Monday, January 26, 2009

கண் கொடுத்த கூரேசர்

Visit BlogAdda.com to discover Indian blogs
கூரத்தாழ்வார்

மொழியைக் கடக்கும் பெரும்புகழான் வஞ்சக்குறும்பாம்
குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின்
பழியைக் கடக்கும் இராமாநுசன் புகழ்பாடி அல்லா
வழியைக் கடத்தல் எனக்கு இனியானும் வருத்தமன்றே.

எம்பெருமானாரின் பவித்ரம் கூரத்தாழ்வாரின் ஆயிரமாம் ஆண்டு தொடங்கி விட்டது. வருகின்ற விரோதி வருடம் தை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தன்று ( 03-02-2010) அன்று கூரேசரின் ஆயிரமாவது திருநட்சத்திர நாள், அது சமயம் அனைவரும் அவர் புகழை எடுத்து இயம்புவோம் என்று KRS ஐயா கொடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதால் இப்பதிவு.


தலைப்பை பார்த்தீர்களா? கண் கொடுத்தாரா? யாருக்காக கொடுத்தார்? எப்போது கொடுத்தார்? என்பதெல்லாம் அனைவரும் அறிந்திருப்பீர்கள் ஆயினும் பின்னும் ஒருமுறை சொல்கின்றேன். அத்துடன் இன்றும் அவரை வேண்டுபவர்களுக்கு அவர் கண்ணொளி வழங்கி வரும் அற்புதம் என் வாழ்விலே நடந்துள்ளது அதையும் கூற வந்ததே இப்பதிவு.


சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன் எனது தமக்கையாருக்கு இரண்டு கண்களிலும் பார்வை மங்கிக் கொண்டு வந்தது. கண் மருத்துவர்களிடம் காட்டி மதுரையில் ஒரு கண்ணில் அறுவை சிகிச்சை செய்தனர் ஆனால் பலன் ஒன்றும் இல்லை. இரண்டாவது கண்ணிலும் பார்வை மிகவும் குறைந்து கொண்டு வந்தது , சென்னைக்கு வந்து சங்கர நேத்ராலயாவில் காட்டினோம், அவர்களும் ஒன்றும் செய்ய முடியாது என்று கை விரித்து விட்டனர். அப்போதுதான் குமுதம் பக்தியில் திரு இராஜகோபால் அவர்கள் மதுர மங்கலத்தில் எம்பாரையும், கூரத்தில் கூரத்தாழ்வாரையும் வணங்க கண் பார்வை கிட்டும் என்று எழுதியிருந்ததை படித்து விட்டு ஸ்ரீபெரும்புதூர், மதுர மங்கலம், கூரம் சென்று தரிசித்து விட்டு வேண்டிக்கொண்டு வந்தோம், இறையருளால் முடியாது என்று கூறிய மருத்துவர்களே ஆச்சிரியப்படும்படி கண்ணின் நிலைமை சீராகி பின் சிறு அறுவை சிகிச்சைக்குப்பின் இப்போது அவருக்கு ஒரு கண் சரியாக தெரிகின்றது. அது போல இன்னும் பலருக்கும் கண் ஒளி வழங்கும் கண் கண்ட தெய்வமாய் விளங்கும் கூரேசா நீர் இன்னும் பல ஆயிரத்தாண்டிரும். இனி தன் ஆச்சாரியாருக்காக, வைணவத்திற்க்காக கூரத்தாழ்வான் கண்களை கொடுத்த திருவைபவத்தை பார்ப்போம்.


இராமாவதாரத்தில் ஆதி சேஷன் தம்பியாக இலக்குவணாக அவதரித்து சேவை செய்ததற்காக, கிருஷ்ணாவதாரத்தில் பெருமாள் கிருஷ்ணராகவும் சேஷன் பலராமராகவும் அவதாரம் எடுத்தனர். பின்னர் கலியுகத்தில் பெருமாள் கூரத்தாழ்வராகவும், ஆதி சேஷன் இளையாழ்வாராகவும் பின்னர் ஹஸ்திகிரி நாதரன்னா ஆகவும் மணவாள மாமுனியாகவும் அவதரித்து நம்மை உய்வித்தனர் என்பது ஐதீகம். பெருமாளின் அம்சமாக பிறந்த கூரேசர் பெருமாளின் மார்பில் உள்ளது போலவே மறு பெற்றிருந்ததால் ஸ்ரீவத்சாங்கமிச்ரர் என்று வடமொழியிலும், திருமறுமார்பினர் என்று தமிழிலும் திருநாமம் பெற்றார்.



“செல்வம் அல்ல உய்யும் வழி, உடையவர் திருவடிகளே உய்யும் வழி “என்று தனது சொத்து பத்துக்களையெல்லாம் கூரத்திலே விட்டு விட்டு அன்பு மனையாள் ஆண்டாளம்மாளுடன் திருவரங்கம் வந்து எம்பருமானாருக்கு ஒரு பிரதான சீடராய் கூரேசர் தொண்டு செய்து வரும் காலம். இராமனுஜரின் உபதேசத்தினால் பெருமளவில் வைணவம் தழைத்து ஓங்கி வந்த சமயம் எல்லாருக்கும் ஏற்படுவது போல் எம்பெருமானுருக்கும் அநேக விரோதிகள் முளைத்தனர்.

கங்கை கொண்ட சோழபுரத்தை உறையூர் சோழர் வம்சத்தில் வந்த கிருமி சோழன் (இரண்டாம் குலோத்துங்கன் - கி.பி 1030 -1116) ஆண்டு வந்தான், அவன் ஒரு தீவிர சைவன் அவனுக்கு நாலூரான் என்னும் துர்மதி கொண்ட அமைச்சன் துர்போதனைகளை அளித்து அவனை வைஷ்ணவ துவேஷியாக்கி விட்டான். அவன் சோழனுக்கு ஒரு அறிவுரை அளித்தான் எப்படியாவது இராமானுஜரை தூக்கி வந்து சிவனே பெரிய தெய்வம் என்று எழுதி வாங்கி விட்டால் சைவ பெருமையை நிலை நாட்டி விடலாம் என்று அவன் துர்போதணை அளித்தான். மன்னனும் தன் படை வீரர்களை திருவரங்கம் அனுப்பி வைத்தான். அவர்கள் வந்த கொடிய நோக்கத்தை எம்பெருமானாரின் சகோதரி மகன் நடாதூராழ்வான் அறிந்து கொண்டு கூரேசருக்கு குறிப்பால் உணர்த்தினார், அவரை “நீரன்றோ பரிய பாகிரேயர்” என்று பாராட்டிய கூரத்தாழ்வார் அவ்வமயம் வடதிருக்காவேரியில் ஸ்நானம் செய்து கொண்டிருந்த தமது ஆச்சாரியரை காப்பாற்ற அவரை வெள்ளை ஆடை அணிந்து மைசூர் தேசத்திற்க்கு தப்பி செல்ல கூறிவிட்டு தமது ஆச்சாரியனின் காவி ஆடையும் திரிதண்டத்தையும் எடுத்துக் கொண்டு அரச வீரர்களை தான் தான் இராமானுசர் என்று நம்ப வைத்து கங்கை கொண்ட சோழபுரம் சென்றார தன்னுடைய 88வது வயதில். அவருடன் பெரிய நம்பியும் அவரது மகள் அத்துழாயும் உடன் சென்றனர்.

ஆதிகேசவபெருமாள் - கூரத்தாழ்வான்

அரசவையில் சோழன் “சிவாத் பரதரம் நாஸ்தி” அதாவது சிவனைத்தவிர மேலான தெய்வம் இல்லை என்று எழுதி கையெழுத்திட கட்டளையிட்டான். கூரத்தாழ்வான் மறுத்து பல பிரமாணுங்களூடன் விஷ்ணுவே பரத்வம் என்று வாதிட்டார், மேலும் "சிவன் ஒரு குறுகி என்றால் விஷ்ணு ஒரு பதக்கு "( அதாவது இரண்டு மடங்கு) என்று பொருள்பட எழுதிக்கொடுத்தார். மேலும் வந்திருப்பது இராமானுஜர் அல்ல என்ற உண்மையையும் நாலூரான் மன்னனுக்கு உணர்த்தினான் அதனால் கோபம் கொண்ட கிருமி சோழன் கூரத்தாழ்வான் கண்ணை பறிக்குமாறு ஆனையிட்டான்.. உன்னைப் போன்ற துரோகியைப் பார்ப்பதைவிட கண் இல்லாமல் இருப்பதே மேல் என்று கூரேசர் தன் கண்களை தானே எழுத்தாணியால் எடுத்து வெளியே எறிந்தார். இவ்வாறு தன் ஆச்சாரியரையும், ஸ்ரீ வைஷ்ணவத்தையும் காப்பாற்ற தன் கண்களை கொடுத்தார் கூரத்தாழ்வார்.



கூரத்தாழ்வாரின் அற்புத திருவைபவம் மற்றும் அவரது வாழ்வு என்பது தியாகத்தின் எடுத்துக்காட்டு, கல்வியின் மேன்மை பாக்தியின் எல்லைக்கோடு.கிருமிசோழனின் கொடுமையிலிருந்து தப்பிக்க 12 வருடம் கூரேசர் திருமாலிருஞ்சோலயில் சென்று தங்கியிருந்தார். அப்போது யதிராஜர் மேல்கோட்டையில் தங்கியிருந்தார். காலப்போக்கில் கிருமி சோழன் கழுத்தில் புழு புழுத்து இறந்தான். அவனது மகன் அவனைப் போல் தீவிர சைவனாய் இல்லாமல் அனைவரும் தங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபட அனுமதித்தான். இவ்வாறு காலம் மாறியதால் இராமானுஜர் மீண்டும் ஸ்ரீரங்கம் திரும்பி வந்தார், தன் ஆச்சார்யன் வருவதை அறிந்த கூரேசர் தானும் ஸ்ரீரங்கம் திரும்பினார்.
அரங்கநாதனை வனங்கி விட்டு தனது அத்யந்த சீடனை காண வந்த எம்பெருமானார் கண்ணிழந்த கூரத்தாழ்வாரை நோக்கி, “ த்ருஷ்டி பூதரான உமக்கு இப்படி கண் போனதே!”என்று திக்குகிறார். அதற்கு கூரேசர் “ யாராவது ஒரு வைணவரின் நெற்றியிலுள்ள திருமண் காப்பிணைப் பார்த்து கோணலாக உள்ளதே என்று நினைத்திருப்பேனோ! என்று பதிலுரைக்கிறார் தியாக சிகரமாகிய கூரத்தாழ்வான். இராமானுஜர் கூறியும் நாலுரானை தண்டிக்க பெருமாளீடம் வேண்டாத பெரும் கருணை வள்ளல் கூரத்தாழ்வான்.

பதிவை நிறைவு செய்வதற்கு முன்னர் கூரத்தாழ்வார் தமது ஆச்சாரியரான இராமானுஜர் மேல் இயற்றிய தனியனையும் அதை அவர் இயற்றிய சூழ்நிலையையும் பார்ப்போம். சீடரே ஆனாலும் கூரேசர் எம்பெருமானாருக்கு வயதில் மூத்தவர், அவர் அரங்க நாதரிடம் இராமனுஜருக்கு முன்னாலேயே திருநாடு அலங்கரிக்கவேண்டும், தமது ஆச்சாரியர் அவ்விடம் வரும்போது அவரை தாம் வரவேற்க வேண்டும் என்று விண்ணப்பித்தார், அரங்கனும் அவ்வாறே அருளினார். அதை அறிந்த இராமானுர் கூரேசரை சந்தித்து அவரின் அந்த முடிவை பற்றி விவாதித்து நிறைவாக அரங்கனின் திருவுள்ளம் அதுவானால் தமக்கும் அது சம்மதமே என்று கண்ணிழந்த கூரேசனை ஆரக்கட்டித்தழுவி அவருக்கு அசீர்வாதமும் அளித்தார் அப்போது தனது ஆச்சாரியனின் திருப்பாதங்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி இயற்றிய தனியன் இது ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் தினமும் அநுசந்திக்கும் தனியன்

யோநித்யமச்யுதபதாம்புஜயுக்மருக்ம
வ்யாமோஹதஸ்ததிதராணித்ருணாயமேநே |
அஸ்மத்குரோர்பகவதோஸ்யதயைகஸிந்தோ:
ராமாநுஜஸ்யசரணௌ சரணம் ப்ரபத்யே. ||

என்னுடைய ஆச்சாரியரான இராமானுஜரின் திருப்பாதங்களே என்னுடைய ஒரே புகலிடம் ஏனென்றால் அவர் கருணைக்கடல். அவருக்கு பெருமாளுடைய திருவடிகள்தான் விபூதி மற்றவையெல்லாம் ஒன்றுமில்லை.

ஆச்சார்ய பக்தி,ஜீவகாருண்யம், நற்பண்பு, நல்லொழுக்கம், வைராக்கியம், பாண்டித்யம் அனைத்திற்க்கும் ஒரு விளக்கம். ஸ்ரீ வைஷ்ணவத்திற்க்கக தன் கண்களை இழந்து இன்று பல் வேறு அன்பர்களுக்கு கண்ணொளி வழங்கி வரும் கூரத்தாழ்வான் ஆயிரம் ஆண்டில் அவர் தாள் பணிவோம்.

மேலும் கூரேசரைப் பற்றியும், கூரம் திருக்கோவில், கூரத்தாழ்வார் ஆயிரமாம் ஆண்டையொட்டி நடைபெறும் நிகழ்ச்சிகளைப்பற்றி அறிந்து கொள்ள செல்லுங்கள் www.Kuresan.com இப்பதிவில் உள்ள படங்கள் அனைத்தும் இவ்வலைத்தளத்திலிருந்து பெறப்பட்டவை.


எம்பருமானார் திருவடிகளே சரணம்

கூரத்தாழ்வார் திருவடிகளே சரணம்

16 Comments:

Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

நன்றி கைலாஷி ஐயா!
கூரேசர் பற்றி அதிகம் அறியவில்லை என்றாலும், அதையே சாக்கு போக்கு-ன்னு சொல்லாம, ஆர்வத்துடன் படித்து தொகுத்தளித்த பாங்கு...மிகவும் சிறப்பு!

இன்னுமொரு நூற்றாண்டு இரும்!
கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்!

January 28, 2009 at 4:25 AM  
Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

kuresan.com சுட்டிக்கும் ஸ்பெஷல் நன்றி! :)

January 28, 2009 at 4:26 AM  
Blogger ஷைலஜா said...

மதுர மங்கலத்தில் எம்பாரையும், கூரத்தில் கூரத்தாழ்வாரையும் வணங்க கண் பார்வை கிட்டும் என்று எழுதியிருந்ததை படித்து விட்டு ஸ்ரீபெரும்புதூர், மதுர மங்கலம், கூரம் சென்று தரிசித்து விட்டு வேண்டிக்கொண்டு வந்தோம், இறையருளால் முடியாது என்று கூறிய மருத்துவர்களே ஆச்சிரியப்படும்படி கண்ணின் நிலைமை சீராகி பின் சிறு அறுவை சிகிச்சைக்குப்பின் இப்போது அவருக்கு ஒரு கண் சரியாக தெரிகின்றது>>>>>>

ஆச்சரியமான நிகழ்ச்சி! கூரேசர் பெருமையை மேலும் உணர்ந்துகொள்ளவைத்தீர்கள்! அருமையான இடுகை இது!

January 28, 2009 at 5:28 AM  
Blogger S.Muruganandam said...

அந்தப் பெருமை தங்களுக்கே சேரும் KRS ஐயா. சரியான சமயத்தில் ஞாபகப்படுித்தினீர்கள். நன்றி

January 28, 2009 at 7:55 AM  
Blogger S.Muruganandam said...

//ஆச்சரியமான நிகழ்ச்சி! கூரேசர் பெருமையை மேலும் உணர்ந்துகொள்ளவைத்தீர்கள்! அருமையான இடுகை இது!//

நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு.

நன்றி ஷைலஜா.

January 28, 2009 at 7:56 AM  
Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மதுர மங்கலத்தில் எம்பாரையும், கூரத்தில் கூரத்தாழ்வாரையும் வணங்க கண் பார்வை கிட்டும் என்று எழுதியிருந்ததை படித்து விட்டு ஸ்ரீபெரும்புதூர், மதுர மங்கலம், கூரம் சென்று தரிசித்து விட்டு வேண்டிக்கொண்டு வந்தோம்//

கைலாஷி ஐயா!
கூரத்தில் தரிசிக்கச் சென்ற போது, தரிசனம் முடித்துக் கொண்டு வேண்டிக் கொண்டு வருவதே போதுமானதா? இல்லை அதற்கென்று வழிபாடு ஏதும் தனியாக ஆலயத்தில் வைத்துள்ளார்களா? அனைவருக்கும் பயன்படுமாறு அறியத் தாருங்களேன்!

January 28, 2009 at 7:53 PM  
Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

அடியேனின் மேலதிக விளக்கம்:

//"சிவன் ஒரு குறுகி என்றால் விஷ்ணு ஒரு பதக்கு "( அதாவது இரண்டு மடங்கு) என்று பொருள்பட எழுதிக்கொடுத்தார்//

இதில் சிவபெருமானக் கூரேசர் பழிக்கவில்லை!
சிவம் = குறுணி (ஒரு அளவை) என்ற பொருளும் உண்டு!
முக்குறுணி விநாயகர்-ன்னு சொல்றோம்-ல! அது போல!

கூரேசர் மன்னனின் வெறியைச் சுட்டிக் காட்டும் வண்ணமாக, "என்ன இது குறுணி தான் பெருசு-ன்னு சொல்லச் சொல்றீங்களே! அதை விட பதக்கு-ன்னு இன்னொரு பெரிய அளவை இருக்குல்ல?- என்று வஞ்சப் புகழ்ச்சி போல சொல்லிவிட...அந்த வெறி தலைக்கேறிய மன்னனுக்கு இன்னும் வெறி முற்றியதால்...பலவும் நடந்தது!

கூரேசர்...எங்கும் சிவபெருமானைத் தாழ்த்தவே மாட்டார்!

January 28, 2009 at 8:00 PM  
Blogger S.Muruganandam said...

//கூரத்தில் தரிசிக்கச் சென்ற போது, தரிசனம் முடித்துக் கொண்டு வேண்டிக் கொண்டு வருவதே போதுமானதா? இல்லை அதற்கென்று வழிபாடு ஏதும் தனியாக ஆலயத்தில் வைத்துள்ளார்களா? அனைவருக்கும் பயன்படுமாறு அறியத் தாருங்களேன்!//

நாங்கள் சென்று நெய் விளக்கு ஏற்றி வேண்டிக்கொண்டுதான் வந்தோம். வேறு எந்த வழிபாட்டு முறையுமில்லை அடியேனுக்கு தெரிந்தவரை.

அறுவை சிகிச்சைக்குப்பின் சென்று மதுர மங்கலத்திலும், கூரத்திலும் கர்ப்பகிரகத்தில் விளக்கேற்ற நெய் கொடுத்து விட்டு வந்தோம்.

January 29, 2009 at 7:00 AM  
Blogger S.Muruganandam said...

//கூரேசர்...எங்கும் சிவபெருமானைத் தாழ்த்தவே மாட்டார்!//

KRS ஐயா, வைணவர்கள் பதிபக்தியைப் போல நாராயண பக்தியைக் கொண்டவர்கள் என்பதை அடியேன் அறிவேன்.

எனவே கூரேசர் சிவபெருமானை தாழ்த்தி கூறினார் என்ற அர்த்தத்தில் எழுதவில்லை.

பதக்கு = 2 * குறுணி என்று கூறியதற்கு நன்றி. (எங்கள் கொங்கு பகுதியில் படி, பக்கா என்று கூறுவோம் )

January 29, 2009 at 7:06 AM  
Blogger குமரன் (Kumaran) said...

'கண் கொடுத்த கூரேசர்' என்ற தலைப்பே அருமை கைலாஷி ஐயா. தன்னுடைய கண்ணை இராமானுஜ தரிசனத்திற்காகக் கொடுத்தவர் என்ற பொருளும் வேண்டியவர்களுக்குக் கண் பார்வையைக் கொடுத்தவர் என்ற பொருளும் அமைகின்றது.

ஒரு பிறவியில் செய்த சேவைக்காக மூன்று பிறவிகள் எடுத்து பதில் சேவையா? என்னே எம்பிரானின் எளிமை.

இளையாழ்வாரான எம்பெருமானாரும் மணவாள மாமுனிகளும் ஆதி சேஷ அவதாரங்கள் என்று தெரியும். ஆனால் கூரேசரும் ஹஸ்திகிரி நாதரன்னாவும் பெருமாளின் அம்சம் என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன். கூரேசரைப் பற்றி கொஞ்சமேனும் தெரியும். ஹஸ்திகிரி நாதரன்னாவைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

January 30, 2009 at 4:20 PM  
Blogger S.Muruganandam said...

//கண் கொடுத்த கூரேசர்' என்ற தலைப்பே அருமை கைலாஷி ஐயா. தன்னுடைய கண்ணை இராமானுஜ தரிசனத்திற்காகக் கொடுத்தவர் என்ற பொருளும் வேண்டியவர்களுக்குக் கண் பார்வையைக் கொடுத்தவர் என்ற பொருளும் அமைகின்றது.//

ஆம் குமரன் ஐயா அன்று தன் ஆச்சரியரைக் காப்பாற்ற தன் கண்ணை இழந்தார், இன்று பலருக்கு கண்ணொளி வழங்குகின்றார்.

கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்.

January 30, 2009 at 7:11 PM  
Blogger S.Muruganandam said...

//ஹஸ்திகிரி நாதரன்னாவைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்//

அடியேனும் சிறிது ஆராய்ச்சி செய்கிறேன் ஹஸ்தகிரி நாதரன்னவைப் ப்ற்றி அறிந்து கொள்ள.

திருநாங்கூர் கருட சேவை பதிவுகளை கண்டு ஆனந்தமடையுங்கள் @
திருநாங்கூர்

January 30, 2009 at 7:16 PM  
Anonymous Anonymous said...

கூரேசர் பற்றிய பதிவு அருமை.எழுத்தில் எளிமையும் நளினமும் உள்ளன.

கூரேசர். எம்பெருமானார் திருவடிகளே சரணம்

February 10, 2009 at 9:12 AM  
Blogger S.Muruganandam said...

வாருங்கள் பரவாஸ்து அவர்களே. நன்றி.

கூரேசர். எம்பெருமானார் திருவடிகளே சரணம்

February 20, 2009 at 8:34 AM  
Blogger Rathnavel Natarajan said...

உங்கள் அருமையான பதிவுக்கு நன்றி.

February 12, 2012 at 7:56 AM  
Blogger S.Muruganandam said...

மிக்க நன்றி Ratnavel Nataajan ஐயா.

February 17, 2012 at 1:21 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home