Sunday, December 22, 2013

ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -2

Visit BlogAdda.com to discover Indian blogs
மங்களாசாசனம் 

திருக்குருகூர் பொலிந்து நின்ற பிரான்

ஆழ்வார் திருநகரியில் நடைபெறும் திருவிழாக்களில் வைகாசி பிரம்மோற்சவம்  சிறப்பான ஒன்றாகும். சுவாமி நம்மாழ்வார் திருஅவதார தினத்தை முன்னிட்டு இந்த திருவிழா நடைபெறுகின்றது. திருவைகாசி மாத திருவிசாகத்தில் ஆழ்வார் திருமஞ்சனம் கண்டருள பத்து நாள் உற்சவம்  வைகாசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் தொடங்கி விசாக நட்சத்திரத்தில்  நிறைவடைகின்றது. தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். முதல் திருநாள் காலை கொடியேற்றம், இரவு வெள்ளி இந்திர விமானம், இரண்டாம் திருநாள்  இரவு புஷ்பப் பல்லக்கு,  மூன்றாம் திருநாள் இரவு தங்கப் புன்னை மர வாகனம், நான்காம் திருநாள் இரவு தங்கத் திருப்புளி வாகனம்.  இந்த உற்சவத்தில் 5ம் நாள் உற்சவத்தில் ஒன்பது கருட சேவை காணக் கண்கொள்ள காட்சியாகும். இக்காட்சியைக் கண்டவர்கள் தேவாதி தேவர்களை விடவும் மேலான பிறப்புடையவர்களாக கருதப்படுகின்றனர்.



 ஆறாம் திருநாள் மாலை தண்டியல் புறப்பாடு, இரவு வெள்ளி யானை வாகனம், ஏழாம் திருநாள் காலை உடையவர் சன்னதிக்கு எழுந்தருளி சேர்த்தி திருமஞ்சனம், இரவு வெள்ளி சந்திர பிரபை. எட்டாம் திருநாள் காலை அப்பன் சன்னதிக்கு எழுந்தருளி ஆழ்வார்  தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலம், இரவு தங்கக்குதிரை வாகனம். ஒன்பதாம் திருநாள்  காலை கோரதம், இரவு பல்லக்கில் தாழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலம். திருவைகாசி விசாகம் காலை பத்தாம் திருநாளன்று தாமிரபரணி நதியில் தீர்த்தவாரி, இரவு வெட்டிவேர் சப்பரம் வெள்ளி தோளுக்கினியான். பின்னர் பதினொன்றாம் நாள் ஆழ்வார் ஆஸ்தானம் எழுந்தருளுகின்றார். பின்னர் நான்கு நாட்கள் விடாயாற்று என்று சிறப்பாக நடைபெறுகின்றது.  


திருக்கோளூர்- ஸ்ரீநிக்சோபவித்தன் 


இந்த திருவைகாசி திரு அவதார திருவிழாவின் ஐந்தாம் திருநாள்,ஊர் முழுவதும் வைணவர்களால் நிறைந்திருக்கின்றது. இன்னும் பல அன்பர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். சன்னதி தெரு முழுவதும் மேலே பந்தல் தரையில் கோலம். அன்றைய தினம்     மாலரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தனென்று ஓலமிட்ட நம்மாழ்வாரின் தீந்தமிழ் பாசுரத்தை அருந்த வரும் எம்பெருமான்கள் எவர் எவர்  என்று பார்ப்போமா? 1.ஸ்ரீ கள்ளபிரான் – ஸ்ரீவைகுண்டம், 2. ஸ்ரீ எம் இடர் கடிவான் – ஸ்ரீவரகுண மங்கை (நத்தம்), 3. ஸ்ரீ காய்சினவேந்தன் – திருப்புளியங்குடி, 4. ஸ்ரீ தேவர்பிரான் – இரட்டைத் திருப்பதி, 5. ஸ்ரீ செந்தாமரைக் கண்ணன் – இரட்டைத்திருப்பதி, 6. ஸ்ரீ மாயக்கூத்தன் திருக்குளந்தை (பெருங்குளம்), 7. ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன் – தென்திருப்பேரை 8. ஸ்ரீ நிக்சோபவித்தன் – திருக்கோளுர், 9. ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான் – ஆழ்வார் திருநகரி. 




 மதுரகவியாழ்வார்

அண்ணலை  அச்சுதனை அனந்தனை அனந்தன் தன் மேல் நண்ணி நன்குறைகின்றானை ஞாலமுண்டுமிழ்ந்த மாலை பாடிய நம்மாழ்வாரின் தீந்தமிழ் பாசுரங்களை செவி மடுக்க தோளுக்கினியானில் சகல அலங்காரத்துடன், பட்டு பீதாம்பரம் தரித்து அழகான கிரீடங்களுடன் கையில் எழிலாக கிளி ஏந்தியவாறு   நவதிருப்பதிகளில் கோயில் கொண்டுள்ள  எம்பெருமான்கள் ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தருளுகின்றனர்.

நல் வளஞ்சேர் பழனத் திருக்கோளுரிலிருந்து  நிக்சோபவித்தன் பெருமாளும், மதுரகவியாழ்வாரும், தேன்மொய்த்த பூம்பொழில் தண்பணை சூழ தென் திருப்பேரையிலிருந்து நிகரில் முகில் வண்ணனும்,  திருக்குளந்தையிலிருந்து மாயக்கூத்தரும், நோக்கும் பக்கமெல்லாம் கரும்பொடு செந்நெல்லோங்கு செந்தாமரை வாய்க்குந் தண்பொருநல் வடகரை வண் தொலைவில்லி மங்கலம், இரட்டைத் திருப்பதியிலிருந்து  செந்தாமரைக் கண்ணரும், தேவர் பிரானும் இரண்டு பெருமாள்களாக ஆழ்வார் திருநகரி ஆலயத்தின் முன்புள்ள மண்டபத்தில் ஒருவர் ஒருவராக எழுந்தருளுகின்றனர்.   (ஆழ்வார் மங்களாசாசனம்  செய்த திவ்ய தேசமாக பார்க்கும் போது தொலைல்லி மங்கலம் ஒரே திவ்ய தேசம் ஆகும், ஆனால் தாமிரபரணியின் நவதிருப்பதி என்று பார்க்கும் போது இரண்டு ஆலயங்களாக கணக்கிடப்படுகின்றது). திருக்குருகூரின் குறடில் ஆழ்வார் பெருமாள்களை வரவேற்க சர்வ அலங்காரத்துடன்  காத்திருக்கின்றார். பக்தர்கள்  மங்களாசாசன நிகழ்ச்சி  எப்போது துவங்கும் என்று  எதிர்பார்ப்புடன் கிடைத்த இடத்தையெல்லாம்  அடைத்துக் கொண்டு ஆவலாக காத்து நிற்கின்றனர்.




புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள் நின்று என்று ஆழ்வார் பாடிய ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீவரகுணமங்கை, ஸ்ரீபுளிங்குடி எம்பெருமான்கள் வந்தவுடன் மங்களாசாசனம் நிகழ்ச்சி தொடங்குகின்றது. ஏனென்றால் மற்ற ஆழ்வார்கள் திவ்ய தேசங்களுக்கு சென்று பெருமாளை மங்களசாசனம் செய்தனர், ஆனால் நம்மாழ்வாருக்கு  அவர் திருப்புளியினடியில் அமர்ந்திருக்க பெருமாள்கள் அவருக்கு அருட்காட்சி அளிக்க ஆழ்வார் அவர்களை மங்களாசாசனம் செய்தார். எனவே  இங்கு ஆழ்வார்திருநகரியில்,  ஆழிநீர் வண்ணனை அச்சுதனை, தோள்களாயிரத்தாய்! முடிகளாயிரத்தாய்! துணைமலர்க் கண்களாயிரத்தாய்! தாள்களாயிரத்தாய்!  பேர்களாயிரத்தாய் என்று பாடிய   ஆழ்வாரின் செந்தமிழ் பாசுரங்களை செவி மடுக்க நவ திருப்பதி எம்பெருமான்கள் எழுந்தருளுகின்றனர்.





நம்மாழ்வார் மங்களாசாசனத்திற்கு எழுந்தருளுகின்றார், இந்த உற்சவம் தென்குறுங்குடி நம்பியே   திருக்குருகூர் நம்பியாக அவதாரம் செய்ததாக ஐதீகம். அந்த திருக்குறுங்குடி ஜீயர் சுவாமிகள் முன்னிலையில்  இந்த மங்களாசான உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.  வேளுக்குடி ஸ்ரீ உ.வே. க்ருஷ்ணன் ஸ்வாமிகள் பாசுரங்களை சேவித்து அரிய விளக்கங்களையும் அளித்தார். ஆழ்வாரின் பக்தியில் ஒரு துளியாவது நமக்கு ஏற்படவேண்டுமென்றுதான் நாம் இந்த உற்சவங்களில் நாம் கலந்து கொள்கின்றோம். ஒவ்வொரு பெருமாளின் பரிவட்டமும் மாலையும், சடாரியும் ஆழ்வாருக்கு சார்த்தப்படுகின்றது பின்னர் கற்பூர ஆரத்தி  காட்டப் படுகின்றது. அப்போது குல்லா அணிந்த அரையர் சுவாமிகள் ஆழ்வாரின் பாசுரங்களை தாளத்துடன் சேவிக்கின்றனர்.  ஆழ்வாரின் திருவாசியில் நவதிருப்பதி எம்பெருமான்களையும் நாம் சேவிக்கின்றோம். ஆழ்வாரின் அலங்காரத்தில் அவரது திருக்கூர் திவ்யதேசத்தின் பாசுரங்கள் வெள்ளி மாலை அலங்கரிக்கின்றது. 



இரட்டைத் திருப்பதி 
செந்தாமரைக் கண்ணன்



பின்னர் ஆழ்வாரின் செந்தமிழ் பாசுரத்தை மூன்று பெருமாள்களும் செவி மடுக்கின்றனர். அந்த பாசுரம் இதோ.


புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள்நின்று
தெளிந்தவென்சிந்தையகங்கழியாதே என்னையாள்வாய்! எனக்கருளி
நளிர்ந்தசீருலகமூன்றுடன்வியப்ப நாங்கள்கூத்தாடிநின்றார்ப்ப
பளிங்குநீர்முகிலின்பவளம்போல்கனிவாய் சிவப்ப நீகாண வாராயே.

பெருமாளே!  நீ திருப்புளிங்குடியிலே உன் பள்ளி கொண்ட அழகை காட்டினாய்; வரகுண மங்கை திருப்பதியிலே இருந்த இருப்பைக் காட்டினாய்; ஸ்ரீவைகுண்டத்திலே நின்ற கோலத்தில் காட்சி தந்து அருள் தருகிறாய்.  இவ்வாறு முண்றி நிலைகளிலும் தெளிவு பெற்ற என் உள்ளத்துள் நிலைத்து நின்று  என்னை ஆள்கின்றாய். நினைத்தவர்கள் மனம் குளிரும்படியாகவும் உன் சீல குணத்தாலே மூவுலகத்தில் உள்ளவர்கள் வியக்கும்படி நீ வர வேண்டும். நாங்கள்  உன் குணங்களில் மூழ்கி ஆனந்தப்பட்டு கூத்தாடுவோம். பளிங்கு போன்ற தெளிந்த தண்ணீறை முகந்து வரும்  மேகத்தலே பவளக்கொடி படர்வதை போல கனிந்த உன் திருவாய் சிவந்து அழகுடன் விளங்க நீ வருவதைக் கண்டு மகிழ வேண்டும். என் எதிரே உன் அழகு காண நீ வர வேண்டும்.  

 என்று ஸ்ரீவைகுண்டத்தில் நின்ற கோல வைகுண்டநாதர்-கள்ளபிரானையும், ஸ்ரீவரகுணமங்கை (நத்தம்) அமர்ந்த கோல விஜயாசனர்-எம்இடர்கடிவானையும், “ஸ்ரீபுளியங்குடி சயனக்கோல பூமிபாலகரையும் -காய்சினவேந்தரையும், “புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள் நின்று” என்று  ஒரே பாசுரத்தில் வகுளாபரணர்  மங்களாசாசனம் செய்துள்ளார். 




வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபர்

தெளிந்தவென் சிந்தை என்பதன் மூலம் பராங்குசர் நம் மனதில் உள்ள குழப்பத்தையெல்லாம் எம்பெருமான் நீக்கியருள நாம் கண்ணில் ஆனந்த கண்ணீர் சொரிய நிற்கும் காட்சியை  பவளச்செங்கனிவாய் சிவப்ப காண வாராய் என்று கூப்பிட, ஆழ்வாரின் சொல்லை நிரூபிப்பது போல, பக்தனுக்காக பகவான் வருவதற்கு இந்த உற்சவமே ஒரு சாட்சி. பின்னர் ஆழ்வார் மூன்று பெருமாள்களையும் வலம் வந்து வணங்கியபின், ஆழ்வாரின் தீந்தமிழ்ப் பாடலை செவி மடுத்த மகிழ்ச்சியில் பெருமாள்கள் மூவரும் ஆனந்தமாக ஆடி ஆடி  திருக்கோவிலுக்குள் எழுந்தருளுகின்றனர்.


 இரட்டைத் திருப்பதி தேவர் பிரான் 

புளிங்குடி எம்பெருமான் மேல் நம்மாழ்வார்  பத்து பாசுரங்கள்   மங்களாசாசனம் செய்துள்ளார் அவ்ற்றுள் இருபாசுரங்கள்


பண்டைநாளாலே நின்திருவருளும் பங்கயத்தாள்திருவருளும்
கொண்டு நின்கோயில் சீய்த்துப்பல்படிகால் குடிகுடிவழிவந்தாட் செய்யும்
தொண்டரோர்க்கருளிச் சோதிவாய்திறந்து உன்தாமரைக்கண்களால் நோக்காய்
தெண்திரைப்பொருநல்தண்பணைசூழ்ந்த திருப்புளிங்குடிக்கிடந்தானே.

பெருமாளே! மிகப்பழைய காலம் முதலாகவே நாங்கள் உன்னுடைய திருவருளையும், அதற்கு காரணமாகத் தாமரைப் பூவில் அமர்ந்துள்ள பெரிய பிராட்டியார் திருவருளையும் பெற்றிருக்கின்றோம். ஆகவே உனது திருக்கோவிலில்  பலவிதமான கைங்கரியங்களச் செய்யும் பாக்கியத்தை வம்ச பரம்பரையாக பெற்று .உனக்கு ஆட்பட்டுள்ளோம். அதிலும் திருஅலகிடுதல் முதலிய சிறப்பான கைங்கரியம் அல்லவா வாய்க்கப்பெற்றோம். அப்படிப்பட்ட உன் அடியார்களான எங்களை உன் தாமரைக் கண்களால்  குளிரப்பார்த்து உன் சோதி வாய் திறந்து பேசி அருள் செய்ய வேண்டும். தெளிந்த அலைகள் தவழும் தாமிரபரணி  ஆற்றங்கரையில் வயல் சூழப்பட்ட திருப்புளிங்குடி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளவனே! உன் திருக்கண் நோக்கு என்மேல் ஏற்பட அருள் செய்ய வேண்டும். 

  
காய்சினப்பறவையூர்ந்து, பொன்மலையின் மீமிசைக்கார்முகில்போல்
மாசினமாலிமாலிமாலிமானென்று அங்குஅவர்படக்கனன்றுமுன் நின்ற
காய்சினவேந்தே! கதிர்முடியானே! கலிவயல் திருப்புளிங்குடியாய்!
காய்சினவாழிசங்குவாள்மில் தண்டேந்தி எம்மிடர்கடிவானே!

மேருமலையின் மீது தங்கும் நீருண்ட மேகம் போலே,  கோபம் கொண்டு தாக்க வல்ல கருடப்பறவையின் மேல் ஆரோகணித்து வந்து மிக்க சினம் கொண்டு மாலி, சுமாலி என்னும் இரு அரக்கர்களை அழிந்துபோகும்படி தாக்கி வதைத்தாய். ( இதனால் காய்சின வெந்தன் என்னும் பெயர் பெற்றாய்) காய்சின வேந்தே! ஒளி மிகுந்த திருமுடி உடையவனே! வளம் மிகுந்த வயல்கள் சூழப்பட்ட திருப்புளிங்குடியில் பள்ளி கொண்டவனே! காய்கின்ற சினம் கொண்ட சக்கரம், சங்கு, வாள், வில், தண்டு ஆகியவற்றைத் தாங்கிக் கொண்டு காட்சி தரும் நீ என் துயரத்தை நீக்குபவன் அன்றோ! அருள் புரிவாயாக?   


மங்களாசாசனம் தொடரும் .............

Labels: , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home