திருப்பாவை # 8
ஸ்ரீ:
கீழ்வானம் வெள்ளன் றெருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண்! மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்து நின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறை கொண்டு
மாவாய்ப் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்
ஆவா வென்றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்! ...........(8)
பொருள்:
மனமகிழ்ச்சியுடைய பாவையே! கிழக்கே வானம் வெளுத்து விட்டது. எருமைகள் எல்லாம் சிறிது நேரத்திற்கு முன்பே விடுதலை பெற்று மேய்ச்சலுக்கு சென்று விட்டன.
பாவை நோன்பு செய்யும் இடத்திற்கு நமது தோழிமார்கள் பலர் சென்று விட்டனர். மீதமுள்ளவர்கள் அங்கு செல்லும் நோக்கத்துடன் புறப்படுகின்றனர், அவர்களை போக விடாமல் தடுத்து உன்னை அழைக்க வந்து நின்றோம். காரிகையே! காலம் தாழ்த்தாமல் எழுந்து வா!
நம் பெருமான் குதிரை வடிவம் எடுத்து வந்த மாய அசுரனை வாயைப் பிளந்து மாய்த்தவர். மதுராபுரியிலே கொடிய கஞ்சன் அனுப்பிய மல்லர்களை வீழ்த்தியவர்.
அந்த தேவர்களுக்கெல்லாம் பெரிய தேவனை, கச்சிப் பதி மேவிய களிற்றை நாம் சென்று அடைந்து பாடி, வேண்டிக் கொண்டு வணங்கினால் நம்மீது இரக்கம் காட்டி" வா! வா!" என்று அழைத்து நாம் வேண்டும் வரத்தை அருளும் வரதராஜன் அவர். எனவே விரைவில் எழுந்து வா பெண்ணே!
இப்பாசுரத்தில் அவ்தாரப் பெருமை:
மாவாய்ப் பிளந்தான்:
கோகுலத்தில் வளரும் கண்ணனை அழிக்க பல அசுரர்களை அனுப்பியும் அவர்களே கண்ணன் கையில் வதம் ஆவது பற்றிக் கவலைப்படாமல் கம்சன் மேலும் கேசி என்னும் ஒரு அசுரனை அனுப்பினான். அவனும் குதிரை வடிவம் எடுத்து தன் குளம்பால் கண்ணனைக் கொல்ல வெகு வேகமாக ஓடி வந்தான். கண்ணன் அந்தக் குதிரையின் வாயைப் பிளந்து அவனையும் வதம் செய்தார் என்பதை "மாவாய்ப் பிளந்து" என்னும் பாசுர தொடரினால் பாடுகின்றார் ஆண்டாள்.
மல்லரை மாட்டியவன்:
மதுராவில் நடை பெறும் வில் விழாவிற்காக கண்ணனையும் பலராமரையும் வஞ்சனையாக அழைத்த கஞ்சன் அவர்கள் இருவரையும் கொல்ல சாணுரன், முஷ்டிகன் என்னும் மல்லர்களை ஏற்பாடு செய்திருந்தான். கண்ணன் அந்த மல்லர்களுடன் மல்யுத்தம் செய்து அனைவரையும் தோற்கடித்ததை ஆண்டாள் “மல்லரை மாட்டிய தேவாதி தேவனை" என்று பாடுகிறார்.
இப்பாசுரத்தின் உட்கருத்து: கிழக்கு வெளுப்பது என்பது ஸத்வகுணம் தலையெடுப்பதற்கான அறிகுறி, எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண்.. தமோ குணங்கள் விலகிப்போவதாகக் கூறுவது
இப்பாசுரத்தின் உட்கருத்து: கிழக்கு வெளுப்பது என்பது ஸத்வகுணம் தலையெடுப்பதற்கான அறிகுறி, எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண்.. தமோ குணங்கள் விலகிப்போவதாகக் கூறுவது
Labels: ஆண்டாள் நாச்சியார், தேவாதி தேவன், பாவை நோன்பு, மாவாய் பிளந்தான்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home