Thursday, January 16, 2014

திருக்குருகூர் பொலிந்து நின்ற பிரான் கருட சேவை

Visit BlogAdda.com to discover Indian blogs
ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -5இது வரை வந்த பதிவுகளில் நம்மாழ்வாரின் திருவவதாரத் திருநாள் பெருவிழாவின் ஐந்தாம் திருநாள் காலை  நவதிருப்பதி பெருமாள்களின் மங்களாசாசனம் மற்றும் திருமஞ்சனம் பற்றி பார்த்தோம். பின் பெரிய திருவடியில் ஒன்பது பெருமாள்களும் சடகோபருக்கும் சேவை சாதிக்கும் அழகை இனி வரும் பதிவுகளில் காணலாம் அன்பர்களே. 

 இரவு சுமார் 10.30 மணியளவில் தங்க அன்ன வாகனத்தில் நம்மாழ்வார் அன்ன வாகனத்தில் திருக்கோயிலை விட்டு வெளியே வருகின்றார். அவருடன் கூடவே மதுரகவியாழ்வாரும் பரங்கி நாற்காலியில் வந்து கருடசேவைக்காக வெளியே வந்து காத்திருக்கின்றார். திருக்கோவிலின் மணிக்கதவம் சார்த்தப்பட்டுள்ளது. அன்பர்கள் அனைவரும் நம்மாழ்வாரின் பின்னால் எப்போது மணிக்கதவம் திறக்கும் எம்பெருமான்கள் கருட சேவை கிடைக்கும் என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறனர். 

மங்களம் வாத்தியங்கள் முழங்க சுமார் 11 மணியளவில் நேய நிலைக்கதவம் திறக்கப்பட்டது. முதலில் ஆழ்வார் திருநகரி  பொலிந்து நின்ற பிரான் நம்மாழ்வாருக்கு பெரிய திருவடியில் சேவை சாதித்தார்.  பூரண மல்ர் அலங்காரதுடன் திருக்கரங்களில் கிளி ஏந்தி, சர்வ பூஷணலங்காரத்தில் பட்டு பீதாம்பரத்தில்  பெருமாள் சேவை சாதித்தார். கோபுர வாசல் சேவையின் போது வண்ண வண்ண மத்தாப்புகள் ஓளி சிதறின. அன்பர்கள் அனைவரும்  மனம் ஒன்றி நம்மாழ்வருடன் பெருமாளின் வைகுண்ட பேறு நல்கும் கருட சேவையை கண்டு களித்தனர்.   வாருங்கள் ஒவ்வொரு பெருமாளின் கருட சேவையின் அழகைக் காணலாம்.     


முதலாவதாக நம்மாழ்வாருக்கு கருடசேவை சாதிப்பவர் குன்றம் போல் மணி மாடம் நீடு  திருக்குருகூரின் பொலிந்து நின்ற பெருமான் ஆவார். இத்தலம் நம்மாழ்வார் கோயில் கொண்டுள்ளதால்  ஆழ்வார்  திருநகரி என்றும் அழைக்கப்படுகின்றது.

ஓடியோடி பலபிறப்பும் பிறந்து மற்றோர் தெய்வம்
பாடியாடிப் பணிந்து பலபடிகளால் வழியேறிக் கண்டீர்
கூடிவானவரேத்த நின்ற திருக்குருகூருதனுள்
ஆடுபுட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே

என்று நம்மாழ்வார் பாடியபடி  பிரளய காலத்தில் வெள்ளத்தால் அழிந்த உலகம் மீண்டும் தோன்றும் போது முதலில் தோன்றிய தலம் ஆகையால்  ஆதிபுரி என்றும். சங்கு வலம் வந்து பேறு எய்திய தலம் ஆகையால் குருகூர் என்றும் அழைக்கப்படுகின்றது.

ஹம்ச வாகனத்தில் நம்மாழ்வார்  

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் தண்பொருநல் எனப்படும் தாமிரபரணியாற்றின் தென் கரையில், வண்டலம்பும் சோலைகளையுடையதும், குன்றம் போல் மணி மாட மாளிகைகள் சூழ்ந்திருப்பதும், சிரங்களால் அமரர் வந்து வணங்கும் இந்த க்ஷேத்திரம் அமைந்துள்ளது.

சுவாமி நம்மாழ்வார், ஸ்ரீ இராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகிய முப்பெரும் ஆச்சார்யர்களால் சிறப்புப்பெற்ற தலம் என்பதால் இதனை முப்புரியூட்டிய திவ்யதேசம் என்றும், அகரம்(ஆழ்வார்), உகரம்(உடையவர்), மகரம்(மணவாள மாமுனிகள்) என்ற அ,உ,மகாரங்களான திவ்ய தேசம் என்றும் கூறுவர்.

 பரங்கி நாற்காலியில் மதுரகவியாழ்வார்


மூலவர் : ஆதிநாதர், நின்ற திருக்கோலம், கிழக்குப் பார்த்த திருமுக மண்டலம்.
உற்சவர்: பொலிந்து நின்ற பிரான்
தாயார் : ஆதிநாத வல்லி, குருகூர் வல்லி( தாயார்களுக்கு தனித்தனி சன்னதி)
விமானம்: கோவிந்த விமானம்
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், திருசங்கண்ணி துறை
தலவிருட்சம்: புளியமரம்
பிரத்யட்சம் : பிரம்மா, நம்மாழ்வார், மதுரகவி
ஆகமம் : பஞ்சராத்ரம் – சம்பிரதாயம்: தென்கலை.
மங்களாசாசனம் : நம்மாழ்வார் 11 பாசுரங்கள்.
கிரகம்: குருஸ்தலம்

தலவரலாறு: இவ்வுலகம் அழிந்து இரண்டு பரார்த்த கால அளவு வரை, உலகத்தில் உயிரினங்கள் தான் ஒருவனாகவே இருந்தார். பிறகு இந்த உலகை படைத்தார். அப்போது இக்குருகாக்ஷேத்திரத்தை தன் தீராத விளையாட்டுக்கு ஏற்ற இடமாக ஏற்படுத்திக் கொண்ட பின் நான்முகனைப் படைத்தார். பின்னர் நான்முகன் படைப்புத்தொழிலை துவங்கும் முன் அவர் நாராயணரை நோக்கி தவம் செய்தார். பிரம்மனின் தவத்திற்கு மெச்சி அவருக்கு பிரத்யட்சமான பெருமாள் அவரை நோக்கி உன்னுடைய தவத்தால் திருப்தியடைந்தேன், உனக்கு நான் என்றென்றும் துணையாக இருந்து நீ செய்யும் படைப்புத் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பேன் என உறுதியளித்து ஒரு இரகசியத்தையும் நான்முகனுக்கு  கூறுகின்றார். அண்டத்தை படைத்த பின்பு, அண்டத்தில் அடங்கிய பூமியில் உள்ள மலய மலையிலிருந்து தோன்றும் தாமிரபரணி என்னும் நதி தெற்கு லவண சமுத்திரத்தில் சேருகின்றது. அந்த நதியின் தென்கரையிலே கடலுக்கு ஒரு யோசனை தூரம் மேற்கே உள்ள தலம் மனோகரமாய் இருப்பதால் இதில் நான் வாசம் செய்கின்றேன். நீ இப்போது கண்ட எனது திருமேனியோடும் திருமகளோடும் கூடி நித்தம் விளையாடிக் கொண்டிருக்கிறேன். ஹரி க்ஷேத்திரங்களில் நான் முதன் முதலில் அவதரித்ததால் இது "ஆதி க்ஷேத்திரம்" என்றழைக்கப்படும். பிரம்மாவும் தாங்கள் குருவாக இருந்து இந்த தலத்தைக் காட்டியதால் குருகூர் என்றும் வழங்கப்பட வேண்டும் என்று வேண்ட அவ்வாறே வரம் அளித்தார்.

பின் நாராயணர் பிரம்மனிடம் குருகாக்ஷேத்திரம் சென்று ஆதிநாதனை வழிபட உன்னுடைய வேண்டுதல்கள் முழுவதும் பலிக்கும். சில வருடங்களுக்குப்பின்  இப்போது கண்ட திருமேனியை அனைவரும் கண்ணிலே காணும் படியாக அந்த ஷேத்திரத்தில் காண்பிக்கப் போகின்றேன். பூமிக்கு அழிவு உண்டாகும் காலத்தில் கூட இந்த குருகாஷேத்திரம் அழியாது.  இருபத்தெட்டாவது கலியுகத்திலே “சடகோபர்” என்னும் திருநாமம் கொண்டு யோகியாய் அவதரிக்கப் போகிறேன். அப்போது வடமொழி வேதங்களை தமிழ் மறைகளாக்கப் போகிறேன். அத்தமிழ் மறைகளாலேயே கலியுகத்தில் வெகு ஜனங்கள் முக்தியடையப் போகிறார்கள் என்று பிரம்மனிடம் கூறிவிட்டு நாராயணன் அந்தர்தியானமானார். 


பஞ்ச மஹா க்ஷேத்திரம்:
இந்த க்ஷேத்திரம் இதர புண்ணிய ஸ்தலங்களைக் காட்டிலும் சிறந்தது. இந்த க்ஷேத்திரத்தை நினைத்த மாத்திரத்திலேயே சகல பாவங்களும் அழிந்து விடும். இந்த தலம் பஞ்ச மஹா க்ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகின்றது. 1) ஆதி க்ஷேத்திரம், 2) வராஹ க்ஷேத்திரம், 3) சேஷ க்ஷேத்திரம், 4) தீர்த்த க்ஷேத்திரம், 5) தாந்த க்ஷேத்திரம்  என ஐந்து பெயர்கள் உண்டு.  

1) ஆதி க்ஷேத்திரம்:  பூமியிலுள்ள ஹரி க்ஷேத்திரங்களில் மஹா விஷ்ணு முதன் முதலாக வாசம் செய்த காரணத்தால் இது ஆதி ஷேத்திரம் என அழைக்கப்படுகின்றது. பெருமாளும் ஆதிநாதன் என்றழைக்கப்படுகின்றார். இதனையே நம்மாழ்வாரும்

ஒன்றுந் தேவுமுலகு முயிருமுற்றும் யாதுமில்லா
அன்றுநான் முகன்றன்னோடு தேவருலகோடுயிர் படைத்தான்
குன்றம்போல் மணிமாட நீடு திருக்கூரதனுள்
நின்ற ஆதிப்பிரானுரையுமூர்.   என்று திருக்குருகூரின் பெருமையைப் பாடுகின்றார்.

2) வராஹ க்ஷேத்திரம்: ஊழிக்காலத்தில் வெள்ளத்தால் மூழ்கி பாசி படிந்து கிடந்த பூமிப்பிராட்டியை மீட்டு எடுப்பதற்காக ஆதிப்பிரானானவர், நீருக்கும், சேற்றிற்கும் அஞ்சாத வராஹ ரூபம் கொண்ட, கொம்பினால் சேற்றைக் கிண்டி எடுத்து பூமிப்பிராட்டியைமீட்டு மடியில் வைத்து இளைப்பாற்றி ஞான உபதேசம் செய்த காரணத்தினால் ஞானபிரான் என வழங்கப்பட்டார். இன்றும் அதே கோலத்தில் ஆதிநாதருக்கு வலப்பக்கத்தில்  தனி சன்னதியில் சேவை சாதிக்கின்றார்.   

பூமிப்பிராட்டியாருக்கு உபதேசித்த ஞான உபதேசமானது சீரிய பொருள் அமைந்ததாகும். என்னையே திடமான கதியாகக் கொண்டு சரணடைந்தவன் மரண காலத்தில் நினைவிழந்து கட்டையைப் போலவும், கல்லைப் போலவும்  கிடக்கும் போது அவன், என்னை நினையா விட்டாலும், நான் அவனை நினைத்து எல்லாவற்றிலும் உயர்ந்த கதியை அடைவிப்பேன் என்பதாகும்.

3) சேஷ க்ஷேத்திரம்: திருவனந்தாழ்வானாகிய ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷன் உறங்காப்புளியாக வாழும் தலமாகையாலும், திருப்புளியாகிய அதனடியில் ஆதிபிரான் ஸ்ரீ நம்மாழ்வாராகப் பிறந்து கோயில் கொண்ட தலமாகையால் இது சேஷ க்ஷேத்திரம் ஆகியது.

4) தீர்த்த க்ஷேத்திரம்: தன்பொருநை எனபப்டும் தாமிரபரணி ஆறும், அதிலுள்ள திருச்சங்காணித் துறையும் தீர்த்தங்களாகவும் விளங்குவதால் இது தீர்த்த ஷேத்திரம் எனப்படுகின்றது.

5) தாந்த க்ஷேத்திரம்: தாந்தன் எனும் இழிபிறப்பினன் திருமாலினுடைய  அன்பினால் தேவரும் தொழும்படியாக உயர்ந்த ஊர் ஆகையால் இது தாந்த ஷேத்திரம் என அழைக்கப்படுகின்றது.

ஆடுபுட்கொடி ஆதி மூர்த்தி


நம்மாழ்வாரின் பாசுரங்கள் மாலையாக்கப்பட்டு பெருமாளை அலங்கரிப்பதைக் காணுங்கள். இரண்டு திருவாசிகள் மற்றும் கருடாழ்வாருக்கும் முழுவதும் மலர் அலங்காரம் முதல் தடவையாக அடியேன் தரிசனம் செய்தேன். பெருமாளின் சிறிய திருவாசியில் தசாவதாரத்தை கவனித்தீர்களா அன்பர்களே. இப்படங்கள் எல்லாம் கோபுர வாசல் சேவையின் போது  தூரத்தில் இருந்து எடுத்தவையாதனால் அவ்வளவு  சரியாக வரவில்லை மன்னிக்கவும். 

வேடனுன் யானையும் முக்தி அடைந்த வரலாறு: முன்பொரு காலத்தில் சில மகரிஷிகள் ஸ்தல யாத்திரை செய்யும்போது  வகுளம், சண்பகம்  முதலிய மரங்களும், தாமிரபரணி நதி கரையோரம் அமைந்ததுமான இந்த ஆதி க்ஷேத்திரத்தை அடைந்து நதியில் குளித்து பெருமாளை வணங்கி இரவில் அங்கே தங்கினர் காலையில் அவர்களுக்கு எதிரே ஒரு வேடனுன் ஒரு மத யானையும் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். இறிதியில் இருவரும் மாண்டனர். ஆதிக்ஷேத்திரத்தில் மாண்டததனால் விஷ்ணு தூதர்கள் இருவரையும் அழகிய விமானதிலேற்றி விஷ்ணு லோகத்திற்கு அழைத்து சென்றனர். மகாபாவிகளான யானையையும், வேடனையும் நரகத்திற்கு அழைத்துச் செல்ல வந்த எமதூதர்கள், விஷ்ணு தூதர்களை எதிர்க்க சக்தியில்லாமல் திரும்பி சென்றனர். இவ்வாறு மகாபாவிகளுக்கும், ஐந்தறிவு கொண்ட விலங்கிற்கும் இந்த க்ஷேத்திரத்தில் முக்தி கிட்டியது. 

தாந்தன் வரலாறு:
சாளக்கிராமத்தில் ஒரு அந்தணச்சிறுவன் வேதம் படிக்கும் போது  அதை சரியாக படிக்காமல் போனதால் அவனுடைய குரு அவனை இழி குலத்தில் பிறக்க சபித்தார். அவனும் படிப்பை நிறுத்திவிட்டு திருமால் ஸ்தலங்களில் ஆலய துப்புரவு பணியில் ஈடுபட்டு தன் காலத்தை கடத்தினான். மறு பிறவியில் அவன் தாந்தன் என்னும்  பெயரில் கீழ் குலத்தில் பிறந்து ஒழுக்கத்தில் சிறந்தவனாக விளங்கினார். பின்னர் குருகூர் வந்து திருச்சங்கண்ணி துறைக்கு வந்து ஆதிநாதனை வழிபட்டு வந்தான்.

ஒரு சமயம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும்  போர் நடந்த போது இந்திரனின் பலம் குறைந்தது. நான்முகனின் ஆலோசனைப்படி இந்திரன்  மற்ற தேவர்களுடன்  ஆதிக்ஷேத்திரத்திற்கு வந்து சேர்ந்தான். மஹா விஷ்ணுவை பூஜிப்பதற்காக இந்திரனும் தேவ கன்னியரும் மலர் பறிக்க சென்றனர். தாந்தனும் அங்கு  பூப்பறித்துக்கொண்டிருந்ததைப் பார்த்து அவனை சூத்ரன், சூத்ரன் என்று இகழ்ந்தார்கள், மனதில் கோபம் இல்லாமல் தாந்தன் ஆதிநாதனை ஆராதிக்க சென்றான். அங்கும் இந்திராதி தேவர்கள் தாந்தனை சூத்ரன் என்று பழிக்க  அவர்களது கண் குருடாகியது. அவர்களை பெருமாளை சரணடைய, அசரீரியாக நீங்கள் விஷ்ணு பக்தனான தாந்தனை ஜாதி துவேஷம் கொண்டு அவமதித்ததால் இவ்வாறு நேர்ந்தது, அவனிடம் மன்னிப்பு கேளுங்கள் என்றார்.  


இந்திரனும் தாந்தனிடம் ”நீ எங்களை மன்னித்தால்தான் திருவுக்கும் திருவாகிய செல்வன் எங்களுக்கு அனுக்கிரகம் செய்வான்”  என கூறி தாங்கள் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவிக்க, தாந்தனும் கேசவனை வணங்க அவர் அருளால் இந்திராதி தேவர்களுக்கு கண் தெரிந்தது. ஆகவே பெருமாள் பொலிந்து நின்ற பிரான் எனப்படுகின்றார். பின்னர் ஆதிநாதர் தாந்தனுக்கு வைகுண்டப்பதவியும் அளித்தார். ஆதிநாதர் கோவிலில் அர்த்த மண்டப முதற்படிக்கட்டில் தாந்தன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.  சங்கு பூஜித்து முக்தி பெற்ற க்ஷேத்திரம்:
குருகு என்ற தமிழ் சொல்லுக்கு நாரை, கோழி, குருகத்தி மலர் முதலான பல பொருள் இருப்பதுடன் சங்கு என்ற பெருமையும் உண்டு. குருகு(சங்கு) பேறு பெற்ற தலமாதலால் இப்பகுதி குருகூர் ஆனது. குருகன் என்னும் அரசன்  இப்பகுதியை ஆண்டதால் அவன் நினைவாக குருகூர் ஆனது என்பர்.  முன்பொரு காலத்தில் ஜம்பு நதிக்கரையில் சங்கன் என்னும் ஒரு முனிவர் இந்திரப்பதவி வேண்டி கடுந்தவம் செய்தார். அவன் முற்பிறவியில் கிராதன் என்னும் மஹாபாவியாக இருந்தவன் ஆயினும் அவன் ஒரு ‘னாள் வேட்டையாடி விட்டு வந்த போது தாந்தன் படுத்து தூங்கிய ஆலமராத்தினடியில் தூங்கியதால் மறு பிறவியில் அவனை பிராமண குலத்தில் பிறக்கச் செய்தது. அவன் விஷ்ணுவையும் மற்ற தெய்வங்களையும் சமமாக பாவித்ததால் நாரதர் அவனுக்கு  நீ, தெற்கு லவணக் கடலில் சங்காக பிறக்கக் கடவாய் என்று சாபம் அளித்தார்.

சங்கமுனி சாப விமோசனம் வேண்டி வணங்க, நாரதரும் கவலைப் படாதே  நீ கிராத ஜன்மத்தில் செய்த பாவமும், இந்த ஜென்மத்தில் செய்யும் பாவங்களும் அழிந்து போகும், இந்திரப் பதவியை விரும்பாதே, மோட்சத்தில் மனதை வைத்து தென்திசையில் தாமிரபரணி நதிக்கரையில் ஆதிக்ஷேத்திரத்தில் பகலில் பகவானை சேவித்தும் இரவில் கடலில் காலத்தைக் கழித்துக்கொண்டிரு, இவ்வாறு ஆயிரம் வருட காலம் கழிந்த பின் தேவபிரான், ஸ்ரீதேவி, பூமிதேவி, நீலாதேவி சமேதராய் உன் முன்னே தோன்றுவார் உன் வேண்டுதலின் பேரில் ஒருவர் கன்ணுக்கும் புலப்படாத அவனது திருமேனியை அனைவருக்குக் காட்டப்போகிறான். அவருக்கு ஆதிநாதர் என்று திருநாமம். நீ தாமிரபரணியில் நீராடுவதால் அந்நதி தீர்தத்திற்குபெயர் வரப்போகின்றது என்று அருளினார் நாரதர்.

சங்கமுனியும் நாரதரின் சாபத்தினால் வங்கக்கடலிலே வலம்புரிச்சங்காக  ஜென்மம் எடுத்தான். பூர்வஜென்ம வாசத்தால், நாரதரை மனதில் நினைத்துக்கொண்டு குருகாக்ஷேத்திரத்தையும், நதியையும் அடைந்தான். நாரதர் தோன்றி அவனை ஆசீர்வதித்து சென்றார். சங்கராஜனும் நாரதர் கூறியபடி தன் சங்கு பரிவாரங்களுடன் பகலில் க்ஷேத்திரத்திலும் இரவில் கடலிலும் வசித்து வரலானான். இப்படியாக ஆயிரம் ஆண்டுகள் விரதம் முடியும் நாளும் வந்தது. சித்திரை மாத உத்திர நட்சத்திரத்தில் எப்போதும் போல் சங்கராஜன் காலையில் எழுந்து  பகவானை அர்ச்சிக்க ஆதிக்ஷேத்திரத்திற்கு  ஓடி வந்து பூஜையை முடித்து மெதுவாக பிரதட்சிணம் செய்ய ஆரம்பித்தான். ஸ்ரீபூமிநீளாநாயகன் கருடனில் ஆரோகணித்து வந்து சங்கனுக்கும் மற்ற சங்குகளுக்கும் பரம்பதம் அளித்தார்.

பின் ஆதிநாதன் கருடவாகனத்தை விட்டு இறங்கி கிழக்கு முகமாக  ஒரு முகூர்த்த நேரம் நின்றார். தேவர்களும், ரிஷிகளும், கந்தவர்களும் ஆதிநாதனை வாழ்த்தி துதித்தனர்.

பின்னர் ஆதிநாதன் நான்முகனை நோக்கி இந்த க்ஷேத்திரத்தில் ஒரு தடவை செய்த புண்ணியம், பாவத்தை அழிக்கும் விஷயத்தில் ஆயிரம் மடங்காகும். இத்க்ஷேத்திரத்தில் இறந்த பாவிகளும் முக்தியடைவார்கள். தாந்தன், கிராதன், யானை, சங்கன் அவனுடன் சேர்ந்த சங்குகள்   முதலானோர்  இங்கே முக்தியடைந்திருக்கிறார்கள் எனவே முக்தியடைய விரும்பும் சந்நியாசிகள் இங்கு வந்திருக்கிறார்கள்.  நான் இங்கிருந்தபடியே  எல்லா ஸ்தலங்களிலும் விளையாடிக்கொண்டிருப்பேன்.  நான்முகனே! நீ என்னையும், சதுர்பாகுவான கருடனையும், தென்பக்கமாக பூதேவியை மடியிலே வைத்துக்கொண்டிருக்கும் வராஹ ரூபியையும் அர்ச்சாரூபமாக செய்து அர்சித்து வா என்று அருளினார்.

இந்திரன் கிழத்தனம் நீங்கியது:  முன்பு இந்திரன் தன் மமதையினாலும், மதுபான மயக்க்கத்தினாலும் தனது மனைவியுடன் விளையாடிக் கொண்டிருந்த போது அப்போது அங்கு வந்த  அவனது பெற்றோர்களான காசிப முனிவரும் அதிதி தேவியையும்  உபசரிக்காமலிருக்க காசிபர் கோபம் கொண்டு, நீ செல்வத்தையெல்லாம் இழந்து உனது இளமையையும் இழக்கக் கடவாய் என்று சாபம் அளித்தார். சாபம் பெற்ற இந்திரன் தன்க்கு சாப விமோசனம் தருமாறு வேண்ட காசிபர் மனமிரங்கி , நீ தாமிரபரணி தீரம் சென்று ஆதிநாதனை பணிந்து தவம் செய்தால் பெருமாள் உனக்கு அருள் புரிவார் என்றார். இந்திரனும் அவ்வாறே ஆதிக்ஷேத்திரம் வந்து வராஹ தீர்த்தத்தில் நீராடி ஆதி வராஹனையும், ஆதி நாதனையும் வழிபட பகவான் தோன்றி அவனுக்கு  சாப விமோசனம் அளித்தார்.

பகவான் இந்திரனைப் பார்த்து “நான் உனக்கு நாதன்” என்றபடியாலும், ஆதியில் தோன்றிய ஸ்தலத்தில் வாசம் செய்யும் இறைவன் ஆனபடியாலும் ஆதிநாதன் என்றார்.


          .            பொலிந்து நின்ற பிரான் கருடசேவை 

கருடன்: இத்திருக்கோயிலில் கருடன் அமைப்பு சற்று வித்தியாசமாக உள்ளதுகருட பகவான் எல்லா கோயில்களிலும் கை கூப்பி வணங்கிய நிலையில் அமைந்திருப்பார்இத்திருக்கோயில் மட்டும் கைகளில் அபஹஸ்தமும்நாகரும்சங்கு சக்கரத்துடனும் சதுர் புஜ கருடனாக காணப்படுகிறார்.

உறங்காப்புளி என்னும் திருப்புளி மர வரலாறு :   திருமால்  ஸ்ரீஇராமராக அவதாரம் செய்து   இலங்கை சென்று இராவணனை வென்று சீதாப் பிராட்டியை சிறை மீட்டு  அயோத்தியின் அரசு பொறுப்பேற்று, நீதி தவறாமல் பதினோராயிரம் ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.

பின்னர் அவர் வைகுண்டம் செல்வதற்கு முன் தனிமையில்  யமதர்மராஜருடன் அளவளாவிக் கொண்டிருந்த  போது தங்களது பேச்சுக்கு இடையூறு ஏற்படாமலிருக்க யாரையும் உள்ளே விடவேண்டாம் எனது இலக்குவனுக்கு ஸ்ரீராமர் ஆணையிட்டார்.

அப்போது துர்வாசமுனி  வர முனிவரின் கோபத்திற்கு பயந்து இராமரின் ஆணையை மீறி அவரை  அரண்மணைக்குள்ளே அனுமதிக்க அதனால் கோபம் கொண்ட இராமர் அவரைத் தேட, இலக்குவன்  சரயு நதிக்கரையில் நிற்பதைக் கண்டு, “ இதற்கு முன் தந்தையையும், தர்மத்தையும் நிந்தித்தாய், தற்போது எனது ஆணையை மீறிவிட்டு என்முன் அசையாமல் நிற்கிறாய். ஆதலால் நீ ஒரு அசையாப் பொருளாக ஆகக் கடவாய்” என சாபமிட்டார்.

சாபத்தை கேட்ட இலக்குவனும் இடியோசை கேட்ட நாகம் போல் பதைதிபதைத்து பகவானின் திருப்பாதங்களில் விழுந்து வணங்கினான். ஸ்ரீராமனும் மனமிரங்கி ”லக்ஷ்மணா எனது சாபம் பலித்தே தீரும். இந்த அவதாரத்தில் நான் நிரபராதியும் கர்ப்பிணியுமான சீதையை  காட்டிற்க்கு அனுப்பிய வினை என்னை விடாது அதற்காக அசையாப் பொருளாக உள்ள உன்னருகில் நான் ஓர் பிரம்மச்சாரியாய் ஐம்புலன்களையும் வென்று ஞானமுத்திரை தரித்து "சடகோபன்” என்ற திருநாமம் பூண்டு வாசஞ்செய்யப்போகிறேன்.

இங்கிருந்து நீ புறப்பட்டு சென்று  தண்பொருநை ஆற்றின் தென் கரையிலுள்ள வராஹ க்ஷேத்தித்ரதை அடைந்து அங்கு ஒரு புளியமரமாக மாறப்போகிறாய். கலியில் காசிப முனிவர் காரி என்ற பெயருடன் பிறப்பார். அவரது மனைவி  உடையநங்கையாக தேவமாதா பிறப்பார். அவர்களுக்கு நானே குழந்தையாகப் பிறந்து 12ம் நாள் புளியமரமான உனது பொந்தில் புகுந்து கலியுக ஆரம்பத்தில் நாட்டு நலனுக்கு வடமொழி வேதங்களை தமிழ் மாலைகளாகச் செய்யப் போகின்றேன் என்று கூறினார்.

பிறகு இராமர் தனது கணையாழியை கொடுத்து அது  நழுவும் இடத்தில் நீ ஓர் புளியமரமாக மாறுவாய் என்று கூறினார்.  இலக்குவன் கணையாழியுடன் உலகை வலம் வரும் போது இந்த ஆதி க்ஷேத்திரத்தில் கணையாழி நழுவி விழ அங்கேயே உறங்காப்புளியாக மாறிவிட்டார்.

இத்திருக்கோவிலின் திருப்புளி ஸ்ரீலக்ஷ்மணனின் அம்சமாக உள்ளது. 14 வருடம் வனவாசத்திலிருந்த ஸ்ரீராமரை ஊன் உறக்கமின்றி நொடிப் பொழுதும் கண் துஞ்சாமல் காத்த இளைய பெருமாளின் அம்சமாக விளங்கும் இப்புளியமரத்தின் இலைகளும் ஒரு போதும் உறங்குவதில்லை. இப்புளியமரம் பூக்கும், காய்க்கும், ஆனால் ஒரு போதும் பழுத்தது கிடையாது.
இத்திருப்புளிய மரத்தின் மரசுற்று சுவரில் நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த 36  திவ்ய தேச பெருமாள்களின் திருஉருவங்களும் பொறிக்கப்படுள்ளது. அதனை தரிசிப்பதின் மூலம் நாம் 36  திவ்ய தேச பெருமாள்களையும் ஒரு சேர ஒரே இடத்தில் சேவிக்கும் அரிய வாய்ப்பும் பலனும் நமக்கு கிடைக்கின்றது.    சடகோபர் 

ஸ்ரீநம்மாழ்வார்  வரலாறு: 

பாண்டிய நாட்டில், தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள தற்போது ஆழ்வார் திருநகரி என்றழைக்கப்படும் திருக்குருகூரிலே வேளாள மரபில் திருமாலுக்கே தொண்டு பூண்டொழுகும் குலத்தில் திருவழுதி வளநாடர் என்னும் பரமபாகவதரின் வழித்தோன்றலாக வந்த காரியார்  உடைய நங்கை தம்பதிகளுக்கு  திருமகவாக  கலியுகத்தில்  பிரமாதி வருஷம், வைகாசி திங்கள்விசாக நட்சத்திரம்  சுக்ல பட்சம் சதுர்த்தசியுடன்   கூடிய நன்னாளில் திருஅவதாரம் செய்தார் ஆழ்வார்திருக்குறுங்குடி நம்பியே நம்மாழ்வாராக  அவதாரம் செய்ததாக ஐதீகம்.

திருமாலது அம்சமும் அவரது கௌஸ்துபத்தின் அம்சமும்விஷ்வஷேனரது அம்சமும் பொருந்திய ஆவார்பிறந்த குழந்தையைப் போலல்லாது உலக இயற்கைக்கு மாறாக அழுதல்பாலுண்ணல் முதலிய செயல்கள் இல்லாமல் இருந்தார்கருப்பையில் அறியாமை தீண்டாத கருவை சடமென்ற வாயு தீண்டி அறியாமைக்குள்ளாக்கி அழுதல்அரற்றுதல் முதலிய செய்கைகளை தூண்டுகின்றது என்பர்.  இவ்வாறு இயற்கைக்கு மாறாக இருந்ததால் “மாறன்” என்றும், சடம் என்ற வாயுவை ஹும் என்று ஒறுத்ததால் ஆழ்வார் ’சடகோபர்’ என்னும் திருநாமம் பெற்றார்.

காரியாரும் உடையநங்கையும் குழந்தை  பிறந்த 12ம் நாள்  திருக்குருகூரில் உள்ள பொலிந்து நின்ற  ஆதிபிரான் சன்னதிக்கு அவரை எடுத்து சென்று சேவிக்கப் பண்ணி, ஆதிசேஷனின் அம்சமான திருப்புளியின் ஒரு பொந்தில்  ஞான முத்திரையுடன் அமர்ந்து பதினான்கு ஆண்டுகள் தவமியற்றினார்.

இதற்கிடையில் திருக்குருகூருக்கு தென்கிழக்கேயுள்ள திருக்கோளூரில், வன்குருகூர் நம்பி பிறப்பதற்கு முன்பே அந்தணர் குலத்தில் மதுரகவியாழ்வார் தோன்றி மறைவல்லவராய், திருமாலை தொழுது வரும் வேளையில்  ஒரு நாள் அவரது வயலில்  ஒரி கிழப்பசு மேய்ந்தது அதைக்கண்டு அவர் கையில் ஒரு கம்புடன் அதை துரதிய பசு அந்த பசு கீழே விழுந்து இறந்தது. உடனே அந்த பாவத்திற்கு பிராயசித்தமாக வடநாட்டு தலங்களுக்கு தீர்த்த யாத்திரை மேற்கொண்டார்.  வடக்கே காசியில் தவமிருந்த போது  ஒரு நாள் தெற்கே ஒரு பேரொளியைக் கண்டார்.

அதை நோக்கி நடந்து வந்தார். பல நாட்கள் சென்றது அவர் செம்பொன் மாடதிருக்குருகூர் வந்ததைந்தவுடன் ஒளி மறைந்து விட்டது. பல ஆண்டுகளுக்கு பிறகு ஊரை அடைந்த மதுரகவியாழ்வார் ஜோதியாக வந்து தம்மை அங்கு அழைத்து வந்தது திருப்புளிய மரத்து ஆழ்வார்தான் என்பதை உணர்ந்தார்.   பதினாறு ஆண்டுகளாக ஏதும் பேசாமல்நகராமல்உறங்காப்புளியில் ஞான முத்திரையுடன்  மோன தவம் செய்த மாறனிடம்கேட்ட புதிர் என்னவென்றால்,

செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்,
எதைத் தின்றுஎங்கே கிடக்கும்?

இக்கேள்வியைக் கேட்டவுடன்ஞானக் கொழுந்தான நம்மாழ்வார்முதன் முறையாகத் தன் திருவாய் திறந்துவிடை பகன்றார்.

அவருரைத்த பதிலாவது,

அத்தைத் தின்றுஅங்கே கிடக்கும்.

அதாவதுசெத்தது என்பது நம் உடல்சிறியது என்பது உயிர்உயிரானது உடலினுள் இருக்கும் பொழுது அதற்கென்று தனியான இன்பம்துன்பம் எதுவும் கிடையாதுஉடல் நொந்தால்உயிரும் நோகும்உடல் இன்புற்றால்உயிரும் அப்படியே இன்புறும்அதனால்உயிரானது உடலின் இன்பதுன்பங்களைத் தின்றுஅங்கேயே இருக்கும்.

என்றுஅந்த உயிர் உண்மையை(தன்னிலை அறிதல்உணர்கிறதோஅன்று அது இறைவனைப் பற்றிய எண்ணங்களையே உணவாக உண்டுஅவரது திருவடி நிழலிலே நீங்கா நிலைத்துவிடும்.

நம்மாழ்வார்தான் இருந்த இடத்தை விட்டு எங்கேயுமே போனதில்லையேபின்னர் எப்படி பாசுரங்கள எல்லாம் பாடினாருபாசுரக்கள்எம்பெருமானின் 108 திவ்ய தேசங்கள பத்தினதாச்சே!

எம்பிரானின் அவதாரம் தானே நம்மாழ்வார்அவருக்கே அவர் இருக்கின்ற இடங்கள் எல்லாம் தெரியாதாஎன்னநம்மாழ்வார்திருவாய் திறந்து பாசுரங்களை எல்லாம் பாடத்துவங்கின போதுமகாவிஷ்ணுஅன்னை லெட்சுமி தேவியுடன்தன் கருட வாகனத்தில் சேவை சாதித்தார்அது மட்டுமல்லாமல்திருமாலின் திவ்ய தேசங்கள் அனைத்தும் அவர் மனக்கண்ணில் தோன்றினஅவைகளை மங்களாசாசனம் செய்தார் நம்மாழ்வார்.

நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் 1000 க்கும் மேற்பட்ட (1102) பாடல்கள் நம்மாழ்வாரால் பாடப்பெற்றவை ஆகும்அவரது திருமொழிகள் மொத்தம் 4 ஆகும்அவை,

திருவிருத்தம் இது 100 பாசுரங்களைக் கொண்டுள்ளதுஇந்நூலில்அவர் ரிக் வேதத்தினுடைய சாராம்சங்களை அமைத்துள்ளார்.

திருவாசிரியம் இந்நூல் மிகக் குறைவான பாடலைக் கொண்டுள்ளதுஅதாவது 7 பாடல்கள் உள்ளனஇதில் யசூர் வேதத்தின் அம்சங்களைக் கொடுத்தருளியிருக்கிறார்.

பெரிய திருவந்தாதி இதில் 87 பாடல்கள் உள்ளனஇப்பாடல்களில் அதர்வண வேதத்தின் கருத்துகளை ருசிக்கலாம்.

விருத்தம்ஆசிரியம்அந்தாதி ஆகிய மூன்றும்ஒரு வகையான செய்யுள் ஆகும்அவை இறைவனின் பெயரில் பாடப்பெற்றவையால்அவற்றிற்கு திரு என்னும் அடைமொழி சேர்த்து திருவிருத்தம்திருவாசிரியம்திருவந்தாதி என்று அழைக்கப்படுகின்றன.

திருவாய்மொழி இதில் 1102 பாடல்கள் உள்ளனஇவற்றில் சாம வேதத்தின் சங்கதிகளை சுவைக்கலாம்.

இவ்வாறுரிக்யஜூர்சாமஅதர்வண என்னும் 4 வேதத்தினையும்தமிழில் படைத்துதமிழ் மக்களும் வேதத்தின் அர்த்தங்களைப் புரிந்து அதன் பலனை அடைய அருளிச்செய்ததினால்நம்மாழ்வார, 'வேதம் தமிழ் செய்த மாறன்' என்று அழைக்கப்படுகின்றார்இவரது பாடல்கள் அனைத்திலும் வேதத்தின் சாரம் செறிந்து இருப்பதைஅவரது பாடல்களை உளமார ஓதும் வேளையில் உணரலாம்இவர்இறைவனை தலைவனாகவும்தன்னை தலைவியாகவும் பாவித்து பாசுரங்கள் பாடினார்.

மதுரகவியாழ்வார் 

மதுரகவியாழ்வாருக்குப் பிறகு நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்கள் வழக்கொழிந்தன. பிற்காலத்தில் வைணவ சமயத்திற்கு புத்துயிர் ஏற்படுத்துவதற்காக சிதம்பரத்திற்கு அருகில் உள்ள வீரநாராயணபுரம் என்னும் காட்டுமன்னார் கோயிலில் அவதரித்த ஆச்சாரியார் நாதமுனிகள் அழிந்துவிட்ட நாலாயிரம் பாடல்களையும் தேதும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது திருக்குடந்தையில் பாடக்கேட்டு இப்பத்து பாடல்களுடன் கூடிய ஆயிரம் பாடல்களும் எங்குள்ளது என்று கேட்க அவர் தமக்கு  தெரியாது என்று கூற, நாதமுனிகள் திருக்கோளூர் வந்து மதுரகவியாழ்வார் வம்சாவழிகளிடம் கேட்க அவர்களும் தமக்கு தெரியாது ஆனால் கண்ணி நுன்சிறித்தாம்பு என்னும் பத்து பாடல் மட்டும்தான் தெரியும் என்று கூறினார்.

மேலும் இப்பாசுரத்தை புளிய மரத்தடியில் இருந்து ஒருமனதாக ஐம்புலன்களை அடக்கி பன்னிராயிரம் முறை மனதில் உருப்போட்டு ஜபித்தால் ஆழ்வார் தோன்றுவார் என அவர் கூறியதைக் கேட்டு நாதமுனிகளும்  திருக்குருகூர் க்ஷேத்திரம்வந்து  திருப்புளியமரத்தடியில் ஒரு மனத்துடன் இந்த பாசுரத்தை  பன்னீராயிரம் முறை ஜபிக்க ஆழ்வார் ஒரு முதியவராய் வந்து நாதமுனிகளிடம் இக்கலியில் ஆழ்வாராவது காட்சி  அளிப்பதாவது என்று இகழ்ந்தார். சிறிதும் மனம் சோர்வடையாத நாதமுனிகள் தன் எண்ணம் ஈடேறாமல் போவதில்லை என்று பதில் சொல்ல,  நாத முனிகளின் உறுதியைக் கண்டு ஆழ்வார் சேவை சாதித்து ஏழு திரையிட்டு ஆயிரம் மட்டுமல்ல நாலாயிரமும் பெற்றுக் கொள்க என்று சொன்னார். அவ்வாறு நாதமுனிகளும் நாலாயிரத்தையும் பெற்று அவற்றுக்கு பண் அமைத்து பாடி தனது ஊர் சென்று சேர்ந்தார். நாதமுனிகளின் நற்பெரும் தொண்டினாலேயே நாலாயிரம் திவ்ய ப்ரபந்தம் நாடெங்கும் பரவித் தழைத்தது. நலமுற வளர்ந்தது. 

தாமிரபரணி ஆற்றங்கரையில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் மூன்று பிரகாரங்களுடன் கோயில் அமைந்துள்ளதுபிரகாரத்தில் ராமர்வேணுகோபாலன்கருடன்திருப்புளியாழ்வார்நரசிம்மர்வராகப்பெருமாள்திருவேங்கடமுடையான்நாத முனிகள் ஆகியோருக்கு தனி சன்னதி உள்ளதுஇங்கு பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்மூலவரின் பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக ஐதீகம்ஸ்ரீரங்கத்தை போலவே அரையர் சேவை நடக்கிறதுஇங்கு திருமஞ்சனத்தின் போது பிரபந்தங்களை தாளம் போட்டுக்கொண்டே சொல்லும் பழக்கம் உள்ளதுபெருமாள் பிரம்மச்சரிய யோகத்தில் இருப்பதாகவும் ஐதீகம்இருந்தும் லட்சுமி பெருமாளை அடைய இங்கு தவமிருந்ததால்பிரம்மச்சாரியாக இருந்த பெருமாள் லட்சுமியை மகிழ மாலையாக தன் கழுத்தில் அணிந்துகொண்டதாக புராணம்பாண்டி நாட்டு நவதிருப்பதிகளுள் இத்தலம் குருவுக்குரிய தலமாகவும்ஒன்பதாவது தலமாகவும் அமைந்துள்ளதுவைணவர்கள் திருவரங்கத்தை பரமபதத்தின் வாசல் எனவும்ஆழ்வார் திருநகரியை பரமபதத்தின் எல்லை எனவும் கூறுவார்கள்.

இதுவோ திருநகரி ஈதோ பொருநை 
இதுவோ பரமபதத்(துஎல்லை - இதுவோதான் 
வேதம் பகர்ந்திட்ட மெய்ப்பொருளின் உட்பொருளை 
ஓதும் சடகோபன் ஊர்
                 என்று உடையவர் மங்களாசாசனம் செய்துள்ளார்.


மூலவரின் சன்னதிக்கு எதிர்புறமுள்ள கருட மண்டபத்தை மணவாள மாமுனிகள் நிறுவினார்பெருமாளின் விமானத்தை விட நம்மாழ்வாரின் விமானம் சற்று பெரியதுமரத்தால் செய்யப்பட்டதைப்போலவே கல்லால் ஆன நாதஸ்வரம் ஒரு அடிநீளத்தில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
ஆதி நாதர் ஆலயம் கற்கட்டிடக் கலைக்கு ஒரு சிறந்த  எடுத்துக்காட்டு. ஆலயமும், திருமாமணி மண்டபமும், திருமஞ்சன மண்டபங்களும், கண்ணாடி மண்டபமும், வேலைத்திறன் பெற்றவை. மொட்டைக் கோபுரமும் அதன் உருவங்களும் புகழ்தக்க வேலைப்பாடுகள் நிறைந்தவை. மரசிற்ப வேலையை பொறுத்த மட்டில் ஆதிநாதர் ஆலயத்தின் முன்புறமுள்ள மூன்று மாடங்களுடைய கோபுரத்தின் மூன்று அடுக்குகளிலும் மரத்தூண், யாழி, சாளரம், சிங்கப்பொதிகை, உத்திரம், மேற்கட்டி விதானமெல்லாம்  மிகுந்த பெருமையும் உயர்வும் கொண்ட வேலைத்திறம் பெற்றவை. இது தவிர நம்மாழ்வார் சன்னதி சோபன மண்டபத்தில் வாயிற்படியில் யாழிப்படிகளும், அர்த்த மண்டபத்தின் யாணை படிகளும்  தூண்களில் உள்ள இராமர், இலக்குவன், அனுமன் சிற்பங்களும், நடன மங்கை சிற்பங்களும்  கொடுங்கையில் செதுக்கப் பட்டுள்ள குரங்குகளின் சிற்பங்களும் அருமை ஒரு குரங்குபாம்பின் வாலைப் பிடித்திழுக்க அதன் முகபாவமும் யாழியின் மேல் தாவும் குரங்கும் பல பறவைகளின் சிற்பங்களும் அருமை.  கர்ப்பகிரத்கதை சுற்றிலும் கேரளக் கோவில்கள் போல கை விளக்கேந்திய பெண்கள் சிற்பம் நிறைந்திருக்கின்றது.  மேற்கூரையில் உள்ள தண்ணீரில் மலர்ந்துள்ள ஒரு மலதாமரையும், ஐந்து தாமரை மொக்குகளும்  அவற்றில் தேன் அருந்தும்  தேனிக்களும் கூடிய சிற்பமும் மிகவும் அருமை.


அருமையான வேலைப்பாடுள்ள  தூண்கள் 

இத்திருக்கோயிலில் பல வண்ணங்களில் தீட்டப்பட்ட ஓவியங்களும் காணப்படுகின்றன. ஸ்ரீநம்மாழ்வார் சன்னதி உண்ணாழி பிரகாரத்தில் உள்ள சுவரில் 108 திவ்ய தேசத்து பெருமாள்களின் ஓவியங்களும் தீட்டப்படுள்ளன. பிரகார உட்பிரகாரத்தில்  சங்கமுனி முக்தி பெற்ற வரலாறு, பிரம்மா ஆதிநாதரை வழிபடும் காட்சி, பிரம்மோற்சவ காட்சிகளும், நம்மாழ்வார் பிறப்பும்,  கண்ணன் கழலினை பாசுரம் சங்கப்பலகை ஏறிய காட்சிகளும் தீட்டப்பட்டுள்ளன.


சிற்பம், ஓவியம் மட்டுமல்லாது இசையை எழுப்பும் ஒப்புவமை இல்லாத குழல் தூண்களும், கல் நாதஸ்வரமும், இசைத்தூண்களும் இவ்வாலயத்தில் உள்ளன. கண்ணாடிமண்டபத்தில் இரண்டு இசைத்தூண்கள் உள்ளன. இந்தத் தூண்களை மூங்கில் குச்சி கொண்டு அல்லது  சிறு கல் கொண்டு தட்டினால் இன்னொலிகள் எழுகின்றன.  சில தூண்களில் இரு துவாரங்கள் போடப்பட்டுள்ளன. இரு பக்கங்களிலும் இருவர் நின்று கொண்டு மாறி மாறி ஊதினால் ஒரு பக்கம் சங்கொலியும், மறு பக்கம் எக்காள ஒலியும் எழுகின்றது.  


போற்றி மற்றோர் தெய்வம்பேணப் புறத்திட்டு உம்மையின்னே
தேற்றிவைத்தது எல்லீரும் வீடுபெற்றால் உலகில்லை என்றே
சேற்றில் செந்நெல்  கமலமோங்கு  திருக்கூரதனுள்
ஆற்ற வல்லான் மாயம் கண்டீர் அது  அறிந்தறிந்தோடுமினே

 என்று நம்மாழ்வார் பாடிய ஆதிபிரான் பொலிந்து நின்ற பிரானின் கருட சேவையை சேவித்தோம் வரும் பதிவில் ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரானின் கருடசேவையைக் காணலாம்.  

Labels: , , , ,

2 Comments:

Blogger திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான விளக்கம் ஐயா... நன்றி... வாழ்த்துக்கள் பல...

January 16, 2014 at 8:14 PM  
Blogger Muruganandam Subramanian said...

மிக்க் நன்றி தனபாலன்

January 18, 2014 at 7:31 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home