Monday, February 4, 2008

திருநாங்கூர் பதினொரு கருட சேவை- 3

Visit BlogAdda.com to discover Indian blogs
மணிகர்ணிகை ஆற்றில் மஞ்சள் குளி உற்சவம்




இத்திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக தை அமாவாசையன்று திருமங்கையாழ்வாருக்கு "மஞ்சள் குளி திருவிழா" நடைபெறுகின்றது. திருவரங்கத்தில் திருமங்கையாழ்வார் தங்கியிருந்த போது அரங்கநாதர் முன் திருநெடுந்தாண்டகம் சேவித்தார், அதனால் மிகவும் பிரசன்னமான பெருமாள் ஆழ்வாரை ஏதாவது வரம் வேண்டுமாறு கூற, அவரும் புரட்டாசி மாதம் நடைபெறுகின்ற அத்யயன உற்சவத்தின் போது வேதங்களுடன், நம்மாழ்வாரின் திருவாய்மொழியும் சாற்றுமுறை செய்ய அருள் புரிய வேண்டும் என்று வேண்ட பெருமாளும் அவ்வண்ணமே அருளிச் செய்தார். அன்று முதல் நாலாயிர திவ்விய பிரபந்தமும் அத்யயன உத்சவத்தின் போது சாற்றுமுறை செய்யப்படலாயிற்று. ஆழ்வாரின் இந்த பக்திக்காக, பெருமாள் ஆழ்வாரை சிறப்பிக்க வேண்டி தனக்கு நடை பெறும் மஞ்சள் குளி இனி அவருக்கும் நடைபெற வேண்டும் என்று அருள் பாலித்தார். திருமங்கை ஆழ்வாருக்கு ஒவ்வொரு வருடமும் வட காவேரியாம் கொள்ளிடக் கரையில் மஞ்சள் குளி நடைப்பெற்றது, முதல் குளியலை நம்பெருமாளே, தானே தன் கையால் நடத்தி வைத்தார்.

ஆழ்வாரின் திருநாடு ஏகியதற்கு பிறகு பிறகு அவரது சகோதரியின் கணவர், திருவரங்கத்தை விடுத்து ஆழ்வாரின் அவதாரத் தலமான திருக்குறையலூர் வந்து தங்கினார். ஆழ்வாரின் மூர்த்திக்கு நாங்கூரை ஒட்டி ஓடும் மணிகர்ணிகை ஆற்றங்கரையில் அவர் மஞ்சள் குளியல் உற்சவத்தை 8ம் நூற்றாண்டிலே தொடங்கினார் அன்று முதல் இன்று வரை அது தொடர்கிறது.

கருட சேவைக்கு குமுதவல்லி நாச்சியாருடன் புறப்படும் திருமங்கையாழ்வார்




வயல்களில் பயிர்களை மிதித்துக் கொண்டு வரும் ஆழ்வார்














தை அமாவாசையன்று அதிகாலை 3 மணிக்கு திருவாலி திருநகரியிலிருந்து திருமங்கையாழ்வார், தன் தர்ம பத்தினி குமுத வல்லி நாச்சியாருடன் , அவர் ஆராதித்த சிந்தனைக்கினியான் பெருமாளும், உபய நாச்சியார்களுடன் தித்துக்கொண்டு முதலில் திருக்குறையலூர் ஸ்ரீ உக்ர நரசிம்மப் பெருமாள் கோவிலை அடைந்து அவரை மங்களாசாசனம் செய்கின்றார்.






அடுத்து ஸ்ரீ வீர நரசிம்மப் பெருமாள் கோவிலை அடைந்து அவரை மங்களாசாசனம் செய்கின்றார் பரகாலர்.



திருநாங்கூரில் உள்ள திருக்காவளாம்பாடி ஸ்ரீ கோபாலனை , "காவளம்பாடி மேய கண்ணனே! களை கண் நீயே" என்று சேவிக்கின்றார் கலிகன்றி.


பின் திருமணிக்கூடத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜப்பெருமாளை "திருமகள் மருவும் நாங்கூர்த் திருமணிக் கூடத்தானே" என்று மங்களாசாசனம் செய்கின்றார்  ஆலிநாடன்.


அன்று நிறைவாக திருபார்த்தன் பள்ளி ஸ்ரீ பார்த்த சாரதியை பரகால நாயகியின் தாயாய் "பவள வாயாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே" என்று மங்களாசாசனம் செய்கின்றார் ஆலி நாடன்.





உச்சிக் காலத்திற்கு முன் மணிகர்ணிகை ஆற்றை அடைகிறார். பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் இடுப்பளவு தண்­ணிரில் ஆழ்வாரின் பெரிய திருமொழியில் இருந்து ஆழ்வாரின் ஆச்சாரியரான திரு நறையூர் நம்பியையும், திருவரங்கத்து அழகிய மணவாளானையும் மங்களா சாசனம் செய்து ஆழ்வார் பாடிய பாசுரங்களை சேவிக்கின்றனர். இவ்விரு திவ்ய தேசங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மாலை மற்றும் பீதாம்பரங்களினால் பரிவட்டம் கட்டபெற்று ஆழ்வாருக்கு மரியாதை செய்யப்படுகின்றது.


மஞ்சள் குளியலின் போது திருமங்கை ஆழ்வார் சிந்தனைக்கினியானுடன்


பின் மஞ்சள் குளியல் மண்டபத்தில் எழுந்தருளும் ஆழ்வாருக்கு சஹஸ்ர தாரா மஞ்சள் குளி என்னும் திருமஞ்சனம் நடை பெறுகின்றது. சஹஸ்ர தாரை தட்டில் ஆழ்வார் வழிபட்ட சிந்தனைக்கு இனியன் என்னும் பெருமாளின் திருமூர்த்ததிற்க்கு செய்யப்படும் மஞ்சள் நீர் முதலில் பெருமாளுக்கு திருமஞ்சனம் ஆகி பின் ஆழ்வாருக்கும் திருமஞ்சனம் ஆகின்றது. பின் திருப்பாவை சாற்று மறை நடைபெறுகின்றது.



மாலையில் அலங்கரிக்கப்பட்ட ஆழ்வார் திருமணிமாடக்கோவில் ஸ்ரீ நாராயணப் பெருமாளை, "மணிமாடக் கோயில் வணங்கு என்மனனே" என்று மங்களாசாசனம் செய்கின்றார் அருள்மாரி.


திருமணிமாடக்கோவிலில் ஆழ்வார் ஆஸ்தானம்


பின், நல்ல வெந்தழல் மூன்று நால் வேதம் ஐவேள்வியோடு ஆறங்கம் வல்ல அந்தணர் வாழும் திருவண்புருடோத்தமத்தில் ஸ்ரீ புருஷோத்தமனை மங்களாசாசனம் செய்கின்றார் மான வேற் கலியன்.


திருவைகுந்த விண்ணகரத்தில் ஸ்ரீ வைகுந்த நாதனை நாங்கூர் "வைகுந்த விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே" என்று மங்களாசாசனம் செய்கிறார் வாள் கலியன்.



திருசெம்பொன்செய் கோவிலில் அல்லி மாமலராளுடன் ஸ்ரீ செம்பொன் செய் அரங்கரை "நாங்கை நன்னடுவுள் செம்பொன் செய் கோயிலினுள்ளே கடல்நிறவண்ணன் தனனை நான் அடியேன் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே" என்று மங்களாசாசனம் செய்கிறார் நம் மங்கை வேந்தர்.


ஒரு கிளி மற்றொரு கிளிக்குக் கல்வி கற்பித்த திருத்தெற்றியம்பலத்தில் ஸ்ரீ பள்ளிகொண்ட பெருமாளை "திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே" என்று வணங்குகிறார் குமுதவல்லி மணாளர்.



பின்னர் அரிமேய விண்ணகரத்தில் குடங்களை எடுத்தேறவிட்டு கூத்தாடிய கோவை "அண்டமுறும் அலைகடலினொலி திகழும் நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே" என்று அனுபவிக்கின்றார் ஆழ்வார்.

அன்றைய தினம் இறுதியாக திருமணிமாடக் கோவிலில் ஆஸ்தானம் கண்டருளுகிறார் ஆழ்வார். இங்கு அர்த்த ஜாம பூஜை நடைபெறுகின்றது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home