Sunday, June 8, 2014

ஒன்பது கருட சேவை விடையாற்றி மங்களாசாசனம்

Visit BlogAdda.com to discover Indian blogs
ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -14

அன்ன வாகனத்தில் நம்மாழ்வார் 

இது வரை நவதிருப்பதி எம்பெருமான்கள் தங்க ஹம்ஸ வாகனத்தில் எழுந்தருளிய நம்மாழ்வாருக்கும் தங்க பரங்கி நாற்காலியில் எழுந்தருளியுள்ள மதுரகவியாழ்வாருக்கும் அளித்த கோபுர வாசல் சேவையை கண்டு களித்தீர்கள்.  திருமஞ்சனத்திற்கு பிறகு திருக்கோயில் இராஜகோபுர திருக்கதவங்கள் சார்த்தப்படுகின்றதுபக்தர்கள் அனைவரும் பெருமாள்களுக்கும் ஆழ்வாருகளுக்கும் அலங்காரம் ஆகி வெளியே எழுந்தருள கோபுரக் கதவின் மேல் விழி வைத்து  காத்துக்கொண்டிருக்கிறனர்.   நேரமாக  நேரமாக கூட்டமும் அதிகமாகிக்கொண்டே போகின்றது.




 திருக்குருகூர் பொலிந்து நின்ற பிரான் கருடவாகனத்தில் 

சிறப்பாக நம்மாழ்வாரின் பாசுர மாலை சார்த்தியுளளனர்.

மெள்ள மெள்ள திருக்கதவங்கள் திறக்க முதலில் ஹம்ச வாகனத்தில் நம்மாழ்வார் சேவை சாதித்து எம்பெருமான்களின் கருட சேவையை சேவிக்க ஏதுவாக வெளியே வந்து திருக்கதவத்தை நோக்கி நிற்கின்றார். பின்னர் மதுரகவியாழ்வார் பரங்கி நாற்காலியில் எழுந்தருளி திருக்கதவத்தின் இடது பக்கம் நிற்கின்றார்.



திருவைகுண்டம்  கள்ளர் பிரான் கருடசேவை


முதலில் ஆழ்வார் திருநகரி பொலிந்து நின்ற பிரான்  ஆழ்வாருக்கு சேவை சாதிக்கின்றார். பக்தர்கள் அனைவரும் கோவிந்தா கோவிந்தா என்று பரவசத்துடன் கருட வாகனத்தில் பெருமாளையும் அன்ன வாகனத்தில் ஆழ்வாரையும் சேவிக்கின்றார். பெருமாள் கோபுர வாசல் சேவை சாதிக்கும் போது மத்தாப்புக்கள் ஏற்றப்படுகின்றன. பல வர்ணங்களின் பெருமாளின் அழகு அப்படியே பக்தர்களின் மனதில் பதிவாகின்றது. பெருமாளுக்கு கற்பூர ஆரத்தி நடைபெறுகின்றது. இரட்டை திருவாசியுடன் ( இரண்டு திருவாசிகளுடன் பிரம்மாண்டமாக பெருமாள்  கருட சேவையை முதல் தடவையாக சேவிக்கும் பாக்கியம்  அடியேனுக்கு இங்கு கிட்டியது).


திருவரகுணமங்கை எம் இடர் கடிவான்
( இரண்டு திருவாசிகளை தெளிவாக காணலாம்) 

ஒவ்வொரு பெருமாளும் ஒவ்வொரு விதமான அழகு, அருமையான ஆபரணங்கள்,  பல  வர்ண கிளிகள், ஆப்பிள் மாலைகள், பிரம்மாண்ட மலர்மாலைகள், பாசுர மாலைகள், சிறப்பு பரிவட்டங்கள், கருடனுக்கும் சிறப்பாக  மலர் மாலை அலங்காரம், தாமரை மலர் மாலைகள்  என்று ஆனந்தமாக இவ்வரிசைசையில்  பெருமாள்கள் கோபுர வாசல் சேவை சாதிக்கின்றனர். இரண்டாவதாக திருவைகுண்டம் கள்ளர் பிரானும் , மூன்றாவதாக திருவரணகுணமங்கை எம் இடர் கடிவானும், நான்காவதாக திருப்புளிங்குடி காய்சின வேந்தரும், ஐந்தாவது ஆறாவதாக  திருத்தொலைவில்லி மங்கலத்தின்  செந்தாமரைக் கண்ணரும், தேவர்பிரானும், ஏழாவதாக திருக்குளந்தை மாயக்கூத்தரும், அடுத்து தென்திருப்பேரை நிகரில் முகில் வண்ணரும் நிறைவாக திருக்கோளூர் நிக்ஷேபவித்தரும் கோபுர வாசல் சேவை சாதிக்கின்றனர். பின்னர் அனைத்து பெருமாள்களும் ஆழ்வார்களும் மாடவீதி வலம் வருகின்றனர். பக்தர்கள் அனைவரும் அருகில் வந்து பெருமாள்கள் அனைவரையும் அற்புதமாக சேவித்து செல்கின்றனர். மாடவீதி புறப்பாடு முடிந்து பெருமாள்கள் அனைவரும் திருக்கோவிலுக்கு எழுந்தருளும் போது அதிகாலை ஆகிவிடுகின்றது.


காய்சினப்பறவையில் காய்சினவேந்தர்

பின்னர் பெருமாள்கள் அனைவரும் தோளுக்கினியானில் எழுந்தருளுகின்றனர். ஆழ்வார் திருநகரியின் திருவைகாசி பிரம்மோற்சவத்தின் ஆறாம்நாள் காலை  பெருமாள்கள் அனைவரும் மீண்டுமொருமுறை சடகோபரின் தீந்தமிழ் பாசுரங்களை செவி மடுத்துவிட்டு விடைபெற்று செல்கின்றனர். முதலில் திருக்குளந்தை மாயக்கூத்தரை

கூடச்சென்றேன் இனி என் கொடுக்கேன் கோள்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம்
பாடற்றொழிய இழந்து வைகல் பல்வளை யார்முன் பரிசழிந்தேன்
மாடக்கொடிமதின் தென்குளந்தை வண்குட பால் நின்ற மாயக்கூத்தன்
ஆடல் பறவை உயர்த்த வெல்லோர் ஆழிவலவனை ஆதரித்தே!!
  என்று மங்களாசாசனம் செய்கின்றார். அந்த மகிழ்ச்சியில் தனது திருக்கோவிலுக்கு கிளம்புகின்றார் மாயக்கூத்தர்.

அடுத்து திருப்புளிங்குடி காய்சினவேந்தர், திருவரகுணமங்கை எம் இடர் கடிவான், திருவைகுண்டம் கள்ளர்பிரான் ஆகிய மூன்று பெருமாள்களும்

புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள்நின்று
தெளிந்தவென்சிந்தையகங்கழியாதே என்னையாள்வாய்! எனக்கருளி
நளிர்ந்தசீருலகமூன்றுடன்வியப்ப நாங்கள்கூத்தாடிநின்றார்ப்ப
பளிங்குநீர்முகிலின்பவளம்போல்கனிவாய் சிவப்ப நீகாண வாராயே.

என்னும் பாசுரம் செவிமடுத்து ஆழ்வாருக்கு பிரியாவிடை கொடுக்கின்றனர்.





நம்மாழ்வார் தந்தை தாய் என்றடைந்த
 தேவர் பிரான் ஆடும் புள்ளில் சேவை

கிளி மாலை 



அடுத்து நம்மாழ்வாரிடம் மங்களாசாசனம் பெற்று  விடைபெறுபவர்கள் இரட்டைத்திருப்பதி பெருமாள்கள் ஆவர்.

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவபிரானையே
தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூர்ச் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலைவில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வர் திருமாலுக்கே.

என்று திருத்தொலைவில்லி மங்கலத்தின் தேவர்பிரானையே தனது தந்தை தாய் என்று நம்மாழ்வார் கொண்டதால்  இவர்களை தானே கூடவந்து  வழியனுப்பி வைக்கின்றார் வகுளாபரணர். கிழக்கு மாட வீதியின் நாயக்கர் மண்டபம் தாண்டும் வரை இவர்களை நம்மாழ்வார் வாத்சல்யத்துடன் வழியனுப்பி பின் தொடர்கிறார்.


மாயக்கூத்தர்  கருட சேவை
பச்சைக்கிளி மாலை , தாமரை மாலை


நவகருடசேவையின் நிறைவாக திருதென்திருப்பேரையின் நிகரில் முகில் வண்ணரும், திருக்கோளூரின்  நிக்ஷேபவித்தரும் நம்மாழ்வாரின் மங்களாசாசனம் பெற்று மீண்டும் அடுத்த வருடம் தங்களின் செந்தமிழ் பாசுரங்களை செவிமடுக்க வருகின்றோம் என்று விடைபெற்று செல்கின்றனர். மதுரகவியாரும் தம் குருநாதரிடம் விடைபெற்று செல்கின்றார்.



திருக்கோளூர் நிஷேபவித்தன் கருட வாகனத்தில்


பின்னர் இந்த நவகருட சேவையின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான நம்மாழ்வாரின் புறப்பாடு மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. கோயில் மரியாதையுடன் நம்மாழ்வார் பந்தல் மண்டபத்தில் இருந்து உள் சன்னதிக்கு எழுந்தருளுகின்றார். அந்த அழகைக் காண கண் கோடி வேண்டும் பக்தர்களின் வெள்ளத்தில் மெல்ல மெல்ல நீந்தி நம்மாழ்வார் சன்னதி அடைய சுமார் மூன்று மணி நேரம் ஆகும். ஒவ்வொருவரும் தம் வாழ்வில் ஒரு முறையாவது காண வேண்டிய உற்சவம் ஆகும். சமயம் கிடைத்தால் சென்று நவதிருப்பதி பெருமாள்களையும் திவ்யமாக சேவித்து விட்டு வாருங்கள்.


பரங்கி நாற்காலியில் மதுரகவியாழ்வார்


 இத்தொடர் இப்பதிவுடன்  நிறைவடைகின்றது. இது வரை வந்து நவகருட சேவையை சேவித்த அன்பர்கள் அனைவரும் அந்த கோவிந்தன் அருளால் எந்த குறையும் இல்லாமல் வாழ பிரார்த்திக்கின்றேன். இனி அடுத்த தொடராக மலை நாட்டு திவ்ய தேசங்களை சேவிக்கலாம் கூட வாருங்கள் அன்பர்களே.   

Labels: , , ,

Saturday, June 7, 2014

திருக்கோளூர் நிஷேபவித்தன் கருட சேவை

Visit BlogAdda.com to discover Indian blogs
ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -13




வைத்தமாநிதிப் பெருமாள்

உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையெல்லாம் கண்ணன் என்று நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த வைத்தமாநிதியாம் மசுசூதனின் கருடசேவையை இப்பதிவில் காணலாம். மதுரகவியாழ்வாரின் அவதாரஸ்தலமான திருக்கோளூர் திருநெல்வேலியில் இருந்து சுமார்  36 கி. மீ   தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து சுமார் 34 கி. மீ  தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வார்திருநகரி செல்லும் சாலையில் 3 கி.மீ  வந்து பின்னர் கிளைச் சாலையில் சுமார் 2 கி.மீ  தூரத்தில் அமைந்துள்ளது.

மூலவர்:  வைத்தமாநிதிப் பெருமாள். மரக்காலை தலைக்கு வைத்துக்கொண்டு நவநிதிகளின் மேல் இடக்கையால் நிதி எங்கே என்று மை போட்டு பார்க்கும்  புஜங்க சயனம்,  கிழக்கே திருமுக மண்டலம்.
உற்சவர்: நிஷேபவித்தன்
தாயார்: கோளூர்வல்லி நாச்சியார், குமுதவல்லி நாச்சியார் தனி தனி சன்னதி.
விமானம்: ஸ்ரீஹர விமானம்.
தீர்த்தம்:  குபேர தீர்த்தம்.
பிரத்யட்சம்: குபேரன், மதுரகவி.
ஆகமம் : வைகானஸம் – சம்பிரதாயம்: தென்கலை.
மங்களாசாசனம்: நம்மாழ்வார் ஒரு பதிகம் (6ம் பத்து -7ம் திருவாய் மொழி).. 
கிரகம்: செவ்வாய் ஸ்தலம்.
சிறப்பு: மதுரகவியாழ்வாரின் அவதார ஸ்தலம்.

கொல்லை என்பர் கொலோ? – குணம் மிக்கனள் என்பர் கொலோ?
சில்லை வாய்ப்பெண்கள், அயல் சேரி உள்ளாரும் எல்லே!
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
இடை நுடங்க இளமான் செல்ல மேவினளே!  (6-7-4)

தோழியே! செல்வம் மிகும் படி அவர் சயனத்திருக்கின்ற திருக்கோலூர் என்ற திருத்தலத்திற்கு, என் இளமான் மெல்லிய இடையானது அசையும்படியாகச் செல்வதற்கு ஒருப்பட்டாள்; இதனால் பலவாறு பேசுகின்ற வாய்களையுடைய பெண்களும், அயல் ஊரிலுள்ள பெண்களும்,வரம்பு அழிந்த செயலை உடையவள் என்று என் மகளை கூறுவார்களோ? குணத்தால் மேம்பட்டவள் என்று கூறுவார்களோ? என்று ஆழ்வார் இருப்பு வளர்ச்சி இன்பம் இவை எல்லாம் கண்ணனென்று உணர்ந்து  திருக்கோலூரிலீடுபட்டதை,  தலைவன் நகர் நோக்கி சென்ற தலை மகளைப் பற்றி தாய்  இரங்கும் பாசுரத்தாலே அருளி செய்துள்ளார்.


தல வரலாறு: வடக்கு திசையின் திக்பாலகனும், செல்வத்திற்கு அதிபதியுமான குபேரன் அளகாபுரியில் வசித்து வந்தான். அவன் ஒரு சிறந்த சிவபக்தன். ஒரு சமயம் அவன்  சிவபெருமானை வழிபட திருக்கயிலாயம்  சென்றான். அங்கே உமையவள் சிவபெருமானுடன் இருக்க குபேரன் அன்னையை கெட்ட எண்ணத்துடன் பார்க்க, கோபம் கொண்ட மலைமகள் பார்வதி, குபேரனை சபித்தாள்.

எனவே அவனது ஒரு கண் குருடாயிற்று, அவன் உருவமும் விகாரமாயிற்று. சங்கம், பத்மம் முதலான  நவ நிதிகளும் அவனை விட்டு விலகியது. நவநிதிகளும் தவமிருந்து தாமிரபரணியின் தென் கரையில் உள்ள திருக்கோளூர் பெருமாளை சரண் அடைய பன்னகாசனும்  அவற்றுக்கு அடைக்கலம் அளித்தார். வைத்தமாநிதி என்ற திருநாமத்துடன் நவநிதிகளின் மேல் சயனங்கொண்டு அவற்றை காப்பாற்றியருளினார். 




தனபதி வைத்தமாநிதியை அடைந்து நிதி பெறுதல்: தன் தவறை உணர்ந்த குபேரன் சிவபெருமானை அடிபணிய அவரும் தன்னால் ஒன்றும் செய்யமுடியாது மலைமகளையே சரண் அடை என்று கூறினார். குபேரன் பார்வதியை அடி பணிய அவரும்; வியாச வம்சத்தில் வந்த தர்மகுப்தன் என்பவன் 10  குழந்தைகளுடன் தரித்திரனாகி மிகவும் கஷ்டப்பட, பரத்வாஜ முனிவரை அடிபணிந்தான். அவரும் தனது தவ வலிமையினால் தர்மகுப்தனது முன் ஜென்ம பாவங்களை அறிந்து கொண்டார். அதனை தர்மகுப்தனிடம், "நீ உனது முற்பிறவியில் அந்தணராகப் பிறந்து பெரும் செல்வந்தனாக வாழ்ந்தாய், அந்த சமயத்தில் அரசன் வந்து கேட்ட போது, அளவுக்கு மிஞ்சிய செல்வம் உன்னிடம் இருந்த போதும், அதனை மறைத்து உன்னிடம் எவ்வளவு செல்வம் உள்ளது என்பதை மறைத்து பொய் கூறினாய். உன்னுடைய செல்வத்தை நல்ல விதமாக யாருக்கும் உதவி செய்யும் நோக்கில் பயன்படுத்தாமல், பூட்டி வைத்து அழகு பார்த்தாய். அந்த செல்வம் உண்மையிலேயே கஷ்டப் படுகிறவர்களுக்குப் பயன்படாமல், அந்த செல்வங்கள் கள்வர்கள் கையில் சிக்கியது. அந்த வேதனையில் மனம் பாதிக்கப் பட்டு நீ உயிரிழந்தாய்.



முன் காலத்தில் அதர்மத்தினால் தர்மம் வெல்லப்பட்டு இந்த நிதி வனத்திற்கு வந்து எம்பெருமானை சரண் அடைந்தது. மற்ற இடங்களில் அதர்மம் தலை விரித்தாடியது. இதனால் தேவர்கள் அச்சம் கொண்டு தர்மத்தைத் தேடி நிதிவனம் வந்தனர்.  தர்மம் இங்கிருப்பதை அறிந்த அதர்மம் நிதிவனம் வந்து தர்மத்தோடு யுத்தம் செய்து தோற்று ஒடிவிட்டது. இதனால் இத்தலத்திற்கு ’அதர்மபிசுனம்’ என்ற பெயர் ஏற்பட்ட,  தாமிரபரணியின் தென் கரையில், உள்ள திருக்கோளூரில் குபேரனது நவநிதிகளும் இருக்கின்றன. அங்கு சென்று வைத்தமாநிதி பெருமாளை வழிபட்டால் இழந்த செல்வத்தினைப் பெறலாம்" என்று கூறினார். தர்மகுப்தனும் அவ்வாறே திருக்கோளூர் வந்து பெருமாளை வணங்கி செல்வம் பெற்றான். இந்தக் கதையினைக் குபேரனிடம் பார்வதி தேவி சொல்லி "நீயும் அத்தலம் சென்று பெருமாளை வேண்ட உன் செல்வம் திரும்பக் கிடைக்கும்" என்றாள் அன்னை பார்வதி.



 குபேரனும் திருக்கோளூர் வந்து வைத்தமாநிதியை வந்து அனந்தசயனனை  அடிபணிந்தான். பெருமாளும் இயக்கர் தலைவனே! செல்வம் யாவையும்  இப்பொழுது உனக்கு தரமுடியாது. அதி ஒரு பாகம் தருகிறேன் பெற்றுக்கொள் என்ரார்.  தான் இழந்த நிதியில் ஒரு பகுதியை, மாசி மாத சுக்லபட்ச துவாதசியில் பெருமாளிடம் இருந்து பெற்றான். திரும்ப பெற்ற செல்வங்களை ஓரிடத்தில் நிலையாக நில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் தன்மையுடன் லக்ஷ்மி தேவிக்கு கொடுத்தான்.

இத்தலத்தில் பெருமாள் செல்வம் அளந்ததால், மரக்காலைத் தலைக்கு வைத்து படுத்திருக்கிறார். மரக்காலைத் தலைக்கு வைத்து, கையில் அஞ்சனம், மை தடவி நிதி எங்குள்ளது என பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மாசி மாத சுக்லபட்ச துவாதசியில் நிதி தீர்த்தத்தில் நீராடி வைத்தமாநிதியை வழிபடுபவர் செல்வம் பெற்று அச்சுதன அருளுக்கு ஆளாவர்.






திருக்கோளூர் பெண்பிள்ளை இரகசியம்: இராமாநுஜருக்கு திருக்கோளூரில் இருக்கும் வைத்தமாநிதிப் பெருமாள் மீது பெரும்பற்றி இருந்தது. பராங்குச நாயகி அனுபவித்த இறைவனை தானும் அனுபவிக்கும் பொருட்டு நம்மாழ்வாரை மனதில் எண்ணிக்கொண்டே அவர் அருளிய

உண்ணுஞ்சோறுபருகுநீர் தின்னும்வெற்றிலையுமெல்லாம்
கண்ணன் எம்பெருமானென்றென்றே கண்கள்நீர்மல்கி
மண்ணிணுளவன் சீர் வளம்மிக்கவனூர்வினவி
திண்ணம் என்னிளமான்புகுமூர் திருக்கோளூரே!    என்ற பாசுரத்தை இசைத்தவாறே சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் எதிரே ஓர் வைணவப் பெண் எதிர்ப்பட்டு ஊரிலிருந்து வெளியேறி வேற்றூருக்கு பிரயாணப்பட்டுக் கொண்டிருந்தாள்.  இராமாநுஜருக்கு வியப்பு அதிகமாயிற்று. அவர் அந்தப் பெண்ணிடம்,  “ எனக்கு திருக்கோளூர் புகும் ஊராகி இருக்க, உனக்கு வெளியேறும் ஊராக ஆகிவிட்டதன் காரணம் என்ன”?  என்று வினவினார். அந்தப்பெண்ணும், “தேவகி, யசோதை, மண்டோதரி, த்ரிசடை, ஆண்டாள், அனுசுயா, திரௌபதி போன்ற எண்பத்தொரு வைணவப் பெரியோர்களின் வாழ்க்கையில் அவர்கள் செய்த நல்ல காரியம் செய்யும் வாய்ப்புக் கிடைக்கப் பெறாதவளாகிவிட்டேன்”    என வருந்தினாள். மேலும் அப்பெண் இராமாநுஜரிடம் சுவாமி முயற்புழுக்கை வரப்பில் இருந்தால் என்ன, வயலில் இருந்தால் என்ன?  அதைப்போல் ஞானமற்ற நான் எங்கிருந்தால் என்ன? எனக் கூறினாள்.

திருக்கோளூர் பெண் பிள்ளையின் அறிவுத்திறன் கண்டு வியந்த இராமானுஜர், எம்பெருமானின் திருவருள் வாய்க்கப்பெற்ற அப்பெண்ணை அழைத்துக் கொண்டு திருக்கோளூர் சென்று வைத்தமாநிதியை கண்டு மகிழ்ந்து, அப்பெண்ணின் இல்லத்தில் விருந்துண்டு மகிழ்ந்தார்.


மதுரகவி ஆழ்வார் அவதரித்த தலம் இந்த திருக்கோளூர் தலம் என்பது கூடுதல் சிறப்பாகும்இங்கு வசித்த  விஷ்ணுநேசர்  என்பவருக்கு மகனாகப் பிறந்தவர்தான் மதுரகவி ஆழ்வார்.. மதுரகவி ஆழ்வாரைப் பற்றி சொல்லும் போது கேள்விப்படும்போதுகுரு பக்தி என்னும் மேலான விஷயம் ஒருவரை வாழ்வில் எத்தனை உயரத்திற்கு கொண்டு செல்கிறது என்பதை உணர்த்தும் வண்ணம் உள்ளது. 80 வயதான மதுரகவிதமது வடதேச பிரயாணத்தின்போது தன் வாழ்வில் தனக்கு ஒரு குரு கிடைத்தால்தான் உய்வடையலாம் என்று உணர்ந்துபின்னர் தெற்கு நோக்கிப் பயணித்து, 16 வயதே நிரம்பிய நம்மாழ்வாரைக் குருவாக ஏற்றுக்கொண்டார்தனது ஆச்சார்யனின் அருளுக்குப் பாத்திரமாகிஅவரை மட்டுமே பாடியவர்பெருமாளைப் பற்றி ஒரு பாசுரம் கூடப் பாடவில்லைதேவுமற்றறியேன் குருகூர் நம்பி பாவின்னிசை பாடித்திரிவனே” தனது ஆச்சாரியனைத் தவிர வேறு தெய்வத்தையும் அறிய மாட்டேன் என்று பாடுகின்றார்.   தனக்குக் கடவுளை உணர்த்திய குருவைப் பாடினால் அவரே தன்னை மேன்மை அடையச் செய்வார் என்ற மாறாத நம்பிக்கையை அவர் மேல் கொண்டு 11 பாசுரங்கள் மட்டும் தன் குருவின் மேல் பாடி பரமனின் பாதங்களில் சரணடைந்தார்குருவின் மூலமாகவேஆழ்வார் என்ற பெரும் பேறு அவருக்குக் கிடைத்ததுஇந்த மதுரகவி ஆழ்வாரின் உயர்ந்த செயல்நம் அனைவருக்கும் ஆச்சாரியனின் பெருமையை உணர்த்தும் என்பதில் துளியும் ஐயமில்லை.


நிஷேபவித்தனும் மதுரகவியாழ்வாரும்

ஒன்பது கருட சேவையின் போது மதுரகவியாழ்வாரும் நிஷேபவித்த பெருமாளுடன் ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தருளுகின்றார். மங்களாசாசனத்தின் போது நம்மாழ்வாரை சுற்றி வந்து மங்களாசாசனம்  செய்கின்றார். இரவு கருட சேவையின் போது பரங்கி நாற்காலியில் சேவை சாதிக்கின்றார்.


வைத்த மா நிதியாம் மசுசூதனையே அலற்றி,
கொத்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன,
பத்து நூற்றுள் இப்பத்து அவன் சேர் திருக்கோலூர்க்கே,
சித்தம் வைத்து உரைப்பார் திகழ் பொன் – உலகு ஆள்வாரே.

திருக்கோளூர்ப் பெருமான் சேர்த்து வைத்த சேமநிதி போன்றவன்; அந்த மசுசூதனனாகிய என்பெருமானைக் கொத்து கொத்தாய் மலர் சோலைகள் சூழ்ந்த திருக்குருகூர் சடகோபர் ஆயிரம் திருப்பாடுரங்களில் துதித்துள்ளார். அவற்றுள் இப்பத்து பாசுரங்களையும் பெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோளூரை எண்ணி அவனை நெஞ்சில் பதித்துக் கொண்டு சொல்ல வல்லவர்கள் உயர்ந்த பரமபதத்தை ஆள்வர்.  

இவ்வாறு ஒன்பது பெருமாள்களின் கருட சேவையையும் கண்டு களித்தீர்கள் இனி பெருமாள்கள் அனைவரும் நம்மாழ்வாரின் தீந்தமிழ் பாடலை அரு~ண்திய வண்ணம் விடைபெறும் அழகைக் காண்போமா?

Labels: , , ,

Tuesday, April 22, 2014

திருத்தொலைவில்லி மங்கலம் தேவர் பிரான் கருடசேவை

Visit BlogAdda.com to discover Indian blogs
 ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -10




ஸ்ரீஅரவிந்தலோசனர் மகிமை: தேவபிரான் சந்நிதியில் யாகம் சிறப்பாக முடித்து சுப்பிரபர் தினந்தோறும் வடக்குப் பகக்த்தில் இருந்த ஒரு தடாகத்திற்கு சென்று தாமரை மலர்களை  பறித்து மாலைகளாக கட்டி தேவர் பிரானுக்கு அணியச் செய்து மகிழ்வித்து வந்தார்.  இதனால் திருவுள்ளம் மகிழ்ந்த தேவர்பிரான் சுப்பிரபர் எங்கிருந்து பறித்து வருகிறார் என்று பார்க்க பெருமாள் இவரைப் பின் தொடர்ந்தார். பொய்கையின் பொலிவில் களிப்புற்ற  தேவர்பிரான், “ முனி சிரேஷ்டரே! இவ்விடம் குளிர்ச்சி மிகுந்ததாயும், மலர்கள் நிரம்பியதாகவும், இளம் தென்றல் தவழும் இடமாகவும் உள்ளது.  இந்த பத்மாகர பொய்கையின் கரையில் நான் அரவிந்த லோசனனாகவும் இன்று முதல்சேவை சாதிக்கின்றேன். எனக்கும் தேவபிரானோடு சேர்த்து அபிஷேகம்,  தாமரை மலரால் அர்ச்சனை செய்யுமாறு கூறினார். தனக்கு தாமரை மலரால் அர்ச்சனை செய்பவர்களின் சகல பாவங்களையும் நீக்கி அருளுவேன் என்றும் கூறினார்.  சுப்பிரரும் பெருமாளின் விருப்பபடி இரு கோவில்களிலும் பூஜை செய்து நற்கதியடைந்தார்.  




தேவர் பிரான் கருட சேவை 


தர்ம தராசின் இரு தட்டுகள் எவ்வாறு இரு பக்கமும் சமமாக நிற்கின்றதோ அது போல  அரவிந்தலோசனப் பெருமாளும் கருந்தடங்கண்ணி  தாயாரும் சமமாக  பக்தர்களுக்கு அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கின்றனர்.




அரவிந்தலோசனர் அஸ்வினி தேவர்களுக்கு அருளியது: அஸ்வினி தேவர்கள் இருவரும் பிரம்மதேவரிடம் சென்று மற்ற தேவர்களைப் போல் தங்களுக்கும் ஹவிர்பாகம் கிடைக்கும்படி அருள்புரிய வேண்டும் என்றனர். அதற்கு பிரம்மன் “ஜனங்களுக்கு வைத்தியம் புரிபவர்கள் தர்மத்திலிருந்து வழுவியவர்கள்  என்று முனிவர்கள் மொழிவதால், யாகத்தில் ஹவிர்பாகம் பெற விருப்பமுடைய நீங்கள் இருவரும் பூவுலகுக்கு சென்று துலைவில்லி மங்கலம் என்ற திருப்பதியில் உள்ள தேவர்பிரான், அரவிந்தலோசனர் ஆகிய இரு மூர்த்திகளையும் வணங்கி தவம் செய்ய்யுங்கள் என்று அறிவுரை கூறினார்.




பின்னை கொல்?நிலமாமகள் கொல்? திருமகள் கொல்? பிறந்திட்டாள்
என்னமாயங்கொலோ? இவள் நெடுமா லென்றே நின்று கூவுமால்
முன்னிவந்தவன் நின்றிருந்துறையும் தொலைவில்லி மங்கலம்
சென்னியால்வணங்கும் அவ்வூர் திருநாமம் கேட்பது சிந்தையே.

தொலைவில்லி மங்கலத்தில் நெடுமால் நின்றும் (ஸ்ரீநிவாசன்)  இருந்தும் ( அரவிந்த லோசனர்)
அருள் பாலிக்கும் அழகை, எளிமையை நம்மாழ்வார் பாடுகின்றார்.




அஸ்வினி தேவர்களும் துலைவில்லி மங்கலம் வந்து பொய்கையில் புனித நீராடி தேவர்பிரான், மற்றும் அரவிந்த லோசனரின் திருவடி தொழுது அரும் தவமியற்றினர். அடியவர்க்கு மெய்யன் அவர்களுக்கு காட்சியளித்து அவர்கள் கேட்ட வரத்தை அளித்தார். அஸ்வினி தேவர்களும் ஹவிர் பாகம் பெற்றனர். அவர்கள் நீராடிய புண்ணிய தீர்த்தம், அஸ்வினி தீர்த்தம் என்று வழங்கப்பெறும் என்றும் அருளினார்.




அஸ்வினி தீர்த்த மகிமை: இமயமலையின் தெற்கில் உள்ள கங்கா நதிக் கரையில் அகளங்கம் என்ற ஊரில் சத்யசீலர் என்பாவ்ருக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தனர், அவர்கள் வன்னிசாரன், விபீதகன், சுவர்ணகேது ஆவர். இதில் விபீதகன் குஷ்ட நோய்வாய்ப்பட்டிருந்தான். நாரதர் முற்பிறப்பில் இவன் தனது குருவின் பசுவை திருடியதால் , அவரின் சாபத்தால் இவ்வாறு கஷ்டப்படுகின்றான், சாப விமோசனம் பெற  தாமிரபரணிக் கரையில் உள்ள துலைவில்லி மங்களம் சென்று அஸ்வினி தீர்த்தத்தில் நீராடினால் குஷ்டநோய் நீங்கும் என்று அருளினார். சகோதரர்கள் மூவரும் துலைவில்லி மங்கலம் வந்து அஸ்வினி தீர்த்தத்தில் நீராடி நோய் நீங்கப் பெற்று தேவர்பிரானுக்கும், அரவிந்த லோசனருக்கும் சேவை புரிந்து முகுந்தனருளால் முக்தியும் பெற்றனர். 

செந்தாமரைக் கண்ணரை அடுத்து தொலைவில்லி  மங்கலம் தேவர் பிரான் நம்மாழ்வாருக்கு கருட சேவை தந்தருளுகின்றார். அப்புகைப்படங்களை இப்பதிவில் காணுகின்றிர்கள். அடுத்த பதிவில் திருக்குளந்தை மாயகூத்தர் கருட சேவையைக் காணலாம் அன்பர்களே.   

Labels: , , ,

Friday, December 27, 2013

ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -3

Visit BlogAdda.com to discover Indian blogs
மங்களாசாசனம் 

ஆழ்வார் திருநகரி தோரண வாயில்



 சிந்தையாலும் சொல்லாலும்  செய்கையினாலும்
 தேவபிரானையே தந்தை தாயென்றடைந்த
 வண்குருகூர்ச் சடகோபன்


 ஆழ்வாரின் தேன்தமிழ் பாசுரங்களை செவி மடுக்க வந்து மண்டபத்தில்
 காத்திருக்கும்  ஆறு  திருப்பதிகளின்  பெருமாள்கள்



ஸ்ரீவைகுண்டம் தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்த பெருமாளையும்,   உறங்குவான் போல் யோகு செய்த புளிங்குடிப் பெருமானையும் ,  கூந்தல்மலர் மங்கைக்கும்  மண்மடைந்தைக்கும் குலவாயர் கொழுந்துக்கும் கேள்வன் வரகுணமங்கை பெருமாளையும்  ஆழ்வார் மங்களாசாசனம் செய்த பின் அவர்கள் அந்த ஆனந்தத்தில் கோவிலுக்குள் ஆடிக்கொண்டே எழுந்தருளுகின்றனர்.  பின்னர் ஆழ்வாருக்கு  சேவை சாதிக்க இரண்டு பெருமாள்கள் வருகின்றனர்இவர்கள் நோக்கும் பக்கமெல்லாம் கரும்பொடு செந்நெல்லோங்கு செந்தாமரை வாய்க்குந் தண்பொருநல் வடகரை வண் தொலிவில்லி மங்கலம் என்னும்  இரட்டைத் திருப்பதியின் ஸ்ரீனிவாசன் – தேவர்பிரான்அரவிந்த லோசனர் -  தாமரைக் கண்ணன்  பெருமாள்கள் ஆவர். முன்னரே கூறியது போல திவ்ய தேசம் என்று பார்த்தால் தொலைவில்லி மங்கலம் ஒரே திவ்யதேசம்நவதிருப்பதி என்று பார்க்கும் போது இரண்டு திருப்பதிகள்.





இரட்டைத் திருப்பதி செந்தாமரைக் கண்ணன்




சிந்தையாலும் சொல்லாலும்  செய்கையினாலும் தேவபிரானையே தந்தை தாயென்றடைந்த வண்குருகூர்ச் சடகோபன் தன்னிலையிழந்துஆண் தன்மையினை விட்டுநாயிகா பாவத்தில் பராங்குச நாயகியாய் காதலனை கூட விரும்பும் காதலி நிலையில் உள்ளதை  தோழி தாய்மாரை நோக்கிக் கூறும்  பாசுரத்தாலே ஆழ்வார் எம்பெருமானிடத்து ஈடுபட்டமையை பேசும் பாவனையில்   இந்த திவ்ய தேசத்து எம்பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளார்.

திருந்துவேதமும்வேள்வியும் திருமாமகளிரும்தாம் மலிந்
திருந்துவாழ்பொருநல் வடகரைவண்தொலைவில்லிமங்கலம்
கருந்தடங்கண்ணிகைதொழுத அந்நாள்தொடங்கிஇந்நாள்தொறும்
இருந்திருந்தஅரவிந்தலோசன! என்றென்றே நைந்திரங்குமே.

தாய்மார்களேதாமிரபரணியின் வடகரையில் அமைந்துள்ளது வளம் பொருந்திய திருத்தொலைவில்லி மங்கலம் என்னும் திருத்தலம்இங்கு திருந்திய வேதங்கலும் யாகங்களும் செல்வமும் நிறைந்துள்ளனபிராமணர்கள் நிறைந்து வாழ்கின்றனர்அத்திருத்தலத்தை கரிய  விசாலமான கருணை பொங்கும் கண்களையுடைய இவள் கைகூப்பி வணங்குகின்றாள்அந்நாள் தொடங்கி  இந்நாள் வரையில்  தாமரைக் கண்ணாஎன்று என்றே உருக்குலைந்து மனமும் கரைகின்றாள்.

இப்பாசுரத்தில் பெருமாள் அரவிந்த லோசனர் – தாமரை கண்ணன்தாயார் கருந்தடங்கண்ணி மற்றும் திருப்பதி தொலைவில்லி மங்கலம் மூன்றையும் ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

குமுறுமோசைவிழவொலித் தொலைவில்லிமங்கலம்கொண்டுபுக்கு
அமுதமென்மொழியாளை நீருமக்குஆசையின்றியகற்றினீர்
திமிர்கொண்டாலொத்துநிற்கும் மற்றிவள் தேவதேவபிரானென்றே
நிமியும்வாயொடுகண்கள்நீர்மல்க நெக்கொசிந்துகரையுமே

தாய்மார்களேபல்வகையான ஓசைகள் முழங்கத் திருவிழாக்காணும் தலம் திருத்தொலைவிலி மங்கலம் ஆகும்அமுதமாய் இனிய வார்த்தை  பேசும் இப்பேதையை  அத்திருத்தலத்திற்குக் கொண்டு புக்கு அகன்று போகும்படி செய்து விட்டாயிற்றுஇனி உமக்கு அவளைத் திரும்பப்பெற ஆசை இருந்து ஒரு பயனும் இல்லைஇவளோஅனுபவிக்க வேண்டிய விஷயத்தை  அனுபவிக்கவும் மாட்டாதே செயலற்ற  நிலையில் நிற்கின்றாள்இவள் இதற்கு மேல் பேசினால் “ தேவ  தேவ பிரான் “ என்று கூறி உதடு நெளிகிற வாயுடன் கண்களின் நீர்நிரம்ப நெகிழ்ந்து கரைந்து உருகின்றாள்.  

பெருமாளோ தாமரைக் கண்ணன் அந்த திருத்தாமரைகளை மலரச்செய்கின்ற சூரியன் நம்மாழ்வார்அவர்  உபதேச முத்திரையால் நமக்கு அருள் வழங்குகின்றார்அவரை சரணாகப் பற்றிக்கொள்ள அவர் நம்மை வைகுண்டம் சேர்ப்பார் என்று அருமையாக விளக்கம் அளித்தார்  வேளுக்குடி ஸ்ரீ .வேக்ருஷ்ணன் ஸ்வாமிகள் அவர்கள்.  இதையே  ஆழ்வாரும் தனது பாசுரத்தில் இவ்வாறு கூறுகின்றார்.


இரட்டைத் திருப்பதி தேவர் பிரான் 

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவபிரானையே
தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூர்ச் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலைவில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வர் திருமாலுக்கே.

வளமான திருக்குருகூரிலே உள்ளவர்களுக்குத் தலைவரானவர் ஸ்ரீசடகோபர் ஆவார்அவர் தேவபிரானையே தந்தை தாய் என்று மனம்மெய் வாக்கு என்ற மூன்றாலும்  அடைந்தவர்அவர் அருளிய பழமையான ஆயிரம் பாசுரங்களுள்திருத்தொலைவில்லி மங்கலம் என்னும் திருத்தலத்தைப் பற்றிச் செந்தமிழால் அருளிச்செய்த இந்தபத்து பாசுரங்களை சேவிப்பவர்கள்  (வைகுண்டத்தில்திருமாலுக்கு அடிமையாக சேவை  செய்வார்கள்

முன் போலவே மாலைபரிவட்டம்  சடாரிகற்பூர ஆரத்தி நடைபெற்றபின் ஆழ்வாரின் பாசுரங்களை கேட்ட ஆனந்தத்தில் பெருமாள்கள் இருவரும் ஆடிக்கொண்டே திருக்கோவிலின் உள்ளே எழுந்தருளினர்.  



ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன் 
 திருவடி சரணம் (செந்தாமரை)கண்ணா 






                                                       

                                                         தென் திருப்பேரை நிகரில் முகில் வண்ணன் 


அடுத்து வேதவொலியும் விழாவொலியும் பிள்ளைக்குழா விளையாட்டொலியும் மறாத் தென்திருப்பேரை நிகரில் முகில்வண்ணர் வகுளாபாரணருக்கு சேவை சாதித்தார்இவரை ஆழ்வார் பத்து பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.

நகரமும்நாடும்பிறவும்தேர்வேன் நாணெனக்கில்லைஎன்தோழிமீர்காள்
சிகரமணிநெடுமாடநீடு தென்திருபேரெயில்வீற்றிருந்த
மகரநெடுங்குழைக்காதன்மாயன் நூற்றுவரையன்றுமங்கநூற்ற
நிகரில்முகில்வண்ணன்நேமியான் என் நெஞ்சங்கவர்ந்தென்னையூழியானே.

என்னுடைய தோழிகளே! (எம்பெருமானைநகரங்களிலும் நாடுகளிலும் பிறஇடங்களிலும் தேடுவேன்எனக்கு நாணம் இல்லைஏன்என்றால் சிகரங்களையுடைய  அழகிய நீண்ட மாடங்கள் நிலைத்திருக்கின்தென்திருப்பேரையில் எழுந்தருளியிருக்கின்ற மகரநெடுங் குழைக்காதனும் மாயனும் துரியோதினாதியார்கள் அன்று அவியும்படியாக மந்திரித்த ஒப்பில்லாத முகில் வண்ணனும்சக்கரத்தண்ணலனுமான பெருமான் என் மனத்தினைக் கொள்ளை கொண்டு எத்தனை ஊழிக் காலத்தை உடையான்?

தென்திருப்பேரை பெருமாள் மகரநெடுங்குழைக்காதர்மகர மீன் வடிவத்தில் உள்ள நீண்ட குழை என்னும்  காதணியை அணிந்த  பெருமாள்  பராங்குச நாயகியின்  உள்ளத்தை கொள்ளை கொண்டான்  ஆகவே அவள்    தாய்மாரும் தோழிமாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரைக்குச் செல்வேனென்று துணிந்ததை கூறும் வகையில் செல்லுவன்  என்று கூறுகிறார் என்றும்,  பொதுவாக மாயம் என்றால் பொய் ஆனால் வைணவ சம்பிரதாயத்தில் மாயம் என்றால் ஆச்சரியம், நாம் மீண்டும் கருக்குழியில் புகாமல் நம்மை காப்பவர் ஆழ்வார் எனவே அவரது திருப்பாதங்களை பற்றுவோம்  என்று  அருமையாக விளக்கம் அளித்தார்  வேளுக்குடி ஸ்ரீ .வேக்ருஷ்ணன் ஸ்வாமிகள் அவர்கள்.  


 நிகரில் முகில் வண்ணன் பெருமாளின் கண்ணாடி சேவை 

தோளுக்கினியானில் பெருமாள்கள் 


திருக்குளந்தை மாயக்கூத்தர்



அடுத்து மாடங்களையும் கொடிகள் கட்டிய மதிகளையுடைய அழகிய திருக்குளந்தை மாயகூத்தர் ஆழ்வாருக்கு சேவை சாதித்தார்.

கூடசென்றேன் இனி என் கொடுக்கேன்கோள்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம்
பாடற்றொழிய இழந்து வைகல் பல்வளை யார்முன் பரிசழிந்தேன்
மாடக்கொடி மதிள் தென்குளந்தை வண்குடபால் நின்ற மாயக்கூத்தன்
ஆடல்பறவை உயர்த்த வெல்வோர் ஆழிவலவனை ஆதரித்தே

என்று நம்மாழ்வார் தமக்கு உலக வாழ்க்கையில் வெறுப்புண்டானதைதலைவனை நோக்கிச் செல்லக் கருதிய தலைவி பேச்சாலே அவரை மங்களாசாசனம் செய்தார்.

மாடங்களையும் கொடிகள் அலங்கரிக்கும் மதில்களையுமுடைய அழகிய திருக்குளந்தை என்னும் திருத்தலத்தில் மேற்கு நோக்கிய திருமுகமண்டலத்துடன் திருக்கோலமாய் எழுந்தருளியுள்ளான் வண்மையுடைய மாயக்கூத்தன்கருடப்பறவையைக் கொடியியிலே  உயர்த்திய போரிலே வெல்லுகின்ற திருச்சக்கரத்தை வலக்கையிலேயே  உடையவன் எம்பெருமான்அப்பிரானை விரும்பி கலவியின் நிமித்தம் சென்றேன்என்னுடைய அழகிய வளையல்மனம், கண்கள், ஆடை ஆபரணங்கள் ஆகிய அனைத்தையும் என்னிடத்திலிருந்து நீங்கி ஒழிய இழந்து பலவகையான வளையல்களை அணிந்த இப்பெண்களுக்கு முன்னே நாணமும் நீங்கினேன்இனி எதனைக் கொடுப்பேன்?  என்று தோழியரின் முன்னர் தாம் நாணம் இழந்ததை கூறுகின்றார் நம்மாழ்வார்.


ஆழ்வாரின் திருமேனி தாமிரபரணி தீர்த்தத்தை காய்ச்சி  அதில் மதுரகவியாழ்வார் தன் சக்திகளை பிரயோகித்து உருவாக்கிய கைப்படாத  சுயம்பு திருமேனி ஆகும்.  


மங்களாசாசனம் செய்யும் நம்மாழ்வார் 



நம்மாழ்வார் பின்னழகு 


திருக்கோளூர் நிக்ஷேபவித்தன் பெருமாள் 


அடுத்து திருக்கோளூர் நிக்ஷேபவித்தன் பெருமாள்  சேவை சாதித்தார்செங்கண் கருமுகிலை  செய்யவாய் செழுங்கற்பகத்தை ஆழ்வார் இருப்புவளர்ச்சிஇன்பம் இவை எல்லாம் கண்ணனென்று உணர்ந்து  திருக்கோளூரிலீடுபட்டதைதலைவன் நகர் நோக்கி சென்ற தலைமகளைப் பற்றித் தாய் இரங்கும்  பத்து பாசுரத்தாலே மங்களாசாசனம் செய்துள்ளார்.

உண்ணுஞ்சோறுபருகுநீர் தின்னும்வெற்றிலையுமெல்லாம்
கண்ணன் எம்பெருமானென்றென்றே கண்கள்நீர்மல்கி
மண்ணிணுளவன் சீர் வளம்மிக்கவனூர்வினவி
திண்ணம் என்னிளமான்புகுமூர் திருக்கோளூரே.

இளமானைப் போன்ற என் மகள் தனக்கு எல்லாம் கண்ணனே என்கின்றாள்அவள் உண்கின்ற உணவும்,  குடிக்கின்ற தண்ணீரும்வாய் மெல்லுகின்ற வெற்றிலையும் ஆகிய எல்லாமே கண்ணனாகிய எம்பெருமானே  என்று  திரும்பத்திரும்பக் கூறி கண்ணீர் விட்டு உருகுகின்றாள்;  அந்த எம்பெருமானுடைய திருக்கலியாண குணங்களையும்அவனையே தனிச்செல்வமாக பெற்ற வளம் கொண்ட அவன் ஊரையும் பற்றிக் கேட்டுக்கொண்டு செல்கின்ற என் மகள் முடிவில் புகும் ஊரே திருக்கோளூர் ஆகும்நிச்சயம் என் பெண் திருக்கோளூர் புகுந்து விடுவாள்என்கிறார் திருத்தாயார்.  

திருக்கோளூரிலே புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கிய திருமண்டலத்துடன்   பெருமாள் குபேரனுக்கு  செல்வமளந்த மரக்காலை தலைக்கு வைத்து கையில் அஞ்சன மை தடவி நிதி எங்கு இருக்கின்றது என்று பார்த்துக்கொண்டிருப்பதாக ஐதீகம்நவ திருப்பதிகளில்  இரண்டு திருப்பதிகளில் பெருமாள் சயன கோலத்தில் சேவை சாதிக்கின்றார் அவையாவன திருக்கோளூரும் புளிங்குடியும் ஆகௌம் இந்த இரு திருப்பதிகளையும் ஆழ்வார் ஒரு பாசுரத்தால் மங்களாசாசனம் செய்துள்ளார்அந்த பாசுரம் இதோ

கொடியார்மாடக் கோளூரகத்தும்புளிங்குடியும்
மடியாதின்னே நீதுயில்மகிழ்ந்துதான்
அடியாரல்லல்தவிர்த்த அசைவோஅன்றேல் இப்
படிதான் நீண்டுதாவிய அசைவோபணியாயே

கொடிகள் அலங்கரிக்கும் மாடங்களையுடைய திருக்கோளூர்  என்ற திவ்ய தேசத்திலும்திருப்புளிங்குடி என்ற திவ்ய தேசத்திலும் இப்படி திருக்கண் வளர்ந்திருக்கின்ற பெருமாளேஇவ்வாறு பள்ளி கொண்டது பல அவதாரங்களை எடுத்து அடியார்களுடைய  துன்பத்தை நீக்கிய தளர்ச்சியோஅல்லாமல் த்ரிவிக்ரம அவதாரத்தில் இவ்வுலகத்தை தாவி அளந்த தளர்சியோஅருளிச்செய்ய வேண்டும் என்று வினவுகின்றார் ஆழ்வார்.

வைத்த மாநிதியாம் மசுசூதனையே அலற்றி
கொத்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப்பத்து அவன் சேர் திருக்கோளூர்க்கே
சித்தம் வைத்து  உரைப்பார் திகழ் பொன் – உலகு ஆள்வாரே.

திருக்கோளூர்ப் பெருமான் சேர்த்து வைத்த சேமநிதி போன்றவன்அந்த மசுசூதனனாகிய  என்பெருமானை கொத்து கொத்தாய் மலர்கள் மலரும் சோலைகள் சூழ்ந்த திருக்குருகூர்ச் சடகோபன் ஆயிரம் திருப்பாசுரங்களில் துதித்துள்ளார்அவற்றுள் இப்பத்து  பாசுரங்களையும் பெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோளூரை எண்ணி அவனை நெஞ்சில் பதித்துக் கொண்டு சொல்ல  வல்லவர்கள் உயர்ந்த பரமபதத்தை ஆள்வர்.


மதுரகவியாழ்வார் 


நம்மாழ்வாருக்கு அவர் தம் வாழ்நாளில் நிறைய பணிவிடைகள் புரிந்த மதுரகவியாழ்வார், இந்த திருக்கோளூர் திருத்தலத்தில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் கருடனின் அம்சமாக  விஷ்ணுநேசர் என்பவருக்கு புத்திரனாக அவதரித்தவர்.    இவர்   தமது குருநாதரான நம்மாழ்வாரை கடவுளாகக் கருதி தாம் பாடிய   “கண்ணி நுண் சிறு தாம்பினால்”  என்னும் பாசுரத்தினால் மங்களாசாசனம் செய்தார், நம்மாழ்வாரின் மாலை மதுரகவியாழ்வாருக்கு அணிவிக்கப்பட்டது.  அவரை வலம் வந்து உள்ளே செல்ல மங்களாசாசன  உற்சவம் சிறப்பாக நிறைவேறியது.      அடுத்த பதிவில் நவதிருப்பதி எம்பெருமான்களின் திருமஞ்சன சேவையை காணலாம் அன்பர்களே.   

Labels: , ,