இராப் பத்து எட்டாம் நாள் ( வேடுபறி உற்சவம்)
நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் வேடுபறி உற்சவம்
நம்பெருமாள் பின்னழகு
திருவாய்மொழித் திருநாளின் எட்டாம் இரவு, ஆவியே! அமுதே! அலை அலை கடல் கடைந்த அப்பனே! பெருநிலமெடுத்த பேராளா! மாயக் கூத்தா! வாமனா! வினையேன் கண்ணா என்று சடகோபன் நாமங்களாயிரமுடைய நம்பெருமானடி மேல் சொன்ன ஆயிரத்துள் " எட்டாம் பத்தின் நூறு பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன. இந்த பத்தில் எம்பெருமானது மெய்யான விருப்பம் (சத்யகாமத்வம்) தன்மை கூறப்படுகின்றது என்பது பெரியோர்களின் அருளிச் செயல்.
தோள்களாயிரத்தாய்! முடிகளாயிரத்தாய்! துணைமலர்க்கண்களாயிரத்தாய்!
தாள்களாயிரத்தாய்! பேர்களாயிரத்தாய் தமியேன் பெரியவப்பனே என்று நம்மாழ்வார் பாடிப் பரவிய அரங்க நகர் அப்பன் நம்பெருமாள் இன்று வேடு பறி உற்சவம் கண்டருளுகிறார். திருமங்கை மன்னனை திருத்தி திருமங்கையாவாராக்குகிறார். நம் பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிகிறார்.
திருமங்கையாழ்வார் வைபவம்:
திருமாலின் வில்லான சார்ங்கத்தின் அம்சமாக சோழ வள நாட்டில் திருமங்கையென்னும் பகுதியில் திருவாலி திருப்பதியினருகே திருக்குறையலு‘ரில் கள்ளக்குடியில் பூர்ணிமை வியாழக்கிழமை, கிருத்திகை இவைகள் பொருந்திய நாளில் கார்த்திகை திங்களில் சோழ அரசனின் சேனை தலைவர் இல்லத்தில் அவதரித்தார். இவருக்கு பெற்றோர் இட்டபெயர் நீலன். குடிப்பிறப்பிற்கேற்ப்ப போர்த்தேர்ச்சி பெற்று அரசனுக்காக பல போர்களில் வென்று திருமங்கை நாட்டின் மன்னனாக பகைவர்காலை வெல்லுவதில் வல்லவரானதால் பரகாலன் என்ற திருநாமத்துடன் முடி சூடப்பட்டார். சிற்றரசன் என்ற முறையில் சோழவரசனுக்கு கப்பம் செலுத்தி வந்தார்.
பூலோக மாயையில் உழன்று கொண்டிருக்கும் தன் அன்பனை திருத்திப் பணிகொள்ள விரும்பிய பெருமாள் தேவலோகத்திலிருந்து பூவுலகில் கண்ணார் கடல் போல் திருமேனிக்கரிய அண்ணனாய் எம்பெருமான் சேவை சாதிக்கும் திருவெள்ளைக்குளத்தில் நீராடவந்தப் பெண்னை மானிட உருக்கொண்டு இங்கேயே தங்க வைத்தார். குமுத மலர் பறித்து நின்ற அப்பெண்னை அவ்வழி வந்த ஒரு வைணவ மருத்துவன் கண்டு குமுதவல்லி என்னும் பெயரிட்டு வளர்த்து வந்தான். ஒற்றர்கள் மூலம் குமுதவல்லியின் அழகைப்பற்றி அறிந்த மங்கை மன்னன் வைத்தியனிடம் சென்று குமுதவல்லியை தனக்கு மணம் முடித்துத் தருமாறு வேண்டினார். குமுதவல்லியோ திருமணத்திற்க்கு நிபந்தனை விதித்தாள். சங்கு சக்கர இலச்சினை பெ'றித்தல், திரும்ண்காப்பு தரித்தல், தாஸ்ய நாமம் பெறுதல், திருவாராதனை செய்தல், திருமந்திரம் பெறுதல், என்னும் ஐவகை சிறப்புடைய வைணவருக்கேயன்றி வேறொருவருக்கு துணையாகேன் என்று மறுத்து விட்டாள். பரகாலனும் திருநறையூர் சென்று அவ்வூரில் கோவில் கொண்டுள்ள நம்பியிடமிருந்து திருவாழி திருச்சங்கிலச்சினை பெற்றும், திருகண்ணபுரத்தம்மானிடம் திருமந்திரரோபதேசம் பெற்றும் பன்னிரு திருமண்காப்புகளணிந்து குமுதவல்லியிடம் மீண்டும் சென்று மணம் புரிய வேண்டினார்.
அப்போது ஆயிரத்தெட்டு திருவைட்டணவர்களுக்கு நாடோறும் ஓராண்டு காலம் அமுது செய்வித்து அவர்கள் போனகம் செய்த சேடத்தையும், அவர்கள் திருவடிகளை விளக்கிய நீரையுமுட்கொண்டால் தான் மங்கை மன்னனை மணம் புரிய இசைவதாக குமுதவல்லி பணித்தாள். மங்கையாசையினால் ஆலி நாடனும் அதற்கிசைந்து வாக்களிக்க திருமணம் நிறைவேறியது. மங்கை மடத்தில் “ததியாராதனையை “ தொடங்கினார் மங்கை மன்னர். இதற்காக மிகவும் பொருள் வேண்டியிருந்தமையால் அரசனுக்கு சரியாக கப்பம் கட்டமுடியாமல் போயிற்று, மேலும் பொருள் வேண்டியிருந்ததால் தன் தோழர்களான நீர் மேல் நடப்பான், நிழலிலொதுங்குவான், தாளூதுவான், தோலாவழக்கன் என்ற நால்வரின் துணியோடு வழிப்பறி செய்து அடியார்களுக்கு ததியாராதனம் செய்ய முற்பட்டார். இவரை ஆட்கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டதால் எம்பெருமான் பிரசன்ன வதனத்துடன், கமல நயனங்களுடன், பவழம் போன்ற சிவந்த செவ்வாயில் குமிண் சிரிப்புடன், வலம்புரி சங்கு போல் மிளிரும் கண்டத்துடன், நிர்மலமான பீதாம்பரங்களுடன், திவ்ய மங்கள ஆபரணங்களை பூண்டு பெரிய பிராட்டியாருடன் தன் தாமரைப் பாதங்களில் வீரக்கழல்களுடன் புது மணக் கோலத்தில் நடந்து வந்தார். அப்போது திருமணங்கொல்லை என்னும் இடத்தில் நாட்டியம் ஆட வல்லதான தனது " ஆடல்மா " என்னும் பஞ்சகல்யாணிக் குதிரையிலே வந்த மங்கை மன்னன் அவரை வாள் கொண்டு வெருட்டி நகைகளையெல்லாம் கழற்ற சொன்னார்.
ஏய் மணமகனே உன்னுடைய நகைகளையெல்லாம் கழற்றிக் கொடு
ஊஹூம் , மாட்டேன்
வாள் கொண்டு வெட்டுவேன், உடனடியாக கழற்று ( எம்பெருமான் தனது திவ்யாபரணங்களை கழற்ற்க் கொடுக்க அதை ஒரு துணியில் போட்டு)
உன் மனைவியின் நகைகளையும் வாங்கிக் கொடு
அதையும் வாங்கி மூட்டையாகக் கட்டிவைத்து பார்த்தால் காலிலே மெட்டி அவ்வாறே உள்ளது
வாள் வீசி, ஏய்! அந்த மெட்டியையும் கழற்று
என்னால் முடியவில்லை நீயே கழற்றிக் கொள்
மங்கை மன்னன் கையால் கழற்ற முயன்றும் முடியாமல் பல்லால் கடித்து கழற்ற
நீ கலியன்,
என்ன சொன்னாய்?
கலியன் என்றேன்.
பின் பரகாலன் நகை மூட்டையை தூக்க முயல அதை அவரால் தூக்க முடியவில்லை
மிகவும் வெகுண்டு வாள் வீசி ஏய் என்ன மந்திரம் போட்டாய்? என்று வெருட்ட
எம்பெருமானும் மந்தகாச புன் சிரிப்புடன் மந்திரம் தரத்தானே நான் வந்தேன் என்று
"ஓம் நமோ நாராயணா"
என்ற திருமந்திரத்தை, உண்மைப் பொருளை அவருக்கு உபதேசித்து அவரின் பூலோகக் கடைமையை உணர்த்தி மன்னனை திருத்தி ஆழ்வாராக்கினார். மந்திரத்தின் சக்தியாலும் எம்பெருமானின் பாதங்களில் அவர் முகம் பட்டதாலும், எம்பெருமானின் தரிசனம் பெற்றதாலும் மெய்ப்பொருளுணர்ந்த பரகாலர்
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந்துயரிடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு
அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடிக் கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும் நாமம்
என்று தொடங்கி பாசுரங்கள் பாடத்தொடங்கி வடமொழி வேதங்கள் நான்குக்கொப்பான நம்மாழ்வாரின் அருளிச்செயல்களுக்கு ஆறு அங்கங்கள் போன்று பெரிய திருமொழி, திருகுறுந்தாண்டகம், திடுநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் என்னும் ஆறு திவ்விய நூல்களை அருளி திருமங்கையாழ்வார் என்ற திருநாமம் பெற்றார்.இந்த திருவிளையாடலே வேடுபறி உற்சவன் என்று கொண்டாதபப்டுகின்றது திருவரங்கத்தில் இன்று.
இனி நம்மாழ்வார் வைபவம். தம்மிடம் வந்து தாம் எண்ணியபடி எம்பெருமான் கலக்க அந்த பெருமான் தன்னுருவத்தின் நேர்த்தியைக் காட்ட ஆழ்வார் அதனை பேசும் பாசுரம்,
கண்கள்சிவந்துபெரியவாய் வாயும் சிவந்து கனிந்து உள்ளே
வெண்பலிலகுசுடரிலகுவிலகு மகரகுண்டலத்தன்
கொண்டல்வண்ணன்சுடர்முடியன் நான்குதோளன் குனிசார்ங்கன்
ஒண்சங்கதைவாளாழியான் ஒருவனடியேனுள்ளானே.
.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home