Monday, December 30, 2013

திருப்பாவை # 29 (பரிபூரண சரணாகதி)

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ:



சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துஉன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்

பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.............(29)


பொருள்:கோவிந்தா! விடியற்காலை வேளையில் வந்து உன்னை வணங்கி உன் பொற்பாதங்களை போற்றிப் பாடும் காரணத்தைக் கூறுகிறோம் கேட்டருள்க.

பசுக்களை மேய்க்கும் இடையர்கள் குலத்தில் பிறந்த நீ உன்னைச் சரணடைந்த உன் அடியவர்களை அடிமைகளாக ஏற்றுக் கொள்ளாமலிருப்பது தகுதியாகாது.

இன்று மட்டுமல்ல( இப்பிறவி) என்னும் எத்தனை ஜென்மம் நாங்கள் எடுத்தாலும் உன்னோடு கூடியிருப்போம், உனக்கே அடிமைகளாகி சேவை செய்வோம். மற்ற எந்த விருப்பங்களும் மனத்தில் எழாமல் ஆட்கொண்டு அருள் பரந்தாமா!


கோவிந்தன்: மாடு மேய்த்து அதனாற் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழும் கோபாலர் சாதியிற் பிறந்தவன் கண்ணன் என்பதை"பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீஎன்னும் வரிகளில் உணர்த்துகின்றார் ஆண்டாள். ஆநிரைகள் ஆயர்களின் செல்வமாக விளங்குபவை; அவற்றைக் கவர்ந்து செல்ல வரும் பகைவர்களை எதிர்த்து நின்று அவர் தம் வலிமையை அழிக்கின்ற கோவிந்தன் என்பதை கூடாரை வெல்லுஞ் சீர் கோவிந்தா என்றும் மாற்றாரை மாற்றழிக்க வல்லானை என்னும் இரண்டு பாடல்களில் உணர்த்தியுள்ளார் ஆண்டாள்.

திரௌபதி  நிர்க்கதியாக கௌரவர் சபையில் தவித்தபோது அவளைக் காத்த இந்த "கோவிந்தன்" என்ற திருநாமத்தை 27ல் கூடாரை வெல்லும் கோவிந்தா, 28ல் குறையொன்றும் இல்லாத கோவிந்தா, 29ல் கோவிந்தா என்று அடுத்தடுத்த மூன்று பாசுரங்களில் போற்றியுள்ளார் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்.


பூரண சரணாகதி தத்துவத்தை , திருப்பாவையின் சாரத்தை விளக்கும் பாசுரம்.

Labels: , , ,

Thursday, December 26, 2013

திருப்பாவை # 24

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ:



அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி
பொன்றச்சகடமுடைத்தாய்! புகழ் போற்றி
கன்று குணிலாவெறிந்தாய்! கழல் போற்றி
குன்று குடையாவெடுத்தாய்! குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்று உன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம்; இரங்கேலோர் எம்பாவாய். (24)

பொருள்:'
திரிவிக்கிரமனாக மூன்று அடிகளால் மூவுலகங்களையும் அளந்த திருவடியை போற்றி வணங்குகின்றோம். இலங்கையை அழித்த உனது திறமையைப் போற்றுகின்றோம். மாய வடிவில் வந்த சகடாசுரனை உதைத்து மாய்த்து உனது புகழைப் போற்றுகின்றோம். கன்றில் உருவத்தில் வந்த வத்ராசுரனை எறிந்து விளங்கனி விழ வைத்த உனது திறத்தைப் போற்றுகின்றோம். ஆயர்களையும், ஆநிரைகளையும் காப்பாற்ற கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்த உன் கருணை குணத்தைப் போற்றுகின்றோம். பகைவர்களை அழிக்க உன் கையில் விளங்கும் உனது திவ்ய ஆயுதங்களை வணங்குகின்றோம். என்றென்றும் உனக்கு அடிமையாக இருந்து உன் சேவை புறப்பட்டு இன்று வந்தோம் எங்களுக்கு இரங்கி அருள் புரிவாயா! மதுசூதனா!


புராண வரலாறுகள்:

அன்றிவுலகமளந்தவன்: வாமன அவதாரத்தின் பெருமையே இப்பாசுரத்திலும் "அன்றிவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி " என்னும் பாசுர வரிகளால் உணர்த்துகின்றார் ஆண்டாள் நாச்சியார். பார்க்க மூன்றாவது பாசுரம்.

சென்றங்கு தென்னிலங்கை செற்றவன்: மேலும் நாங்கள் தேடி வந்த இந்த திருவடிகள் முன்பு சீதா தேவியார் பொருட்டு, தென்னிலங்கை சென்று இராவணனை அழித்து அந்நகரை தீக்கு இரை ஆக்கிய திருவடிகள் என்னும் இராமாவதாரப் பெருமையும் "சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி" என்று போற்றுகின்றார் ஆண்டாள்.


பொன்றச் சகடம் உதைத்தவன்: கஞ்சனால் ஏவப்பட்ட வஞ்சப் பேய் மகள் கண்ணன் கையால் மாண்டதால் கோபம் கொண்ட அவன் மற்றொரு அசுரனை அனுப்பினான் கண்ணனைக் கொல்ல. அவனும் சகட(சக்கர) வடிவம் எடுத்து கண்ணனை ஏற்றிக் கொல்ல உருண்டு வந்தான் அதனை அறிந்த கண்ணன் தனது பிஞ்சுக் கால்களால் அவனை உதைத்து அவனை வதம் செய்தார். இந்த வரலாற்றையே சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் "பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி!என்று மங்களாசாசனம் செய்கிறாள்.


கன்று குணிலாய் எறிந்தவன்:
கண்ணனாகிய குழந்தையைக் கொல்ல கம்சனால் ஏவப்பட்ட அசுரர்கள் ஒவ்வொருவராக வந்து மாண்டதால், பின் இரண்டிரண்டாக வரத் தலைப்பட்டனர். கபித்தாசுரன், வத்ராசுரன் என்னும் இரு அரக்கர்கள் இவ்வாறு திட்டம் போட்டு வந்தனர். கபித்தாசுரன் விளா மரமாக நிற்க, கன்றுக் குட்டி போல வத்ராசுரன் உருவெடுத்து சென்று கண்ணனை போக்குக் காட்டி விளா மரத்திற்கு அருகில் வரச் செய்து, வேரோடு கண்ணன் மேல் சாய்ந்து அவரைக் கொல்ல திட்டம் தீட்டி வந்தனர். எல்லாம் அறிந்த மாய க்கண்ணன், மரம் அருகில் வந்து, கோபாலர்கள் விளாம் பழத்தைக் குறி வைத்து அடிக்க சிறு தடியை உபயோகிப்பது போல, கன்று போல வந்த அசுரனை தடியாக மாற்றி விளா மரத்தின் மேல் எறிந்து இருவரையும் வதம் செய்தார் என்ற புராண வரலாற்றை, "கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி" என்னும் பாசுர வரியில் எடுத்துக் காட்டுகின்றார் கோதை ஆண்டாள்.


குன்று குடையாய் எடுத்தவன்: திருவாய்ப்பாடியில் ஆயர்கள் எல்லாரும் கூடி மழையின் பொருட்டு, இந்திரனை வழிபட வழக்கபடி சமைத்தனர்; சமைத்த அச்சோற்றைக் கண்ணபிரான், இந்திரனுக்கு இடாதபடி விலக்கிக் கோவர்த்தன மலைக்கு இடச்சொல்லித் தானே ஒரு தெய்வ வடிவு கொண்டு அமுது செய்தருளினார். இதனையறிந்த இந்திரன் கோபங்கொண்டு, பல மேகங்களை ஏவிக் கண்ணன் விரும்பி மேய்க்கின்ற கன்றுகளுக்கும், பசுக்களுக்கும், இடையருக்கும், இடைச்சியர்களுக்கும் தீங்கு தரும்படி கல்மழையை ஏழு நாட்கள் இடைவிடாது பெய்வித்தான். அப்பொழுது, கண்ணன் கோவர்த்தனம் என்னும் அம்மலையை எடுத்துக் குடையாகப் பிடித்து மழையைத் தடுத்து எல்லா உயிர்களையும் காத்தருளினார். அக்கருணையை னைத்து போற்றுகின்ற'ர் ஆண்டாள்"குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி என்ற இப்பாசுர வரிகளால்.

Labels: , ,

Wednesday, December 25, 2013

திருப்பாவை # 21

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ:




ஏற்றக் கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப்படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றாருனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்து அடிபணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்...............(21)



பொருள்: பாத்திரங்கள் எல்லாம் பொங்கி பெருகி வழியுமாறு பாலைப் பொழிகின்ற வள்ளல் தன்மை பொருந்திய பசுக்களை உடைய நந்தகோபனின் திருமகனே கண்ணா! எழுந்திரு.

உன்னை அண்டியவர்களை காப்பவனே! எல்லாருக்கும் தலைவனே! ஒளிச்சுடராய் உலகமெங்கும் நிறைந்தவனே எழுந்திராய்!

பகைவர்கள் எல்லாரும் உன்னிடம் தோற்று, தங்களுடைய வலிமையெல்லாம் இழந்து, வேறு வழி இல்லாமல் உன் வாசல் தேடி வந்து உனது பொற் திருவடிகளில் விழுந்து சரணடைவது போல நாங்களும் உன் வாசலில் வந்து நின்று உன் புகழ் பாடுகின்றோம், நீ மகிழ்ந்து எழுந்து வந்து அருள்வாயாக!

Labels: , ,

Monday, December 23, 2013

திருப்பாவை #17

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ:



அம்பரமே,தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா, எழுந்திராய்;
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குல விளக்கே!
எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்
அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்!
செம்பொற் கழலடி செல்வா! பலதேவா!
உம்பியும் நீயுன் உறங்கேலோ ரெம்பாவாய்!


பொருள்: உடுக்க நல் உடை, பருகும் நீர், உண்ணும் உணவு ஆகிய அனைத்தையும் எங்களுக்கு தாராளமாக அறமாக வழங்கும் எம்பெருமானே! கண்ணனின் தந்தையே! நந்தகோபாலா! எழுந்திரு.

வஞ்சிக்கொடிக் கொடி போன்ற ஆய் குலத்து பெண்கள் அனைவருக்கும் கொழுக் கொம்பாக விளக்கும் ஒளி விளக்கே! எம்பெருமாட்டியே யசோதையே! நீயும் துயில் எழாய்!

வாமனனாக வந்து வான் வெளியையும் கடந்து திரிவிக்கிரமனாக வளர்ந்து உலகத்தை தன் திருவடியால் அளந்த தேவதேவனே! கண்ண பெருமானே துயில் கொள்ளாமல் எழுந்திரு!

செம்பொன்னாலான வீரக்கழல்களை அணிந்த செல்வா! பலதேவா! நீயும் உனது தம்பியும் உறங்காதீர்கள்.


அம்பரமூடுறுத்து ஓங்கி உலகளந்தவன்:

வாமன அவதாரத்தின் பெருமையையே இப்பாசுரத்தில் "அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே" என்று பாடுகிறார் ஆண்டாள் நாச்சியார். (பார்க்க மூன்றாம் பாசுரம்  .http://andalthiruppavai.blogspot.in/2007/12/3.html )

Labels: , ,

Wednesday, December 18, 2013

திருப்பாவை # 5

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ:










மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் வந்து தோன்றும் அணி விளககை
தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி, மனதினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றளவும்
தீயினால் தூசாகும்! செப்பேலோ ரெம்பாவாய். ..........(5)


பொருள்:

கண்ணனது பெயர் சிறப்பு :
பாற் கடலில் பள்ளி கொண்ட பரமன் கண்ணன், நிலைத்த தன்மையுடைய மதுராவில் தோன்றிய மாயன், தூய்மையும் பெருமையும் உடைய யமுனைக் கரையில் ராச லீலைகள் புரிந்தவன். ஆயர் குலத்தினில் வந்துதித்த அழகிய விளக்கு. தன்னைப் பெற்ற தாயை எனன பேறு பெற்றாள் இவனைப் பெற்ற வயிற்றுடையாள் என்று உலகத்தோரெல்லாம் புகழச் செய்த தாமோதரன்.

(என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள் என்னும் வார்த்தையெய்துவித்த இருடீகேசா! முலையுணாயே என்பது பெரியாழ்வாரின் பாசுரம்)

அந்த பெருமாளை நாம் தூய மனதுடன் நல்ல மலர் தூவி வணங்குவோம்; வாயினால் அயர்விலா அமரர்கள் ஆதிக் கொழுந்தே, ஆழிப் படையந்தணணே, உய்ய்க் கொள்கின்ற நாதனே என்று அவனதுப் புகழைப் பாடுவோம்; மனதினால் அவனது தன்மையை நினைப்போம், இவ்வாறு காலையில் மார்கழி நீராடி கண்ணனை பூசை செய்தால் நாம் முன்பு செய்த பிழைகளும், இனி மேல் வரும் பொருட்டிருக்கும் பிழைகளும் நெருப்பில் இட்ட தூசு போல் அழிந்து விடும் ஆகையால் அவனது புகழைப் பேசுவாமாக!

Labels: , ,

Monday, December 16, 2013

திருப்பாவை # 3

Visit BlogAdda.com to discover Indian blogs
  ஸ்ரீ:
                                   






ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் லூடு கயலுகல
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய். .........(3)


பொருள்:பாவை நோன்பின் பயன்:


வாமனனாக வந்து நெடியோன் திரிவிக்கிரமனாக ஓங்கி வளர்ந்து இந்த உலகத்தை ஓர் அடியால் அளந்த உத்தமன் திருமால்! அந்த பெருமாளின் திருநாமங்களை கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, திரிவிக்கிரமா, வாமனா, ஸ்ரீதரா, இருடிகேசா ,பத்மநாபா, தாமோதரா, கோபாலா, வாமனா, மாமாயா, தேவ தேவா, பால கிருஷ்ணா, மணி வண்ணா, பூவண்ணா, புள்ளரையா, ஸ்ரீஹரி, பரமா, கண்ணா, மாதவா, வைகுண்ட நாதா என்று பாடி நாம் நம் பாவை நோன்பை நோற்பதன் பலன்கள் என்ன என்று தெரியுமா தோழி?

ஊர் செழிக்க தீமையில்லாமல் மாதம் மூன்று மழை தவறாமல் பெய்யும், அதனால் வயல்களில் செந்நெல் ப்யிர்கள் நெடு நெடுவென வளரும், அந்த பயிர்களின் ஊடே கயல் மீன்கள் துள்ளித் திரியும், நிரம்பியிருக்கும் நீர் நிலைகளில் கருங்குவளை மலர்களில் புள்ளிகளையுடைய அறுகால் வண்டினங்கள் தேனைக் குடித்து மெய் மறந்து உறங்கும். மாட்டுத் தொழுவத்தில் புகுந்து அழகிய பசுக்களின் மடியைப் பற்றி இழுத்தால் பாலை தேக்கி வைத்துக் கொள்ளாமல் வள்ளல்களைப் போல பாலைப் பொழிந்து குடங்களை நிறைக்கும். எப்போதும் அழியாத செல்வம் எங்கும் நிறைந்திருக்கும் அறி பெண்ணே!


இப்பாசுரத்தில் அவதாரப்பெருமை: வாமன அவதாரம் 



இந்த மூன்றாம் பாசுரம், பதினேழாம் பாசுரம் மற்றும் இருபத்து நான்காம் பாசுரம் மூன்றிலும் ஆண்டாள், எம்பெருமானின் வாமன அவதாரத்தை போற்றுகின்றார். இப்பாசுரத்தில் "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி" என்னும் பதத்தினால் இவ்வவதார பெருமையை உணர்த்துகின்றார்.


வாமன அவதாரம்: பலி சக்கரவர்த்தி பிரகலாதரின் பேரன், விரோசனரின் புத்திரன், இந்திரப்பதவியை கைப்பற்றியதால் இந்திரனுடைய தாய் அதிதியின் கர்பத்தில் பெருமாள் வாமனனாக அவதரித்தார். "வாமன அவதாரம்" எடுத்து வந்து மஹாபலியிடம் சென்று தவம் செய்வதற்கு தன் காலடியில் மூன்றடி மண் தருமாறு யாசித்தார். மகா பலியும் தருவதற்கு இசைந்து , தாரை வார்த்து தர முற்படும் போது ஓங்கி திரிவிக்கிரமனாக வளர்ந்து, ஓரடியால் மண்ணுலகத்தையும், இரண்டாவது அடியால் விண்ணுலகத்தையும் அளந்து நின்ற நெடுமால், இன்னுமொரு அடிக்கு மண் எங்கே? என்று வினவ, மகாபலி தன் தலையை தாழ்த்தி வணங்கி நின்றான். பெருமாள் அவனது முடியில் தன் அடியை வைத்து பாதாளத்திற்க்கு அழுத்தி அவனது செருக்கை அடக்கினார்.

பாசுரத்தின் உட்கருத்துபக்குவமடைந்த ஜீவாத்மாக்கள் (பசுவின் மடியைப்பற்றுவதுபோல) குருவின் காலைப்பிடித்து ஞானப்பாலைப்பெற்று பருகினால் ஆனந்த வெள்ளமாம் அது! அவர்களின் இதயகமலத்தில் பகவான் பொறிவண்டுபோல படுத்து உறங்குவானாம். 

Labels: , ,

திருப்பாவை # 2

Visit BlogAdda.com to discover Indian blogs
திருப்பாவை # 2
























வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ; பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம், நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்;
செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்!  (2)


பாவை நோன்பை செய்யும் முறை: ( செய்யக்கூடியவைகளும் செய்யக்கூடாதவைகளும்)

இந்த மண்ணுலகில் வாழ்பவர்களே! நாம் ந்ல்ல மழை பெறவும், செல்வம் செழிக்கவும், நல்ல கணவனை அடையவும் செய்யும் நம் பாவை நோன்புக்கு செய்ய வேண்டிய காரியங்களை கேளுங்கள்!


திருப்பாற்கடலில் அரிதுயில் கொண்டுள்ள அரியின் திருவடிகளை எப்போதும்  பாடுவோம்.நெய், பால் கலந்த உணவை உண்ண மாட்டோம், அதி காலை எழுந்து நீராடுவோம்; கண்களுக்கு மையிட்டு அலங்கரிக்கமாட்டோம், கூந்தலில் மலர் இட்டு அழகு செய்து கொள்ள மாட்டோம்; பெரியோர்களால் செய்யத்தகாதவை என்று கூறப்பட்டுள்ள செயல்களை செய்ய மாட்டோம், எவரிடமும் சென்று கோள் சொல்லமாட்டோம். அண்டி வந்து யாசிப்பவர்களுக்கு இல்லை எனாது தர்மம் செய்வோம். இவை யாவும் செய்வது நாம் கடைத்தேறும் வழிக்கே என்று நினைத்து மகிழ்வோம். பிறப்பினின்று உய்யும் வழியைக் கருதி பாவை நோனபை கடைப்பிடிப்போம்.

Labels: , ,

Sunday, December 15, 2013

திருப்பாவை # 1

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ:
ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை

திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்துமூன்றுரைத்தாள் வாழியே
உயர் அரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லிவள நாடி வாழியே
வண்புதுவை நகர் கோதை மலர்ப்பதங்கள் வாழியே



அன்ன வயற்புதுவையாண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல் பதியம் - இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.



சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே! தொல் பாவை
பாடியருள வல்ல பல்வளையாய்! - நாடி நீ
வேங்கடவற் கென்னை விதியென்ற விம்மாற்றம்
நாம் கடவா வண்ணமே நல்கு.


திருப்பாவை #1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யாசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கு பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!

மார்கழி மாதத்தின் சிறப்பு:



பொருள்: கோபியரே! கோபியரே! கொஞ்சும் இளம் வஞ்சியரே! பொருத்தமான அணிகலன்களை அணிந்த பெண்களே! கண்ணனின் அருட்செல்வம் நிறைந்திருக்கின்ற திருஆய்ப்பாடியின் செல்வச் சிறுமிகளே!


நம் கண்ணன் (நாராயணன்) , கூர்மையான வேலுடன் சென்று பகைவர்களை வெல்லும் நந்தகோபனின் திருக்குமரன், அழகிய கண்களையுடைய யசோதையின் இளஞ்சிங்கம், கருவுடை முகில் வண்ணன், காயா வண்ணன், கருவிளை போல் வண்ணன், செந்தாமரையை ஒத்த கண்களையுடையவன், குளிர்ச்சி பொருந்திய முகிழ்கின்ற முழுமதி திருமுகத்தினன். அந்த ஸ்ரீமந் நாராயணனே நமது பாவை நோன்பிற்கு வேண்டிய அனைத்தையும் வழங்குவான்( இம்மை இன்பங்களை மட்டுமல்ல மறுமையில் வைகுண்டப்பதவியையும்) வாருங்கள்! வஞ்சியரே! இந்த மாதங்களில் சிறந்த மார்கழியில், முழுமதி நன்னாளில் கோவிந்தன் பெயரைச் சொல்லி உலகத்தோர் போற்றும் வண்ணம் மார்கழி நீராடுவோம். ( எம்பெருமான் அனுபவத்தில் திளைப்போம். )என்று தன்னை ஒரு ஆயர்குலப்பெண்ணாகவும், திருவில்லிபுத்தூரை ஆய்ப்பாடியாகவும், வடபத்ர சாயியை கண்ணனாகவும் பாவித்து பாவை நோன்பை அனுசரிக்க ஆண்டாள் நாச்சியார் அழைக்கின்றார்.

********* 

குறிப்பு: இந்த இடுகைகள் முதலில்  http://andalthiruppavai.blogspot.in  வலைப்பூவில் பதிவிடப்பட்டன. தற்போது விஜய வருட   மார்கழி மாதத்தில்   இவ்வலைப்பூவில் மீள்பதிவிடப்படுகின்றன முதலில்  அனுபவிக்கதவர்களின் நன்மைக்காக.

Labels: , ,

திருப்பாவை உணர்த்தும் நன்னெறி

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ:



பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் பகவத் கீதையிலே உயர்ந்தவற்றைக் கூறும் போது "மாதங்களில் நான் மார்கழி" என்கிறார். திருக்கோவில்களில் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் கோவில்களில் இறைவனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகின்றது. மஹா விஷ்ணுவின் வைகுண்ட ஏகாதசி வரும் மாதம் இதுதான். குளிர் காலத்தில் காலை வேளையில் ஓஜோன் என்னும் வாயு மிகுந்து உள்ளதால் உடலுக்கும் மிகவும் நன்மை பயக்கும் என்ற அறிவியல் உண்மையை உணர்ந்த நம் முன்னோர்கள் நம்மை அதிகாலையில் எழுந்து பயன் பெற இந்த வழக்கத்தை ஏற்படுத்தினர் போலும்.

மானிடர்களாகிய நம்முடைய ஒரு வருடம் தான் தேவர்களுக்கு ஒரு நாள் அவர்களுடைய நாள் தொடங்குகின்ற மாதம் தான் மார்கழி மாதம். எனவே மார்கழி மாதம் நாம் செய்கின்ற பூசை தேவர்களின் அதிகாலை பூசை என்பது ஐதீகம்.

பண்டை காலம் தொட்டே மார்கழி மாதத்தில் அதிகாலை வேளையில் எழுந்து கோலம் இட்டு வாசலை அலங்கரித்து பாவை நோன்பு இருப்பது வழக்கமாக உள்ளது. கோவில்களிலே சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்ஆண்டாள் பாடியருளிய திருப்பாவை இசைக்கப்படுகின்றது. இனி திருப்பாவை வலியுறுத்தும் நன்னெறிகளைப் பற்றி பார்ப்போமா?

இந்த மாய உலகத்திலே சம்சார பந்ததிலே உலலுகின்ற ஜ“வாத்மா, பரமாத்மாவுக்கே உரியாதாயிருக்கையில் அவனையே கரணங்கள் யாவற்றிலும் அனுபவித்து இன்புறுதலும், அவன் பிரிந்த காலத்து துன்புறுதலும் அடையுமாதலால் இறைவனை ஆண்டாள் நாச்சியார் பாடியுள்ள பாடல்களே திருப்பாவை .
திருப்பாவைக்கு அடிப்படையாக விளங்குவது ஜ“வாத்மா பரமாத்மாவுடன் இரண்டறக் கலப்பதுதான். பாவை நோன்பு ஒழிக்க முடியாத உறவு என்பது பகவானுக்கும் உள்ள பரஸ்பர பந்தத்தை நிலை நிறுத்துகிறது. அதாவது இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் எம்பெருமான் , அவனைப் பற்றாகக் கொண்டால் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அவன் துணையாக இருப்பான் என்ற தத்துவத்தை விளக்குவதே பாவை நோன்பு.
திருப்பாவை, "ஆன்ம நேயத்தை" போதிக்கின்றது. ஒரு ஆன்மா பிற ஆன்மாக்கள் மீது நேயம் கொண்டு தன்னோடு அவை அனைத்தும் இறைவனை அடையுமாறு செய்யும் நோக்கில் பாடப்பட்ட பாடல்களே இவை. "வஸ”தைவ குடும்பகம்" என்று வட மொழியில் உலகம் எல்லாம் ஒரே குடும்பம் என்றும் நமது தமிழில் " யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் " என்பதும் இந்நெறிதானன்றோ?



தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய

தூபம் கமழத் துயிலனைமேல் கண் வளரும்

மாமான் மகளே மணிக்கதவம் தாழ் திறவாய்
என்று ஆண்டாளும் பாடுவது சம்சார பந்தத்திலே உழலும் ஆன்மாவைப்பார்த்து காலம் வந்து விட்டது இப்போதாவது விழித்துக்கொள் இறைவனின் திருப்பாதங்களில் சரணடைந்து விடு என்று கூறுவதல்லவோ.

மேலும் வைகறை துயிலெழும் மிக நல்ல நெறியை நமக்கு உணர்த்துவதை நாம் காணலாம்.



ஒண்ணித் திலநகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ?


புள்ளும் சிலம்பின காண்! புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கெட்டிலையே?


உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பினகாண்


என்று ஆண்டாள் பாடுவது பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலையிலே எழுவதும் பின்பு இறைவனை வழிபடுவதும் நமக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதை நமக்கு வலியுறுத்தவே.



அடுத்த நெறி உடல் சுத்தி என்னும் நீராடல், இது புற சுத்தி இதை திருப்பாவையும் திருவெம்பாவையும் இரண்டும் மிக நன்றாக வலியுறுத்துகின்றன.


மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்

நீராடப்போதுவீர் போதுமினோ நேரிழையீர்

என்று திருப்பாவை தொடங்குகிறது.
நம்மை நல்வழிப்படுத்துகின்ற இந்த சிறு வயது முதலே பாராயணம் செய்து வந்துள்ளேன். அடியேனது ஊர் உடுமலைப்பேட்டையில், பிரசண்ட வினாயகர் கோவிலில் மார்கழி பனி அதிகாலையில் பாராயணம் செய்து பெற்ற இன்பம் அலாதி. அந்த இன்பத்தை அனைவரும் பெற வேண்டும் என்பதற்காகவே இந்த தொடர். இந்த மார்கழி மாதம் முப்பது நாளும் தொடரும்.

திருப்பாவையின் பாடல்களையும் பொருளுடன் ( பல் வேறு புத்தகங்களில் படித்தது) அளிக்க முயற்சி செய்துள்ளேன். முடிந்தவரையில் கண்ணனது லீலைகளையும் அந்தந்த பாசுரங்களில் கொடுத்துள்ளேன். குறை இருந்தால் அது என்னுடைய தவறே அதற்காக மன்னிக்கவும்.

Labels: , ,

Friday, January 11, 2008

கூடாரவல்லி

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ:


கூடாரை வெல்லும் சீர் கோவிந்தனுடன்
கூடியிருக்கும் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்

இன்று பெருமாள் கோவில் பொங்கல் மிகவும் தித்திப்பாக இருப்பதேன்?


அப்பா அப்பா ஒர் சந்தேகம்

என்ன ரவி என்ன சந்தேகம் உனக்கு கோவிலுக்கு போயிட்டு வந்தவுடன்?

இன்று பெருமாள் கோவில் பொங்கல் மிகவும் சூப்பராக இருக்குதே ஏம்ப்பா?

அப்பா அப்பா நான் சொல்றேன் அப்பா.

சரி சொல்லு சூரியா.

இன்னைக்கு நெய்யும் முந்திரி திராட்சையும் அதிகம் அதனால் தான் பொங்கல் ரொம்ப நல்லா இருக்கு.

ஒரு வகையில் சரி தான் ஆனால் உண்மையான காரணம் இன்றைக்கு கூடாரவல்லி அதனால் பெருமாளுக்கு சிறப்பு பிரசாதம்.

கூடார வல்லின்னா என்னப்பா?

அது ஒரு சுவையான கதை

கதைன்னா எங்களுக்கு நல்லா பிடிக்குமே சொல்லுங்க அப்பா.

ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்

என்ன நாம் கேட்கிற கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லணும்.

சரிப்பா

இந்த மார்கழி மாதம் முழுவதும் காலையில் எழுந்து கோவிலுக்குப் போய் என்ன செய்தீர்கள் ரெண்டு பேரும்.

திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, திருப்புகழ், திருவாசகம் பாடினோம்.

சரி திருப்பாவையை எழுதியது யாரு?

ஆண்டாள் அம்மா.

அவர்கள் கதை உங்களுக்கு தெரியுமல்லவா?

ஆமாம் அப்பா, தன்னையே கோபிகையாக பாவித்து கண்ணணை அடைய பாவை நோன்பு நோற்பதைப் போல் பாடிய பாடல்கள் இவைகள் என்று தாங்கள் தானே சொல்லிக் கொடுத்தீர்கள் அப்பா.

ஆண்டாள் பாவை நோன்பை எப்படி ஆரம்பிக்கராங்க

அப்பா நாம் சொல்றேன்

சொல்லு ரவி

நெய்யுண்ணோம், பாலுண்ணோம் , ஆபரணம் அணியோம் என்று ஆரம்பிக்கராங்க

மிகவும் சரி

அடுத்து என்ன செய்யறாங்கண்ணு நீ சொல்லு சூர்யா

ஒவ்வொருத்தர் வீடாகப் போயி தன் தோழிகளை எழுப்பி பாவை  நோன்புக்கு கூட்டிக்கிட்டுப் போறாங்க.

எல்லோரும் சேர்ந்து எங்கே போறாங்கா?

நந்த கோபன் மாளிகைக்கு கண்ணனைப் பார்க்க போறாங்க.

அங்கே போய் என்ன செய்யறாங்க? நப்பின்னையை சரணடைந்து  கண்ணனை திருப்பள்ளியெழுப்பி சீரிய சிங்காதனத்திருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து எங்களுக்கு பறை தருவாய்ன்னு வேண்டி அந்த பக்த வதசலனின் புகழ் பாடுகின்றனர்.

கண்ணன் அதற்குப் பரிசாக என்ன தருகிறான்?

அந்த மாயக் கண்ணன் தன்னையே தருகின்றான்.

ஆமாம் ஆண்டாளுக்கு தன்னையே கொடுத்து அனைத்து கோபியருடன் கூடி களிக்கின்றான் கோவிந்தன் அதை ஆண்டாள் எவ்வாறு பாடுகின்றாள் , நீ பாடு சூரியா

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடுபுகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடேசெவிப் பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
கோபியருடன் கோவிந்தன் கூடி குளிர்ந்து பால் சோறு பொங்கி அதில் நெய் நிறைய விட்டு முழங்கை வரை வழியுமாறு உண்ணும் நாளே கூடார வல்லி.

ஆண்டாள் பெருமாளுக்கு இன்று பொங்கல் படைத்ததால்தான் இன்றைய பொங்கல் இவ்வளவு சுவையாக இருந்ததா?

ஆமாம்

நாராயணன், பரமன், ஓங்கி உலகளந்த உத்தமன், கண்ணன், மாயன், புள்ளரையன், அரி, மாதவன், கேசவன், தேவாதி தேவன், வைகுந்தன்

அப்பா நாங்களும் சொல்றோமே

முகில் வண்ணன், பங்கய கண்ணன், மணி வண்ணன், விமலன்

அப்பா நானு

சொல்லு ரவி

பூவைப் பூ வண்ணா, நெடுமாலே, மாலே, திருமால், கோவிந்தா, பத்மநாபா,தாமோதரா

மிகவும் சரி

அப்படிப் பாடிய கோபியர்கள் அந்த கோபியர்களுடன் கூடியுருப்பதால் அந்த கண்ணன் மகிழ்ச்சியாக இருப்பதால்தான் பொங்கல் இவ்வளவு தித்திப்பு.

பாவை நோன்பின் ஒரு முக்கிய நோக்கியமான அந்த கண்ணனை கோபியர்கள் கூடியதால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதால்தான் பொங்கல் இன்று இவ்வளவு தித்திப்பு.

அந்த பரம்பொருளிடம் நாம் சரணடைந்து விட்டால் நமக்கும் அவன் திருவடி நிச்சயம் என்பதால் நமக்கும் மகிழ்ச்சி எனவேதான் பொங்கல் இவ்வளவு தித்திப்பு.

சூப்பர் அப்பா ஆண்டாள் அற்புதம்.

இதற்குப்பின் எத்தனை ஜன்மம் எடுத்தாலும் குறையொன்றுமில்லாத கோவிந்தா உன்னுடைய திருவடிகளே சரணம் என்று பிரதிக்ஞை எடுத்து கொண்டு ஆண்டால் கூடியிருப்பதால் இது கூடாரவல்லி.


இன்று கூடாரவல்லி, ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை அனுபவத்தை சிறுவர்களுக்கு சொல்லும் விதமாய் அமைத்திருக்கின்றேன். குறைகள் இருந்தால் அது என்னுடையது, நிறைகள் அனைத்தும் ஸ்ரீ ஆண்டாள் திருப்பாதங்களில் சமர்ப்பணம்.

Labels: , , ,