திருப்பாவை #18
ஸ்ரீ:

உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலி! கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்;
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்துதிற வாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!...........(18)
பொருள்:
ஆயர் குலத்தின் தலைவன் நந்தகோபாலன், மதம் பொழிகின்ற யானைகளையுடையவன், பகைவர்களைக் கண்டு பின் வாங்காத தோள் வலிமை கொண்டவன், அவனுடைய மருமகளே! நப்பின்னை பிராட்டியே! மணம் கமழும் கூந்தலை உடையவளே! கதவை திறவம்மா!
பொழுது விடிந்து விட்டது, பொற்கோழிகள் கூவுகின்றன, மாதவிப் கொடிகள் படர்ந்திருக்கும் பந்தலின் மேல் பல குயில்கள் கூவுகின்றன. பந்து பொருந்துகின்ற மெல்லிய காந்தள் போன்ற விரல்களையுடையவளே! உன் கணவன் கண்ணனின் புகழை உன்னுடன் சேர்ந்து நாங்களும் பாட வந்திருக்கின்றோம், தாமதம் செய்யாமல் செந்தாமரை போன்ற உன் கைகளில் அணிந்துள்ள வளையல்கள் கல கல என்று ஒலிக்கும் வண்ணம் வந்து கதவைத் திறவாயாக தாயே!
விடையேழும் அடக்கிய வரலாறு: கண்ணன் நப்பின்னைப் பிராட்டியைத் திருமணஞ் செய்து கொள்வதற்காக அவர் தந்தை குறித்தபடி, யாவருக்கும் அடங்காத ஏழு எருதுகளையும் ஏழு திருவுருவங் கொண்டு சென்று வலியடக்கித் தழுவினான் என்பது வரலாறு. சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையில் ஒரு வலிமை மிக்க காளையை அடக்கி நப்பின்னை பிராட்டியை கண்ணன் மணந்த செய்தி குறிப்பிடப்படுகின்றது. நந்த கோபரின் மருமகளாக நப்பின்னைப் பிராட்டி விளங்குவதை " உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன், நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்" என்று இப்ப்பாசுரத்தில் ஆண்டாள் நாச்சியார் பாடுகின்றார்.
Labels: சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள், திருப்பாவை, நப்பின்னை, பந்தார் விரலி
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home