நாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -3
ஸ்ரீ அஹோபில யாத்திரை
இரண்டு தளங்களாக அமைந்துள்ளது நவந்ருஸிம்ஹ அஹோபில ஷேத்திரம். கீழ் அஹோபிலத்தில் பிரதானமாக ப்ரஹலாத வரதர் ( சாந்த நரசிம்மர் ) ஆலயமும், மேல் அஹோபிலத்தில் அகோர ந்ருஸிமஹர் ஆலயமும் பிரதானமாக அமைந்துள்ளன. மலையடிவாரம் கீழ் அஹோபிலம் என்று அழைக்கப்படுகின்றது. அடிவாரத்திலிருந்து எட்டு கி.மீ தூரத்தில் சுமார் 3000 அடி உயரத்தில் உள்ள மலைப்பகுதி மேல் அஹோபிலம் என்று அழைப்படுகின்றது. மற்ற நரசிம்மர் ஆலயங்கள் சுற்றிலும் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளன.
இரு பக்கமும் வேதங்கள் தவம் செய்த வேதாச்சலமும் , கருடன் தவம் செய்து ம் அகோர ந்ருஸிம்ஹரை தன் கர்ப்பத்தில் கொண்ட கருடாச்சலமும் விளங்க நடுவே நம் பிறவிப்பிணியை நீக்கும் பவ நாசினி ஆறு ஓடுகின்றது. அடர்ந்த மரங்கள் நிறைந்த இந்த காட்டுப்பகுதியில் தான் சிங்கமாகிய தேவர் நமக்கு சேவை சாதித்து அருளுகின்றார் அதுவும் ஒருவராக அல்ல நவ நரசிம்மர்களாக.
பெருமாள் நரசிம்ம அவதாரம் எடுத்த போது கருடன் மேல் வராததால், நரசிம்ம மூர்த்தியை தரிசிக்க வேண்டி கருடன் இத்தலத்தில் தவம் செய்ய கருடனுக்காக பெருமாள் அஹோபில நரசிம்மராக சேவை சாதித்தார். கபாலிகர்களால் கை வெட்டப்பட்ட ஆதி சங்கர பகவத் பாதாள் அகோர ந்ருஸிம்ஹரை ஸேவித்து லக்ஷ்மி ந்ருஸிம்ஹ கராவலம்ப ஸ்தோத்ரம் பாட இழந்த கரம் மீண்டது . ஆதி சங்கரர் ஸ்தாபித்த சிவலிங்கமும், ந்ருஸிம்ஹ சுதர்சன சக்கரமும் இன்றும் இத்தலத்தில் உள்ளன. மேலும் மஹா லக்ஷ்மித் தாயார் இங்கு இப்பகுதியில் வசிக்கும் செஞ்சு என்னும் ஆதிவாசி மகளாக செஞ்சு லக்ஷ்மியாக சேவை சாதிக்கின்றாள்.
அஹோபில மடம் உள்ளதும் அஹோபிலத்தில்தான். 1379ம் ஆண்டு ஸ்ரீனிவாச்சாரியாரின் 19 வயதில் ந்ருஸிம்ஹ சுவாமி அவரது கனவில் தோன்றி அஹோபிலம் அழைத்து குருவாக வந்து வேதாந்தம் கற்பித்து ந்ருஸிம்ஹ மந்திரத்தை உபதேசித்து , திரிதண்டம், சங்கு சக்ரம் வழங்கி ’ சடகோபயதி என்று நாமம் வழங்கி முதல் ஜீயராக்கினார். இக்குன்றின் மேல் உற்சவ மூர்த்தியாய் எழுந்தருளி இருக்கும் "ஸ்ரீமாலோல நரசிம்ம மூர்த்தியை" திருவாராதனைப் பெருமாளாக கொண்டு ஆதிவண் சடகோப யதீந்த்ர மஹா தேசிஹர் என்னும் ஜீயரால் அகோபில மடம் நிறுவப்பட்டு இன்று வரை சிறப்பாக ஸ்ரீ வைஷ்ணவம் உலகெங்கும் ஓங்கி வளர சேவை செய்து வருகின்றது.
நவநரசிம்மர்களை நவகிரஹங்கள் வழிபட்டதால் இவர்களை சேவிப்பதால் நவகிரகங்கள் நன்மை செய்வதாக ஐதீகம். இனி எந்த நரசிம்மரை எந்த கிரகம் வழிபட்டது என்பதைக் காணலாமா?
ஜ்வாலா ந்ருஸிம்ஹர் - செவ்வாய்
அஹோபில ந்ருஸிம்ஹர் - குரு
மாலோல ந்ருஸிம்ஹர் - சுக்கிரன்
வராஹ ந்ருஸிம்ஹர் - இராகு
காரஞ்ச ந்ருஸிம்ஹர் - சந்திரன்
பார்கவ ந்ருஸிம்ஹர் - சூரியன்
யோகானந்த ந்ருஸிம்ஹர் - சனி
சத்ர வட ந்ருஸிம்ஹர் - கேது
பாவன ந்ருஸிம்ஹர் - புதன்.
இந்த சிங்கவேள் குன்றத்தில் ந்ருஸிம்ஹர் எப்படி நாம் எல்லாம் உய்ய சேவை சாதிக்கின்றார் என்பதை இந்த ஸ்லோகம் கூறுகின்றது..
ஜ்வாலாஹோபில மாலோல க்ரோடாகாரச்ச பார்கவ:
யோகாநந்தச் சத்ரவடு பாவனோ நவமூர்த்திய:
என்பது அந்த அஹோபில நவநரசிம்ம ஸ்தோத்திரம். இனி இத்திவ்ய தேசத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் மேலே சொன்னபடி நவ நரசிம்மர்கள் எப்படி சேவை சாதிக்கின்றனர் என்று அடுத்த பதிவில் பார்ப்போமா?
அஹோபில திவ்ய தேசத்தில் உறையும் நவ நரசிம்மர்களின் தரிசனம் தொடரும்.......
Labels: அஹோபில மடம், அஹோபிலம், மாலோலன்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home