Saturday, December 21, 2013

திருப்பாவை # 13

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ:



புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானை கீர்த்திமைப் பாடிப்போய்
பிள்ளைகளெள்ளாரும் பாவை களம் புக்கார்
வெள்ளியெழுந்து வியாழம் முழங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண்; போதரிக்கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்த்து கலந்தேலோ ரெம்பாவாய்!...............(13)


பொருள்:


நம் பெருமாள் பறவை வடிவாக வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அவனைக் கொன்றவர், மைதிலியைக் கவர்ந்த பொல்லா இராவணனின் பத்துத் தலைகளையும் கிள்ளி அவனை அழித்தவருமான அந்த பரந்தாமனின் வீரப் புகழைப்பாடிக் கொண்டு பாவைமார்களாகிய நம் தோழிகள் அனைவரும் நோன்பு நோற்கும் இடத்திற்கு சென்று விட்டனர்.

விடி வெள்ளி தோன்றி விட்டது, வியாழன் மறைந்து விட்டது. விடியலை அறிவிக்க பறவைகள் கூவுகின்றன; மலர் போன்ற அழகிய கண்களைக் கொண்ட பெண்ணே! நீ இன்னும் படுக்கையில் கிடக்கின்றாயே! இந்த நல்ல நாளில் உன்னுடைய கள்ளத்தனத்தை விட்டு விட்டு எங்களுடன் கலந்து குளிரக் குளிர பொய்கையில் மார்கழி நீராட எழுந்து வாடி என் கண்ணே!

புள்ளின் வாய்க் கீண்டான்:


இப்பாசுரத்தில் கிருஷ்ணர் செய்த லீலையான பகாசுர வதம் கூறப்பட்டுள்ளது. பூதனை, சகடாசுரன் முதலியோரை அனுப்பியும் கிருஷ்ணரை ஒன்றும் செய்ய முடியாத கம்சன் அடுத்து பகாசுரன் என்னும் அசுரனை ஏவினான். அவனும் கொக்கின் வடிவம் கொண்டு சென்று யமுனை நதிக் கரையில் கண்ணனை விழுங்கினான். அவனது நெஞ்சத்தில் அந்த மணி வண்ணன் மாயக் கண்ணன் நெருப்பைப் போல எரிக்கவே, அவன் பொறுக்க மாட்டாமல் கண்ணனை வெளியே உமிழ்ந்து தன் அலகால் குத்தத் தொடங்கினான். கண்ணன் அவனது வாய் அலகுகளைப் தனது கைகளால் பற்றி இரண்டாக கிழித்து எறிந்து அவனை வதம் செய்தார். இதை "புள்ளின் வாய் கீண்டான் " என்னும் பாசுர வரிகளினால் விளக்குகின்றார் கோதை நாச்சியார்.


பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான்:
பொங்கி வந்த கோபத்தினால் தென்னிலங்கைக்கு அதிபதியாகிய இராவணனை வதம் செய்தவர், மனதுக்கு இனியவரான இராமபிரான் என்னும் இராமாவதார பெருமையை "... பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை" என்று பாராட்டுகிறார் ஆண்டாள் நாச்சியார்.

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home