Thursday, August 13, 2009

கண்ணன் கேசவன் நம்பி பிறந்தனன்

Visit BlogAdda.com to discover Indian blogs
முதல் பதிவில் பல படங்களை இணைக்க முடியவில்லை எனவே இந்த கோகுலாஷ்டமி இரண்டாம் பதிவு.

குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றிஇப்பதிவில் பல்வேறு காலங்களில் எப்படி கோகுலாஷ்டமி கொண்டாடினோம் என்பதை கூற முயற்சி செய்துள்ளேன். கோகுலாஷ்டமி என்றாலே சிறு வயதிலே எப்போதும் ஆனந்தம் தான் எனென்றால் அன்று பள்ளிக்கு விடுமுறை நாள் அல்லவா. தெரிந்தும் தெரியாத வயதில் எங்கள் ஊர் உடுமலைப்பேட்டையில் பஜனை கோயில் என்று அழைக்கப்படும் நவநீத கிருஷ்ணர் கோவிலில் பத்து நாட்கள் உற்சவம் கண்டு களித்தோம். ஜென்மாஷ்டமியன்று மாலை குழந்தை கிருஷ்ணன் அலங்காரம் அடுத்த நாள் தவழும் கண்ணன் கோலம், பின்னர் காலிப்பின் செல்லும் கோபாலர், வேணு கோபாலர், கோவர்த்தன கிரி கிருஷ்ணர், காளிய மர்த்தனர், ஏழாம் நாள் உறியடி உற்சவம் உறிக்கோலுடன் கிருஷ்ணர் எழுந்தருள உறியடி உற்சவம் நடை பெறும். உறி மேலும் கீழும் வௌம் போது கையில் கோல் கொண்டு அடிக்க வரும் போது தண்ணீர் இரு பக்கம் இருந்தும் அவர் மேல் வீசுவார்கள் கடைசியாக அவர் உறியடித்து விடுவார். உறியடு பார்ப்பதே ஒரு ஆனந்தம், தினம் ஒரு அலங்காரத்தில் திவ்ய பிரபந்தம், தாலாட்டு, லாலி மங்களம் கேட்டருளுவார் பெருமாள். பின்னர் பிரசாதம் பெற்று வீடு திரும்புவோம். பத்தாம் நாள் இரவு வழுக்கு மரம் ஏறும் வைபவம். நெடிதுயர்ந்த வழுக்கு மரத்தில் மேலே பரிசுப் பொருள் கட்டப்படும், மரத்தின் மேல் விளக்கெண்ணையும் கடுகும் (நன்றாக வழுக்குவதற்காக) கலந்து பூசி விடுவர். முதலில் ஏறுபவர்கள் வழுக்கி விழுவதைப் பார்த்து சிரிப்போம். மெள்ள மெள்ள எண்ணெய் காயந்து இறுதியில் ஒருவர் பரிசைப் பெறுவார் பின்னர் பெருமாள் ஊர்வலம் வந்து அருள் பாலிப்பார். சிறு வயதில் இவ்வாறு மிகவும் அற்புதமாக கோகுலாஷ்டமி கொண்டாடி மகிழ்ந்தோம்.

ஏணிக்கண்ணன்
அன்று மனதில் பதிந்த

மாணிக்கங்கட்டி வயிரமிடைகட்டி
ஆணிப்பொன்னாற்செய்த வண்ணச்சிறுத்தொட்டில்
பேணியுனக்கு பிரமன்விடுதந்தான்

மாணிக்குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ
என்னும் பெரியாழ்வாரின் தாலாட்டுப் பாடல் இன்று வரை இன்னும் மனதை விட்டு அகலாமல் பசுமரத்தாணி போல் மனதில் பதிந்து விட்டது.
ஏணிக்கண்ணன்
அது போலவே முதல் நாள் சேவிக்கும்
வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர்தூவிட
கண்ணன்முற்றம் கலந்தளறாயிற்றே. பாசுரமும் எப்போதும் மனதை விட்டு அகலவில்லை.

ஆறாம் வகுப்பு வந்த பின் குருச்சரண் என்னும் ஒரு ஐயங்கார் பையன் நண்பனாக கிடைத்தான். அவன் வீட்டில் கோகுலாஷ்டமி உற்சவம் மிகவும் சிறப்பாக நடக்கும், இரவு முழுவதும் அஷ்டபதி பாடிக்கொண்டு இராதா கல்யாணம் சிறப்பாக நடக்கும், அடியேனும் அவன் வீட்டில் சென்று அத்தனையையும் பார்ப்பேன். சீடை, முறுக்கு, அதிரசம் இல்லாமல் கோகுலாஷ்டமியா? அத்தனையையும் ஒரு கை பார்ப்போம். இது சிறு வயது கோகுலாஷ்டமி.

காளிய மர்த்தன கமலா நாயகா
அடுத்து பணிக்காக குஜராத் சென்ற சமயம் கல்யாணம் ஆகி முதல் வருடம் கோகுலாஷ்டமியன்று சீடை செய்யலாம் என்று மனைவியை தாஜா செய்து சீடை செய்ய ஆரம்பித்தோம் இரண்டு பேரும் தான் அடியேன் மனைவி செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றேன், காய்ந்த எண்ணையில் சீடை மாவை போட்ட உடன் படீர் படீர் என்று வெடிக்க ஆரம்பித்து மனிவியின் கையில் சுடு எண்ணெய் விழுந்ததுதான் தாமதம் உடனே சீடை செய்வது நிறுத்தப்பட்டது. இன்று வரை சீடை கடையில்தான் வாங்குகிறோம். நவராத்திரி சமயத்தில் கர்பா நடனம் ஆடும் போது பாடப்படும் பல பாடல்கள் கண்ணனுடைய ராஸ லீலைகளைக் கூறும் பாடல்கள்தான்.

பார்த்தனுக்கு கீதை சொன்ன கீதாச்சார்யன்
பின்னர் அஸாம் பணி செய்ய சென்ற போது தனியாகத்தான் சென்றேன் அங்கே விஷ்ணு சகஸ்ரநாமம் கோஷ்டி இருந்தது சனிக்கிழமையன்று ஒவ்வொருவர் வீட்டில் சென்று சேவிப்போம். எனவே கோகுலாஷ்டமியன்று தனிக்கட்டைகள் இருக்கும் எங்கள் மெஸ்ஸில் கோகுலாஷ்டமி நடக்கும். இராதாகிருஷ்ணன் என்னும் நண்பர் ஒரு பெரிய ஆலிலை கிருஷ்ணர் படம் வாங்கிக் கொண்டு வந்தார். அப்படத்திற்கு அலங்காரங்கள் செய்து பாயசம், லட்டு, கேசரி, சுண்டல் அனைத்தும் தயார் செய்து அனைத்து குடும்பங்களையும் அழைத்து சிறப்பாக கொண்டாடுவோம், விஷ்ணு சகஸ்ரநாமம், திவ்ய பிரபந்தம், கோவிந்த நாமாவளி, பஜனைப் பாடல்கள் பாடி நள்ளிரவுவரை சிறப்பாக பூஜை நடத்துவோம், பின்னர் அனைவரும் கொண்டு வந்த பிரசாதம் அனைவருக்கும் பகிர்ந்தளிப்போம். இவ்வாறு மூன்று வருடங்கள் சிறப்பாக கோகுலாஷ்டமி கொண்டாடினோம்.
காளியன் உச்சியில் அற்புத நடனம்
தற்போது மும்பையில் பணி மஹாராஷ்ட்டிராவில் கோகுலாஷ்டமியன்று உறியடி நடக்கும் ஆனால் இங்கு உறியை மிகவும் உயரத்தில் கட்டி விடுவார்கள். குழு குழுவாக கோவிந்தா ஆலா ரே, கோபாலா ஆலா ரே ( கோவிந்தன் வந்து விட்டான், கோபாலன் வந்து விட்டான்) என்று உற்சாகமாக கோஷம் போட்டுக்கொண்டு பிரமிட் போல கூடாரம் அமைத்து உறிவரை செல்ல முயற்சிப்பர். நடுவிலேயே பிரமிட் சரிந்து விழுவது வேடிக்கையாக இருக்கும் இதற்காக சுமார் ஒரு மாத, முன்னரே இளைஞர்கள் பிரமிட் அமைக்க பயிற்சி ஆரம்பித்து விடுவர். எவ்வளவு அதிக உயரமோ அவ்வளவு பரிசுப்பணம் அதிகமாக இருக்கும்.
இவ்வாறும் இன்னும் பல வகையிலும் கண்ணன் கேசவன் நம்பி பிறந்த நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள். ஸ்ரீ கிருஷ்ணர் பன்றிக் காய்ச்சலிலிருந்து மனித குலத்தை காப்பாற்றி அருள பிரார்த்திக்கின்றேன்.

5 Comments:

Anonymous Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

August 14, 2009 at 4:03 AM  
Blogger மதுரையம்பதி said...

எப்போதும் போல படங்கள் அருமை ஐயா. உங்களது நினைவுகளும் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. பகிர்ந்தமைக்கு நன்றி.

August 14, 2009 at 5:29 AM  
Blogger Kailashi said...

நன்றி மௌலி ஐயா, முதல் பதிவும் கண்டு களித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

August 14, 2009 at 8:46 PM  
Blogger குமரன் (Kumaran) said...

அருமை. எனக்கு கலசலிங்கம் கல்லூரியில் படிக்கும் போது மாணவர் விடுதியில் நாங்கள் கொண்டாடிய கிருஷ்ண ஜெயந்தி, ஹனுமத் ஜெயந்தி, ராமநவமி போன்றவை நினைவிற்கு வந்துவிட்டன.

August 25, 2009 at 4:16 PM  
Blogger Kailashi said...

கல்லூரியின் பசுமை நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி குமரன் ஐயா.

September 3, 2009 at 9:44 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home