Sunday, February 3, 2008

கருட சேவை - 6

Visit BlogAdda.com to discover Indian blogs
திருமலை கருட சேவை




பாசுரங்களின் எண்ணிக்கப்படி திருவரங்கத்திற்கு அடுத்தபடி பாசுரங்கள் பாடப்பெற்ற திவ்ய தேசம் திருப்பதி - திருமலை. பெருமாள் கண்கண்ட தெய்வமாய் கலியுக வரதனாய் செடியாய வல்விணைகள் தீர்க்கும் திருமாலாய் , நெடியானாய் வேங்கடவனாய் சேவை சாதிக்கும் தலம்.




மதுரகவியார், தொண்டரடிப்பொடியாழ்வார் தவிர மற்ற பத்து ஆழ்வார்களும் மங்களாசாசனம் செய்த திவ்ய தேசம்.




திருமலையின் ஏழு மலைகள் சேஷாசலம், கருடாசலம், அஞ்சனாசலம், ஸ்ரீ வேங்கடாசலம், நாராயணாசலம், ரிஷபாசலம், அனந்தாசக்லம் ஆகியவை ஆகும்.






வேங்கடம் என்றால் இரண்டு அர்த்தங்கள் உண்டு அதாவது வேம்- அழிவில்லாத கடம் - ஐஸ்வர்யம் நீங்காத செல்வம் நிறைந்திருக்கும் தலம். வாஸ்து சாஸ்திரத்திற்கு ஒரு நல்ல உதாரணம் திருமலைக் கோவில். வேம்- பாவம் கடம்- எரித்தல் அதாவது நமது பாவங்களை எல்லாம் எரிக்கும் தலம் திருவேங்கடம்.





பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் மாலை கருட சேவையின் ஒரு தனி சிறப்பு கருட சேவையன்று மூலவர் வேங்கடேசருக்கு அணிவிக்கப்படும் மகர கண்டியும், லக்ஷ்மு ஹாரமும் கருட சேவையன்று மட்டும் உற்சவர் மலையப்பசாமிக்கு அணிவிக்கப்பதுகின்றன. சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாளின் திருமாலையை அணிந்து கொண்டு சேவை சாதிக்கின்றார் பெருமாள் இன்று. கருடசேவைக்காகவே ஒரு மாலையை அணிந்து அனுப்புகின்றாள் கூடவே தான் கையில் கொண்ட ஒரு கிளியையும் அனுப்புகிறாள்.






சங்கமாகடல்கடைந்தான் தண்முகில்காள்! வேங்கடத்துச்


செங்கண்மால்சேவடிக்கீழ் அடிவீழ்ச்சிவிண்ணப்பம்


கொங்கைமேல்குங்குமத்தின் குழம்பழியப்புகுந்து ஒருநாள்


தங்குமேல் என்னாவிதங்குமென்றுரையீரே.


என்று அந்த குளிரருவி கோவிந்தனுக்காகவே கனவு கண்ட கோதை நாச்சியார் .







பிரம்மோற்சவம் தவிர பெருமாள் கருட சேவை தந்தருளும் நாள் தை மாத இரத சப்தமி நாள். அன்று அதிகாலை சூரியப் பிரபை வாகனத்தில் சேவை சாதிக்கும் பெருமாள் மாலை சந்திரப்பிரபை வாகனத்தில் சேவை சாதிக்கின்றார். மேலும் பெரிய திருவடியாம் கருடன், சிறிய திருவடியாம் அனுமனிலும் சேவை சாதிக்கின்றார் பெருமாள். ஒரு வருடம் இரத சப்தமியன்று பெருமாளின் கருட சேவையை தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டியது அதை அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.





மலையப்ப சுவாமிக்கு கற்பூர ஹாரத்தி



மலையப்ப சுவாமியின் திருமுடிமுதல் திருவடிவரை அருமையாக சேவியுங்கள







சிறிய திருவடியில் மலையப்ப சுவாமி




திருமழிசைப் பிரானின் ஒரு பாசுரம்


புள்ளதாகிவேதநான்கும் ஓதினாய் அதன்றியும்


புள்ளின்வாய்ப்பிளந்து புட்கொடிப்பிடித்தபின்னரும்


புள்ளையூர்தியாதலால் அதென்கொல்? மின்கொள்நேமியாய்!


புள்ளின்மெய்ப்பகைக் கடல்கிடத்தல் காதலித்தே.



புள் என்றால் பறவை அதை திருமழிசைபிரான் எவ்வாறு எடுத்து ஆண்டிருக்கின்றார் பாருங்களேன்.


புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் - அன்னமாகி நான்கு வேதங்களும் ஓதிய பெருமாளே.


புள்ளின் வாய்ப் பிளந்து - கொக்காக வந்த பகாசுரனின் வாயைப் பிளந்த பெருமாளே.


புட்கொடி பிடித்த - கருடக் கொடியைக் கொண்ட பெருமாளே.


புள்ளையூர்தியாதலால் - வேத சொரூபியான கருடனில் உலா வரும் பெருமாளே.


புள்ளின்மெய்ப்பகை - கருடனின் பகைவனான பாம்பணையில் பாற்கடலில் மாய்த்துயில் கொண்ட பெருமாளே.



08-02-02 அன்று திருநாங்கூரிலே 11 ( ஏகாதச) கருட சேவை எனவே அடுத்த பதிவிலிருந்து திருநாங்கூர் கருட சேவை பற்றிய பதிவுகள் வந்து சேவியுங்கள்.


திருவேங்கடமுடையானின் திருப்பள்ளியெழுச்சியை பொருளுடன் படிக்க சொடுக்குக

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home