Sunday, December 15, 2013

திருப்பாவை உணர்த்தும் நன்னெறி

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ:



பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் பகவத் கீதையிலே உயர்ந்தவற்றைக் கூறும் போது "மாதங்களில் நான் மார்கழி" என்கிறார். திருக்கோவில்களில் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் கோவில்களில் இறைவனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகின்றது. மஹா விஷ்ணுவின் வைகுண்ட ஏகாதசி வரும் மாதம் இதுதான். குளிர் காலத்தில் காலை வேளையில் ஓஜோன் என்னும் வாயு மிகுந்து உள்ளதால் உடலுக்கும் மிகவும் நன்மை பயக்கும் என்ற அறிவியல் உண்மையை உணர்ந்த நம் முன்னோர்கள் நம்மை அதிகாலையில் எழுந்து பயன் பெற இந்த வழக்கத்தை ஏற்படுத்தினர் போலும்.

மானிடர்களாகிய நம்முடைய ஒரு வருடம் தான் தேவர்களுக்கு ஒரு நாள் அவர்களுடைய நாள் தொடங்குகின்ற மாதம் தான் மார்கழி மாதம். எனவே மார்கழி மாதம் நாம் செய்கின்ற பூசை தேவர்களின் அதிகாலை பூசை என்பது ஐதீகம்.

பண்டை காலம் தொட்டே மார்கழி மாதத்தில் அதிகாலை வேளையில் எழுந்து கோலம் இட்டு வாசலை அலங்கரித்து பாவை நோன்பு இருப்பது வழக்கமாக உள்ளது. கோவில்களிலே சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்ஆண்டாள் பாடியருளிய திருப்பாவை இசைக்கப்படுகின்றது. இனி திருப்பாவை வலியுறுத்தும் நன்னெறிகளைப் பற்றி பார்ப்போமா?

இந்த மாய உலகத்திலே சம்சார பந்ததிலே உலலுகின்ற ஜ“வாத்மா, பரமாத்மாவுக்கே உரியாதாயிருக்கையில் அவனையே கரணங்கள் யாவற்றிலும் அனுபவித்து இன்புறுதலும், அவன் பிரிந்த காலத்து துன்புறுதலும் அடையுமாதலால் இறைவனை ஆண்டாள் நாச்சியார் பாடியுள்ள பாடல்களே திருப்பாவை .
திருப்பாவைக்கு அடிப்படையாக விளங்குவது ஜ“வாத்மா பரமாத்மாவுடன் இரண்டறக் கலப்பதுதான். பாவை நோன்பு ஒழிக்க முடியாத உறவு என்பது பகவானுக்கும் உள்ள பரஸ்பர பந்தத்தை நிலை நிறுத்துகிறது. அதாவது இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் எம்பெருமான் , அவனைப் பற்றாகக் கொண்டால் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அவன் துணையாக இருப்பான் என்ற தத்துவத்தை விளக்குவதே பாவை நோன்பு.
திருப்பாவை, "ஆன்ம நேயத்தை" போதிக்கின்றது. ஒரு ஆன்மா பிற ஆன்மாக்கள் மீது நேயம் கொண்டு தன்னோடு அவை அனைத்தும் இறைவனை அடையுமாறு செய்யும் நோக்கில் பாடப்பட்ட பாடல்களே இவை. "வஸ”தைவ குடும்பகம்" என்று வட மொழியில் உலகம் எல்லாம் ஒரே குடும்பம் என்றும் நமது தமிழில் " யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் " என்பதும் இந்நெறிதானன்றோ?



தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய

தூபம் கமழத் துயிலனைமேல் கண் வளரும்

மாமான் மகளே மணிக்கதவம் தாழ் திறவாய்
என்று ஆண்டாளும் பாடுவது சம்சார பந்தத்திலே உழலும் ஆன்மாவைப்பார்த்து காலம் வந்து விட்டது இப்போதாவது விழித்துக்கொள் இறைவனின் திருப்பாதங்களில் சரணடைந்து விடு என்று கூறுவதல்லவோ.

மேலும் வைகறை துயிலெழும் மிக நல்ல நெறியை நமக்கு உணர்த்துவதை நாம் காணலாம்.



ஒண்ணித் திலநகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ?


புள்ளும் சிலம்பின காண்! புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கெட்டிலையே?


உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பினகாண்


என்று ஆண்டாள் பாடுவது பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலையிலே எழுவதும் பின்பு இறைவனை வழிபடுவதும் நமக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதை நமக்கு வலியுறுத்தவே.



அடுத்த நெறி உடல் சுத்தி என்னும் நீராடல், இது புற சுத்தி இதை திருப்பாவையும் திருவெம்பாவையும் இரண்டும் மிக நன்றாக வலியுறுத்துகின்றன.


மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்

நீராடப்போதுவீர் போதுமினோ நேரிழையீர்

என்று திருப்பாவை தொடங்குகிறது.
நம்மை நல்வழிப்படுத்துகின்ற இந்த சிறு வயது முதலே பாராயணம் செய்து வந்துள்ளேன். அடியேனது ஊர் உடுமலைப்பேட்டையில், பிரசண்ட வினாயகர் கோவிலில் மார்கழி பனி அதிகாலையில் பாராயணம் செய்து பெற்ற இன்பம் அலாதி. அந்த இன்பத்தை அனைவரும் பெற வேண்டும் என்பதற்காகவே இந்த தொடர். இந்த மார்கழி மாதம் முப்பது நாளும் தொடரும்.

திருப்பாவையின் பாடல்களையும் பொருளுடன் ( பல் வேறு புத்தகங்களில் படித்தது) அளிக்க முயற்சி செய்துள்ளேன். முடிந்தவரையில் கண்ணனது லீலைகளையும் அந்தந்த பாசுரங்களில் கொடுத்துள்ளேன். குறை இருந்தால் அது என்னுடைய தவறே அதற்காக மன்னிக்கவும்.

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home