Sunday, January 6, 2008

ஹனுமத் ஜெயந்தி

Visit BlogAdda.com to discover Indian blogs

ஸ்ரீ ராம ஜெயம்
அனந்த மங்கலம் த்ரி நேத்ர தச புஜ ஆஞ்சனேயர்




ஆண்டவனை தொழுவதை விட அவருடைய மெய்யடியார்களை தொழுவது சிறந்த பலனைத் தரும். அத்தகைய சிறந்த ராம பக்தர்தான் ஆஞ்சனேயர், தன் மார்பைக் கிழித்து அதன் உள்ளே ஸ்ரீ ராமனையும் ஸீதாப்பிராட்டியும் வீற்றிருப்பதைக் காட்டிய இந்த ராம பக்தன் அந்த ராம நாமத்திலேயே தானே அடங்கி விடுவதாக உணர்கிறார். எனவே எங்கெங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் சிரமேற் கூப்பிய கைகளுடன் ஆனந்த பாஷ்பக் கண்ணுடன் இன்றும் தோன்றுபவர்தான் இந்த சிரஞ்சீவி அனுமன். வைணவ சம்பிராயத்தில் " சிறிய திருவடி" என்று குறிக்கப்படுகிறார் இவர்.



அனுமன் கடலைக் குளம் போல் செய்தவர், அரக்கர்களை கொசுவைப்போல செய்தவர், ராமயணமாகிய சிறந்த மாலையின் ரத்னம் போன்று விளங்குபவர், அஞ்ஜனா தேவியின் ஆனந்தப் புதல்வர், ஜானகியின் துன்பத்தை துடைத்தவர். வாயு வேகமும், மனோ வேகமும் படைத்தவர், இந்திரியங்களை வென்றவர்,புத்திமான்களில் சிறந்தவர் அதனால் தான் கம்ப நாடரும் தமது ராம காதையிலே மாருதியை "சொல்லின் செல்வன்" என்று குறிப்பிடுகின்றார்.அடக்கத்தின் இலக்கணமாகத் திகழ்பவர் அனுமன்.


சஞ்சிவீ மலையைக் கொணர்ந்து , ராமர் மற்றும் லக்ஷ்மணனின் உயிரைக் காப்பற்றியவர், தீக்குளிக்க சென்ற பரதனை முன்னே சென்று காப்பாற்றியவர். தூதுவனாக சென்று சீதாப்பிராட்டியிடம் ராமனைப்பற்றியும், ராமனிடம் ஸீதையின் இருப்பிடத்தையும் கூறி அனுமன் பண்ணிய தூதுத்யம் பூரண பலன் கொடுத்தது. (ஆனால் கிருஷ்ணராக பெருமாள் சென்ற தூது வெற்றி பெறவில்லை ) எனவே தான் திருவள்ளுரில் ராஜ வைத்தியராக பள்ளி கொண்டிருக்கும் வீர ராவகப் பெருமாளைப் பற்றி கூற வந்த திருமங்கை ஆழ்வார் " அந்த அஞ்சனேயனை தூது அனுப்பியவன் தான் இங்கு பள்ளி கொண்டிருக்கின்றான் என்று கூறினார்."

இதையே விளக்கும் ராமாயணத்தின் சிறந்த பகுதியான " சுந்தர காண்டத்தையே" தன்னுள் அடக்கி விட்ட ஒரு பாடல்:


அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்று தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற ஆரணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மையளித்து காப்பான்
.


பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயு புத்திரன் அனுமன் மற்றொரு பூதமான கடலைத் (தண்ணீர்) தாண்டி ஆகாய வழியில் ஸ்ரீ இராமருக்காக பூமிப் பிராட்டியின் மகள் ஸீதா தேவியைக் கண்டு இலங்கைக்கு நெருப்பு வைத்தார் அந்த இராமதூதன் நம்மை காப்பான் என்று பாடுகிறார் கவிசக்கரவர்த்தி கம்பர்.

பாரத தேசமெங்கும் ஸாங்கூலன்,அஸாத்ய ஸாதகன், ராம தூதன்,கிருபாஸ’ந்து, வாயு புத்ரன்,கபிசிரேஷ்டன்,மஹா தீரன், பஜ்ரங்க பலி, பவனஜன், மஹா பலன், மாருதி, என்று பல் வேறு நாமங்களாலும் அழைக்கப்பட்டு வணங்கப்படுகிறார் இவர்.


பொன்னி ந்தி பாயும் தஞ்சை வள நாடு கோயில்கள் நிறைந்த இடமல்லவா? அங்கே காரைக்கால் மற்றும் திருக்கடவூருக்கு இடையிலே அனந்த மங்கலம் என்ற திருத்தலத்திலே ராஜ கோபால சுவாமி திருக்கோவிலிலே, மும்மூர்த்திகளின் அம்சமாக, த்ரி நேத்ர தச புஜ ஆஞ்சனேயராக ( முக்கண், பத்து கரங்களுடன்) எழுந்தருளி அருள் பாலிக்கின்ற அனுமனை பற்றி அறிந்து கொள்வோமா?



இராஜ கோபாலர் ஆலயம், அனந்த மங்கலம்

மகிமாலையார் என்ற காவிரியின் கிளை நதியின் கரையில் அமந்துள்ள தலம் தான் ராஜ கோபால சுவாமி திருக்கோவில். இக்கோவிலில் மூலவர் ராஜ கோபாலர், ருக்மணி சத்ய பாமா சமேதராக சங்கு, சக்கரம்,சாட்டை, வெண்ணை கொண்டு சேவை சாதிக்கின்றார். இக்கோவில் விஜய நகர மன்னர்களால் கட்டப்பட்டது. இக்கோவிலில்தான் மும்மூர்த்திகளின் அம்சத்துடன், த்ரி நேத்ர தச புஜ ஆஞ்சனேயர், மிகுந்த வரப்பிரசாதியாக, தன்னை நாடி வரும் பக்தர்களின் துன்பங்களை தீர்ப்பவராக அருட்க்காட்சி தருகின்றார். அமாவாசையன்று இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டமே இவரது அருளுக்கு ஒரு சான்று.


தல வரலாறு :
ராவண வதத்திற்க்கு பிறகு, தேவி žதாப்பிராட்டியை அழைத்துக்கொண்டு ராமபிரான் வரும் போது பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் இறங்கினார். அவர் ராமரிடம் , ராமா இன்னும் ரக்தபிந்து,ரக்த தாக்ஷன் என்ற இரு அரக்கர்கள் ஏழு சமுத்திரங்களுக்கு அப்பால் கடலில் மூழ்கி தவம் செய்து கொண்டிருக்கிறார்கள், அவர்களின் தவம் பலித்தால் உலகமே நாசமாகும் எனவே நீ அவர்களைக் கண்டு பிடித்து அழிக்க வேண்டும் என்று வேண்டினார்.


த்ரி நேத்ர தச புஜ ஆஞ்சனேயர்



ராமர் பரதனுக்கு வாக்கு கொடுத்தபடி அயோத்தி செல்ல வேண்டி இருந்ததால் அரக்கர்களை அழிக்க அனுமனை அனுப்ப முடிவு செய்தார். அரக்கர்களை வெல்வதற்காக செல்லவிருந்த அனுமனுக்கு, திருமால் ச்ங்கு, சக்கரம் அளித்தார். பிரம்மா கபாலத்தை அளித்தார், சிவ பெருமான் நெற்றிக்கண்னையும், சூலத்தையும், கருடன் சிறகுகளயும் அளித்தனர். இவ்வாறு பத்து கரங்களிலே சங்கு, சக்கரம், சூலம், கபாலம், மழு,பாசம், வில், அம்பு, சாட்டை, வெண்ணை கொண்டு புறப்பட்டார் அனுமன் அசுரர்களை அழிக்க . அசுரர்களை அழித்து வரும் போது பசுமையான மரங்கள் சூழ்ந்த ஒரு சோலையில் தங்கினார் . அவ்வாறு அவர் தங்கி ஸ்நானம் செய்து இளைப்பாறிய இடமே அனந்த மங்கலம் என்பது இத்தல வரலாறு.


அமாவாசை தினம் இவருக்கு மிகவும் உகந்த தினம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவரிடம் வந்து வேண்டி, தங்கள் குறைகள் தீர்த்துச் செல்கின்றனர். அதிலும் குறிப்பாக, ஹனுமத் ஜயந்தி தினமான மார்கழி அமாவாசை மிகவும் விசேஷம். காலையில் சுவாமியை எல்லாரும் பார்க்கும் படியாக பிரகாரத்திலே ஒரு உயரமான மேடையில் எழுந்தருளப் பண்ணி முதலில் திரு மஞ்சனம் செய்கின்றனர். பின்னர் அலங்காரங்கள் முடித்து அர்ச்சனைகள் நடைபெறுகின்றன. இவ்வாறு உயர மாக இவரை எழுந்தருள் செய்வதால் வருகின்ற அனைவரும் சிரமமில்லாமல், பூரண திருப்தியுடன் ஜெய மாருதியை தரிசனம் செய்ய முடிகின்றது. இரவு சிறப்பு அலங்காரத்தில் மின் விளக்கு ஒளியில் ஊர்வலம் வருகின்றார் ஆஞ்சனேயர்.

அனுமன் தன் பக்தர்களுக்கு வருகின்ற கெட்டவைகளை கூட நல்லனவாக ஆக்கித்தரும் தூயவர், சிவ பெருமான் அபிஷேகப்பிரியர், அது போல அனுமன் ஸ்தோத்திரப் பிரியர், எனவே

அவர் கிருபை உண்டாக

ஸர்வ கல்யாண தாதார்ம
ஸர்வ வாபத்கந வாரக்ம
அபார கருணா மூர்த்திம்
ஆஞ்சனேயம் நமாம்யகம் என்றும்
துஷ்ட கிரகங்கள் விலக
அஞ்ஜநா கர்ப்ப ஸம்பூதம்
குமாரம் ப்ரும்ஹசாரிணம்
துஷ்ட க்ரஹ வினாஸாய
ஹனுமந்த முபாஸ்மஹே.
என்றும்

காரிய ஸ’த்தி உண்டாக
அஸாத்ய ஸாதக ஸ்வாமிந்
அஸாத்யம் தவ கிம் வதா
ராம தூத கிருபாஸ’ந்தோ
மத் கார்யம் ஸாதய ப்ரபோ
என்றும் மாருதியை ஸ்தோத்திரம் செய்து வழிபட நல்ல புத்தி, பலம், புகழ்,தைரியம், மனத்திடம், பயமின்மை, நோயின்மை, சுறுசுறுப்பு, சொல் வன்மை, எல்லாம் சித்திக்கும். தூய உள்ளத்தோடு நம் கோரிக்கைகளை இவரிடம் வேண்டிக்கொண்டு வடை மாலை, வெண்னை சாற்றுதல், வெற்றிலை மாலை ஆகியவை கொண்டு வழிபட்டால், சூரியனைக் கண்ட பனி போலே உங்களின்கஷ்டம் எல்லாம் விலகி விடும். எனவே ஆஞ்சனேயரின் இஷ்ட தெய்வமான ராமனின் அருளோடும் ஆசியோடும் அனந்த மங்கலம் சென்று, அனுமனை வழிபட்டு வாழ்வில் எல்லா நலன்களும் பெறுவோமாக.

2 Comments:

Blogger துளசி கோபால் said...

பதிவுக்கும் படங்களுக்கும் நன்றி.

நாளைக்குத்தானே ஹனுமன் ஜெயந்தி?

January 6, 2008 at 8:46 PM  
Blogger S.Muruganandam said...

மூல நட்சத்திரத்தை கொண்டு கொண்டாடுபவர்களுக்கு இன்று, அமாவாசையைக் கொண்டு கொண்டாடுபவர்களுகளுக்கு நாளை. எனவேதான் இரண்டு நாள் கொண்டாதி இரட்டிப்பு சந்தோஷம் அடையலாமே.

January 6, 2008 at 11:42 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home