Sunday, December 27, 2009

தமிழுக்கு ஏற்றம் தரும் விழா - 3

Visit BlogAdda.com to discover Indian blogs
சென்ற வருட வைகுண்ட ஏகாதசி சேவைகள்

வருடத்தில் மொத்தம் 24 ஏகாதசிகள் வரும் அதிசயமாக சில வருடம் 25 ஏகாதசிகளும் வருவதுண்டு. ஒவ்வோரு ஏகாதசிகளுக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு, விரதத்திற்கு ஒரு பலன் உண்டு. எல்லா ஏகாதசிகளுக்கும் சிறந்தது மார்கழி மாத சுக்லபக்ஷ ஏகாதசியாகும். இந்நாள் வைகுண்ட ஏகாதசியென்றும், முக்கோடி ஏகாதசி, மோக்ஷ ஏகாதசி என்றும் அழைக்கப்படுகின்றது. இன்று பெருமாள் பரமபத வாசல் வழியாக நம்மை அழைத்து சென்று பிறவா நெறி என்னும் வைகுண்டப்பதவி வழங்குகின்றார். கீழே உள்ள சேவைகள் எல்லாம் சென்னையின் பல்வேறு ஆலயங்களில் பெருமாள் சென்ற வருடம் அளித்த சிறப்பு சேவைகள்.

மேற்கு மாம்பலம் சத்ய நாராயணப் பெருமாள்
முத்தங்கி சேவை

பிரளய காலத்தின் முடிவில் பெருமாள் யோக நித்திரையில் இருந்தபோது அவர் காதில் இருந்து தோன்றிய மது கைடபர்கள் பிரம்மாவை கொல்ல முயல , அவர் பெருமாளை சரணடைய, பெருமாள் அரக்கர்களை வதம் செய்த பின் அவர்கள் வேண்டிக்கொண்டதற்கிணங்க அவர்களை வைகுந்தத்தின் வடக்கு வாசல் வழியாக அழைத்து சென்றது போல் இன்றும் வைகுண்ட ஏகாதாசியன்று நம்மை பரமபத வாசல் வழியாக அழைத்து சென்று வைகுண்டம் வழங்குகின்றார் .

மேற்கு மாம்பலம் கோதண்டராமர்
பரமபத நாதன் கோலம்


திருமயிலை ஆதிகேசவர்
வெள்ளி கருட சேவை


இராவணனுடைய கொடுமையிலிருந்து தப்பிக்க பெருமாளிடம் முப்பத்து முக்கோடிதேவர்களும் சரணடைந்ததால், இந்த ஏகாதசி. முக்கோடி ஏகாதசி என்றழைக்கப்படுகின்றது.

வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்
ஸ்ரீநிவாசப் பெருமாள் கருடசேவை


சென்னை மேட்டுப்பாளையம், மேற்கு மாம்பலம்
பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்

ரங்க மன்னார் திருக்கோலம்

Labels: ,

Saturday, December 26, 2009

தமிழுக்கு ஏற்றம் தரும் விழா - 2

Visit BlogAdda.com to discover Indian blogs
சோழநாட்டு திவ்ய தேச சேவைகள்

1.திருவரங்கம்

திருவரங்கம் தெற்கு கோபுரம் பகல் காட்சி மற்றும் இராக்காட்சி
2. உறையூர்
3. குணசீலம்
குணசீலம் திருக்கோவில்
குணசீலம் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள்
(குணசீலம் திவ்ய தேசமல்ல)
4.திருஅன்பில்
வடிவழகிய நம்பி பரமபத வாசல் சேவை
கங்கையினும் புனிதமான காவிரி பாயும் சோழநாட்டு வளமையைக் காணலாம் இப்படங்களில். தென்னை மரங்களுக்கிடையில் திருக்கோயில் அமைந்துள்ளது.
5.திருப்பேர் நகர்
அப்பக்குடத்தன்
6.திருவெள்ளறை
7. திருக்கரம்பனூர் ( உத்தமர் கோவில்)
உகந்தருளிய நிலங்களாம் திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்து ஆழ்வார்கள் பாடிய பாடல்களே திவ்ய பிரபந்த பாசுரங்கள். இந்த தீந்தமிழ் பாசுரங்களை பெருமாள் முன் சேவிக்கும் உற்சவமே அத்யயனோற்சவம். சுரத்தோடு கூடிய பா என்பதால் இவை பாசுரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஒரு பாசுரத்தை பொதுவாக நான்கு இடங்களில் நிறுத்தி சேவிப்பர். ன்ற என்ற பதம் வரும் போது அது ன்ன என்று சேவிக்கப்படுகின்றது ஏனென்றால் ன்ற என்று சேவிக்கும் போது பெருமாளுக்கு அது கடுமையாக இருக்கும் என்பதால் அது ன்ன என்று சேவிப்பது மரபு. இப்பாசுரங்கள் எம்பெருமான் முன் பாடப்படுவதில்லை ஆனால் சேவிக்கப்படுகின்றன. இவ்வாறு சேவிப்பர்கள் அத்யாபகர்கள் என்றழைக்கப்படுகின்றனர். திருமால் திருக்கோவில்களில் ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் இறைவன் திருவோலகத்தில் இசையுடன் ஒதப்பட்டன. இவ்வாறு தமிழ் பண்ணிசையில் வல்லுநராய் திவ்ய பிரபந்தங்களை இசைத்தவர்கள் விண்ணப்பம் செய்வோர் எனப்பட்டனர் பாசுரங்களை சேவிக்கும் போது முன் பகுதியை ஒரு பிரிவினரும் பின் பகுதியை ஒரு பிரிவினரும் சேவிப்பது கோஷ்ட்டி சேவிப்பது எனப்படும். சேவிப்பர்களை சேவாகால கோஷ்ட்டி என்று அழைப்பார்கள்.

ஒரு காலத்தில் வழக்கொழிந்து போயிருந்த திவ்ய பிரபந்தங்களை நாம் எல்லாரும் உய்ய மீண்டும் அளித்தவர் நாதமுனிகள். திருக்குடந்தையில் ஆராவமுதனை நாம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த ஒரு பாசுரத்தை கேட்டு அவருடைய திருவாய்மொழி ஆயிரம் பாசுரங்களையும் அறிய வேண்டுமென்று பெரியோர்களின் அறிவுரைப்படி திருநகரி சென்று மதுரகவியாழ்வாரின் கண்ணிநுண்துரும்பு பாசுரத்தை இலட்சம் முறை சேவித்து நம்மாழ்வரால் யோக தசையில் ஆயிரம் பாசுரங்கள் மட்டுமல்ல, அனைத்து ஆழ்வார்களின் நாலாயிரம் பாசுரங்களையும் பெற்றவர் நாதமுனிகள். இவரே திவ்யபபிரபந்தகளுக்கும் பண்ணும் தாளமும் வரைமுறை செய்து தன் மருமக்களாகிய கீழையகத்தாழ்வான், மேலையகத்தாழ்வான் இருவருக்கும் ஒதுவித்தார் இவர்களின் சந்ததியினரே அத்யயன பரம்பரையினர்.

இவ்வாறு எல்லா விஷ்ணு ஆலயங்களிலும் சிறப்பாக பகல் பத்தின் சாற்றுமுறை நடைபெறும் இந்த பத்தாம் நாளில் , பெருமாள் நாச்சியார் திருக்கோலம் என்னும் மோகனாவதாரம் என்றழைக்கப்படும் மோகினியாக அருள் பாலிக்கும் இந்நாளில், திரு. தனுஷ்கோடி அவர்கள் சென்ற வருட வைகுண்ட ஏகாதசி அன்று சேவித்த சோழ தேசத்து திவ்ய தேசங்களின் ஒரு புகைப்படத்தொகுப்பே இப்பதிவு.

Labels: , , , , ,

Thursday, December 24, 2009

தமிழுக்கு ஏற்றம் தரும் விழா - 1

Visit BlogAdda.com to discover Indian blogs
பகல் பத்து உற்சவ சேவைகள் பகல் பத்து உற்சவத்தின் போது சக்ரவர்த்தி திருமகன் கோலத்தில் திருமயிலை ஆதிகேசவபெருமாள்

ஆழ்வார்கள் திருமாலாகிய பேர் எழிற் பொய்கையுள் ஆழ மூழ்கிக் கவி பாடியவர்கள். திவ்ய பிரபந்தங்கள் உபயவேதாதங்கள் ஆயின. எனவே இவர்கள் திவ்ய சூரிகள் என்றழைக்கப்படுகின்றனர். திவ்ய தேசங்கள், திவ்ய சூரிகள், திவ்ய பிரபந்தங்கள் மூன்றும் திவ்யத்ரயங்கள் ஆயின.

ஆதிகேசவனை வணங்கி

விண்ணப்பம் செய்யும் பேயாழ்வார்

பிரமாணம் – உண்மை அறிவிற்கு கருவியாயிருப்பது. – திவ்ய பிரபந்தங்கள்.

பிரமேயம் – பிரமாணத்தால் அறியப்படும் பொருள். - திவ்ய தேசங்கள்

பிரமாதா – உண்மை அறிவுடையோன். – திவ்ய சூரிகளாகிய ஆழ்வார்கள்.

ஆகவேதான் மணவாள மாமுனிகளும் "ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி" என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.

எனவே வேதமே திவ்யபிரபந்தகளாகின. நம்மாழ்வாரின் நான்கு அருளிச்செயல்கள் நான்கு வேதங்கள் ஆகின. அதற்கான அங்கங்களாகின திருமங்கையாழ்வாரின் ஆறு அருளிச் செயல்கள். ஆண்டாள் மற்றும் மதுரகவி ஆழ்வார் தவிர மற்ற நூல்கள் உபாகமங்கள் ஆயின. வேதமே எம்பெருமானின் நிலைக்கு ஏற்ப மாறி வரும் முறையில் தமிழாகி திவ்ய பிரபந்தங்களாக அவதரித்தன என்பது சம்பிரதாயம்.

ஓம் நம: என்பது முதலாயிரம்.

நாராயணாய என்பது திருமொழி

கீதா சரமசுலோகம் : இயற்பாக்கள்

த்வ்யம் : திருவாய்மொழி

திருப்பல்லாண்டு ஓம் என்ற பிரணவத்தின் விரிவு,

கண்ணி நுண் சிறுதாம்பு நம:

பெரிய திருமொழி நாராயண என்கிற பரம்பொருளின் விளக்கம்.

சரம (இறுதியான) ஸ்லோகம் சரணாகதி என்னுன் பிரபத்தியாகும். அதாவது இறைவனையே உபாயமாகக் கொள்வதாகும்.

இவ்வாறு முதலாயிரமும் இரண்டாமாயிரமுமே திருமந்திரம்.

அத்யயன உற்சவத்தின் போது அனைத்து ஆழ்வார்களும் ஆச்சாரியர்களுக்கும் அருளப்பாடு ஆகின்றது. இவ்வாறு திருமயிலையில் அருளப்பாடு கண்டருளிய ஆழ்வார்கள் மேலே, ஆச்சாரியர்கள் கீழே.

நம்மாழ்வாரின் திருவாய் மொழியின்

முதல் பத்து : ஸ்ரீமந்

இரண்டாம் பத்து : நாராயண

மூன்றாம் பத்து : சரணௌ

நான்காம் பத்து : சரணம்

ஐந்தாம் பத்து : ப்ரபத்யே

ஆறாம் பத்து : ஸ்ரீமந்

ஏழாம் பத்து : நாராயண

எட்டாம் பத்து : நாராயண

ஒன்பதாம் பத்து : ஆய

பத்தாம் பத்து : நம:

அதாவது திருமகளோடு கூடிய நாராயணனின் திருவடிகளை புகலிடமாகப் பற்றுகின்றேன். திருமகளோடு கூடிய நாராயணனுக்கு எல்லா அடிமைகளையும் செய்யப்பெறுவேன் என்னும் நான்காமாயிரமாகிய த்வயமே திருவாய் மொழி.

சத்ய நாராயணர் முரளிக் கண்ணன் கோலம்

இவ்வளவு சிறப்புப்பெற்ற ஆழ்வார்களின் அருளிச்செயல்களை பெருமாளின் முன் விண்ணப்பம் செய்யும் உற்சவமே அத்யயன உற்சவம். அத்யயன உற்சவம் என்பதற்கு சிறப்பான உற்சவம் என்ற பொருளும் உண்டு. மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசியை மையமாகக் கொண்டு இருபது நாட்கள் இந்த தமிழுக்கு தகைமை சேர்க்கும் விழா விஷ்ணுவாலயங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இந்த இருபது நாட்களிலும் நான்காயிரம் திவ்யப்பிரபந்தகளும் தமிழுக்கு பின் செல்லும் மூவருக்கும் முதலவரான, கரும்புயல் வண்ணன், இன்பப்பா, பச்சைத்தேன், பைம்பொன் பெருமாள் முன் சேவிக்கப்படுகின்றன.

சத்யநாராயணர் ஏணி கண்ணன் கோலம்

பகற்பத்து எனப்படும் திருமொழித்திருநாளில் முதல் இரண்டு ஆயிரம் பாசுரங்களும் சேவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் பெருமாள் ஒவ்வொரு திவ்ய அலங்காரத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார் இதை சாத்துபடி என்று அழைக்கின்றனர்.

வைகுண்ட ஏகாதசி தொடங்கி நடைபெறும் இராப்பத்து எனப்படும் திருவாய்மொழித்திருநாளில் நம்மாழ்வாரின் திருவாய்மொழி சேவிக்கப்படுகின்றது. சில திவ்ய தேசங்களில் 21ம் நாள் மூன்றாம் ஆயிரமான இயற்பா முழுவதையும் சேவிப்பது மரபு. இராப்பத்தை நம் கலியன், திருமங்கை மன்னன் திருவரங்கத்தில் தொடங்கினார். பகல் பத்து பின்னர் நாதமுனிகளால் தொடங்கப்பெற்றது.

சத்ய நாராயணர் ஏணிக்கண்ணன் திருக்கோலம்

அப்படியே வேத ஸாம்யம் அநுக்ரஹித்தோம் அத்யயன உஸ்தவத்திலே வேத பாராயணத்தோடு திருவாய்மொழியையும் பாராயணம் பண்ணுங்கோள் என்று நம்பெருமாள் திருவாய் மலர்ந்தருள மதுர கவியும் திருமங்கை மன்னனும், திருக்குறளப்பன் சன்னதிக்கு நம்மாழ்வாரின் அர்ச்சையுடன் எழுந்தருளி அழகிய மணவாளர் திருமண்டபத்திற்க்கு திருவரங்கன் எழுந்தருள மதுரகவியாக்வார் தேவ கானத்திலே இசையுடன் பாடி அபிநயனத்துடன் திருவாய்மொழி விண்ணப்பம் செய்தார். இது பின்னர் நின்று போனது.

இசை, நாதகம், அபிநயம் மூன்றும் ஒருங்கிணைந்து முத்தமிழ் கலையாக திவ்ய பிரபந்தங்களை விண்ணப்பிக்கும் முறையே அரையர் சேவை. அரையர் என்றால் அரசன் என்று பொருள். திருவாய் மொழொயினை நிகரற்ற தேர்ச்சி பெற்று விளங்கிய தலைமையை போற்றவே அரையர்கள் என்று திருவரங்கனால் பாராட்டப்பெற்றனர். இத்தலைமை தோற்றவே தலையில் மகுடமாக பட்டுக்குல்லாய் அணிந்து கொள்ளும் உரிமை பெற்றனர். கையில் தாளங்கள் ஏந்தி ஒலித்தனர் இவர்கள் இசைக்காரர் எனவும் அழைக்கப்படுகின்றனர். முத்திரைகளை நன்கு அறிந்திருக்கின்றனர்.

சத்ய நாராயணர் கோபாலர் திருக்கோலம்

திருவரங்கனாகிய இறைவனின் முன் நின்று அவருடைய குண நலன்களை அடுக்கிய தொடர் மொழிகளால் இசையிலே ஏற்றி மகிழ்விப்பது அரையர்களின் பணியாகும். இதை இவர்கள் கொண்டாட்டம் என்று குறிப்பிடுகின்றனர்.
சத்ய நாராயணர் நாச்சியார் திருக்கோலம்

நாதமுனிகளும் அவருடைய திருப்பேரனாகிய ஆளவந்தாரும், இராமானுஜரும், அவருடைய சீடராகிய எம்பாரும் அரையர் கலையில் திருத்தங்கள் செய்து வளர்த்தனர். ஆனால் இக்கலை இப்போது திருவரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருக்குறுங்குடி என்னும் திவ்ய தேசங்களில் மட்டுமே இன்றும் நடைபெறுகின்றன.
பெருமாள் சேவை இன்னும் வளரும்......

Labels: , , , ,

மாப்பிள்ளைத் தோழன் கருடன்

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ வில்லிபுத்தூர்

அன்ன வாகனமேறி எழிலாக உலா வரும்
கோதை நாச்சியார்


கருடன் வேத ஸ்வரூபர் மட்டுமல்ல நாத ஸ்வரூபரும் கூடத்தான். ஷடகம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்னும் ஸப்த ஸ்வர வடிவானவர் கருடன். பெரிய திருவடியான இவர் இராமாவதாரத்தில் இந்திரஜித் விடுத்த நாக பாசத்தினால் கட்டுண்டு கிடந்த இளைய பெருமாளையும் மற்ற வானர சேனைகளையும் விடுவித்து பெருமாளுக்கு கைங்கர்யம் புரிந்தார். அது போலவே அவர் கிருஷ்ணாவதாரத்தில் பிராட்டியான ஸ்ரீருக்மணியிடமிருந்து அவர் அழகாக எழுதிக் கொடுத்த மடலை எடுத்துக்கொண்டு சென்று ஸ்ரீ கிருஷ்ணரிடம் கொடுத்து கைங்கர்யம் செய்தார், இவ்வாறே பல்வேறு திவ்ய தேசங்களிலும் கருடன் செய்த கைங்கரியங்களினால் அவர் பெருமாளுடன் சமமாக நின்று சேவை சாதிக்கும் பேறு பெற்றார். அத்தகைய திவ்ய தேசங்களுள் முதலாவதானது ஸ்ரீவில்லிபுத்தூர்.

கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்

சோதி மணிமாடந் தோன்றுமூர்

நீதியால் நல்லபத்தர் வாழுமூர் நான்மறைகளோதுமூர்

வில்லிபுத்தூர் வேதக்கோனூர்

என்று இத்தனை பெருமைகளைக் கொண்ட தலம் இத்தலம்.


ஏக சிம்மாசன சேவை


சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாள், திருஅவதாரம் செய்து, ஆயனுக்காக கனா கண்டு, அரங்கனைக் கைப்பிடித்த மென்னடையன்னம் பரந்து விளையாடும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் , கருடன் மற்றும் ரங்க மன்னார் மூவரும் ஒரே சிம்மாசனத்தில் நின்ற கோலத்தில் சேவை சாதித்து அருளுகின்றனர்.


ஆண்டாள் நாச்சியாரின் திருஅவதாரம் வராக அவதார காலத்திலேயே முடிவு செய்யப்பட்டது என்பர் பெரியோர்கள். ஹிரண்யாக்ஷன் பூமிப் பிராட்டியரை எடுத்துக் கொண்டு போய் பாதாளத்தில் ஒளித்து வைத்து விட பெருமாள் வராக அவதாரம் எடுத்து ஹிரண்யாக்ஷனை அழித்து பூமிதேவி நாச்சியாரை தனது கோரைப் பற்களின் மேலாக மூக்கில் வைத்துக் கொண்டு வரும் போது மூன்று பிரதிக்ஞை செய்தார் அவைகள்

1.பெருமாளின் திருவடிகளில் இட்டு அர்ச்சனை செய்வது.


2.அவர் நாமத்தை உரக்கச் சொல்லுவது.


3. அவர் திருவடிகளிலே ஆத்ம சமர்ப்பணம் செய்வது.

கோதை நாச்சியாராக இப்பூவுலகில் பிறந்த போது இந்த பிரதிக்ஞைகளை நிறைவேற்றினார் பூமி பிராட்டியார்.


கீதா சாரத்தை பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் சொல்லி உலகத்தில் உள்ளவர்களை திருத்தவும், மேற் சொன்ன பிரதிக்ஞைகளை நிறைவேற்றவும், மின்னனைய நுண்ணிடையார் விரிகுழல் மேல் நுழைந்த வண்டு இன்னிசைக்கும் ஸ்ரீ வில்லிபுத்தூரில் கருடனின் அம்சமான, பெருமாளுக்கே வாத்ச்ல்ய பாவத்துடன் திருப்பல்லாண்டு பாடிய பெரியாழ்வாரின் புஷ்ப நந்தவனத்தில் ஒரு துளசிச்செடியின் அருகில் ஆடிப் பூரத்தன்று குழந்தையாய் தோன்றினாள் தாயார். உளம் மகிழ்ந்த பெரியாழ்வார் அக்குழந்தையை உச்சி மோந்து எடுத்து கோதை என்று பெயரிடப்பட்டு வளர்‘ந்து வரும் காலத்தில் அவளுக்கு கிருஷ்ண பக்தி என்னும் அமுதினை அளித்தார். நாச்சியாரும் கருவுடை முகில் வண்ணன் காயா வண்ணன், கருவிளை போல் வண்ணன், கமல வண்ணன் ஒருவனையே தன் நாயகனாக வரித்து மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே, என்று

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத

முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து

கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி! நான்

என்று வேயர் புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதை சீராக வளர்ந்து வந்தாள்.


சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்

ஒரு நாள் பெரியாழ்வார் பெரிய பெருமாளுக்காக தொடுத்து வைத்திருந்த மலர் மாலையை கோதை அணிந்து அழகு பார்ப்பதைக் கண்டு பதைத்து. வேறு ஒரு மாலை கட்டி பெருமாளுக்கு சம்ர்பித்தார். அன்று இரவு பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய பெருமாள். ஆண்டாள் அணிந்த மாலையே தனக்கு மிகவும் உகந்தது என்று உணர்த்தினார். அன்று முதல் நாச்சியாரும் "சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்" என்னும் திருநாமம் பெற்றார்.


ரங்க மன்னார் திருக்கோலம்

(சென்னை மேட்டுப்பாளையம், மேற்கு மாம்பலம்
பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்)

இவ்வாறு தன்னை ஒரு கோபிகையாக பாவித்து, பெரிய பெருமாளை கிருஷ்ணராகவும், கோவிலையே நந்தகோபன் மாளிகையாகவும், ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர்ப்பாடியாகவும் பாவித்து பாவை நோன்பு நோற்பதற்காக திருப்பாவை 30 பாடல்கள் பாடினார். இதில் முதல் பத்தில் பெருமாளின் நாமங்களை போற்றுகின்றாள், இரண்டாம் பத்தில் அவரது உயர்வான திருவடிகளில் அர்ச்சனை செய்கின்றாள், மூன்றாம் பத்தில் எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாமாட் செய்வோம் என்று ஆத்ம சமர்ப்பணம் செய்து பிரதிக்ஞ்னைகளை நிறைவேற்றுகின்றாள். இவ்வாறு பூமாலையும், பாமாலையும் சூடிக் கொடுத்தாள் நாச்சியார்.


ஸ்ரீ வில்லிபுத்தூர் வடபத்ரசாயி

திருமண வயதடைந்த ஆண்டாள், ‘அரங்கனைத் தவிர வேறு எவருக்கும் மாலையிட மாட்டேன்!’ என்றாள். பெரியாழ்வார் குழம்பினார். மீண்டும் அவரது கனவில் தோன்றிய பெருமாள், ‘ஆண்டாள் தெய்வப் பிறவி. அவளை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வா!’ என்று அருளி மறைந்தார். அதன்படி ஸ்ரீரங்கம் வந்த கோதை, காவிரிக்கரையை அடைந்ததும், தன் கணவன் இருக்குமிடத்தில் பல்லக்கில் செல்வது அவருக்கு மரியாதை தருவதாக இருக்காது என எண்ணினாள் ஆண்டாள். எனவே, தன்னை ஆட்கொள்ளும்படி ரெங்கமன்னாரிடம் வேண்டினாள். ரெங்கமன்னாரும் அவளை தன்னுடன் வரவழைத்துக் கொண்டார். இதனிடையே, தன் மகளைக்காண பல்லக்கிற்குள் பார்த்தார் பெரியாழ்வார். ஆனால் ஆண்டாள் அங்கில்லாததைக் கண்டு திகைப்படைந்தார். கோதை தனக்குத் திருவடிச் சேவை செய்வதை பெரியாழ்வாருக்குக் காட்டினார் பெருமாள்.

ஆனால், ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்துதான் கோதையை மணம் முடிக்க வேண்டுமென்று பெரியாழ்வார் பெருமாளை வேண்டினார். அதன்படி ஸ்ரீவில்லிப்புத்தூரில் எழுந்தருளி ஒரு பங்குனி உத்திர நன்னாளில் கோதையை திருமணம் செய்து கொண்டார் பெருமாள் என்கிறது தல புராணம். இப்படி கோதை ஆண்டவனை ஆட்கொண்டதால் ஆண்டாள் எனச் சிறப்பிக்கப்பட்டாள். இதன் அடிப்படையில் பங்குனி உத்திரத்தன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணமும், தேர்த்திருவிழாவும் நடக்கின்றது.

இனி ஏன் கருடனுக்கு சம ஆசனம் என்று யோசிக்கின்றீர்களா? அதற்கும் ஆண்டாள் அரங்கர் கல்யாணத்திற்கும் சம்பந்தம் இருக்கின்றது. குறித்த நேரத்திற்கு அரங்கர் திருமணத்திற்கு வர முடியாமற் போய் விட்டது, பெரியாழ்வார் உட்பட திருக்கல்யாணத்திற்காக கூடியிருந்த அனைவரும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்க, அனைவரின் நிலையை உணர்ந்த கருடன் விரைந்து சென்று காலம் தாழ்த்தாமல் பெருமாளை பிராட்டியாரிடம் சேர்த்தான். இதற்கு கைமாறாக ஆண்டாள் ரங்கமன்னாரிடன் பரிந்துரைக்க பெருமாளும் தங்களுடன் கருடனும் சரி சமமாக நின்று சேவை சாதிக்கும் பேற்றை அளித்தார். கருடாழ்வார் திருவரங்கத்திலிருந்து பெருமாளை அழைத்து வந்ததால் மாப்பிள்ளைத் தோழனாகவும் விளங்குகின்றார் என்பது ஐதீகம். மேலும் எப்போதும் கருடன் பெருமாளையும் பிராட்டியாரையும் வணங்க விருப்பப்பட்டதாலும் எப்போதும் அருகில் இருப்பதாகவும் ஐதீகம்.

திருமயிலை ஆதி கேசவர் ரங்கமன்னார் -ஆண்டாள் திருக்கோலம்

(முன்னழகும் பின்னழகும்)


அர்த்த மண்டபத்தில் தங்க முலாம் மஞ்சத்தில், வலப்புறம் கோதை நாச்சியாரும், நடுவில் ரங்க மன்னாரும், இடப்புறம் கருடன் என மூவரும் ஒன்றாக சேவை சாதிக்கின்றனர். ரங்கமன்னார் நின்ற கோலத்தில் வலக்கையில் பெந்து கோல் (தற்காப்புக் கோல்), இடக்கையில் செங்கோல், இடையில் உடைவாள், கால்களில் திருப்பாதுகைகள் என்று இராஜாங்க கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஆண்டாள் இடக்கரத்தில் கிளியை தாங்கி, வலக்கரம் திருவடிகளை சுட்டிக் காட்ட வைர மூக்குத்தி மின்ன எழிலாக சேவை சாதிக்கின்றாள். கருடன் அஞ்சலி ஹஸ்தத்துடன் திவ்ய தம்பதிகளை வணங்கும் நிலையிலும் நின்று சேவை சாதிக்கும் அழகே அழகு. ஓம் என்னும் பிரணவத்தின் வடிவாக சேவை சாதிக்கின்றனர் மூவரும்.



ஓம் என்னும் பிரணவ கோலம்


அ + உ + ம் = ஓம் அல்லவா? இதில் அ = பெருமாள் என்னும் பரமாத்மா, ம = ஆண்டாள் நாச்சியார் , ஜீவாத்மா, சரணாகதியின் மூலம் இருவரையும் பாலமாக இனைக்கும் கருடபகவான் = உ. இதன் மூலமும் நாம் கற்பது சரணாகதி தான். எல்லாவற்றையும் பெருமாளின் காலடியில் விடுத்து சரணமடைய அவர் மோட்சம் அளிப்பார் என்பது சத்தியம்.


கணவன் எப்படிப்பட்ட உயரிய பதவியில் இருந்தாலும் மனைவி விரும்பியதை நிறைவேற்றித்தான் ஆக வேண்டும் என்பதற்கு உதாரணமாக பெருமாள் திகழ்கின்றார். கண்ணனையே தன் நாயகனாக அடைய வேண்டும் என்று வேயர் குல விளக்கு விரும்பியதால் ரங்க மன்னாரே கிருஷ்ணர், ஆண்டாள் ருக்மணி, கருடன் சத்யபாமா என்று அருளுகின்றனர்.




கருடாழ்வார் இத்தலத்தில் ரங்கமன்னாருக்கு மாமனார் (பெரியாழ்வார் அம்சம்), மாப்பிள்ளை தோழன், சத்தியபாமா (பெருமாள் கிருஷ்ணன் என்பதால்) என மூன்று பதவிகளுடன் இருக்கிறார்.


என்னங்க இந்த திவ்ய தேசத்தில் கருட சேவை சிறப்பாக இல்லையா அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லையே என்று சந்தேகம் எழுகின்றதா? இத்தலத்தில் ஐந்து கருட சேவை சிறப்பாக நடைபெறுகின்றது வருடத்தில் இரு முறை கோதை நாச்சியாரின் திருஅவதார தினமான ஆடிப்பூர உற்சவத்தின் ஐந்தாம் நாளன்றும், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தின் ஐந்தாம் நாளன்றும் ஐந்து கருட சேவை சிறப்பாக நடைபெறுகின்றது. இன்னும் ஐந்து கருட சேவை நேரில் சேவிக்கும் பாக்கியம் சித்திக்கவில்லை எனவே விஸ்தாரமாக எழுத முடியவில்லை.

ரங்க மன்னார் கருட சேவை

ஐந்து கருட சேவையில் பெரிய பெருமாள் வடபத்ர சாயி, ரங்க மன்னார், காட்டழகர் கோவில் சுந்தரராஜ பெருமாள், திருவில்லிபுத்தூருக்கு அருகில் உள்ள திருவண்ணாமலை திருவேங்கடமுடையான், மற்றும் அருகில் உள்ள திவ்ய தேசமான திருத்தண்கால் அப்பன்

ஐந்து கருட சேவைக்கு எழுந்தருளும்

திருத்தண்கால் அப்பன்.

ஆகிய பெருமாள்கள் காலையில் எழுந்தருளி பெரியாழ்வாரின் மங்களாசாசனம் கேட்டருளுகின்றனர். பின்னர் மாலையில் பெரியாழ்வாரும் ஆண்டாளும் அன்ன வாகனத்தில் எழுந்தருள பெருமாள்கள் ஐவரும் கருட சேவை சாதிக்கின்றனர்.


Labels: , , ,