ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -1
நம்மாழ்வார்
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினனாகிய மாறன் சடகோபன் திருக்குருகூராகிய ஆழ்வார்திருநகரியில் காரியாருக்கு புதல்வராய் தோன்றி கருவிலேயே திருவுடையவராய் திருப்புளியினடியில் தவமிருந்து மாண்புடைய மதுரகவியாழ்வாருக்குத் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழிகளைத் திருவாய்மொழிந்தருளி அவாவற்று வீடுபெற்ற பின்பு மதுரகவியாழ்வாரால் கோயில் கொண்டருளப்பெற்று ஆண்டுதோறும்
உண்டோ வைகாசி விசாகத்துக் கொப்பொருநாள்
உண்டோ சடகோபர்க் கொப்பொருவர் ? உண்டோ
திருவாய்மொழிக்கொப்பு ? தென்குருகைக்குண்டோ
ஒருபார் தனிலொக்குமூர்?
என்றபடி நம்மாழ்வார் திருவைகாசித் விசாக திருநட்சத்திரத்தில் பத்து நாள் உற்சவம் கண்டருளுகிறார். இந்த உற்சவத்தின் ஐந்தாம் திருவிழாவில் "உண்ணும்சோறு, பருகுநீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்" என்றிருக்கும் இவரை விடமாட்டாதே தாங்களே அனுபவிக்க ஆசைகொண்டு தன்பொருநை எனப்படும் தமிரபரணி ஆற்றின் இருகரையில் அமைந்துள்ள நவதிருப்பதிகளில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான்கள், ஆழ்வாருடைய அருளிச்செயல்களில் முதலாவதான திருவிருத்தத்தில் “மெய்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே” என்கிற பாசுரத்தைக் கேட்டும் அவாவுடன் ஆழ்வாரைக் கண்டு அருள்புரிய ஆழ்வார்திருநகரிக்கு எழுந்தருளி காலையில் ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்று, இரவில் கருடாரூடராய் சேவை அளித்து திருவீதி எழுந்தருளி திருவந்திக்கப்புக்குப் பிறகு திரும்பவும் பல்லக்கில் எழுந்தருளி மீண்டும் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்று விடைபெறும் சேவையும் காணும் பெறும் பாக்கியம் கிட்டியது. வாருங்கள் தாங்களும் அந்த சேவையை பகிர்ந்து கொள்ளலாம்.
முதலில் நம்மாழ்வாரின் சிறப்புகளை சிறிது காண்போமா? காரியாருக்கும் உடைய நங்கையாருக்கும் திருமகவாக வைகாசி திங்கள், விசாக நட்சத்திரம் சதுர்த்தசி கூடிய நன்னாளில் ஆழ்வார் திருநகரி என்று இன்று அழைக்கப்படும் திருக்குருகூரில் திருஅவதாரம் செய்தார் ஆழ்வார். வண்ணம் அழகிய நம்பி, வடிவழகிய நம்பி, திருக்குறுங்குடி நம்பியே காரியாருக்கு அருளியபடி நம்மாழ்வாராக அவதாரம் செய்ததாக ஐதீகம்.
திருமாலது அம்சமும் அவரது கௌஸ்துபத்தின் அம்சமும், விஷ்வஷேனரது அம்சமும் பொருந்தியவர் ஆவார், பிறந்த குழந்தையைப் போலல்லாது உலக இயற்கைக்கு மாறாக அழுதல், பாலுண்ணல் முதலிய செயல்கள் இல்லாமல் இருந்தார். கருப்பையில் அறியாமை தீண்டாத கருவை சடமென்ற வாயு தீண்டி அறியாமைக்குள்ளாக்கி அழுதல், அரற்றுதல் முதலிய செய்கைகளை தூண்டுகின்றது என்பர். அந்த சடம் என்ற வாயுவை ஹும் என்று ஒறுத்ததால் ஆழ்வார் ’சடகோபர்’ என்னும் திருநாமம் பெற்றார்.
கழிமின் தொண்டீர்காள்! கழித்து
தொழுமின் அவனைத் தொழுதால்
வழிநின்ற வில்விணை மாள்வித்து
அழிவின்றி யாக்கம் தருமே. என்று சரணாகதி தத்துவத்தை அருளிய காரி மாறப் பிரான் நான் மறைகளுக் கொப்பாக திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்னும் நான்கு பிரபந்தங்களை திருவாய் மலர்ந்தருளினார். தமது சீடர் மதுரகவியாழ்வாருக்கும் உபதேசித்தருளினார்.
திருவாய்மொழியின் ஆயிரம் பாசுரங்களும் அந்தாதியாக அமைத்துப் பாடியுள்ளார்.
ஆடி ஆடி அகங்கரைந்து இசை
பாடிப் பாடிகண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா! என்று
வாடி வாளும் இவ்வாணுதலே என்று தன்னையே பராங்குச நாயகியாக பாவித்து பாசுரம் பாடினார்.
புயல் கருநிறத்தன், அடலாழியம்மான், உருளும் சகடம் உதைத்த பெருமானார், கோலக் கூத்தன், தேனும் பாலும் கன்னலும் அமுதுமொத்த பிரான் என்றெல்லாம் பெருமாளை பாடிப்பரவிய நம்மாழ்வார் அமர்ந்திருந்த புளிய மரத்தடிக்கே பெருமாள் பெரிய பிராட்டியுடன், வினதை சிறுவன் மேலாப்பின் மேலே இருந்து சேவை சாதித்தார். மேலும் பல திவ்ய தேசங்களில் அர்ச்சையாக கோயில் கொண்டவாரும் காட்சி தந்தருளினார். பெருமாளின் அருள் மழையில் நனைந்த ஆழ்வார் அங்கிருந்தபடியே பெரு மகிழ்ச்சியின் போக்கு வீடாகவே நான்கு வேதங்களுக்கொப்பாக நான்கு பிரபந்தங்களை திருவாய் மலர்ந்தருளினார்.
குன்றமேந்தி குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலமளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
என்றுமே தொழ நம்விணையோயுமே. என்று பெருமாளின் பெருமையைப் பாடிப்பரவிய ஒப்புயர்வற்ற பராங்குசர் எம்பருமானது திருவடிகளாகவே கருதப்படுவதால் திருக்கோயில்களில் திருமாலின் பாதுகைகள் ’ஸ்ரீ சடகோபம்’ என்றோ ’ஸ்ரீ சடாரி’ என்று வடமொழியிலோ வழங்கப்படுகின்றது. தீர்த்த பிரசாதம் வழங்கிய பின் ஜாதி மத பேதமில்லாமல் அனைவருக்கும் சடகோபம் சார்த்தப்படுகின்றது. துளசி பிரசாதம் வழங்கப்படுகின்றது.
பிறந்தவுடன் உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால் பெற்றோர் இவருக்கு ’மாறன்” என்று பெயரிட்டு அழைத்தனர். திருக்குருகூரில் கோயில் கொண்டுள்ள பொலிந்து நின்ற பிரான் மாறனார்க்கு பரிசாக மகிழ மலர் மாலையணிவித்தது குறித்து ஆழ்வாருக்கு ’வகுளாபரணர்’ என்னும் திருநாமம் ஏற்பட்டது. பிற மதங்களாகிய யானைகளுக்கு சடகோபரின் நூலில் காணும் கொள்கைகள் மாவெட்டி போன்றுள்ளதால் ஆழ்வார் ’பராங்குசர்’ என்றழைக்கப்பட்டார்.
ஏழ்மை பிறப்புக்கும் சேமம் இந்நோய்க்கும் ஈதே மருந்து
ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்துமினுன்னித்தே. என்று நம்முடைய எல்லா விணைகளுக்கும் மருந்து அந்த கண்ணன் நாமமே என்று அறுதியிட்டு கூறுகின்றார் நம்மாழ்வார். கவியரசரான கம்பர் தமது இராம காதையை திருவரங்கத்தில் நம் பெருமாள் முன்பு அரங்கேற்றப் புக, " நம் சடகோபனைப் பாடினையோ?" என்று பெயர் பெற்று இப்பெயரையே புகழ் பெற்ற பெயராக கொண்டுள்ளார்.
நம்மாழ்வாரை அவயவி என்று உடலாகவும், மற்ற ஆழ்வார்களை அவயங்கள் என்று கூறுகளாகவும் கருவது வைணவ மரபு. இந்த உருவத்தில் பூதத்தாழ்வார் தலையாகவும், பொய்கையாழ்வார் மற்றும் பேயாழ்வார் கண்களாகவும், பெரியாழ்வார் முகமாகவும், திருமழிசையாழ்வார் கழுத்தாகவும், குலசேகரப் பெருமாள் மற்றும் திருப்பாணாழ்வார் கைகளாகவும், தொண்டரடிப்பொடியாழ்வார் மார்பாகவும், திருமங்கையாழ்வார் கொழ்ப்பூழாகவும், மதுரகவியாழ்வார் பாதம் என்பதும் ஐதீகம்.
திருப்புளி வாகனத்தில் நம்மாழ்வார்
(நான்காம் திருநாள் இரவு சேவை)
ஆழ்வார் திருநகரியில் நடைபெறும் திருவிழாக்களில் வைகாசி பிரம்மோற்சவம் சிறப்பான ஒன்றாகும். சுவாமி நம்மாழ்வார் திருஅவதார தினத்தை முன்னிட்டு இந்த திருவிழா நடைபெறுகின்றது. திருவைகாசி மாத திருவிசாகத்தில் ஆழ்வார் திருமஞ்சனம் கண்டருள பத்து நாள் உற்சவம். வைகாசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் தொடங்கி விசாக நட்சத்திரத்தில் நிறைவடைகின்றது. தினமும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். இந்த உற்சவத்தில் 5ம் நாள் உற்சவத்தில் ஒன்பது கருட சேவை காணக் கண்கொள்ள காட்சியாகும். இக்காட்சியைக் கண்டவர்கள் தேவாதி தேவர்களை விடவும் மேலான பிறப்புடையவர்களாக கருதப்படுகின்றனர். அந்த ஒன்பது கருடசேவையின் தொகுப்புத்தான் இந்தத் தொடர் பதிவுகள்.
Labels: தாமிரபரணி, திருக்குருகூர், நம்மாழ்வார், நவதிருப்பதி, வைகாசி விசாகம்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home