Thursday, May 19, 2016

நெற்றிக்கண் நரசிம்மர்

Visit BlogAdda.com to discover Indian blogs
பாடலாத்ரி  நரசிம்மர்

இன்றைய தினம் ( 20-05-2016) வைகாசி சுவாதி நரசிம்மர் ஜெயந்தி நாள் ஆகும். எனவே ஒரு அபூர்வ நரசிம்மரை சேவிக்கலாம் அன்பர்களே. சென்னைக்கு அருகில் அமைந்துள்ளது இந்த ஆலயம். நரசிம்மரின் பெயரால் "சிங்க பெருமாள் கோவில்"  என்றே அழைக்கப்படுகின்றது.

இக்கோவில் ஒரு குடவரைக் கோவிலாகும் பெருமாளின் திருமேனியே மலையாக விளங்குவதால் நாம் மலையைச்சுற்றியே வலம் வர வேண்டும். 

பெருமாள் சங்கு சக்கரம் தாங்கி நான்கு கரங்களுடன் வலது காலை மடக்கி அமர்ந்த கோலத்தில் நெற்றிக்கண்ணுடன் பிரம்மாண்டமாக சேவை சாதிக்கின்றார்.  ஆரத்தி காட்டும் போது திருமண்ணை விலக்கி, நெற்றிக்கண்ணை சேவை செய்து வைக்கும் போது அப்படியே மெய் சிலிர்க்கும். 


இத்தலம் பாடலாத்ரி என்றும் அழைக்கப்படுகின்றது. பாடலம் என்றால் சிவப்பு அத்ரி என்றால் மலை எனவே இந்தக் குன்று பாடலாத்ரி என்றும் இம்மலையில் எழுந்தருளியிருக்கும் பெருமாள் பாடலாத்ரி நரசிம்மர் என்றும் அழைக்கப்படுகின்றார்.   

ஜாபாலி என்னும் முனிவர் பெருமாளை நரசிம்ம மூர்த்தியாக சேவிக்க வேண்டும் என்று இம்மலையில் தவம் செய்தார். அவரது தவத்திற்கிணங்கி பெருமாள் பிரதோஷ வேளையில் உக்ர நரசிம்மராக  சிவந்த கண்களோடு பாடலாத்ரி மீது தரிசனம் தந்தார். முனிவர் வேண்ட பின் அதே கோலத்தில் நாம் எல்லோரும் உய்ய கோவில் கொண்டார். 


பிரணவகோடி விமானத்தின் கீழ் நரசிம்மர் சங்கு சக்கரம் ஏந்தி வலக்கரம் அபய ஹஸ்தமாகவும், இடக்கரத்தை தொடை மீது வைத்தும் பிரம்மாண்ட திருவுருவில் அருள்கிறார். வலது காலை தொங்கவிட்டு இடக்காலை மடித்த நிலையில் நெற்றிக்கண் ஒளிரும் அபூர்வ திருமேனி கொண்டவர் இவர். இவருக்கு பிரதோஷ தினத்தன்று திருமஞ்சனம் நடைபெறுகின்றது.

மூலவர்: பாடலாத்ரி நரசிம்மர்
உற்சவர்: உபய நாச்சியார்களுடன் பிரகலாத வரதர்.
தாயார்: அஹோபிலவல்லி 
விமானம்: பிரணவ கோடி விமானம்.
தீர்த்தம்: சுத்த புஷ்கரணி
தல மரம்: பாரிதாஜம்.
ஆகமம்: வைகானசம்.





பிரணவகோடி விமானம் 












மற்றும் ஆண்டாள், லக்ஷ்மி நரசிம்மர், ஆழ்வார்கள், இராமானுஜர் ஆகியோர்களுக்கு தனி சன்னதிகள் உள்ளன.  கிரிவலம்  வரும் போது அரிய வகை அழிஞ்சல் மரத்தை சேவிக்கலாம். அம்மரத்திற்கு மஞ்சள், குங்குமம் இட்டு நெய் விளக்கேற்றி வழிபட திருமண வரம், மழலை வரம் கிட்டுகிறது. பலர் இம்மரத்தில் தொட்டில் கட்டியிருப்பதைக் காணலாம். 


பெருமாள் திருமேனியே மலையாக விளங்குவதால் பெளர்ணமி கிரிவலம் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. மார்கழி, தை மாதங்களில் நரசிம்மரது பாதங்களிலும், ரத சப்தமி தினத்தன்று நரசிம்மரின் உடலிலும் சூரிய ஒளி படருகிறது. கடன் தொல்லை, வழக்குகளிலிருந்து விடுதலை, செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமணத்தடை விலக, இந்த நரசிம்மர் அருள்கிறார். திருவாதிரை, சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், சனிதசை, ராகுதசை நடப்பவர்களுக்கும் இத்தலம் பரிகாரத்தலமாக விளங்குகிறது.


நரசிம்ம ஜயந்தி, ராமானுஜ ஜயந்தி, சித்ரா பெளர்ணமி, வைகாசி சுவாதி நட்சத்திர தினத்திற்கு முன்வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி 10 நாட்கள் பிரம்மோற்சவம், ஆடிப்பூரம், ஆவணி பவித்ரோற்சவம், கிருஷ்ணஜயந்தி, புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசியில் மணவாளமாமுனிகள் உற்சவம், கார்த்திகையில் திருக்கார்த்திகை, தை மாதசங்கராந்தியன்று ஆண்டாள் நீராட்டு உற்சவம், மார்கழியில் 5 நாட்கள் தெப்போற்சவம், வைகுண்ட ஏகாதசி,   பங்குனி உத்திரம் என ஆண்டு முழுதும் விழாக்கோலம் காண்கின்றது இத்திருத்தலம் . இவரிடம்  தன் கோரிக்கை நிறைவேறினால் பானகம் கரைத்து ஆலய வலம் வரும் பக்தர்களுக்கு அளிப்பதாக வேண்டிக்கொண்டால், கட்டாயம் அந்த கோரிக்கை நிறைவேறிவிடும் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. 

சன்னதி தெருவில் முதலியாண்டான் மாளிகை அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் அனந்த சயனத்தில் அரங்கநாதரை சேவிக்கலாம். எதிரே சாலையின் ஓரத்தில் அனுமன் சன்னதி அமைந்துள்ளது. இவ்வாலயத்திற்கு அருகில் யோக ஹயக்ரீவர் அருள் பாலிக்கும் செட்டிபுண்ணியம் தலம் அமைந்துள்ளது.  
   

Labels: , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home