Friday, January 22, 2010

தமிழுக்கு ஏற்றம் தரும் விழா - 6

Visit BlogAdda.com to discover Indian blogs
இராப்பத்து ( திருவாய்மொழித் திருநாள்)

இராப்பத்து வைகுண்ட ஏகாதசியன்று தொடங்குகின்றது. இந்த பத்து நாட்களிலும் இரவில் பெருமாள் திராவிட வேதமாம், வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபனின் திருவாய்மொழி பாசுரங்கள் கேட்டருளுகின்றார்.

சத்யநராயணப் பெருமாள்
காளிங்க நர்த்தன கோலம்


இந்தப் பத்து நாளும் இரவு நேரக் கோலாகலங்கள்! பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தினமும் ஒய்யாளி, சிம்மநடை, காவடி சிந்து, என்று பல்வேறு நடைகளில் திருவீதி உலா வந்து பரமபத வாசல் வழியாக நம்மாழ்வாருக்கு சேவை சாதித்து நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரங்கள் மட்டுமே பத்து நாட்களும் கேட்டருளுகின்றார்! நூறு நூறு பாசுரங்களாக பத்து நாட்கள் விண்ணப்பிக்கப்படுகின்றன.

நம்மாழ்வார்
பிறந்த காலம் - 7 ம் நூற்றாண்டு(765 - 800)
ஆண்டு - பிரமதி
மாதம் - வைகாசி
நட்சத்திரம் - விசாகம் (வெள்ளிக் கிழமை)
அம்சம் - சேணைத்தலைவர் (விஸ்வக் சேனர்)சத்யநாராயணப் பெருமாள்
திருவேங்கடமுடையான் திருக்கோலம்


அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா
நிகர் இல் புகழாய் உலகம் மூன்றுடையாய் என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே
வடக்கில் இருந்த மதுரகவியாழ்வார் தெற்கு நோக்கி வந்து பதினாறு ஆண்டுகளாக ஏதும் பேசாமல், நகராமல், உறங்காப்புளியில் மோன தவம் செய்த மாறனிடம், கேட்ட புதிர் என்னவென்றால்,

செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்,
எதைத் தின்று? எங்கே கிடக்கும்?


இக்கேள்வியைக் கேட்டவுடன், ஞானக் கொழுந்தான நம்மாழ்வார், முதன் முறையாகத் தன் திருவாய் திறந்து, விடை பகன்றார்.

அவருரைத்த பதிலாவது,

அத்தைத் தின்று; அங்கே கிடக்கும்.

அதாவது, செத்தது என்பது நம் உடல்; சிறியது என்பது உயிர். உயிரானது உடலினுள் இருக்கும் பொழுது அதற்கென்று தனியான இன்பம், துன்பம் எதுவும் கிடையாது. உடல் நொந்தால், உயிரும் நோகும்; உடல் இன்புற்றால், உயிரும் அப்படியே இன்புறும். அதனால், உயிரானது உடலின் இன்ப, துன்பங்களைத் தின்று, அங்கேயே இருக்கும்.

என்று, அந்த உயிர் உண்மையை(தன்னிலை அறிதல்) உணர்கிறதோ, அன்று அது இறைவனைப் பற்றிய எண்ணங்களையே உணவாக உண்டு, அவரது திருவடி நிழலிலே நீங்கா நிலைத்துவிடும்.


திருமயிலை ஆதி கேசவப்பெருமாள்
முத்தங்கி சேவை

நம்மாழ்வார்தான் இருந்த இடத்தை விட்டு எங்கேயுமே போனதில்லையே. பின்னர் எப்படி பாசுரங்கள எல்லாம் பாடினாரு? பாசுரக்கள், எம்பெருமானின் 108 திவ்ய தேசங்கள பத்தினதாச்சே!

எம்பிரானின் அவதாரம் தானே நம்மாழ்வார், அவருக்கே அவர் இருக்கின்ற இடங்கள் எல்லாம் தெரியாதா, என்ன? நம்மாழ்வார், திருவாய் திறந்து பாசுரங்களை எல்லாம் பாடத்துவங்கின போது, மகாவிஷ்ணு, அன்னை லெட்சுமி தேவியுடன், தன் கருட வாகனத்தில் சேவை சாதித்தார். அது மட்டுமல்லாமல், திருமாலின் திவ்ய தேசங்கள் அனைத்தும் அவர் மனக்கண்ணில் தோன்றின. அவைகளை மங்களாசாசனம் செய்தார் நம்மாழ்வார்.

திருமயிலை ஆதி கேசவப்பெருமாள்
முத்தங்கி சேவை பின்னழகு


நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் 1000 க்கும் மேற்பட்ட (1102) பாடல்கள் நம்மாழ்வாரால் பாடப்பெற்றவை ஆகும். அவரது திருமொழிகள் மொத்தம் 4 ஆகும். அவை,

திருவிருத்தம் - இது 100 பாசுரங்களைக் கொண்டுள்ளது. இந்நூலில், அவர் ரிக் வேதத்தினுடைய சாராம்சங்களை அமைத்துள்ளார்.

திருவாசிரியம் - இந்நூல் மிகக் குறைவான பாடலைக் கொண்டுள்ளது. அதாவது 7 பாடல்கள் உள்ளன. இதில் யசூர் வேதத்தின் அம்சங்களைக் கொடுத்தருளியிருக்கிறார்.

பெரிய திருவந்தாதி - இதில் 87 பாடல்கள் உள்ளன. இப்பாடல்களில் அதர்வண வேதத்தின் கருத்துகளை ருசிக்கலாம்.

விருத்தம், ஆசிரியம், அந்தாதி ஆகிய மூன்றும், ஒரு வகையான செய்யுள் ஆகும். அவை இறைவனின் பெயரில் பாடப்பெற்றவையால், அவற்றிற்கு திரு என்னும் அடைமொழி சேர்த்து திருவிருத்தம், திருவாசிரியம், திருவந்தாதி என்று அழைக்கப்படுகின்றன.

திருவாய்மொழி - இதில் 1102 பாடல்கள் உள்ளன. இவற்றில் சாம வேதத்தின் சங்கதிகளை சுவைக்கலாம்.


சத்யநாராயணப் பெருமாள்
முத்தங்கி திருக்கோலம்


இவ்வாறு, ரிக், யஜூர், சாம, அதர்வண என்னும் 4 வேதத்தினையும், தமிழில் படைத்து, தமிழ் மக்களும் வேதத்தின் அர்த்தங்களைப் புரிந்து அதன் பலனை அடைய அருளிச்செய்ததினால், நம்மாழ்வார, 'வேதம் தமிழ் செய்த மாறன்' என்று அழைக்கப்படுகின்றார். இவரது பாடல்கள் அனைத்திலும் வேதத்தின் சாரம் செறிந்து இருப்பதை, அவரது பாடல்களை உளமார ஓதும் வேளையில் உணரலாம். இவர், இறைவனை தலைவனாகவும், தன்னை தலைவியாகவும் பாவித்து பாசுரங்கள் பாடினார்.

பார்த்தசாரதிப்பெருமாள்
கோவர்த்தன கிருஷ்ணர் திருக்கோலம்
பார்த்தசாரதிப்பெருமாள் பின்னழகு

இராப்பத்தின் இறுதி நாள் நம்மாழ்வார் மோட்சம் என்றழைக்கப்படும் நம்மாழ்வார் திருவடி தொழும் உற்சவம். என்று வெகு சிறப்பாக தமிழுக்கு தகமை சேர்க்கும் இவ்விழா விஷ்ணுவாலயங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. 21ம்நாள் இயற்பா சேவிக்கப்படுகின்றது. இப்பதிவில் உள்ள பெருமாளின் திருக்கோலங்கள் இவ்வருட இராப்பத்தின் போது பெருமாள் அளித்த அருட்கோலங்கள்.

பூவையும் காயவும் நீலமும் பூக்கின்ற
காவிமலர் என்றும் காண்தோறும்_பாவியேன்
மெல்லாவி மெய்ம்மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரான் உருவே என்று

காயாம்பூ, கரு நெய்தல், செங்கழுநீர் போன்ற மலர்களைக் காணும் போதெல்லாம் மனம் மகிழ்ந்து பூரித்து திருமாலின் வடிவங்களாய்த் தோன்றுவதாய்ப் சொல்லுகின்றது நம்மாழ்வார் பாசுரம் .

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home