Wednesday, November 27, 2013

கைசிக ஏகாதசி -2

Visit BlogAdda.com to discover Indian blogs
 ஏகாதசி விரதம் 

தென்குறுங்கை நம்பி 

சென்ற பதிவில் வனம் சூழ்  திருக்குறுங்குடி திவ்ய தேசத்தின் சிறப்புகளை கண்டோம். இனி ஏகாதசி விரதத்தின் சிறப்புகளையும் இந்த திவ்ய தேசத்திற்கே உரித்தான கைசிக ஏகாதசியன்று நம்பாடுவான் செய்த அற்புத செயலையும், இத்தலத்தின் கைசிக ஏகாதசி  வைபவங்களையும் பற்றி காணலாமா? அன்பர்களே.

காயத்ரியைக் காட்டிலும் சிறந்த மந்திரம் இல்லை. தாயை விஞ்சிய தெய்வம் இல்லை. காசியை விஞ்சிய புண்ணிய தீர்த்தம் இல்லை, அது போல எகாதசியை விஞ்சிய விரதம் இல்லை. எனவேதான் நாராயணீயம் பாடிய நாராயண பட்டத்திரி இந்த கலி காலத்தில் எளிதில் இறைவன் அருள் கிட்ட  இறைவனிடம் நம்மை சேர்க்கும் எட்டு அம்சங்களாக 1. கங்கை, 2. கீதை, 3. காயத்ரீ 4. துளசி 5. கோபி சந்தனம், 6. சாளக்கிரம வழிபாடு, 7. இறைவனின் திருநாமங்கள், 8. ஏகாதசி விரதம் ஆகியவற்றை கூறுகின்றனர்.  இவற்றிலெல்லாம் தமக்கு பற்றுதல் உண்டாக்குமாறு  குருவாயூரப்பனிடம் வேண்டுகிறார். 

நம்பி பின்னழகு 

ஏகாதசி பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலப்பகுதியில்(பக்ஷம்) பதினொன்றாவது நாளாகும். கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் ஆகிய இந்த பதினோரு இந்திரியங்களால் செய்யப்படும் தீவினைகள் எல்லாம் இந்த பதினோராவது திதியில் ஏகாதசி விரதம் இருந்தால் அழிந்துவிடுவது உறுதி என்பர் முன்னோர்.

ஏகாதசி திதியின் உரிய தேவதை தர்ம தேவதை ஆகும். ஆகவே தர்ம திதியாகிய ஏகாதசி விரதத்தை தவறாமல் கடைபிடித்தால் தர்மத்திற்கு வளர்ச்சி ஏற்படும். தர்மத்தைக் காப்பாற்ற யுகம் யுகமாக அவதாரம் செய்யும் இறைவனுக்கும் மகிழ்ச்சி ஏற்படும்.

 கருட சேவை சிற்பம் 

திருமால் தேவர்களின் வேண்டுகோளை ஏற்று முரன் என்னும் அரக்கனை அழிக்க சென்றார். பல வருடங்கள் அவனுடன் போரிட்டும் அவனை எளிதாக அழிக்க முடியவில்லை எனவே பெருமாள் பத்ரிகாச்ரமம் சென்று அங்கு ஒரு குகையில் படுத்துக் கொண்டார். திருமாலைத் தேடி வந்த அசுரன் அவர் நித்திரையில் இருப்பதை கண்டு அவரை தாக்கத் தொடங்கினார். அப்போது பெருமாளின் திருமேனியிலிருந்து ஒரு மகத்தான சக்தி ( தேவி ஸ்வரூபம்) தோன்றி அந்த அசுரனை மாய்த்தது.

யோக நித்திரையிலிருந்து  முழித்த பெருமாள்,  அவள் வேண்டிய வண்ணம் அவளுக்கு ஏகாதசி என்னும் நாமம் விளங்கும் என்றும். ஏகாதசி அன்று விரதமிருந்து பெருமாளை எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இம்மையிலும், மறுமையிலும் நல்லவனற்றையே அருளுவதாக வரம் கொடுத்தார்.

கண்ணன் லீலை சிற்பம் 

இந்த மகத்தான விரதத்தை பின்பற்ற சில இன்றியமையாத விதிமுறைகளை முன்னோர்கள் வகுத்துள்ளனர். அவை தவம், தானம், புலனடக்கம் என்று மூன்று வகைப்படும். புலனடக்கத்தின் அடிப்படையாக இருப்பது உணவுக்கட்டுப்பாடு, எனவேதான் ஏகாதசி நன்னாளில் முழுமையான உண்ணாவிரதத்தை முக்கியமாகக் கொண்டனர்.

ஆகவே அமைதியாக தியானத்தில் அமர்ந்து எப்போதும் இறைவன் திருநாமத்தை ஸ்மரணம் செய்து கொண்டிருக்கலாம். இதனால் உடலும் உள்ளமும் தூய்மை அடைந்து பக்குவபப்டுகின்றது. எனவே இவ்விரதத்தை கடைப்பிடிப்பவர் தவம் செய்ய தகுதி உடையவர் ஆகின்றார்.

அல்லும் பகலும் அனவரதமும் இறைவனைப் பற்றி நினைத்தல், அவரின் இனிமையான திருநாமங்களை நா இனிக்கக் கூறுதல், அவர் எழுந்தருளி அருள் பாலிக்கும் கோவில்களிலோ அல்லது தங்கள் தங்கள் இல்லங்களிலேயோ ஆடி ஆடி அகம் கரைந்து, இசைப் பாடி பாடி கண்ணீர் மல்கி அவரிடம் நம் மனம், மொழி, மெய்களை ஈடுபடுத்தவே விரதம் இருக்க வேண்டும்.

ஓங்கி உலகளந்த உத்தமன்

(வாமனனாக பலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி நிலம் தானம் பெறுவதையும், பிரம்மன் உயர்த்திய திருவடிக்கு பாத பூஜை செய்வதையும் கவனியுங்கள்) 

இவ்வாறு ஏகாதசி விரதம் இருந்த பின், இறைவனுக்கு நிவேதனம் செய்த உணவை உண்பதற்கு முன் அதை தகுந்த பெரியோர்களுக்கு முதலில் வழங்கி உண்ணச் செய்யும் துவாதசி பாரணையில் தானம் என்ற உயர்ந்த பண்பு விளங்குகின்றது.

வருடத்தில் மொத்தம் 24 ஏகாதசிகள் வரும் அதிசயமாக சில வருடம் 25 ஏகாதசிகளும் வருவதுண்டு. ஒவ்வோரு ஏகாதசிகளுக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு, விரதத்திற்கு ஒரு பலன் உண்டு. எல்லா ஏகாதசிகளுக்கும் சிறந்தது மார்கழி மாத சுக்லபக்ஷ ஏகாதசியாகும். இந்நாள் வைகுண்ட ஏகாதசியென்றும், முக்கோடி ஏகாதசி, மோக்ஷ ஏகாதசி என்றும் அழைக்கப்படுகின்றது. இன்று பெருமாள் பரமபத வாசல் வழியாக நம்மை அழைத்து சென்று பிறவா நெறி என்னும் வைகுண்டப்பதவி வழங்குகின்றார்.

பிரளய காலத்தின் முடிவில் பெருமாள் யோக நித்திரையில் இருந்தபோது அவர் காதில் இருந்து தோன்றிய மது கைடபர்கள் பிரம்மாவை கொல்ல முயல, அவர் பெருமாளை சரணடைய, பெருமாள் அரக்கர்களை வதம் செய்த பின் அவர்கள் வேண்டிக் கொண்டதற்கிணங்க அவர்களை வைகுந்தத்தின் வடக்கு வாசல் வழியாக அழைத்து சென்றது போல் இன்றும் வைகுண்ட ஏகாதாசியன்று நம்மை பரமபத வாசல் வழியாக அழைத்து சென்று வைகுண்டம் வழங்குகின்றார் .

 இராவணனுடைய கொடுமையிலிருந்து தப்பிக்க பெருமாளிடம் முப்பத்து முக்கோடிதேவர்களும் சரணடைந்ததால், இந்த ஏகாதசி. முக்கோடி ஏகாதசி என்றழைக்கப்படுகின்றது.

இனி ஏகாதசி விரத மகிமையைப் பற்றிக்காண்போமா? திருமாலின் அவதாரமான ஸ்ரீராமனே பங்குனி மாதத்தின் விஜயா என்னும் ஏகாதசி விரதம் இருந்து பின் கடலைக் கடந்து சென்று இராவணனை அழித்து இலங்கையை வென்றார் என்று புராணம் கூறுகின்றது. இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் சீதா தேவியின் அருளைப் பெறலாம்.

தூணில் உள்ள சில சிற்பங்கள் 

( அணிந்துள்ள, ஆடை ஆபரணங்கள் மற்றும் தலையலங்காரம் ஆகியவற்றை  எவ்வளவு நுணுக்கமாக செதுக்கியுள்ளார்கள் சிற்பிகள் கவனியுங்கள்)

ஒரு வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருந்து, துவாதசிப்பாரணை முடித்த அம்பரீஷ மஹாராஜாவை தவத்தில் சிறந்த துர்வாச முனிவராலும் ஒன்றும் செய்ய முடியாதவாறு திருமாலில் சுதர்சன சக்கரம் காத்தது என்று பாகவத புராணம் கூறுகின்றது.

ருக்மாங்கதன் என்ற மாமன்னன் இந்த விரதத்தை தானும் கடைப்பிடித்து தன் நாட்டவரும் பின்பற்றுமாறு செய்ததால் அவன் பெற்ற பெரும் பயனை ருக்மாங்கத சரித்திரம் கூறுகின்றது.

பீமன் ஒர் ஆண்டு முழுவதும் இந்த விரதத்தை செய்ய முடியாத நிலையில் ஆனி மாத சுக்ல பக்ஷ ஏகாதசியாகிய நிர்ஜலா என்ற விரதத்தை மட்டுமே நிறைவேற்றி ஓர் ஆண்டின் முழுப்பயனையும் பெற்றதாக பத்மபுராணம் கூறுகின்றது.

பகவானை இசையால் பாடி சேவை செய்த நம்பாடுவான் என்ற பாகவதர் தாழ் குலத்தவராக இருந்தும், பிரம்மராக்ஷனனாக இருந்த பிராமணனுக்கு சாப விமோசனம் அளித்தது அவர் அனுஷ்டித்த கைசிக ஏகாதசி எனப்படும், கார்த்திகை வளர்பிறை திருஏகாதசி விரத மகிமையினால்தான்.   

பாற்கடலில் மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு எம்பெருமான் அமுதம் கடைந்து எடுத்த ஒப்பற்ற நாள் வைகுண்ட ஏகாதசி ஆகும். குருக்ஷேத்திரப் போரில் பார்த்தனுக்கு கீதையை உபதேசித்த நாள் இந்நாள்தான்.

வைகுண்ட ஏகாதசி எல்லா விஷ்ணுவாலயங்களிலும் கொண்டாடப்பெற்றாலும், இதன் பெருமை மிகுதியாக விளங்குவது சோழ நாட்டு திருவரங்கத்தில்தான். ஏகாதசியின் முழுப்பயனையும் அடையும் வாய்ப்பு திருவரங்கத்தில் அமைந்திருந்தாலும் அதே அமைப்பை நம் முன்னோர்கள் நாம் எல்லோரும் உய்ய அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் அமைத்தனர்.

ஏகாதசி விரதம், இம்மையில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை அளிப்பதோடு மறுமையில் பேரின்பத்தையும் அருளும்.

ஆடி ஏகாதசி பண்டரிபுரத்திலும், கைசிக ஏகாதசி திருக்குறுங்குடியிலும், விருச்சிக ஏகாதசி குருவாயூரிலும், வைகுண்ட ஏகாதசி ஸ்ரீரங்கத்திலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன.

இனி வரும் பதிவில் நம்பாடுவானின் சரிதத்தை காணலாமா அன்பர்களே.

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home