Friday, December 27, 2013

திருப்பாவை # 25

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ:





ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கில னாகித் தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்த கஞ்சன் வயிற்றில்
நெருப்பென நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும்யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்............(25)


பொருள்: வடமதுரையில் தேவகியின் மகனாகப் பிறந்து ஒரு இரவிற்குள்ளாகவே கோகுலத்தில் யசோதையின் மகனாக ஒளிந்து வளர்ந்த எம் கண்ணனே! கேடு நினைத்த கம்சனுக்கு நெருப்புப் போல இருந்தவனே! உன் அடிமைகளாகிய நாங்கள் உன்னை வேண்டி வந்துள்ளோம். எங்களுக்கு தேவயானவற்றை அளிப்பாயாக. அவ்வாறு நீ எங்களை ஆட்கொண்டால் உனக்கு சேவை செய்து உன் புகழ் பாடி வருத்தம் தீர்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.

தேவகி மைந்தன் யசோதையின் மகன் ஆனது:

கண்ணன் பிறப்பு, வளர்ப்பு, செயல்கள் அனைத்துமே இனியவை. அவன் தேவகியின் மகனாய் பிறந்தவன். இறைவனையே பிள்ளையாகப் பெற அவள் பெற்ற பேறு பெரியது, ஒப்பற்றது. அவள் பிள்ளை பெற்ற அந்த இரவும் ஒப்பற்றது. சீரோடும் சிறப்போடும் கொண்டாடப்படவேண்டிய கண்ணனின் பிறப்பு சிறைக்குள் நிகழ்ந்தது. கண்ணனை ஓர் இரவு கூட மதுராவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. இரவோடு இரவாக பால கிருஷ்ணரை நந்த குலத்திற்கு எடுத்து சென்றார் வசுதேவர்.விழித்திருந்த காவலர்கள் அனைவரும் மாயையால் உறங்கினர்; சிறைக்கதவுகள் தானாக திறந்து கொண்டன. வெள்ளம் கரை புரண்டு பய்ந்த யமுனை நதி இரண்டாகப் பிளந்து வசுதேவருக்கு பாதை அமைத்தது. மழையிலிருந்து கண்ணனைக் காப்பாற்ற ஆதி சேஷன் வந்து குடைப் பிடித்தான்.பெண் குழந்தை பெற்ற யசோதை தன் உணர்வின்றி உறங்கிக் கொண்டிருந்தாள். கண்ணனை அங்கு விட்டு, வசு தேவர் அந்த பெண் குழந்தையை எடுத்து சிறை திரும்பி வந்தார்; சிறைக்கதவுகள் பூட்டிக் கொண்டன. மாயை விலகி காவலர்கள் விழித்துக் கொண்டனர். அந்தக் குழந்தை அழுதது. குழந்தை பிறந்த செய்தி மன்னனுக்கு பறந்தது. ஆசையுடன் வரவேண்டிய தாய் மாமன் ஆயதத்துடன் வந்தான். ஈவு இரக்கமில்லாமல் பெண் குழந்தை என்றும் பாராமல் கொல்ல முற்பட்டான் . குழந்தை மாயாவாக  மாறி உன்னைக் கொல்லப்பிறந்தவன் கோகுலத்தில் உள்ளான் என்னும் உண்மையை உணர்த்தி மறைந்தது.இத்தனையும் நிகழ்ந்தது ஓர் இரவில் அந்த இரவு ஒப்பற்ற இரவு.


கண்ணனை தன் கண்ணின் மணியாக வளர்த்தாள் யசோதை. கண்ணன் ஒளிர்ந்து வளர்வதை அறிந்த கம்சன் அவனைக் கொல்ல கருதி, சகடம், கொக்கு, கன்று, குதிரை, விளாமரம், குருந்த மரம், பூதனை முதலிய பல அசுரர்களை அனுப்பினான் அனைவரும் கண்ணால் வதம் செய்யப்பட்டனர். வில் விழாவிற்கு கண்ணனையும், பலராமரையும் அழைத்து, மல்லர்களையும், குவலயாபீடத்தியும் ஏவி கொல்ல முயற்சி செய்தான் அதுவும் வீணானது. இவ்வாறு கம்சனைன் அனைத்து செயல்களையும் முறியடித்து அவனையும் கண்ணன் வதம் செய்து அவன் வயிற்றில் நெருப்பாக நின்றான் என்பதை  பட்டர் பிரான் கோதை

"ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைத்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்நெருப்பென நின்ற நெடுமாலே" என்று  அழகு தமிழில் பாடுகின்றார் இப்பாசுரத்தில்.

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home