Tuesday, November 26, 2013

கைசிக ஏகாதசி -1

Visit BlogAdda.com to discover Indian blogs
திருக்குறுங்குடி  

திருக்குறுங்குடி நம்பி 

சென்ற வருடம் கைசிக ஏகாதசியன்று திருக்குறுங்குடி சென்று வடிவழகிய நம்பியை சேவித்து,   கைசிக புராண நாடகம் கண்டு களித்து, அரையர் பாசுரங்கள் சேவிப்பதை செவி மடுத்து பெருமாள் தீர்த்தமும், சடாரியும், பிரசாதமும் பெறும், பாக்கியம்  அடியேனுக்கு  கிட்டியது அதை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு. இந்த வருட கைசிக ஏகாதசி 13.12.2013 அன்று வருகின்றது. எனவே குறுங்குடி செல்ல விழையும் அன்பர்களுக்கு உதவ இப்பதிவு.

கரண்ட மாடு பொய்கையுள் கரும்பனைப் பெரும் பழம் 
புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடுந்தகாய்
திரண்டு தோளி ரணியன் சினங்கொளாக மொன்றையும்
இரண்டு கூறு செய்துகந்த சிங்க மென்ப துன்னையே.

என்று திருமழிசையாழ்வார் பாடியபடி பிரஹலாதன் எங்கும் உள்ளான் கண்ணன் என்று சொன்ன சொல்லை மெய்ப்பிக்க  நரசிங்க ரூபம் எடுத்து இரணியனை அழித்த பெருமாள்,   வராஹ அவதாரம்  எடுத்த போது பூமிப் பிராட்டியுடன் இங்கு தங்கியதாலும், தனது பயங்கர வராஹ ரூபத்தை குறுங்கச் செய்தமையால் இத்தலம்  
"குறுங்குடி' ஆனது . அதே போல் திருமால் வாமன அவதாரம் எடுத்து ஆகாயத்தை அளந்த போது தனது திருவடி சதங்கையில் இருந்து “சிலம்பாறு” இத்தலத்தில் உருவாகியது என்று புராணம் கூறுகின்றது. நின்ற, அமர்ந்த, நடந்த, கிடந்த, இருந்த என ஐந்து நிலைகளிலும் இத்தலத்தில்  பெருமாள் காட்சி தருகிறார். குரங்கம் என்றால் பூமாதேவி. பூமாதேவி இத்தல இறைவனை வழிபட்டதால் இத்தலத்திற்கு “குரங்கச் க்ஷேத்திரம்” என்ற பெயரும் உண்டு.

கரண்டம் என்றால் நீர்காக்கை, ஒரு நீர்காக்கை இந்த பொய்கையுள் மூழ்கி அந்தம் இல் பெருவாழ்வு பெற்றதால் இப்பொய்கைக்கு கரண்டம் ஆடு பொய்கை என்று பெயர் ஏற்பட்டதே அதையே ஆழ்வார் தமது பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார். இதன் கரையில் திருவனந்தபுரத்தில் இருந்து வந்த ஒரு அந்தணரும் ஒரு பிரம்மராட்சசனும் பனை மரங்களாக நின்றனர் அவற்றில் இப்போது ஓர் பனை மரம் மட்டுமே எஞ்சியுள்ளது அவசியம் சென்று சேவியுங்கள். 

மகேந்திரகிரி பர்வதத்தில் இருந்து அனுமன் இலங்கைக்கு தாவியதாக ஐதீகம். சுற்றிலும் பச்சைப் பசேலென வாழை, நெல், கரும்பு வயல்கள் சூழ்ந்து செழுமையாக அமைந்துள்ளது திருக்குறுங்குடி திவ்யதேசம்.  


குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி

மூலவர் - நின்றநம்பி (குறுங்குடி நம்பி), இருந்த நம்பி, வருக நம்பி, வைஷ்ணவ நம்பி, திருப்பாற்கடல் நம்பி, மலைமேல் நம்பி என்று ஐந்து கோலங்களில் சேவை சாதிக்கின்றார்) , நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம். ஸ்ரீதேவி, பூமி தேவி தாயார்களுடன் சேவை சாதிக்கின்றார். எம்பெருமான் திருநாமம் சமஸ்கிருதத்தில் சுந்தர பூரணர். தமிழில் அழகிய நம்பிராயர்.
தாயார் - குறுங்குடிவல்லி நாச்சியார் (இரு தனிக்கோவில் நாச்சியார்கள் உண்டு) .
தீர்த்தம் - திருப்பாற்கடல், பஞ்சதுறை, சிந்துநதி.
விமானம் - பஞ்சகேதக விமானம்.
ப்ரத்யக்ஷம் – சிவன், கஜேந்திரன்


கோபால கிருஷ்ணர் சிற்பம்
( கண்ணனின் வேய்ங்குழல் இசையில் மயங்கிய நாகம்  வந்து கேட்பதையும், மரத்தில் இருக்கும் குரங்கும் பெண்ணின் கூடையில் இருக்கும் பொருளை எடுக்கக் தாவுவதையும் கவனியுங்கள்.)
  
ஹரியும் ஹரனும் ஒன்றாக சேவை சாதிக்கும் தலம் : சைவ கோயில்களில் பெருமாள் எழுந்தருளி இருப்பதும், வைணவ கோயில்களில் சிவன் எழுந்தருளி இருப்பதும் சைவ-வைணவ ஒற்றுமையை எடுத்துக்காட்டும். அதே போல் வைணவ கோயிலான திருக்குறுங்குடியில், கோயிலின் உள்ளேயே சிவன் கோயிலும், பைரவர் சன்னதியும்  அமைந்திருப்பது மிகச்சிறந்த அம்சமாகும்.

பஞ்ச நம்பிகள் : “நின்ற நம்பி” , கிடந்த நம்பி இவர்களுடைய சன்னதிகளுக்கு நடுவில் இந்த இரண்டு சன்னதிகளும் உள்ளன.  "இருந்த நம்பி" சன்னதியிலுள்ள பெருமாளை “வைகுந்த நாதன்” என்கிறார்கள். இக்கோவிலிலிருந்து சுமார் அரை கி.மீ தூரத்தில் திருப்பாற்கடல் என்ற தீர்த்தக் கரையில், “திருப்பாற்கடல் நம்பி” சன்னதி உள்ளது. இவ்வூரிலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் உள்ள மகேந்திரகிரி குன்றின் மேல் நம்பியாற்றின் கரையில் “மலைமேல் நம்பி” சன்னதி உள்ளது. தனிக் கோயில் நாச்சியார்களின் உற்சவர்கள் பெருமாளுடன் ஏகாசனத்தில் இருப்பதால் தாயார் சன்னதிகளில் அர்ச்சனை கிடையாது.



கோயில் மூலவரான அழகிய நம்பிக்கு பூஜை நடக்கும் போது, இங்குள்ள சிவனுக்கும் பூஜை நடந்து விட்டதா? என்பதை அறிய, சுவாமியின் பக்கத்தில் நிற்கும் அன்பர்க்கு குறையேதும் உண்டா? என்று பட்டர் கேட்பார். அதற்கு "குறை ஒன்றும் இல்லை' என  மற்ற பட்டர்கள் பதில் அளிப்பார்கள். இது இன்றும் நடைமுறையில் உள்ளது. பெருமாள் மடைப்பள்ளி பிரசாதங்களே சிவனுக்கும் நிவேதனம் செய்யப்படுகின்றன.இதை திருமங்கை மன்னன் தனது பாசுரத்தில்

அக்கும்புலியினதளும் உடையார் அவரொருவர்
பக்கம் நின்ற  பண்பரூர் போலும்
தக்கமரத்தின் தாழ்சினையேறி தாய்வாயில்
கொக்கின் பிள்ளை வெள்ளிறவுண்ணும் குறுங்குடியே.  

நம்மாழ்வாரை நமக்கு அருளிய தலம்: உடைய நங்கையும் காரியாரும் அழகிய நம்பிராயரிடம் புத்திரப்பேறு வேண்ட, பெருமாள் “தானே வந்து அவர்களுக்கு பிள்ளையாக பிறப்பதாக’ வரமளித்தார். பின்னர்  அவரே அதன்படி ஆழ்வார் திருநகரியில்  நம்மாழ்வாராக அவதரித்து  வேதத்தை தமிழ்ப் படுத்தி நாம் எல்லோரும் உய்ய அளித்தார். ஆகவே இத்தலத்தில் நம்மாழ்வாருக்கு தனி அர்ச்சா மூர்த்தம் கிடையாது.



திருமங்கையாழ்வார் பரமபதித்த ஸ்தலம்:  எந்தவிதமான வசதியும் இல்லாத காலத்தில் இமயம் முதல் குமரி வரை உள்ள பல ஆலயங்களுக்கு கால்நடையாகவோ அல்லது குதிரையிலோ பயணம் செய்து பெருமாளை 86 திவ்ய தேசங்களில் மங்களாசாசனம் செய்த ஆழ்வார்களில் கடைக்குட்டியான திருமங்கையாழ்வர், தமது அவதார நோக்கம் முடியும் தறுவாயில்  அரங்கனிடம் தனக்கு வைகுண்டம் அளிக்க வேண்ட அவரும் திருப்பாணாழ்வார் ஆகியோருக்கு இங்கு வைகுண்டம் வழங்கியுள்ளதால் நீ “திருக்குறுங்குடி செல் அங்கு உமது எண்ணம் நிறைவேறும்” என்று அருள, ஆழ்வாரும் இங்கு வந்து  வண்ணம் அழகிய நம்பியை, வடிவழகிய நம்பியை,  தென்குறுங்கை நம்பியை  மங்களாசாசனம் செய்து வைகுண்டம் ஏகினார். ஊருக்குக் கிழக்கே, ஆற்றின் அருகில் வயல்வெளிகளின் மத்தியில் அருமையான சூழலில்  "திருமங்கையாழ்வார் திருவரசு" என்ற சிறிய கோவில் இருக்கிறது. ஆழ்வார் நின்ற கோலத்தில் வேல், கேடயம் இல்லாமல் அஞ்சலி ஹஸ்தத்துடன் தலையில் வீரர்களுக்குரிய கொண்டையுடன்  சேவை சாதிக்கின்றார்.

கொட்டார வாசல் 

ஒரு சீடனாக இராமானுஜரிடம்  ‘திருமந்திர’ உபதேசம் பெற்ற தலம்:  திருக்குறுங்குடி எம்பெருமானுக்கு இராமானுஜரின் சீரிய தொண்டு வியப்பைத் தந்தது. இராமாவதாரத்திலும் சரி, கிருஷ்ணாவதாரத்திலும் தான் செய்ய முடியாததை இராமானுஜர் மட்டும் எப்படி செய்கின்றார்?.  எளிதாக வைணவத்தை எப்படி  பரப்புகிறார்?  என்று ஆச்சர்யம் கொண்டார் நம்பி. அதை அவர் இராமானுஜரிடமே கேட்டபோது, அது குரு ரகசியம் என்றும் அதை முறைப்படி கேட்டால் தான் சொல்லித் தருவதாகவும் இராமானுஜர் சொன்னார். ஆகவே நம்பி பணிவாய் குனிந்து கேட்க, அவரது செவியில் “ஓம் நமோ நாராயணாய” என்ற திருவெட்டெழுத்து மந்திரத்தை ஓதி, இந்த மந்திரத்தின் சக்தியால்தான் தன்னால் அவ்வாறு செய்ய முடிந்தது என்று தெளிவாக்கினார் இராமானுஜர். இவ்வாறு இறைவனுக்கே மந்திரோபதேசம் செய்த அடியவர் யதிராஜர் சீடனாக நின்றவர் அன்று நரனுக்கு நாராயணனாக திருவெட்டெழுத்தை உபதேசித்த  திருக்குறுங்குடி நம்பி!  எனவே பெருமாள் “வைஷ்ணவநம்பி” என்றும் அழைக்கப்படுகின்றார். 



கொக்கு பிடிக்கும் வேடர்கள் 

ஒரு சீடனாக மந்திரோபதேசம் பெற்றது மட்டுமல்ல; இராமானுஜருக்கு இந்த நம்பி சேவையும் செய்திருகின்றார். ஒருசமயம், தன் சீடனான வடுகநம்பியுடன் கேரள தேசம்  சென்று வைணவ கோட்பாடுகளை அங்கே நிலைநிறுத்த இராமானுஜர் முயன்றபோது, அங்கு  இறைப்பணி ஆற்றிக் கொண்டிருந்த நம்பூதிரிகள் இராமானுஜரின் வருகையை விரும்பவில்லை. தம் கைங்கரியங்கள் அவரால் பாதிக்கப்பட்டுவிடுமோ, காலங்காலமாக நடைமுறையில் பழகி வரும் சம்பிரதாயங்களை இவர் மாற்றி விடுவாரோ என்று பயந்தார்கள். அதை பெருமாளிடமும் முறையிட்டார்கள். அவரும் இவர்களுடைய பாரம்பரிய பணிக்கு எந்த ஊறும் ஏற்பட்டுவிட வேண்டாமே என்ற எண்ணத்தில், தன் எதிரே இருந்த கருடாழ்வாரிடம், ‘‘இராமானுஜர் உறங்கும் நேரத்தில் அவரை திருக்குறுங்குடிக்கே கொண்டு போய் விட்டுவிடு’’ என்று உத்தரவிட்டார். கருடாழ்வாரும் அப்படியே செய்தார்.



இராமானுஜரிடம் சீடராக நம்பி


தனக்கு சேவை புரியும் தன் சீடனான வடுகநம்பியை அழைத்தார்.  அங்கே கேரள தேசத்தில்  வடுகநம்பியோ அங்கு தன் குருநாதரை திடீரெனக் காணாத குழப்பத்தில் தவித்துக்கொண்டிருந்தார்! ஆனால் இங்கே, வடுகா என்று எம்பெருமானார் அழைத்தபோது, திருக்குறுங்குடி நம்பியே    கை கட்டி வாய் பொத்தி  வந்து  நின்றார். தான் இட்டுக்கொண்டபின் மீதமுள்ள திருமண்ணை தன் சீடனுக்கு உடையவர்.  இட்டார். 

திருக்குறுங்குடி கோயிலுக்குள் இராமானுஜர் வண்ணமழகிய நம்பியை  சேவித்த போது, தான் இட்ட திருமண்ணுடன் நம்பி சேவை சாதிக்கும் அற்புதத்தைக் கண்டு நெகிழ்ந்த இராமானுஜர், திருக்குறுங்குடி நம்பியையே வடுக நம்பி என்று அழைத்து மகிழ்ந்தார்.




 தூண்களில் உள்ள  சில சிற்பங்கள்  




ராமானுஜர், விடிந்ததும், தாம் திருக்குறுங்குடியிலேயே திருப்பாற்கடல் ஆற்றின் நடுவில் உள்ள பரிவட்டப்பாறையிலே இருப்பதைக் கண்டு, அந்த தெய்வச் செயலுக்கு மதிப்பளிக்கும் வகையில் மீண்டும் கேரள தேசம் செல்ல முயற்சி எடுக்கவில்லை. ஆகவே வழக்கம் போல தினசரி அனுஷ்டானங்களில் ஈடுபட்டார்.

தூணில் இரதி தேவி சிற்பம்


ஊரிலிருந்து சுமார் ஒரு கி.மீ  தூரத்தில் திருப்பாற்கடல் ஆறு மாலை போல சுற்றி செல்ல அதன் இடையில் திருப்பரிவட்டப்பாறை என்ற பாறை மேல் உடையவர் சன்னதி உள்ளது. அங்கு பத்மாசனத்தில்  சீடனுக்கு மந்திரோபதேசம் அருளும் கோலத்தில் இராமனுஜர் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். அருமையான நந்தவனத்தை அமைத்து பராமரிக்கின்றனர்.

நம்பாடுவானுக்காக நகர்ந்த கொடிமரம்:  திருக்குறுங்குடியின் அருகே உள்ள மகேந்திரகிரி மலையடிவாரத்தில் வசித்து வந்த தாழ்ந்த வகுப்பை சேர்ந்தவர்  நம்பாடுவான். வடிவழகிய நம்பியின் மேல் மிகவும் பக்தி கொண்ட பாகவதர். தினமும் அதிகாலை வந்து ஜாக்ர விரதம் என்னும் பெருமாளை இசைத் தமிழால்  திருப்பள்ளியெழுப்பும் சேவையை செய்து வந்தார்.  பஞ்சமர் என்பதனால் கோவிலின் உள்ளே வந்து கோயில் மூலவரான நலமிகு செங்கனிவாய் நம்பியை எம்பியும்  பார்க்கமால் போனதற்காக மிகவும் வருத்தப்பட்டார். அப்போது பெருமாள் கொடிமரத்தை விலகி இருக்க சொல்லி நம்பாடுவானுக்கு தாமே தரிசனம் தந்தார். இங்கு மற்ற கோயில்களைப் போலல்லாமல் கொடிமரம் விலகி இருப்பதை நாம் இப்போதும் காணலாம். கைசிக துவாதசியன்று நம்பாடுவான் என்ற இந்த  பக்தர் இத்தலத்தில் தன் புண்ணியத்தில் ஒரு 
பாகத்தை தன்னை புசிக்க  வந்த பிரம்மராக்ஷஸனுக்குக் கொடுத்து 
அதற்கு சாப விமோசனம் அளித்து தான் வைகுண்டப்பேறு  பெற்றான் 
என்பது  வராஹபுராண வரலாறு. இன்றும், இந்த ஐதீகம் நாடக ரூபமாக இங்கே கைசிக ஏகாதசியன்று இரவு நடக்கின்றது.

அரையர் சேவை இன்றும் நடைபெறும் தலம்: நாதமுனிகள் துவக்கிய  திவ்ய பிரபந்தங்களை அபிநயனத்துடன்  இன்றும் பெருமாள் முன் சேவிக்கும் அரையர் சேவை இடைவிடாமல் இன்றும் நடைபெறும் தலம். தற்போது மூன்று திவய தேசங்களில் மட்டும் தான் அரையர் சேவை நடை பெறுகின்றது. அவையாவன:
வண்டினமுரலும்சோலை மயிலினமாலும் சோலை
கொண்டல்மீதணவும்சோலை குயிலினம்கூவும் சோலை
அண்டர்கோனமரும்சோலை அணிதிருவரங்கம் என்று தொண்டரடிப் பொடியாவார் மங்களாசாசனம் செய்த திருவரங்கம்.

மென்னடையன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூர் என்று ஆண்டாள் மங்களாசாசனம் செய்த ஸ்ரீவில்லிபுத்தூர்.

குளனார்கழனி சூழ் கண்ணன் குறுங்குடி என்று நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த திருக்குறுங்குடி. ஆகியவையே இந்த மூன்று திவ்ய தேசங்கள்.
 
நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசை ஆழ்வார், பெரியாழ்வார் என நான்கு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்.  அழகிய நம்பிராயரின் அழகில் ஈடுப|ட்ட பராங்குச நாயகியாய் தன்னை பாவித்து நம்மாழ்வார் பாடிய பாசுரம் இதோ

எங்ஙனேயோ, அன்னைமீர்காள்; என்னை முனிவது நீர்?
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே.

இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை வசந்தோற்சவம், வைகாசி ஜேஷ்டாபிஷேகம், ஆவணி பவித்ர உற்சவம், புரட்டாசி நவராத்திரி விழா, ஐப்பசி ஊஞ்சல் உற்சவம், தை தெப்ப உற்சவம். பங்குனி பிரம்மோற்சவம். வெகு விமரிசையாக நடக்கின்றது. பங்குனி பிரம்மோற்சவத்தின். 5ம் திருநாளன்று 5 நம்பிகளும் கருட வாகனத்தில் வீதி உலா. மறுநாள் அதிகாலையில் மேலரத வீதியில் 5 நம்பிகளும் தேவ சித்த கந்தர்வ மகரிஷிகளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் சிறப்பாக  நடக்கின்றது.

சித்தர்கள் பலர் இன்றும் அரூபமாக  திகழும் தலம் என்பதால் சித்தாஸ்ரமம் என்றும் அறியப்படுகின்றது இத்தலம். 

இதுவரை வனம் சூழ்  திருக்குறுங்குடி திவ்ய தேசத்தின் சிறப்புகளை கண்டோம். இனி ஏகாதசி விரதத்தின் சிறப்புகளையும் இந்த திவ்ய தேசத்திற்கே உரித்தான கைசிக ஏகாதசியன்று நம்பாடுவான் செய்த அற்புத செயலையும், இத்தலத்தின் கைசிக ஏகாதசி  வைபவங்களையும் பற்றி காணலாமா? அன்பர்களே. 



Labels: , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home