Thursday, December 19, 2013

திருப்பாவை # 10

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ:


நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மானாய்!
மாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
பேற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றுமுனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்றவனந்த லிடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்! ..............(10)


பொருள் :விரதமிருந்து சுவர்க்கம் போகின்ற அம்மையே! நாங்கள் இவ்வாறு கூப்பிட்டும் கதவைத்தான் திறக்கவில்லை, பதிலும் கூடவா தர மாட்டாய். புண்ணிய மூர்த்தியாகிய இராமபிரானால் முன்னொரு காலத்தில் எமன் வாயில் வீழ்ந்த கும்பகர்ணன் உறங்கும் போட்டியில் உன்னிடம் தோற்று அவனுடைய பேருறக்கத்தை உனக்கு கொடுத்தானோ?

ஆழ்ந்த உறக்கமுடையவளே! பெறர்கரிய ஆபரணம் போன்றவளே! வாசம் மிகுந்த துளசி மாலையை திருமுடியில் அணிந்துள்ள நாராயண மூர்த்தி நம் நோன்புக்கு பரிசாக பேரின்பத்தை நல்குவான். எனவே உறக்கம் தெளிந்து வந்து கதவைத் திறடி.

இராமாவதாரம்:
இப்பாசுரத்தில் இராம பெருமானின் வல்லமையை பாடுகின்றார் ஆண்டாள். இராமபிரானால் இறந்து பட்டவன் கும்பகர்ணன். உன் உறக்கத்திற்கு தோற்று, அவன் உறக்கத்தையும் உனக்கு தந்து விட்டானோ? எனப் பெண்கள் ஒருவரையொருவர் எள்ளி நகையாடும் வகையில் இதனை எடுத்துரைக்கின்றார் ஆண்டாள். "போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ" என்று பாடுகிறார் ஆண்டாள்.

கீதாசாரத்தை எடுத்துச் சொல்லி உலகத்திலே உள்ளவர்களை திருத்த பூமிப் பிராட்டி வராஹ அவதாரத்திலே எம்பெருமானின் மூக்கின் மேல் அமர்ந்திருந்த போது

. அவன் திருவடிகளில் புஷ்பத்தை இட்டு அர்ச்சனை செய்யவும்.

. அவன் திருநாமத்தை உரக்கச் சொல்லவும்

.அவன் திருவடிகளில் ஆத்ம சமர்ப்பணம் செய்யவும் செய்த சங்கல்பத்தை ஸ்ரீ ஆண்டாளாக அவதரித்த போது நிறைவேற்றுகின்றாள்.

 இது வரை பார்த்த திருப்பாவையின் முதல் பத்து பாசுரங்களில் எம்பெருமானின் திருநாமங்களைப் போற்றி பாடியுள்ளார் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் என்பது பெரியோர் வாக்கு.

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home