Saturday, January 23, 2010

நாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -2

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ அஹோபில யாத்திரை


அஹோபில க்ஷேத்திரத்தின் பெருமைகள்


ஸ்ரீஅஹோபில திவ்ய தேசம் மலையும் மலை சார்ந்த (குறிஞ்சி நிலத்தில்) பகுதியுமாக அமைந்து திகழ்கின்றது.

திருமால் நரசிங்கமதாகி இக்குன்றின் மீது மிக்க வேட்கையோடு வந்து அமர்ந்ததால் இக்குன்றம் சிங்கவேள் குன்றம் எனப்படுகின்றது.

நரசிங்கம் என்ற வேள் வந்து அமர்ந்ததால் சிங்கவேள் குன்றம் என்பாரும் உண்டு.

வேள் என்றால் யாவராலும் வேட்கை கொள்ளப்படுபவர் என்றும் பொருள்படும். இத்தலத்து நரசிம்மப் பெருமான் தோற்றத்தாலும், ஏற்றத்தாலும், தன் பக்தன் ப்ரஹலாதன் பொருட்டு ஓடி வந்து தூணில் தோன்றிய எளிமையாலும், இரணியனை வகிர்ந்து அழித்த திறத்தாலும், எல்லாருடைய விருப்பினையும் வேட்கையினையும் பெற்று விளங்குவதால், அவன் உறைந்த குன்றம் சிங்க வேள் குன்றமென்றானது.

அகோபலம் என்பாரும் உண்டு. பெருமாள் மிகுந்த பலமுடன் தோன்றியதால் ஆஹா பலம், ஆஹா பலம் என்று தேவர்கள் அனைவரும் போற்றியதால் அஹோபிலம் ஆனது.

கிழக்குத் தொடர்ச்சி மலை என்னும் ஒரு பெரிய மலைத் தொடர்ச்சியின் நடுவே அமைந்துள்ளது இந்த அற்புத திவ்ய தேசம். ஆதி சேஷன், அதன் தலைப்பகுதி திருவேங்கடம், வால் பகுதி ஸ்ரீ சைலம், முதுகு அதாவது உடல்பகுதி அஹோபிலம் என்பது ஐதீகம்.



இம்மலை ஏழு குன்றங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதால் இதை சிங்கவேழ்குன்றம் என்றும் பெயர் சூட்டி அழைத்தனர். திருப்பதி மலையாகிய திருமலை எழு மலைகளை கொண்டிருப்பது போல் இக்குன்றமும் ஏழு குன்றங்களைக் கொண்டிருப்பதால் இதை சின்ன எழுமலை என்று பெயர் சூட்டி வழங்கலாம்.

பவநாசினி ஆற்றின் ஒரு நீர்விழ்ச்சி

சில திவ்ய தேசங்களில் நதியிருக்கும், ஆனால் காடும் மலையும் இருக்காது, மற்றொரு திவ்ய தேசத்தில் மலை இருக்கும் ஆனால் காடும் ஆறும் இருக்காது. இந்த ஸ்தலத்தில் மூன்றும் ஒருங்கிணைந்து காணப்படுகின்றது. புஷ்கரத்திலே எம்பெருமான் “தீர்த்தரூபியாய் சேவை சாதிக்கின்றான், அவரே திருமலையில் பர்வத ரூபியாய் திகழ்கிறார். நைமிசாரண்யத்தில் “அரண்யரூபியாய்” விளங்குகிறான். இத்தலத்தில் மூன்றும் இருப்பதனால் இது புஷ்கரம், திருமலை, நைமிச்சாரண்யம் என்ற மூன்று திவ்ய தேசங்களையும் சேவித்த பலனைத் தருகின்றது.

ந நரசிம்ஹாத் அதி கச்சதேவோ
ந தீர்த்தம் ந்யத் பவநாசஹேதோ:|
ந கருடாத்ரே: அபரோஸ்திகைகோ
ந பக்தஜந்தோ உபரோஸ்தியோகீ:||

நரம் கலந்த சிங்கத்தைக் காட்டிலும் உயர்ந்த தெய்வம் கிடையாது. பவநாசினி என்ற தீர்த்தத்தைக் காட்டிலும் உயர்ந்த தீர்த்தம் கிடையாது. கருடாசல மலையை விட சிறந்த மலை கிடையாது.

இந்த தலத்தில் வசிக்கின்ற உயர்ந்த தெய்வமான நரசிம்மனிடத்தில் பக்தி செலுத்துகின்றவரைக் காட்டிலும் உயர்ந்த யோகி யாருமில்லை.

கீழ் அஹோபிலம் இராஜ கோபுரம்



அஹோபிலத்தை அடைந்து பவநாசினியின் தீர்த்தத்தை பார்த்தால் கூட கோடிக்கணக்கான பிறவியில் செய்த பாவத்தினின்றும் விடுபடுகின்றான்.

கயை, ப்ரயாகை, காசி, கங்கை இவைகளைக் காட்டிலும் நூறு மடங்கு அதிக ப்ரபாவம் பெற்றது. பித்ருக்களுடைய ப்ரீதியின் பொருட்டு கயைக்குச் செல்ல வேண்டும். உடலை விட்டு நற்கதியைப் பெற கங்கையை அடைய வேண்டும். மந்திரோபதேசத்தின் பொருட்டு காசிக்குச் செல்ல வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த மூன்று விதமான பலனையும் அஹோபிலத்தில் பெறலாம் என்று அஹோபில மஹாத்மியம் என்ற நூல் கூறுகின்றது.


கருடாசலம்

மேலும் காசியில் ஆயிரம் யுகமும், ப்ரயாகையில் இருபது யுகமும், கயையில் நூறு யுகமும் வசித்தால் மனிதன் எப்பலனைப் பெறுவானோ அப்பலனை அஹோபில க்ஷேத்திரத்தில் ஒரு தினம் வசித்த மாத்திரத்தினாலேயே பெறுகிறான். கயையில் ஒருவன் பத்தாயிரம் பாகவதர்களுக்கு அன்னமளித்தால் எந்த பலனைப் பெறுவானோ, ப்ரயாகையில் இலட்சம் பாகவதர்களுக்கு போஜனமளித்தால் எந்தப் பலனைப் பெறுவானோ, காசியில் இரண்டு இலட்சம் பேருக்கு அன்னமளித்தால் எந்தப் பலனைப் பெறுவானோ அந்த பலனை அஹோபிலத்தில் ஒரு க்ராஸம் அளித்த மாத்திரத்தினாலேயே பெற்று விடுகிறான். ஒரு க்ராஸம் அன்னதானத்திற்கே இப்படி பலன் என்றிருந்தால் பரிபூர்ணமாக அன்னமிட்டாலோ, அனேக பாகவதர்களுக்கு அன்னமிட்டாலோ எவ்வளவு பலனை அடைவான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? என்றும் அந்நூலில் கூறப்பட்டுள்ளது.

இவ்வளவு பெருமைகள் பெற்ற அஹோபில திவ்ய தேசத்தில் உறையும்
நவ நரசிம்மர்களின் தரிசனம் தொடரும்.......

Labels: , ,

3 Comments:

Blogger Jayashree said...

இந்த முறை அஹோபிலம் சாந்த நரசிம்மர் தான் பார்த்தோம்.அதுவும் ஸ்ரீ ஷிவசங்கர் பாபாவின் உபயம், ஆசிர்வாதத்தால்தான். நாங்களா போயிருக்க முயன்றிருக்கவே மாட்டோம் , முடியாது, டயம் இல்லை என்று!!. மற்றவரையெல்லாம் மனதால் நமஸ்க்கரித்ததோடு சரி. அடுத்தமுறை நடந்து போய் பார்க்க தெய்வம் துணை வரணும்.படிக்க ஆவலாய் இருக்கு.

January 25, 2010 at 1:24 AM  
Blogger S.Muruganandam said...

அவரை வேண்டிக்கொள்ளுங்கள் ஜெயஸ்ரீ, நிச்சயம் தரிசனம் தந்து அருளுவார். மூன்று நாட்கள் பயணத்தில் அனைத்து நரசிம்மர்களையும் அழகாக சேவிக்கலாம்.

January 25, 2010 at 3:56 AM  
Blogger குமரன் (Kumaran) said...

ஒரு க்ராஸம் என்றால் ஒரு கவளம் என்று பொருளா ஐயா?

May 19, 2010 at 7:33 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home