Saturday, October 3, 2009

ஸ்ரீ சத்ய நாராயணப் பெருமாள் கருட சேவை-1

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீயப்பதியாய், அவாப்த ஸமஸ்த காமனாய், ஸகல கல்யாண குணாத்மனாய், ஸ்ரீ வைகுண்ட நிகேதானாய் ஸ்ரீ பூமி, நீளா தேவி ஸமேத ஸ்ரீ நாராயணன், உலகோர் உய்யுமாறு ஸ்ரீ மஹா லக்ஷ்மி ஸமேத ஸ்ரீ சத்ய நாராயண பெருமான் எழுந்தருளி அருள் பாலிக்கும் தலம்தான் மாபில ஷேத்திரம் என்று அழைக்கப்படும் சென்னை மேற்கு மாம்பல சத்யநராயண திருக்கோவில் ஆகும். கொண்டு பக்தர்களை காக்கும் சத்ய நாராயணப் பெருமாள் ஆலயம் ஆகும்.

ஆந்திர மாநிலம் அன்னவரத்தில் மலைக் கோவில் கொண்டு சேவை சாதிக்கும் சத்ய நாராயணப் பெருமாளை இங்கு நாம் எல்லாரும் சேவித்து, அருள் பெருமாறு 1956 ஆண்டு பிரதிஷ்டை செய்தவர் P.V. சேஷாத்திரி பட்டர் ஆவார். பின் 1976 , 1998. 2008 ஆண்டுகளில் இத்திருக்கோவிலுக்கு சம்பரோஷணம் நடை பெற்றது. சமீபத்திலே நிறுவப்பட்ட ஆலயம் என்றாலும் தன் கருணையினாலும் மகிமையினாலும் அனேக பக்தர்களை தன்னிடம் ஈர்த்து அருள் பாலிக்கின்றார் ஸ்ரீசத்ய நாராயணர். ஒவ்வொரு நாளும் அதிகமாகிக் கொண்டு செல்லும் பதர்களின் கூட்டமே இந்த பெருமாளின் சக்திக்கு ஒரு சான்று.

மூலவர் ஸ்ரீ சத்ய நாராயணப் பெருமாள், வடக்கு நோக்கிய திருமுக மண்டலம், பிரசன்ன வதனத்துடனும், கமல நயனங்களுடன், பவழம் போல சிவந்த இதழில் குமிண் சிரிப்புடன், நிர்மலமான பட்டுப் பீதாம்பரங்களுடன், கிரீட, ஹார, கேயூர கடகாதி திவ்ய ஆபரணங்களுடன், சங்கும், சக்கரமும், கதையும் தாங்கி அபய ஹஸ்தத்துடன் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றனர் . முத்தங்கியில் பெருமாளையும், தாயாரையும் தரிசிக்க ஆயிரம் கண் கூடப் போதாது அவ்வளவு சௌந்தர்யம் எம்பெருமானுக்கும் தாயாருக்கும். கல்யாணக் கோலமாக பெருமாளுக்கு வலப்பக்கத்தில் பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் மேல் கரமிரண்டிலும் பத்ம மலரை ஏந்தி கீழ் கரங்களில் அபய, வரத ஹஸ்தங்களுடன் நமக்கு பதினாறு செல்வங்க€ளையும் வழங்கும் ஐஸ்வர்ய லக்ஷ்மியாய் மஹா லக்ஷ்மித் தாயார் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள்.

சக்ரவர்த்தி திருமகன் கையிலே வில்லேந்தி கோதண்ட ராமராக, அன்னை ஜானகி, மற்றும் இளைய பெருமாளுடன் தனி சன்னதியிலும் , சிறிய திருவடியாம் மாருதி வலக்கையிலே சஞ்žவி மலையையும் இடக்கையில் சௌகந்தி மலரையும் ஏந்திய வண்ணம் சஞ்சிவி ஆஞ்சனேயராகவும் சேவை சாதிக்கின்றனர். லக்ஷ்மி நரசிம்மருக்கும், சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் ஆண்டாள் நாச்சியாருக்கும் தனி சன்னதிகள் உள்ளன. சகல கலைகளையும் நமக்கு வழங்க வல்ல சரஸ்வதி தாயாருக்கே குருவான லக்ஷ்மி ஹயகிரீவருக்கும் ஒரு சன்னதி இத்தலத்திலே உள்ளது. வியாழக்கிழமையன்று ஏல மாலை சார்த்தி இவரை வழிபட்டால் மாணவர்களுக்கு நன்றாகக் கல்வி விருத்தியடையும் என்பது ஐதீகம். முன் பக்கம் அறு கோண சக்கரத்தில் பதினாறு கரங்களுடன் சக்கரத்தழ்வாரும், பின் பக்கம் முக்கோண சக்கரத்தில் யோக நரசிம்மரும் விள்ங்கும் சக்கரத்தாழ்வாருக்கும் தனி சன்னதி உள்ளது. வடகலை சம்பிரதாய இத்திருக்கோவிலில், வைகாசான ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன.

வருடம் முழுவதும் கோலாகலமாக பல்வேறு உற்சவங்கள் நடைபெறுகின்றது இத்திருக்கோவிலில். தமிழ் வருடப்பிறப்பன்று புஷ்பாங்கியில் பெருமாளும் தாயாரும் சேவை சாதிக்கின்றனர், மற்றும் இரவு புஷ்பப்பல்லக்கிலே ஊர்வலம் வருகின்றார். ஆனி மாதம் அவதார உற்சவத்தையொட்டி 10 நாள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. பத்து நாட்களும் காலையும் மாலையும் பெருமாள் பல் வேறு வாகனங்களில் எழுந்தருளி சேவை சாதிப்பதுடன், பத்தி உலாத்தலும், ஊஞ்சல் சேவையும் தந்தருளுகின்றார். திவ்ய தேசங்களிலே உள்ளது போல் பெருமாள் சத்ய கோடி விமானத்ததில் 10 நாள் இரவு சேவை சாதிக்கின்றார். பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு கருட சேவை கண்டருளுகின்றார் சத்ய நாராயணப் பெருமாள் அந்த கருட சேவையின் சில காட்சிகளை இப்பதிவில் காணுகின்றீர்கள். இக்கருடன் பழைய கருடன் 2008ம் ஆண்டு நடைபெற்ற சம்ப்ரோக்ஷணத்தின் போது அன்பர்கள் புது கருடன் சமர்ப்பணம் செய்தனர் அக்கருடசேவையை அடுத்த பதிவில் காணலாம்.

பையுடை நாகப்படையானில் எழிலாக பவனி வரும்
சத்ய நாராயணப் பெருமாள்

திருமலையில் எவ்வாறி மலையப்ப சுவாமி மூலவரின் லக்ஷ்மி ஹாரம் அணிந்து மூலவராக சேவை சாதிக்கின்றாரோ, அது போலவே சத்ய நாராயணப் பெருமாளும் லக்ஷ்மி ஹாரம் அணிந்து செங்கோல் தாங்கி ஓடும் புள்ளேறி நாம் எல்லோரும் உய்ய பவனி வரும் அழகை எப்படி வர்ணிப்பது என்றே புரியவில்லை தாங்களே கண்டு மகிழுங்கள்.



விநதை சிறுவன் மேல் லோக சரண்யன்

பதகமுதலைவாய்ப் பட்டகளிறு

கதறி கை கூப்பி என் கண்ணா! கண்ணா! வென்ன

உதவ புள்ளூர்ந்து அங்குயர் தீர்த்த

எம் முகில் வண்ணன், குன்றெடுத்த குடமாடீ அங்கமலக்கண்ணன் கருடனில் ஆரோகணித்து எழிலாக மாட வீதி வலம் வரும் அழகு.


பன்றியுமாமையும் மீனமுமாகிய பாற்கடல் வண்ணர்
ஸத்ய
நாராயணர், ஸத்ய தேவர், சத்யர், காம தேவர்
எரிசினப் பறவையேறி ஊர்ந்து வரும் அழகு





அஞ்சுடராழி கையகத்தேந்தும்
அஞ்சனவண்ணரின் பின்னழகு


ஆடியிலே ஆடிப்பூர பத்து நாள் உற்சவத்தின் போது மாலை பல் வேறு அலங்காரத்தில் ஆண்டாள் நாச்சியாருடன் சேவை சாதிக்கின்றார் பெருமாள். புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு அலங்காரத்தில் மூலவரும் உற்சவரும் சேவை சாதிக்கின்றனர். நவராத்திரியின் போது பத்து நாட்களும் பெருமாளும் தசாவதார மூர்த்தியாக, தாயாருடன் கொலுக் காட்சி தருகின்றார், இது இத்தலத்தின் ஒரு சிறப்பு. விஜய தசமியன்று குதிரை வாகனத்தில் எழுந்தருளி வன்னி மரத்தில் அம்பு போடுகின்றார் பெருமாள். ஐப்பசியில் பவித்ரோத்ஸவம் நடைபெறுகின்றது. மார்கழியில் 21 நாள் அத்யயன உற்சவத்தில் பல் வேறு கோலங்களில் சேவை சாதிக்கும் பெருமாள், வைகுண்ட ஏகாதசியன்று பெருமாளும் தாயாரும் புஷ்பாங்கியிலே சேவைசாதிக்கின்றனர். .இராப்பத்து உற்சவத்தின் போது பரமபத வாசல் வழியாக வெளிவந்து பல் வேறு நடையழகை நமக்கு காண்பிக்கிறார்.. நம்மாழ்வார் மோட்சமும் சிறப்பாக நடைபெறுகின்றது. போகியன்று ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது. மற்றும் ஸ்ரீ இராம நவமி 10 நாள் உற்சவத்தின் போது இராமாயணத்தின் பல் வேறு நிகழ்ச்சிகளை உணர்த்தும் வகையில் ஸ்ரீ ராமருக்கு அலங்காரம் நடைபெறுகின்றது. மேலும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஜயந்தி 10 நாள் உற்சவமும், ஸ்ரீ ஜயந்தி, அனுமந் ஜயந்தி, தீபாவளிப் புறப்பாடு, கனுப் பொங்கல், கார்த்திகை தீபம், பங்குனி உத்திர திருக்கல்யாணம் முதலிய பண்டிகைகள் ஒரு நாள் உற்சவமாக சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இந்த உற்சவங்களின் ஸ்ரீ சத்ய நாராயணர், உபய நாச்சியார்கள், தாயார் ஆகியோர்களின் திவ்ய அழகைக் கண்டு அனுபவிக்க ஆயிரம் கண் தேவை. இவ்வாறு ஆண்டுக்கு ஏறக்குறைய 200 நாட்கள் உற்சவமாகவே திகழ்கின்றன இத்திருகோவிலில்.

இவ்வாலயத்திற்கே உரித்தான பிரத்யேக பூஜை பௌர்ணமி தினத்தன்று நடை பெறும் சத்ய நாராயண பூஜை ஆகும். இப்பூஜையின் மகத்துவத்தைப் பற்றி அடுத்த பதிவில் புது கருடனில் பெருமாள் பவனி வரும் காட்சிகளுடன் கண்டு அனுபவிக்கலாம் வந்து சேவியுங்கள் அன்பர்களே.

4 Comments:

Blogger குப்பன்.யாஹூ said...

Thank you so much for sharing this .

Very much useful.

October 4, 2009 at 10:52 AM  
Blogger S.Muruganandam said...

Welcome Ramji yahoo. Come and enjoy the beauty of the Lord in coming days also.

October 8, 2009 at 8:34 AM  
Blogger குமரன் (Kumaran) said...

இந்த இடுகையின் தொடக்கத்தைப் பார்த்தால் என்னவோ கத்யத்ரயத்தைப் படிப்பது போல் இருக்கிறது கைலாஷி ஐயா. இடுகை முழுக்க வருணனைகளும் பாசுரங்களும் மிக அழகாக இருக்கின்றன.

October 16, 2009 at 5:20 PM  
Blogger S.Muruganandam said...

வாருங்கள் குமரன். அது சத்ய நாராயணப் பெருமாளின் கல்யாண குணங்களைக் கூறுகின்றது.

October 20, 2009 at 7:23 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home