எண்ணெய் காயந்து இறுதியில் ஒருவர் பரிசைப் பெறுவார் பின்னர் பெருமாள் ஊர்வலம் வந்து அருள் பாலிப்பார். சிறு வயதில் இவ்வாறு மிகவும் அற்புதமாக கோகுலாஷ்டமி கொண்டாடி மகிழ்ந்தோம்.


ஏணிக்கண்ணன்

அன்று மனதில் பதிந்த


மாணிக்கங்கட்டி வயிரமிடைகட்டி

ஆணிப்பொன்னாற்செய்த வண்ணச்சிறுத்தொட்டில்

பேணியுனக்கு பிரமன்விடுதந்தான்

மாணிக்குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ

என்னும் பெரியாழ்வாரின் தாலாட்டுப் பாடல் இன்று வரை இன்னும் மனதை விட்டு அகலாமல் பசுமரத்தாணி போல் மனதில் பதிந்து விட்டது.


ஏணிக்கண்ணன்


அது போலவே முதல் நாள் சேவிக்கும்

வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர்தூவிட
கண்ணன்முற்றம் கலந்தளறாயிற்றே. பாசுரமும் எப்போதும் மனதை விட்டு அகலவில்லை.


ஆறாம் வகுப்பு வந்த பின் குருச்சரண் என்னும் ஒரு ஐயங்கார் பையன் நண்பனாக கிடைத்தான். அவன் வீட்டில் கோகுலாஷ்டமி உற்சவம் மிகவும் சிறப்பாக நடக்கும், இரவு முழுவதும் அஷ்டபதி பாடிக்கொண்டு இராதா கல்யாணம் சிறப்பாக நடக்கும், அடியேனும் அவன் வீட்டில் சென்று அத்தனையையும் பார்ப்பேன். சீடை, முறுக்கு, அதிரசம் இல்லாமல் கோகுலாஷ்டமியா? அத்தனையையும் ஒரு கை பார்ப்போம். இது சிறு வயது கோகுலாஷ்டமி.


காளிய மர்த்தன கமலா நாயகா

அடுத்து பணிக்காக குஜராத் சென்ற சமயம் கல்யாணம் ஆகி முதல் வருடம் கோகுலாஷ்டமியன்று சீடை செய்யலாம் என்று மனைவியை தாஜா செய்து சீடை செய்ய ஆரம்பித்தோம் இரண்டு பேரும் தான் அடியேன் மனைவி செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றேன், காய்ந்த எண்ணையில் சீடை மாவை போட்ட உடன் படீர் படீர் என்று வெடிக்க ஆரம்பித்து மனிவியின் கையில் சுடு எண்ணெய் விழுந்ததுதான் தாமதம் உடனே சீடை செய்வது நிறுத்தப்பட்டது. இன்று வரை சீடை கடையில்தான் வாங்குகிறோம். நவராத்திரி சமயத்தில் கர்பா நடனம் ஆடும் போது பாடப்படும் பல பாடல்கள் கண்ணனுடைய ராஸ லீலைகளைக் கூறும் பாடல்கள்தான்.


பார்த்தனுக்கு கீதை சொன்ன கீதாச்சார்யன்

பின்னர் அஸாம் பணி செய்ய சென்ற போது தனியாகத்தான் சென்றேன் அங்கே விஷ்ணு சகஸ்ரநாமம் கோஷ்டி இருந்தது சனிக்கிழமையன்று ஒவ்வொருவர் வீட்டில் சென்று சேவிப்போம். எனவே கோகுலாஷ்டமியன்று தனிக்கட்டைகள் இருக்கும் எங்கள் மெஸ்ஸில் கோகுலாஷ்டமி நடக்கும். இராதாகிருஷ்ணன் என்னும் நண்பர் ஒரு பெரிய ஆலிலை கிருஷ்ணர் படம் வாங்கிக் கொண்டு வந்தார். அப்படத்திற்கு அலங்காரங்கள் செய்து பாயசம், லட்டு, கேசரி, சுண்டல் அனைத்தும் தயார் செய்து அனைத்து குடும்பங்களையும் அழைத்து சிறப்பாக கொண்டாடுவோம், விஷ்ணு சகஸ்ரநாமம், திவ்ய பிரபந்தம், கோவிந்த நாமாவளி, பஜனைப் பாடல்கள் பாடி நள்ளிரவுவரை சிறப்பாக பூஜை நடத்துவோம், பின்னர் அனைவரும் கொண்டு வந்த பிரசாதம் அனைவருக்கும் பகிர்ந்தளிப்போம். இவ்வாறு மூன்று வருடங்கள் சிறப்பாக கோகுலாஷ்டமி கொண்டாடினோம்.

காளியன் உச்சியில் அற்புத நடனம்

தற்போது மும்பையில் பணி மஹாராஷ்ட்டிராவில் கோகுலாஷ்டமியன்று உறியடி நடக்கும் ஆனால் இங்கு உறியை மிகவும் உயரத்தில் கட்டி விடுவார்கள். குழு குழுவாக கோவிந்தா ஆலா ரே, கோபாலா ஆலா ரே ( கோவிந்தன் வந்து விட்டான், கோபாலன் வந்து விட்டான்) என்று உற்சாகமாக கோஷம் போட்டுக்கொண்டு பிரமிட் போல கூடாரம் அமைத்து உறிவரை செல்ல முயற்சிப்பர். நடுவிலேயே பிரமிட் சரிந்து விழுவது வேடிக்கையாக இருக்கும் இதற்காக சுமார் ஒரு மாத, முன்னரே இளைஞர்கள் பிரமிட் அமைக்க பயிற்சி ஆரம்பித்து விடுவர். எவ்வளவு அதிக உயரமோ அவ்வளவு பரிசுப்பணம் அதிகமாக இருக்கும்.

இவ்வாறும் இன்னும் பல வகையிலும் கண்ணன் கேசவன் நம்பி பிறந்த நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள். ஸ்ரீ கிருஷ்ணர் பன்றிக் காய்ச்சலிலிருந்து மனித குலத்தை காப்பாற்றி அருள பிரார்த்திக்கின்றேன்.