Monday, January 4, 2010

தமிழுக்கு ஏற்றம் தரும் விழா - 5

Visit BlogAdda.com to discover Indian blogs
வைகுண்ட ஏகாதசி சேவைகள்

கருமாரி திரிபுர சுந்தரி ஆலயம்
ஸ்ரீநிவாசர் அரங்கநாதர் திருக்கோலம்

( மாலை நம்பெருமாள் அணியும் மாலை போலவே)

காயத்ரியைக் காட்டிலும் சிறந்த மந்திரம் இல்லை. தாயை விஞ்சிய தெய்வம் இல்லை. காசியை விஞ்சிய புண்ணிய தீர்த்தம் இல்லை. ஏகாதசியை விஞ்சிய வேறு விரதமும் இல்லை என்பது முன்னோர் வாக்கு. தீட்டுக்காலத்தில் கூட ஏகாதசி விரதம் மேற்கொண்டால் பயன் உண்டு.

ஏகாதசி பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலப்பகுதியில்( பக்ஷம்) பதினொன்றாவது நாளாகும். கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் ஆகிய இந்த பதினோரு இந்திரியங்களால் செய்யப்படும் தீவினைகள் எல்லாம் இந்த பதினோராவது திதியில் ஏகாதசி விரதம் இருந்தால் அழிந்துவிடுவது உறுதி என்பர் முன்னோர்.

ஏகாதசி திதியின் உரிய தேவதை தர்ம தேவதை ஆகும். ஆகவே தர்ம திதியாகிய ஏகாதசி விரதத்தை தவறாமல் கடைபிடித்தால் தர்மத்திற்கு வளர்ச்சி ஏற்படும். தர்மத்தைக் காப்பாற்ற யுகம் யுகமாக அவதாரம் செய்யும் இறைவனுக்கும் மகிழ்ச்சி ஏற்படும்.


திருமயிலை ஆதி கேசவப் பெருமாள்
வெள்ளி கருடசேவை

( பெருமாள் வஜ்ர அங்கியில் அருள் பாலிக்கின்றார்)

ஏகாதசிகளுள் சிறந்தது மார்கழி மாத சுக்ல பக்ஷ ஏகாதசி ஆகும். இது வைகுண்ட ஏகாதசி என்றும் முக்கோடி ஏகாதசி என்றும் மோக்ஷ ஏகாதசி என்றும் அழைக்கப்படுகின்றது. இது மூன்று கோடி ஏகாதசிகளுக்கு சமம் என்பதால் முக்கோடி ஏகாதசி.

திருமால் தேவர்களின் வேண்டுகோளை ஏற்று முரன் என்னும் அரக்கனை அழிக்க சென்றார். பல வருடங்கள் அவனுடன் போரிட்டும் அவனை எளிதாக அழிக்க முடியவில்லை எனவே பெருமாள் பத்ரிகாச்ரமம் சென்று அங்கு ஒரு குகையில் படுத்துக் கொண்டார். திருமாலைத் தேடி வந்த அசுரன் அவர் நித்திரையில் இருப்பதை கண்டு அவரை தாக்கத் தொடங்கினார். அப்போது பெருமாளின் திருமேனியிலிருந்து ஒரு மகத்தான சக்தி ( தேவி ஸ்வரூபம்) தோன்றி அந்த அசுரனை மாய்த்தது.

இதனால் மகிழ்ந்த எம்பெருமான் அவள் வேண்டிய வண்ணம் அவளுக்கு ஏகாதசி என்னும் நாமம் விளங்கும் என்றும். ஏகாதசி அன்று விரதமிருந்து பெருமாளை எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இம்மையிலும், மறுமையிலும் நல்லவனற்றையே அருளுவதாக வரம் கொடுத்தார்.

ஏகாதசி விரதம், இம்மையில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை அளிப்பதோடு மறுமையில் பேரின்பத்தையும் அருளும் என்பது உறுதி.


ஆதிகேசவர் வெள்ளி கருடசேவை

இந்த மகத்தான விரதத்தை பின்பற்ற சில இன்றியமையாத விதிமுறைகளை முன்னோர்கள் வகுத்துள்ளனர். அவை தவம், தானம், புலனடக்கம் என்று மூன்று வகைப்படும். புலனடக்கத்தின் அடிப்படையாக இருப்பது உணவுக்கட்டுப்பாடு, எனவேதான் ஏகாதசி நன்னாளில் முழுமையான உண்ணாவிரதத்தை முக்கியமாகக் கொண்டனர்.

ஆகவே அமைதியாக தியானத்தில் அமர்ந்து எப்போதும் இறைவன் திருநாமத்தை ஸ்மரணம் செய்து கொண்டிருக்கலாம். இதனால் உடலும் உள்ளமும் தூய்மை அடைந்து பக்குவபப்டுகின்றது. எனவே இவ்விரதத்தை கடைப்பிடிப்பவர் தவம் செய்ய தகுதி உடையவர் ஆகின்றார்.

அல்லும் பகலும் அனவரதமும் இறைவனைப் பற்றி நினைத்தல், அவரின் இனிமையான திருநாமங்களை நா இனிக்கக் கூறுதல், அவர் எழுந்தருளி அருள் பாலிக்கும் கோவில்களிலோ அல்லது தங்கள் தங்கள் இல்லங்களிலேயோ ஆடி ஆடி அகம் கரைந்து, இசைப் பாடி பாடி கண்ணீர் மல்கி அவரிடம் நம் மனம், மொழி, மெய்களை ஈடுபடுத்தவே விரதம் இருக்க வேண்டும்.

இவ்வாறு ஏகாதசி விரதம் இருந்த பின், இறைவனுக்கு நிவேதனம் செய்த உணவை உண்பதற்கு முன் அதை தகுந்த பெரியோர்களுக்கு முதலில் வழங்கி உண்ணச் செய்யும் துவாதசி பாரணையில் தானம் என்ற உயர்ந்த பண்பு விளங்குகின்றது.

ஆதிகேசவர் வஜ்ர அங்கி பின்னழகு

இனி ஏகாதசி விரத மகிமையைப் பற்றிக்காண்போமா? திருமாலின் அவதாரமான ஸ்ரீராமனே பங்குனி மாதத்தின் விஜயா என்னும் ஏகாதசி விரதம் இருந்து பின் கடலைக் கடந்து சென்று தசக்ரீவனை அழித்து இலங்கையை வென்றார் என்று புராணம் கூறுகின்றது. இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் சீதா தேவியின் அருளைப் பெறலாம்.

ஒரு வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருந்து, துவாதசிப்பாரணை முடித்த அம்பரீஷ மஹாராஜாவை தவத்தில் சிறந்த துர்வாச முனிவராலும் ஒன்றும் செய்ய முடியாதவாறு திருமாலில் சுதர்சன சக்கரம் காத்தது என்று பாகவத புராணம் கூறுகின்றது.


நுங்கம்பாக்கம் ஸ்ரீநிவாசப்பெருமாள்

கருட வாகன சேவை

திருக்குறுங்குடி என்ற தலத்தில் பாணர் குலத்தைச் சார்ந்த நம்பாடுவான் ஏகாதசி அன்று எம்பெருமானைப் பாடி தானும் உயர்வு பெற்றதோடு தன்னை அழிக்க வந்த பிரம்மராக்ஷனுக்கும் சாப விமோசனம் அளித்ததை கைசிக புராணம் கூறுகின்றது.

ருக்மாங்கதன் என்ற மாமன்னன் இந்த விரதத்தை தானும் கடைப்பிடித்து தன் நாட்டவரும் பின்பற்றுமாறு செய்ததால் அவன் பெற்ற பெரும் பயனை ருக்மாங்கத சரித்திரம் கூறுகின்றது.

பீமன் ஒர் ஆண்டு முழுவதும் இந்த விரதத்தை செய்ய முடியாத நிலையில் ஆனி மாத சுக்ல பக்ஷ ஏகாதசியாகிய நிர்ஜலா என்ற விரதத்தை மட்டுமே நிறைவேற்றி ஓர் ஆண்டின் முழுப்பயனையும் பெற்றதாக பத்மபுராணம் கூறுகின்றது.

பாற்கடலில் மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு எம்பெருமான் அமுதம் கடைந்து எடுத்த ஒப்பற்ற நாள் வைகுண்ட ஏகாதசி ஆகும். குருக்ஷேத்திரப் போரில் பார்த்தனுக்கு கீதையை உபதேசித்த நாள் இந்நாள்தான்.வைகுண்ட ஏகாதசி எல்லா விஷ்ணுவாலயங்களிலும் கொண்டாடப்பெற்றாலும், இதன் பெருமை மிகுதியாக விளங்குவது சோழ நாட்டு திருவரங்கத்தில்தான். ஏகாதசியின் முழுப்பயனையும் அடையும் வாய்ப்பு திருவரங்கத்தில் அமைந்திருந்தாலும் அதே அமைப்பை நம் முன்னோர்கள் நாம் எல்லோரும் உய்ய அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் அமைத்தனர்.


ஸ்ரீநிவாசப்பெருமாள் பின்னழகு

எம்பெருமானுடன் போராடித் தோற்று அவர் அருள் பெற்ற அரக்கர்கள் இருவர் தாம் பெற்ற வைகுண்ட இன்பத்தை , உலகில் உள்ள எல்லாரும் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தால் எம்பெருமானை நோக்கி வைகுண்ட ஏகாதசியன்று திருவரங்க வடக்கு வாசல் வழியாகத் தாங்கள் அர்ச்சாவதாரத்தில் வெளி வரும் போது தங்களை தரிசிப்பவர்களும், தங்களை பின் தொடர்ந்து வருபவர்களும் எத்தனை கொடியவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு முக்தி அருள வேண்டும் என்றும் வேண்டினார்கள். அதன் காரணமாகவே வைகுண்ட ஏகாதசியன்று பரமபதவாசல் வழியாக எம்பெருமான் பவனி வரும் பெருநிகழ்ச்சி ஏற்பட்டது

திருமயிலை மாதவப்பெருமாள் ஆலயம்

பரமபத வாசல்

பல வடிவங்களில் எம்பெருமான் அவதரித்து பலரையும் காத்தது போல, அர்ச்சாவதாரத்தில் தானே முக்தியடையும் ஒருவனாக நடித்து அவ்வாறு அடைபவன் தன் முக்தி பயணத்தில் என்னென்ன மாற்றங்களையும், வரவேற்புகளையும் பேரின்பத்தையும் பெறுவானோ, அவைகளை நிகழ்த்தி காட்டும் முறையில் பெருமாளின் வைகுண்ட ஏகாதசி புறப்பாடும் திருவுலாவும் விளங்குகின்றன. இப்பதிவில் அந்த சில புறப்பாடுகளைக் கண்டு களித்து தாங்களும் வைகுண்டப்பேறு அடைய வேண்டுகிறேன்.

Labels: , ,

2 Comments:

Blogger Jayashree said...

பொங்கல் வாழ்த்துக்கள் . இந்த முறை வைகுண்ட ஏகாதசிக்கு முன் தினம் திருமிழிசை வீற்றிருந்தபெருமாள் வஜ்ராங்கி சேவையும், ஏகாதசிக்கு ஏகாந்த சேவையில கையும் க்ரீடமும் வைரத்தில் ஜொலிக்க, உடம்பெல்லாம் பூலங்கியுடன் வரதராஜ பெருமாளையும் கண்நிறைய மனம் நிறைய தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. உங்கள் ஃபோட்டோஸ் நினைவுக்கு வந்தது

January 15, 2010 at 11:17 PM  
Blogger Kailashi said...

ஜெகந்நாதப்பெருமாளின் வஜ்ரங்கி சேவை மற்றும் பூலங்கியில் வரதராஜர், அருமை அருமை நினைக்கவே உள்ளம் முழுதும் மகிழ்வாக உள்ளதே. நீங்கள் பாக்கியம் செய்தவர்தான் ஜெயஸ்ரீ.

January 21, 2010 at 7:01 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home