Saturday, June 7, 2014

திருக்கோளூர் நிஷேபவித்தன் கருட சேவை

Visit BlogAdda.com to discover Indian blogs
ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -13




வைத்தமாநிதிப் பெருமாள்

உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையெல்லாம் கண்ணன் என்று நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த வைத்தமாநிதியாம் மசுசூதனின் கருடசேவையை இப்பதிவில் காணலாம். மதுரகவியாழ்வாரின் அவதாரஸ்தலமான திருக்கோளூர் திருநெல்வேலியில் இருந்து சுமார்  36 கி. மீ   தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து சுமார் 34 கி. மீ  தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வார்திருநகரி செல்லும் சாலையில் 3 கி.மீ  வந்து பின்னர் கிளைச் சாலையில் சுமார் 2 கி.மீ  தூரத்தில் அமைந்துள்ளது.

மூலவர்:  வைத்தமாநிதிப் பெருமாள். மரக்காலை தலைக்கு வைத்துக்கொண்டு நவநிதிகளின் மேல் இடக்கையால் நிதி எங்கே என்று மை போட்டு பார்க்கும்  புஜங்க சயனம்,  கிழக்கே திருமுக மண்டலம்.
உற்சவர்: நிஷேபவித்தன்
தாயார்: கோளூர்வல்லி நாச்சியார், குமுதவல்லி நாச்சியார் தனி தனி சன்னதி.
விமானம்: ஸ்ரீஹர விமானம்.
தீர்த்தம்:  குபேர தீர்த்தம்.
பிரத்யட்சம்: குபேரன், மதுரகவி.
ஆகமம் : வைகானஸம் – சம்பிரதாயம்: தென்கலை.
மங்களாசாசனம்: நம்மாழ்வார் ஒரு பதிகம் (6ம் பத்து -7ம் திருவாய் மொழி).. 
கிரகம்: செவ்வாய் ஸ்தலம்.
சிறப்பு: மதுரகவியாழ்வாரின் அவதார ஸ்தலம்.

கொல்லை என்பர் கொலோ? – குணம் மிக்கனள் என்பர் கொலோ?
சில்லை வாய்ப்பெண்கள், அயல் சேரி உள்ளாரும் எல்லே!
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
இடை நுடங்க இளமான் செல்ல மேவினளே!  (6-7-4)

தோழியே! செல்வம் மிகும் படி அவர் சயனத்திருக்கின்ற திருக்கோலூர் என்ற திருத்தலத்திற்கு, என் இளமான் மெல்லிய இடையானது அசையும்படியாகச் செல்வதற்கு ஒருப்பட்டாள்; இதனால் பலவாறு பேசுகின்ற வாய்களையுடைய பெண்களும், அயல் ஊரிலுள்ள பெண்களும்,வரம்பு அழிந்த செயலை உடையவள் என்று என் மகளை கூறுவார்களோ? குணத்தால் மேம்பட்டவள் என்று கூறுவார்களோ? என்று ஆழ்வார் இருப்பு வளர்ச்சி இன்பம் இவை எல்லாம் கண்ணனென்று உணர்ந்து  திருக்கோலூரிலீடுபட்டதை,  தலைவன் நகர் நோக்கி சென்ற தலை மகளைப் பற்றி தாய்  இரங்கும் பாசுரத்தாலே அருளி செய்துள்ளார்.


தல வரலாறு: வடக்கு திசையின் திக்பாலகனும், செல்வத்திற்கு அதிபதியுமான குபேரன் அளகாபுரியில் வசித்து வந்தான். அவன் ஒரு சிறந்த சிவபக்தன். ஒரு சமயம் அவன்  சிவபெருமானை வழிபட திருக்கயிலாயம்  சென்றான். அங்கே உமையவள் சிவபெருமானுடன் இருக்க குபேரன் அன்னையை கெட்ட எண்ணத்துடன் பார்க்க, கோபம் கொண்ட மலைமகள் பார்வதி, குபேரனை சபித்தாள்.

எனவே அவனது ஒரு கண் குருடாயிற்று, அவன் உருவமும் விகாரமாயிற்று. சங்கம், பத்மம் முதலான  நவ நிதிகளும் அவனை விட்டு விலகியது. நவநிதிகளும் தவமிருந்து தாமிரபரணியின் தென் கரையில் உள்ள திருக்கோளூர் பெருமாளை சரண் அடைய பன்னகாசனும்  அவற்றுக்கு அடைக்கலம் அளித்தார். வைத்தமாநிதி என்ற திருநாமத்துடன் நவநிதிகளின் மேல் சயனங்கொண்டு அவற்றை காப்பாற்றியருளினார். 




தனபதி வைத்தமாநிதியை அடைந்து நிதி பெறுதல்: தன் தவறை உணர்ந்த குபேரன் சிவபெருமானை அடிபணிய அவரும் தன்னால் ஒன்றும் செய்யமுடியாது மலைமகளையே சரண் அடை என்று கூறினார். குபேரன் பார்வதியை அடி பணிய அவரும்; வியாச வம்சத்தில் வந்த தர்மகுப்தன் என்பவன் 10  குழந்தைகளுடன் தரித்திரனாகி மிகவும் கஷ்டப்பட, பரத்வாஜ முனிவரை அடிபணிந்தான். அவரும் தனது தவ வலிமையினால் தர்மகுப்தனது முன் ஜென்ம பாவங்களை அறிந்து கொண்டார். அதனை தர்மகுப்தனிடம், "நீ உனது முற்பிறவியில் அந்தணராகப் பிறந்து பெரும் செல்வந்தனாக வாழ்ந்தாய், அந்த சமயத்தில் அரசன் வந்து கேட்ட போது, அளவுக்கு மிஞ்சிய செல்வம் உன்னிடம் இருந்த போதும், அதனை மறைத்து உன்னிடம் எவ்வளவு செல்வம் உள்ளது என்பதை மறைத்து பொய் கூறினாய். உன்னுடைய செல்வத்தை நல்ல விதமாக யாருக்கும் உதவி செய்யும் நோக்கில் பயன்படுத்தாமல், பூட்டி வைத்து அழகு பார்த்தாய். அந்த செல்வம் உண்மையிலேயே கஷ்டப் படுகிறவர்களுக்குப் பயன்படாமல், அந்த செல்வங்கள் கள்வர்கள் கையில் சிக்கியது. அந்த வேதனையில் மனம் பாதிக்கப் பட்டு நீ உயிரிழந்தாய்.



முன் காலத்தில் அதர்மத்தினால் தர்மம் வெல்லப்பட்டு இந்த நிதி வனத்திற்கு வந்து எம்பெருமானை சரண் அடைந்தது. மற்ற இடங்களில் அதர்மம் தலை விரித்தாடியது. இதனால் தேவர்கள் அச்சம் கொண்டு தர்மத்தைத் தேடி நிதிவனம் வந்தனர்.  தர்மம் இங்கிருப்பதை அறிந்த அதர்மம் நிதிவனம் வந்து தர்மத்தோடு யுத்தம் செய்து தோற்று ஒடிவிட்டது. இதனால் இத்தலத்திற்கு ’அதர்மபிசுனம்’ என்ற பெயர் ஏற்பட்ட,  தாமிரபரணியின் தென் கரையில், உள்ள திருக்கோளூரில் குபேரனது நவநிதிகளும் இருக்கின்றன. அங்கு சென்று வைத்தமாநிதி பெருமாளை வழிபட்டால் இழந்த செல்வத்தினைப் பெறலாம்" என்று கூறினார். தர்மகுப்தனும் அவ்வாறே திருக்கோளூர் வந்து பெருமாளை வணங்கி செல்வம் பெற்றான். இந்தக் கதையினைக் குபேரனிடம் பார்வதி தேவி சொல்லி "நீயும் அத்தலம் சென்று பெருமாளை வேண்ட உன் செல்வம் திரும்பக் கிடைக்கும்" என்றாள் அன்னை பார்வதி.



 குபேரனும் திருக்கோளூர் வந்து வைத்தமாநிதியை வந்து அனந்தசயனனை  அடிபணிந்தான். பெருமாளும் இயக்கர் தலைவனே! செல்வம் யாவையும்  இப்பொழுது உனக்கு தரமுடியாது. அதி ஒரு பாகம் தருகிறேன் பெற்றுக்கொள் என்ரார்.  தான் இழந்த நிதியில் ஒரு பகுதியை, மாசி மாத சுக்லபட்ச துவாதசியில் பெருமாளிடம் இருந்து பெற்றான். திரும்ப பெற்ற செல்வங்களை ஓரிடத்தில் நிலையாக நில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் தன்மையுடன் லக்ஷ்மி தேவிக்கு கொடுத்தான்.

இத்தலத்தில் பெருமாள் செல்வம் அளந்ததால், மரக்காலைத் தலைக்கு வைத்து படுத்திருக்கிறார். மரக்காலைத் தலைக்கு வைத்து, கையில் அஞ்சனம், மை தடவி நிதி எங்குள்ளது என பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மாசி மாத சுக்லபட்ச துவாதசியில் நிதி தீர்த்தத்தில் நீராடி வைத்தமாநிதியை வழிபடுபவர் செல்வம் பெற்று அச்சுதன அருளுக்கு ஆளாவர்.






திருக்கோளூர் பெண்பிள்ளை இரகசியம்: இராமாநுஜருக்கு திருக்கோளூரில் இருக்கும் வைத்தமாநிதிப் பெருமாள் மீது பெரும்பற்றி இருந்தது. பராங்குச நாயகி அனுபவித்த இறைவனை தானும் அனுபவிக்கும் பொருட்டு நம்மாழ்வாரை மனதில் எண்ணிக்கொண்டே அவர் அருளிய

உண்ணுஞ்சோறுபருகுநீர் தின்னும்வெற்றிலையுமெல்லாம்
கண்ணன் எம்பெருமானென்றென்றே கண்கள்நீர்மல்கி
மண்ணிணுளவன் சீர் வளம்மிக்கவனூர்வினவி
திண்ணம் என்னிளமான்புகுமூர் திருக்கோளூரே!    என்ற பாசுரத்தை இசைத்தவாறே சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் எதிரே ஓர் வைணவப் பெண் எதிர்ப்பட்டு ஊரிலிருந்து வெளியேறி வேற்றூருக்கு பிரயாணப்பட்டுக் கொண்டிருந்தாள்.  இராமாநுஜருக்கு வியப்பு அதிகமாயிற்று. அவர் அந்தப் பெண்ணிடம்,  “ எனக்கு திருக்கோளூர் புகும் ஊராகி இருக்க, உனக்கு வெளியேறும் ஊராக ஆகிவிட்டதன் காரணம் என்ன”?  என்று வினவினார். அந்தப்பெண்ணும், “தேவகி, யசோதை, மண்டோதரி, த்ரிசடை, ஆண்டாள், அனுசுயா, திரௌபதி போன்ற எண்பத்தொரு வைணவப் பெரியோர்களின் வாழ்க்கையில் அவர்கள் செய்த நல்ல காரியம் செய்யும் வாய்ப்புக் கிடைக்கப் பெறாதவளாகிவிட்டேன்”    என வருந்தினாள். மேலும் அப்பெண் இராமாநுஜரிடம் சுவாமி முயற்புழுக்கை வரப்பில் இருந்தால் என்ன, வயலில் இருந்தால் என்ன?  அதைப்போல் ஞானமற்ற நான் எங்கிருந்தால் என்ன? எனக் கூறினாள்.

திருக்கோளூர் பெண் பிள்ளையின் அறிவுத்திறன் கண்டு வியந்த இராமானுஜர், எம்பெருமானின் திருவருள் வாய்க்கப்பெற்ற அப்பெண்ணை அழைத்துக் கொண்டு திருக்கோளூர் சென்று வைத்தமாநிதியை கண்டு மகிழ்ந்து, அப்பெண்ணின் இல்லத்தில் விருந்துண்டு மகிழ்ந்தார்.


மதுரகவி ஆழ்வார் அவதரித்த தலம் இந்த திருக்கோளூர் தலம் என்பது கூடுதல் சிறப்பாகும்இங்கு வசித்த  விஷ்ணுநேசர்  என்பவருக்கு மகனாகப் பிறந்தவர்தான் மதுரகவி ஆழ்வார்.. மதுரகவி ஆழ்வாரைப் பற்றி சொல்லும் போது கேள்விப்படும்போதுகுரு பக்தி என்னும் மேலான விஷயம் ஒருவரை வாழ்வில் எத்தனை உயரத்திற்கு கொண்டு செல்கிறது என்பதை உணர்த்தும் வண்ணம் உள்ளது. 80 வயதான மதுரகவிதமது வடதேச பிரயாணத்தின்போது தன் வாழ்வில் தனக்கு ஒரு குரு கிடைத்தால்தான் உய்வடையலாம் என்று உணர்ந்துபின்னர் தெற்கு நோக்கிப் பயணித்து, 16 வயதே நிரம்பிய நம்மாழ்வாரைக் குருவாக ஏற்றுக்கொண்டார்தனது ஆச்சார்யனின் அருளுக்குப் பாத்திரமாகிஅவரை மட்டுமே பாடியவர்பெருமாளைப் பற்றி ஒரு பாசுரம் கூடப் பாடவில்லைதேவுமற்றறியேன் குருகூர் நம்பி பாவின்னிசை பாடித்திரிவனே” தனது ஆச்சாரியனைத் தவிர வேறு தெய்வத்தையும் அறிய மாட்டேன் என்று பாடுகின்றார்.   தனக்குக் கடவுளை உணர்த்திய குருவைப் பாடினால் அவரே தன்னை மேன்மை அடையச் செய்வார் என்ற மாறாத நம்பிக்கையை அவர் மேல் கொண்டு 11 பாசுரங்கள் மட்டும் தன் குருவின் மேல் பாடி பரமனின் பாதங்களில் சரணடைந்தார்குருவின் மூலமாகவேஆழ்வார் என்ற பெரும் பேறு அவருக்குக் கிடைத்ததுஇந்த மதுரகவி ஆழ்வாரின் உயர்ந்த செயல்நம் அனைவருக்கும் ஆச்சாரியனின் பெருமையை உணர்த்தும் என்பதில் துளியும் ஐயமில்லை.


நிஷேபவித்தனும் மதுரகவியாழ்வாரும்

ஒன்பது கருட சேவையின் போது மதுரகவியாழ்வாரும் நிஷேபவித்த பெருமாளுடன் ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தருளுகின்றார். மங்களாசாசனத்தின் போது நம்மாழ்வாரை சுற்றி வந்து மங்களாசாசனம்  செய்கின்றார். இரவு கருட சேவையின் போது பரங்கி நாற்காலியில் சேவை சாதிக்கின்றார்.


வைத்த மா நிதியாம் மசுசூதனையே அலற்றி,
கொத்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன,
பத்து நூற்றுள் இப்பத்து அவன் சேர் திருக்கோலூர்க்கே,
சித்தம் வைத்து உரைப்பார் திகழ் பொன் – உலகு ஆள்வாரே.

திருக்கோளூர்ப் பெருமான் சேர்த்து வைத்த சேமநிதி போன்றவன்; அந்த மசுசூதனனாகிய என்பெருமானைக் கொத்து கொத்தாய் மலர் சோலைகள் சூழ்ந்த திருக்குருகூர் சடகோபர் ஆயிரம் திருப்பாடுரங்களில் துதித்துள்ளார். அவற்றுள் இப்பத்து பாசுரங்களையும் பெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோளூரை எண்ணி அவனை நெஞ்சில் பதித்துக் கொண்டு சொல்ல வல்லவர்கள் உயர்ந்த பரமபதத்தை ஆள்வர்.  

இவ்வாறு ஒன்பது பெருமாள்களின் கருட சேவையையும் கண்டு களித்தீர்கள் இனி பெருமாள்கள் அனைவரும் நம்மாழ்வாரின் தீந்தமிழ் பாடலை அரு~ண்திய வண்ணம் விடைபெறும் அழகைக் காண்போமா?

Labels: , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home