திருப்பாவை # 23
ஸ்ரீ:
மாரி முலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்று தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமாப் போலேநீ பூவைப் பூவண்ணா! உன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரியசிங்கா சனத்திருந்த யாம் வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய். (23)
பொருள்:
மழைக் காலத்தில் மலைக்குகையில் அயர்ந்து உறங்கும் அபார சிங்கமானது, உறக்கம் களைந்து, அக்கினி பறக்கும் கண்களை அகல விரித்து, பிடரியை சிலிர்த்து, உடல் உதறி, சோம்பல் தொலைத்து நெஞ்சு நிமிர்த்தி, நீண்ட கர்ஜனை புரிந்து கம்பீரமாக புறப்படுவது போல்
காயா மலர் போல் கருமை நிறக் கண்ணா!நீயும் எழுந்து வந்து இவ்விடம் அடைந்து இந்த அழகிய சிங்காதனத்தில் அமர்ந்து திருவோலக்கம் அருளி, நாங்கள் வந்த காரியத்தை விசாரித்து அறிந்து எங்களுக்கு அருள்வாயா! ஏ மாதவா!
கூடாதவர்களுக்கு சிங்கமாக விளங்கும் கண்ணன் தனது அடியவர்களுக்கு பூவைப் பூ வண்ணனாக விளங்கும் நயத்தையும், தன் காரியத்தை எல்லாம் ஆராய்ந்து பக்தர்களுக்கு அருளும் திறத்தையும் பாடுகின்றார் ஆண்டாள் நாச்சியார் இப்பாசுரத்தில்.
Labels: ஆராய்ந்து அருள், சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள், பூவைப் பூ வண்ணா. சூடிக்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home