திருநீர் மலை அரங்கநாதர் கருடசேவை
அழகிய மணவாளப் பெருமாள் - அரங்கநாதர்
அன்றாயர் குலக்கொடியோடு அணிமாமலர்மங்கையொடு
அன்பளவி அவுணர்க்கு
என்தானும் இரக்கமிலாதவனுக்கு உறையுமிடமாவது
இரும்பொழில் சூழ்
நன்றாய புனல்நறையூர் திருவாலி
குடந்தை தடம்திகழ் கோவல்நகர்
நின்றான் இருந்தான் கிடந்தான்
நடந்தாற்கு இடம் மாமலையாவது நீர்
மலையே. (பெ.தி 2.4.1)
பொருள்:
கண்ணனாக அவதரித்து போது நப்பின்னை பிராட்டியோடும், திருமகளோடும் அன்புடன் கலந்து,
எக்காலத்தும் அசுரர்களிடம் இரக்கமின்றி இருப்பவருக்கு என்றும் இருக்கும் இடமாக
இருப்பது திருநீர்மலையாகும். சோலைகளால் சூழப்பட்ட நீர் வளமுடைய திருநறையூர்,
திருவாலி, திருக்குடந்தை, திருக்கோவலூர் ஆகிய இடங்களில் முறையே நின்றவனும்,
அமர்ந்தவனும், படுத்தவனும், நடந்தவனுமாகிய பெருமானுக்கு இடமாகிய மலையாக இருப்பது
திருநீர்மலையாகும்.
இவ்வாறு திருமங்கையாழ்வார் மங்கலாசாசனம் செய்த, இத்திவ்யதேசத்தில்
பெருமாள் நின்ற கோலத்தில் அணி மாமலர் மங்கையுடன் நீர்வண்ணராகவும், இருந்த கோலத்தில்
சாந்த நரசிம்மராகவும், அரங்கநாயகித் தாயாருடன் மாணிக்க சயனத்தில் கிடந்த கோலத்தில்
அரங்கநாதராகவும், நடந்த கோலத்தில் திரிவிக்கிரமனாகவும் சேவை சாதிக்கும் இத்திருநீர்மலை
திவ்யதேசத்தை திருமங்கையாழ்வார் சேவிசிக்க வந்த போது இந்த
திவ்யதேசத்தை சுற்றி ஒரே தண்ணீர்க் காடாக இருந்ததாம். எதிரே இருந்த மலையிலே ஆறு மாதம்
தண்ணீர் வடிய பரகாலன் தங்கியிருந்தாராம், அக்காலத்தில்
அவ்வளவு நீர் வளம் மிகுந்த பகுதியாக இப்பகுதி இருந்துள்ளது. அவ்வாறு பெருமாளை தரிசிக்க
திருமங்கை மன்னன் தங்கிய ஊர் திருமங்கையாழ்வார்புரம் என்று அழைக்கப்படுகின்றது.
கொடி மரம் நீர்வண்ணருக்கு .. ராஜகோபுரம் இராமருக்கு
இத்திருநீர்மலை
திவ்ய தேசத்தில் பெருமாள்களை சேவித்தால் திருநறையூர், திருவாலி, திருக்குடந்தை,
திருக்கோவலூர் ஆகிய நான்கு திவ்ய தேசப்பெருமாள்களை சேவித்ததற்கு சமம் என்று திருமங்கையாழ்வார் பாடியுள்ளார்.
பயின்றது அரங்கம் திருக்கோட்டி
பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள்-
பயின்றது
அணி திகழுஞ் சோலை அணிநீர்மலையே
மணித்திகழும் வண்தடக்கைமால் ( இ.தி. 46)
பொருள்: நீலமணி போல்
விளங்குபவனும் வள்ளன்மையாய் நீண்ட திருக்கைகளை உடையவனுமான எம்பெருமான்,
நித்தியவாசம் செய்தருளுமிடம் திருவரங்கமும், திருக்கோட்டியூருமாம்; அநாதிகாலம்
நித்திய வாசம் செய்யுமிடமும் திருமலையுமாம்; பலநாள் பயின்றதுவும் அழகு விளங்குகின்ற
சோலைகளையுடைய இந்நிலவுலகுக்கு அலங்காரமான திருநீர்மலையாம் என்று முதலாழ்வாரான பூதத்தாழ்வார் இத்திவ்விய தேசத்தை பூலோக வைகுண்டமாம் திருவரங்கம், திருக்கோட்டியூர், திருவேங்கடம் ஆகிய
திவ்ய தேசங்களுக்கு இணையானது என்று மங்கலாசாசனம் செய்துள்ளார்.
நீர்வண்ணர் சன்னதி நுழைவாயில்
இப் பெருமாளின் அழகில் மிகவும் ஈடுபட்ட திருமங்கை மன்னன் 19 பாசுரங்கள் பாடியுள்ளார். அதுவும் தன்னை பரகாலநாயகியாக பாவித்து
நீர்வண்ணன் நீர் மலைக்கே போவேனென்றும். . . .
வருநல்தொல்கதி
ஆகிய மைந்தனை
நெருநல்
கண்டது நீர்மலை . . . .
அலங்கெழு
தடக்கை ஆயன்வாயாம்பற்கு
அழியுமால்
என்னுள்ளம் என்னும்
புழங்கெழு
பொருநீப்புட்குழிபாடும்
போதுமோ நீர்மலைக்கு? என்னும் . . . . .
அருவிசோர்
வேங்கடம் நீர்மலை யென்று
வாய்
வெருவினாள்
மெய்யம் வினவியிருக்கிறாள் ….
மாலிருஞ்சோலைமணாளர்
வந்து என்
நெஞ்சுள்ளும்
கண்ணுள்ளும் நின்று நீங்கார்
நீர்மலையார் கொல் .
. .
மேலும் சிறிய திருமடலில்
சீரார் திருவேங்கடமே
திருக்கோவ லூரே
மதிட்கட்சியூரகமே பேரகமே
பேராமருதிறுத்தான்
வெள்ளறையே வெஃகாவே பேராலி தண்கால்
நறையூர் திருப்புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் – கணமங்கை காரார்மணிக் கண்ணணூர் விண்ணகரம்
சீரார் கணபுரம் சேறை திருவழுந்தூர் காரார் குடந்தை கடிகை கடல்மல்லை
ஏரார் பொழில்சூழ் இடவெந்தை நீர்மலை சீராரும் மாலிருஞ்சோலை திருமோகூர்………
மலைக்கோவில் செல்லும் படிகள்
பெரிய திருமடலில்
அன்னவனை
ஆதனூராண்டளக்குமையனை
நென்னலையின்றினை
நாளையை -நீர்மலை மேல்
மன்னுமறை நான்குமானானை புல்லாணித்
தென்னன் தமிழை.... என்று
கொண்டாடுகின்றார் குமுதவல்லி மணாளர்.
இத்தலத்தை
சேவித்தால் 108 திவ்ய தேசங்களில் நான்கு திவ்ய தேசங்களை ஒருங்கே சேவித்த பலன் கிடைக்கும் ஒப்பற்ற திருத்தலம். திருமால் நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என நான்கு திருக்கோலத்தில் அருள் புரியும் அற்புத திருத்தலம். திருமால் 108 திவ்ய தேசங்களிலும் இந்நான்கு திருக்கோலத்தில் மட்டுமே சேவை சாதிக்கிறார். இத்தகு சிறப்பு வாய்ந்த காட்சியாக நான்கு மூர்த்திகளையும் ஒருங்கே காணக் கிடைப்பது புண்ணியம் நிறைந்த ஒன்றாகும்.
நான்கு புண்ணிய தீர்த்தங்களை ஒருங்கே பெற்றுள்ள மகிமை வாய்ந்த திருத்தலம்.சுமார் 2000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த திருத்தலம்.108 திவ்ய தேசங்களில் 61வது திவ்ய தேசமாகும். பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார், மங்கலாசாசனம் செய்த திருத்தலம். பிரம்மாண்ட புராணத்தில் இத்தலத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு ஏராளமான பெருமைகளையும் சிறப்புகளையும் உள்ளடக்கிய அற்புத திருத்தலம் இது.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமியை தரிசிக்க எண்ணிய "பிருகு முனிவர்" மற்றும் "மார்க்கண்டேய முனிவர்" நீர் சூழ்ந்த இந்த மலையின் மீது நீண்ட காலம் தவம் செய்தனர். அவர்களின் தவத்திற்கு இரங்கித் திருமால்" மாணிக்க சயனத்தில் அரங்கநாதர் திருக்கோலத்தில் காட்சி தந்து அருளினார். நீர் சூழ்ந்த மலை என்பதால் இவ்விடம் "நீர்மலை" என்றும் திருமால் வந்து அவதரித்த மலை என்பதால் "திருநீர்மலை" என்றும் பெயர் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. பழங்காலத்தில் இவ்வூர் தோயாசம், காண்டவ வனம், தோயாத்ரி க்ஷேத்திரம் என பல பெயர்களால் அழைக்கப்பட்டிருக்கின்றது. தோ
என்றால் தண்ணீர் த்ரி என்றால் மலை அதாவது தண்ணீர் சூழ்ந்த மலை.
நீர்வண்ணர் விமானம்
கருட சேவைக்கு புறப்படும் அழகிய மணவாளர்
திரிவிக்கிரமன் இடது காலை உயர்த்தி உலகத்தை அளக்கும் "வாமன அவதாரம்" திருக்கோலத்தில் தனி சன்னதியில் சேவை சாதிக்கிறார்.. இவ்வடிவத்தை திருமங்கையாழ்வார் "நடந்தான்" என்று பாடுகிறார்.
பின்னழகு
துவாபர யுகத்தில் அகோபிலம் மற்றும் திருநீர் மலைகள் மட்டும் இருந்தன, பிரளயம் முடிந்தபின் அர்சுனனுக்காக நரசிம்மர் இம்மலையில் சேவை சாதித்தார். இங்கு நரசிம்ம சுவாமி பால நரசிம்மராக சேவை சாதித்தருள்கின்றார். அழகிய வடிவத்தில் வீற்றிருந்த கோலத்தில் (அமர்ந்த கோலத்தில்) கிழக்கு திசை நோக்கி தனி சன்னதியில் அருள்கின்றார். இரணியனை சம்ஹாரம் செய்த நரசிம்மர் உக்கிரமாக இருந்தார். பெருமாளின் உக்கிர கோலத்தைக் கண்டு பிரகலாதன் பயந்தார். அவருக்காக அவனைப் போலவே வா என்று அழைக்கும் ஆவாஹன முத்திரையுடன் பால ரூபத்தில் சேவை சாதிக்கின்றார். இவருக்கு பின்புறம் நரசிம்மர் சுயரூபத்துடன் இரண்டு கரங்களுடன் சேவை சாதிக்கின்றார். பால ரூபம், சுய ரூபம் என்று இரு வடிவங்களில் நரசிம்மரை தரிசிக்கலாம்.
ஸ்தலாதிபதி நீர்வண்ணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் மலை அடிவாரத்தில் கிழக்கு நோக்கியவாறு தனிச் சன்னதி கொண்டு அருள் பாலிக்கிறார். பெரும்பாலான கோயில்களில் கொடிமரம், பலிபீடம், கோபுரம் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும். ஆனால் இங்கே கொடி மரமும் பலிபீடமும் இராசகோபுரத்தை விட்டு சற்று விலகி தனியே அமையப் பெற்றுள்ளன. கோபுரம் இராமருக்கு கொடிமரம் நீர் வண்ணருக்கும் என்று அமைந்திருப்பது ஒரு சிறப்பு.
கருட சேவைக்கு காத்திருக்கும் பக்தர்கள்
கருடசேவை
நீர்வண்ணப் பெருமாள் உடன்
உறையும் இலட்சுமி பிராட்டிக்கு "அணிமாமலர் மங்கை தாயார்" என்பது
திருநாமம். கிழக்கு நோக்கியவாறு தனி சன்னதியில் அருள்கின்றாள். ஆண்டாள்
நாச்சியாருக்கும் தனி சன்னதி உள்ளது.
கற்பூர ஆரத்தி
"ஸ்ரீமத் இராமாயணம்"
இயற்றிய வால்மீகி முனிவருக்கு ஒரு முறை அருள்மிகு இராமபிரானை திருமணக் கோலத்தில் தரிசிக்க
வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. உடனே திருநீர்மலை அடிவாரம் வந்து இராமபிரானை மனதில் நிறுத்தி
தியானித்தார். அவருக்கு தவத்திற்கு இரங்கி அரங்கநாதர் இராமபிரானாகவும், இலட்சுமி தாயார் சீதா
தேவியாகவும், ஆதிசேசன் இலக்குவனாகவும், பெருமாளின் ஆயுதங்களான சங்கு, சக்கரங்கள் பரத
சத்ருக்கணனாகவும், விஷ்வக்சேனர் சுக்ரீவனாகவும், கருடன் அனுமனாகவும் "திருமண கோலத்தில்"
எழுந்தருளி காட்சி தந்ததாக தல வரலாறு கூறுகிறது. இராமர் கருவறையில் வால்மீகி முனிவரையும்
சேவிக்கலாம். இவருக்கு "நீல முகில் வண்ணர் " என்றும் இன்னொரு திருநாமம். திருநீர்மலை முதல்
பாசுரத்தில் தாயாரை அணிமாமலர் மங்கை என்று மங்கலாசாசனம் செய்த
ஆழ்வார் ஐந்தாம் பாசுரத்தில்
மாலும்
கடலார மலைகுவடிட்டு அணைகட்டி வரம்புருவ
மதிசேர்
கோலமதிலாய
இலங்கைகெடப் படை தொட்டு ஒருகால்
அமரிலதிர
காலமிதுவென்று
அயன் வாளியினால் கதிர்நீள்முடி
பத்தும் அறுத்தமரும்
நீலமுகில்வண்ணனெமக்கிறைவர்க்கு இடம்
மாமலையாவது நீர்மலையே (பெ.தி 2-4-5)
பொருள்: முன்னர் கடல் நிறையும்படி மலைகளைப்
போட்டு அக்கரையிலே சென்று சேரும்படி அணையை அமைத்து மதில்களை உடைய இலங்கை நகர்
அழியும்படி படைக்கலங்களை நடத்தி போரில் அதிரும்படி செய்தவன். மேலும் இராவணனை முடிப்பதற்கு
இதுவே தக்க சமயம் என்று கருதி பிரம்மாஸ்திரத்தினால் அவன் தலைகள் பத்தையும்
வெட்டி, திரு அயோத்தியில் எழுந்தருளியுள்ள
நீல மேகம் போலவும் நிறமுடைய நம்
தலைவனான பெருமானுக்கு இடம் திருநீர்மலையாகும்
மூலவர்கள் : நீர்
வண்ணர், அரங்கநாதர், சாந்த நரசிம்மர், திரிவிக்கிரமன், இராமர்
தாயார்: அணிமா மலர்
மங்கை, அரங்க நாயகி.
சயனம் : மாணிக்க சயனம்
விமானம்: தோயகிரி
விமானம்.
தீர்த்தம் : மணிகர்ணிகா
தடாகம், க்ஷீர புஷ்கரிணி, காருண்ய புஷ்கரிணி, ஸித்த புஷ்கரிணி, ஸ்வர்ண புஷ்கரிணி.
தல விருட்சம் :
வெப்பால மரம்.
மங்கலாசாசனம்:
திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார்.
ஒரே திருக்குளத்தில் நான்கு
தீர்த்தங்கள் அமைந்துள்ளது இத்தலத்தின்
இன்னுமொரு தனி சிறப்பு. தடாகத்தின் மத்தியில் நீராழி மண்டபம் உள்ளது. இக்கோயிலின் எதிரிலுள்ள மணிகர்ணிகா தடாகத்தில் க்ஷீர புஷ்கரிணி, காருண்ய
புஷ்கரிணி, ஸித்த புஷ்கரிணி, ஸ்வர்ண
புஷ்கரிணி என்று நான்கு தீர்த்தங்கள். இரு பிரம்மோற்சவங்களின் போதும், வைகுண்ட
ஏகாதசிக்கு மறு நாள் ஆகிய மூன்று நாட்களில் தீர்த்தவாரி நடைபெறுகின்றது. இத்தீர்த்தவாரி "முக்கோடி துவாதசி தீர்த்தவாரி" என்றழைக்கப்படுகின்றது.
வருடத்தில் இரண்டு
பிரம்மோற்சவங்கள். பங்குனி திருவோண நாளை தீர்த்த நாளாகக் கொண்டு பிரம்மோற்சவம்
நீர்வண்ணருக்கு, சித்திரை திருவோண நாளை தீர்த்த நாளாக கொண்டு பிரம்மோற்சவம்
அரங்கநாதருக்கு. சித்திரை மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின்
கொடியேற்றத்தன்றும், கொடி இறக்கத்தன்றும் பங்குனி மாதத்தில் உத்திர
நட்சத்திரத்தில் நடைபெறும் அரங்கநாதர் அரங்கநாயகித்தா யார் திருக்கல்யாணம் ஆகிய மூன்று நாட்களிலும் அழகிய மணவாளப் பெருமாள்
மலையின் மீது எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இம்மூன்று நாட்கள் மட்டுமே உற்சவரையும் மூலவரையும் ஒரே நேரத்தில்
தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் மூலவர் மலை மீதும் உற்சவர் மலை அடிவாரத்திலும்
சேவை சாதிக்கின்றனர்.
மலையில் உள்ள அரங்கநாதருக்கு சித்திரையிலும் மலை அடிவாரத்திலுள்ள நீர்வண்ணப் பெருமாளுக்கு பங்குனியிலும் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. அழகிய மணவாளப் பெருமாள் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று பரமபதவாசல் சேவை தந்தருள்கிறார். மாசி மகத்தன்று இவரே கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். இரதசப்தமியன்று ஏழு வாகனங்களில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.. சித்திரை உத்திரத்தன்று நீர்வண்ணர் – அணிமாமலர்த் தாயார் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது. மேலும் தை மாத இரத சப்தமியன்றும், மாசி மகத்தன்றும் கருட சேவை தந்தருளுகின்றார். நரசிம்ம சுவாமிக்கு ஆனி மாதத்திலும் உலகளந்த பெருமாளுக்கு ஆடி மாதத்திலும் ஒரு நாள் உற்சவம் நடைபெறுகின்றது. அன்று அடிவாரத்திற்கு எழுந்தருளி கருட சேவை தந்தருளுகின்றனர்.
மலையில் உள்ள அரங்கநாதருக்கு சித்திரையிலும் மலை அடிவாரத்திலுள்ள நீர்வண்ணப் பெருமாளுக்கு பங்குனியிலும் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. அழகிய மணவாளப் பெருமாள் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று பரமபதவாசல் சேவை தந்தருள்கிறார். மாசி மகத்தன்று இவரே கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். இரதசப்தமியன்று ஏழு வாகனங்களில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.. சித்திரை உத்திரத்தன்று நீர்வண்ணர் – அணிமாமலர்த் தாயார் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது. மேலும் தை மாத இரத சப்தமியன்றும், மாசி மகத்தன்றும் கருட சேவை தந்தருளுகின்றார். நரசிம்ம சுவாமிக்கு ஆனி மாதத்திலும் உலகளந்த பெருமாளுக்கு ஆடி மாதத்திலும் ஒரு நாள் உற்சவம் நடைபெறுகின்றது. அன்று அடிவாரத்திற்கு எழுந்தருளி கருட சேவை தந்தருளுகின்றனர்.
கதியேலில்லை
நின்னருளல்லது எனக்கு
நிதியே!
திருநீர்மலை நித்திலத்தொத்தே!
பதியே!
பரவித்தொழும் தொண்டர்தமக்குக்
கதியே!
உன்னைக்கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே (பெ.தி 7-1-7)
பொருள்: அன்பர்களுக்கு
வைத்தமாநிதி போன்றவனே! திருநீர்மலையில் எழுந்தருளியுள்ள முத்து மாலை போன்றவனே!
அடியேனுக்கு உன் அருள் அல்லாமல் வேறொரு புகல் இல்லை. திருத்தலங்களை ஏத்தித்தொழுகின்ற பாகவதர்களுக்கு
கதியானவனே! உன்னைக் கண்டு கொண்டு பிழைத்துப் போனேன் என்று திருமங்கையாழ்வார் தனது
ஆச்சார்யனான திருநறையூர் நம்பியை மங்களாசாசனம் செய்த போது பாடியுள்ள இத்தலத்தில் வைகாசன
ஆகமப்படி பூசைகள் நடைபெறுவதால் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு தங்க கருட
சேவை தந்தருளுகிறார். பள்ளியறையிலிருந்து எழுந்தருளி முதலில் ஊஞ்சல் சேவை
தந்தருளுகின்றார். பின்னர் ஒய்யாளி சேவை பல்வேறு நடைகளில் பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றார்.
பின்னர் கருட வாகனத்தில் சேவை சாதித்து மாட வீதி வலம் வருகின்றார். இரவு சுமார்
பத்து மணி அளவில் ஆரம்பமாகும் கருடசேவை புறப்பாடு திருக்கோயிலை வந்து சேரும் போது
அதிகாலை ஆகிவிடுமாம்.
இவ்வாறு இத்தலத்தில் பல்வேறு கருடசேவைகளை
கண்டு களிக்கலாம் சமயம் கிட்டும் போது இத்தலம்
சென்று ஒரு கருட சேவையை கண்டு களியுங்கள் அன்பர்களே. .
Labels: அரங்கநாதர், அழகிய மணவாளன், சித்திரை பிரமோற்சவம், திருநீர் மலை, நீர்வண்ணர்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home