Friday, December 20, 2013

திருப்பாவை # 12

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ:



கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசற்கடைப் பற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தானெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்?
அனைத்தில்லத்தாரும் மறிந்தேலோ ரெம்பாவாய்
! ...........(12)

பொருள்:

இளங்கன்றினை ஈன்ற எருமைகள் தங்கள் கன்றுக்குப் பாலை பொழிவதாக கருதிக் கொண்டு தானே பாலைப் பொழிய, அப்பாலினால் இல்லம் முழுதும் நனைந்து சேறாகியிருக்கும் வளம் நிறைந்த செல்வ கோபாலனின் தங்கையே!


மார்கழி மாதத்து பனி எங்கள் தலையில் மேல் விழ, உன் வீட்டின் தலை வாசல் படியில் நின்று நின் தோழிமார்களாகிய நாங்கள் அனைவரும் தென் இலங்கை வேந்தனாகிய இராவணனை கோபத்தினால் அழித்த இராமபிரானை. இராகவனை, தாசரதியை, மைதிலி மணாளனை, காகுத்தனை  நினைத்த மாத்திரத்தில் நம் மனத்தில் இன்பம் பயக்க வல்ல பெருமாளை அனைவரும் வாயாரப் பாடுகின்றோம்.

அதைக் கேட்டும் கூட இன்னும் வாயைத் திறக்காமல் பேசா மடந்தையாக அப்படியே படுக்கையில் கிடக்கின்றாயே! அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் எழுந்து வந்து எங்களை ஏளனமாகப் பார்க்கின்றனர். இன்னும் என்ன உறக்கம் வேண்டிக்கிடக்கின்றது உனக்கு? எழப் போகின்றாயா இல்லையா?

சினத்தினால் தென் இலங்கை கோமானைச் செற்றவன்:

சீதா பிராட்டியைக் கடத்திக் கொண்டு சென்ற தென்னிலங்கைக்கு அதிபதியாகிய இராவணனை பொங்கி வந்த கோபத்தினால் வதம் செய்தவர், மனதுக்கு இனியவரான இராமபிரான் என்னும் இராமாவதார பெருமையை "சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக் கினியானை" என்று பாடுகின்றார் கோதை நாச்சியார் இப்பாசுரத்தில்.

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home