Sunday, July 20, 2008

கருடாழ்வார்

Visit BlogAdda.com to discover Indian blogs
அஹோபிலம் பாவன நரசிம்மர் சன்னதி கருடாழ்வார்

ஆழ்வார்கள் எம்பெருமானின் திருவருளினால் மயர்வற மதிநலம் பெற்று திருமாலாகிய அவரின் பேர் எழிற் பொய்கையுள் ஆழ மூழ்கிக் கவி பாடியவர்கள். ஆழ்வார்கள் திவ்ய சூரிகள். ஆழ்வார்களுடைய அருட்பாசுரங்கள் தென் தமிழ் நாட்டில் தென் கலை மரபை தோற்றுவித்தன என்றால் மிகையாகாது. ஆழ்வார்களின் அருளிச் செயல்களான திவ்ய பிரபந்தங்கள் உபய வேதாதங்கள் ஆகும். இவ்வாறு எம்பெருமானின் கல்யாண குணங்களில் ஆழ்ந்து பாசுரங்கள் பாடிய ஆழ்வார்கள் பன்னிருவர் ஆயினும் ஆழ்வார் என்று அழைக்கப்படுபவர்கள் இன்னும் சிலரும் உண்டு. இவர்கள் கருடாழ்வார், இளையாழ்வான், பிரகலாதாழ்வான், கஜேந்திராழ்வான் ஆகியோர் ஆவர். இப்பதிவில் பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் பெரிய திருவடியாம் கருடன் எவ்வாறு கருடாழ்வார் என்னும் சிறப்புப் பெற்றார் என்பதை காண்போம்.


அதற்காக நாம் அஹோபிலம் செல்ல வேண்டும், செல்வோமா? கிருத யுகத்தில் இந்த அஹோபிலம்தான் ஹிரண்ய கசிபுவின் அரண்மனை, தன் தமையனாகிய ஹிரண்யாக்ஷனை வதம் செய்து விஷ்ணு பகவான் பூமிப்பிராட்டியாரை மீட்டதால் கோபம் கொண்ட ஹிரண்ய கசிபு அவர் மேல் கடும்கோபம் கொண்டிருந்தான், மேலும் அரிய வரங்கள் பெற்று தானே கடவுள் என்றும் யாரும் விஷ்ணுவை வணங்கக்கூடாது என்று கொடுங்கோலனாக ஆண்டு கொண்டிருந்தான். ஆனால் இறைவனின் திருவுள்ளப்படி அவன்து மகனாக பரம ப்க்தனாக , தாயின் கர்பத்தில் இருக்கும் போதே நாரத மஹரிஷியின் மூலம் "ஓம் நமோ நாராயணாய" என்னும் மந்திர உபதேசம் பெற்றவனாக பிறந்தான் பிரகலாதன். அவன் வளர வளர அவன்து விஷ்ணு பக்தியும் வளர்ந்தது. அவனைக் கண்டு ஹிரண்யகஷிபுவின் கோபமும் வளர்ந்தது. மகன் என்று கூடப் பாராமல் பல் வேறு வழிகளில் அவனைக் கொல்லப் பார்த்தான் ஆனால் ஒவ்வொரு முறையும் நாராயணன் தன் பக்தனைக் காப்பாறினார். இறுதியாக ஒரு நாள் கோபம் தலைக்கேறி "எங்கிருக்கிறான் உன் நாராயணன்" என்று ஆணவத்துடன் கேட்டான் ஹிரண்ய கசிபு . ஆக்ரோஷத்துடனும், ஆணவத்துடனும் தன் எதிரே பயமுறுத்தும் விதத்தில் நின்று மிரட்டிய தன் தந்தையானவனை கண்டு சிறிதும் கலங்காமல் திட பிரக்ஞனாய் அந்த சர்வேஸ்வரன் மேல் கொண்ட பக்தியால் அவர் எப்படியும் தன்னை காப்பார் என்ற நம்பிக்கையுடன் பிரகலாதன் அமைதியாக அவர் "தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்" என்று பதிலிறுத்தான். மூர்க்கமாக தன் கதாயுதத்தால் ஒரு தூணை தாக்கினான் ஹிரண்யன். "அண்டமெல்லாம நடுக்கும் படி அந்த தூண் பிளந்தது அதிலிருந்து சிங்க முகமும், மனித உடலும் வஜ்ர நகங்களும் கொண்டு சிங்கப்பெருமான் ஆவிர்பவித்தார்" அதே க்ஷணத்தில் பெருமாள் தன் அன்பன் சொன்ன சொல்லை மெய்பிக்க, இந்த அற்புதத்தை பெரியாழ்வார் இவ்வாறு பாடுகின்றார்


அளந்திட்டதூணை அவன் தட்ட ஆங்கே


வளர்ந்திட்டு வாளுகிர்ச்சிங்கவுருவாய்


உளந்தொட்டிரணியன் ஒண்மார்வகலம்


பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய்முலையுண்டானே! சப்பாணி .


ஜ்வாலா நரசிம்மர்



ஹிரண்யன் பெற்ற வ்ரத்தின் படி, மனிதனாகவோ, மிருகமாகவோ, பறவையாகவோ, தேவராகவோ இல்லாத பெருமாள், உள்ளேயோ வெளியேயோ இல்லாமல் வாசற்படியில் அம்ர்ந்து ஆகாயத்திலோ, பூமியிலோ இல்லாமல் தன்து மடியில் ஹிரண்யனை போட்டுக் கொண்டு பகலோ இரவோ அல்லாத சந்தியா காலத்தில் ஆயுதமே அல்லாத தனது கூரிய நகங்களால் அவனது மார்பைக் கிழித்து அவன்து குடலை மாலையாகப் போட்டு ஜ்வாலா நரசிம்மராக அவனை வதம் செய்தார் ஓம் நமோ நாராயணா என்னும் நாமத்தின் மகிமையையும் பிரகலாதாழ்வானின் பக்தியின் பெருமையையும் நிலை நாட்டினார் பெருமாள். பெருமாளின் சீற்றம் கண்டு சகல தேவர்களும் நடுங்கி நிற்க பிரகலாதன் மட்டும் தனக்காக அவதாரம் எடுத்த பெருமாளை பக்தியுடன் நோக்கி அவரை சாந்தமதையும்படி வேண்டி பெருமாளை சாந்தப்படுத்தினான். இவ்வாறு பெருமாளின் பக்தியிலே ஆழ்ந்ததால்தான் பிரகலாதன் பிரகலாதாழ்வான் என்று போற்றப்படுகின்றான்.

என்னடா கருடாழ்வானைப்பற்றிக் கூறுகின்றேன் என்று ஆரம்பித்து பிரகலாதாழ்வானைப் பற்றி கூறிக்கொண்டிருக்கிறேனே என்று யோசிக்கிறீர்களா? சற்று பொறுங்கள் இரண்டுக்கும் உள்ள சம்பந்தம் புரியும்.


பிரகலாதாழ்வான் சொன்ன வார்த்தையை மெய்பிக்க பெருமாள் அதே நொடியில் ஹிரண்யனின் அரண்மணை தூணில் அவதாரம் செய்ததால் அவர் கருடன் மேல் எழுந்தருளி வராமல், கருடனை விடுத்து தனியாக வந்தார். அதனால் மிகவும் துக்கம் கொண்ட கருடன், பெருமாளிடம் தனக்கு நரசிம்ம அவதார சேவையை காட்டி அருளுமாறு வேண்டினான். கருடனின் பெருமையை உலகத்தோர்க்கு அறிய செய்ய திருவுளம் கொணட பெருமாள் நீ அஹோபிலம் சென்று தவம் செய் தக்க சமயத்தில் நான் வந்து சேவை சாதிக்கின்றேன் என்று அருளினார்.


பெருமாள் கூடாவிரணியனைக் கூருகிரால மார்பிட அவ்தாரம் செய்த புண்ணிய பூமியாகிய அஹோபிலத்தில் வந்து கருடன் பெருமாளின் தரிசனம் வேண்டி தவம் செய்ய ஆரம்பித்தான். அவ்வளவு கடுமையாக தவம் செய்தான் கருடன், அவனுடைய தவத்தீயால் பூலோகம் ஸ்தம்பித்தது, தேவலோகத்தையும் அது விடவில்லை . தேவேந்திரனுக்கு பயம் பிடித்துக் கொண்டு விட்டது, ஒரு காலத்தில் தேவ லோகம் வந்து தேவர்கள் அனைவரையும் தோற்கடித்து அமிர்தத்தை எடுத்து சென்றவனல்லாவா கருடன்? எனவே எப்படியாவது அவனது தவத்தை கலைத்து தன்து இந்திர பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறியாமையால் அப்ரஸ்களை அனுப்பி கருடனின் தவத்தை கலைக்க முயற்சி செய்தான். அப்ஸரஸ்கள் வந்து ஆடியும் பாடியும் தவத்தை கலைக்க முயன்றனர். ஆனால் கருடன் கோபம் கொள்ளவில்லை, சாந்தமாக உங்கள் தேவேந்திரனிடம் சென்று சொல்லுங்கள், நான் இந்திரப்பதவிக்காக தவ்ம் செய்யவில்லை அது வேண்டியிருந்தால் அமிர்தம் கொண்டு சென்ற அன்றே அப்பதவியை பிடித்துக் கொண்டிருப்பேன் அன்று தாயின் துயர் துடைக்க வந்தேன். இன்று பெருமாளின் திவ்ய மங்கள தரிசனம் காணவே தவம் செய்கின்றேன். அவருக்கு செய்யும் சேவையை விட பெரிய பதவி ஏதும் இல்லை என்று அவர்களை திருப்பி இந்திரனிடமே திருப்பி அனுப்பி விட்டு மீண்டும் பெருமாளை ந்ருஸிம்ஹராய் தரிசிக்க வேண்டி ஒரே மனதுடன்


ஆடியாடி அகம்கரைந்து இசை



பாடிப்பாடிக் கண்ணீர் மல்கி எங்கும்



நாடிநாடி நரசிங்கா!



என்று ஊனும் உள்ளமும் உருக கடும் தவத்தை தொடர்ந்தான் வைனதேயன்.

கருடனின் திட பக்தியைக் கண்டு மகிழ்ந்த பெருமாள் சத்திய சொரூபனாய் மலைக்குகையில் நெருப்பின் உக்ரத்தோது அவன் விரும்பியப்டியே உக்ர நரசிம்மராய் அன்று எவ்வாறு இருந்தாரோ அது போலவே சேவை சாத்தித்தார். பிரகலாதன் கை கூப்பி நிற்க ஹிரணியணை மடியில் போட்டுக் கொண்டு உக்ரமாய் அவனது மார்பைப் பிளக்கும் கோலத்தில் முன் நரசிங்கமதாகி அவுணன் முக்கியத்தை முடிப்பான் என்ற படி பெருமாள் கருடாழ்வாருக்கு சேவை சாதித்தார். மாறாத பக்தி கொண்டு பகவான் சேவையே பிரதானம் என்று அவரிடம் பூரண சரணாகதி அடைந்ததால் கருடன், கருடாழ்வார் என்று போற்றப்படுகின்றார்.




தனக்கு சேவை சாதித்த பெருமாளிடம் ஒரு வரம் கேட்கின்றான் கருடன், நான் இந்த பவிதரமான ஷேத்திரத்தில் மலையாக தங்களை சேவித்த வண்ணம் நிற்க வேண்டும், தாங்கள் இம்மலையில் ஒரு குகையில் அன்பர்களுக்கு இதே கோலத்தில் சேவை சாதிக்க வேண்டும் என்று வேண்ட பெருமாளும் அவ்வாறே அருளினார். இன்றும் கருடாத்ரியில் ஒரு குகையில் பெருமாள் அஹோபில நவ நரசிம்மர்களுள் முக்கியமானவராக அஹோபில நரசிம்மராக், உக்ர நரசிம்மராக இன்றும் சேவை சாதிக்கின்றார். குகையில் பெருமாளுக்கு எதிரே கருடன் தவ நிலையில் சேவை சாதிக்கின்றார். இவ்வாறு பெருமாள் அவதாரம் செய்த தலத்தில் நாம் எல்லோரும் உய்ய பெருமாள் கோவில் கொள்ள காரணமாக இருந்தார் கருடன்.
இந்த சிங்கவேள் குன்றத்தின் சிறப்பை திருமங்கையாழ்வார் இவ்வாறு பாடுகின்றார்.


அங்கண்ஞாலம்அஞ்ச அங்குஓராளரியாய் அவுணன்


பொங்காஆகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம்


பைங்கணானைக்கொம்புகொண்டு பத்திமையால் அடிக்கீழ்ச்


செங்கணாளிஇட்டிறைஞ்சும் சிங்கவேள் குன்றமே.

அலகு இரு இறக்கைகள் என மூன்று சிகரங்களாக காட்சி அளிக்கும் கருடாத்ரி


பெருமாள் அவ்தாரம் செய்த உக்ர ஸ்தம்பத்திலிருந்து கருடாத்ரியைப் பார்த்தால் அப்படியே கருடன் தன் இரு சிறகுகளையும் விரித்து மத்தியில் உயர்ந்த அல்குடனும் மூன்று பகுதிகளாகவும் அஞ்சலி ஹஸ்தத்துடன் ( கை கூப்பிய நிலையில்) நிற்பதை இன்றும் காணலாம். அஹோபிலத்தில் இன்று கருடாத்ரிக்கும் வேதாத்ரிக்கும் இடையே பிறவிப் பிணியை நீக்கும் பவ நாசினி ஆறு ஓடுகின்றது. கருடாத்ரியில் தான் நவநரசிம்மரில் இன்னொரு நரசிம்மரான பாவன நரசிம்மரும் தாயார் செஞ்சு லக்ஷ்மித்தாயாருடன் லக்ஷ்மி நரசிம்மராக சேவை சாதிக்கின்றார். இவ்வளவு பெருமைகள் பெற்ற அஹோபிலம் செல்ல வாய்ப்பு கிடைத்தால் சென்று தரிசனம் செய்து விட்டு வாருங்கள்.


கருடாழ்வரின் கூப்பிய கரங்கள்


இனி அஹோபில ஷேத்திரத்தின் சிறப்புகள் சில



அஹோபிலே கருடசைல மத்யே

க்ருபா வசாத் கல்பித ஸந்நிதாநம்

லக்ஷ்ம்யா ஸமாலிங்கித வாம பாகம்

லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே

என்றபடி அஹோபில ஷேத்திரத்தில் கருட மலையின் கர்பத்தில் கருணையின் காரணமாக கோவில் கொண்டு இடது பக்கத்தில் பெரிய பிராட்டியாரை அனைத்த வண்ணம் சேவை சாதிக்கும் லக்ஷ்மி ந்ருஸிம்ஹரை சரணம் அடைகின்றேன்.



அஹோபிலம் நவநரசிம்மர்கள்


இவ்வாறு எப்போதும் அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல மங்கை மஹாலக்ஷ்மியுடன் சேர்ந்தே இருக்கும் மாலோலனாகவும் மற்றும் எட்டு கோலங்களிலும் பெருமாள் எழுந்தருளி அருள் பாலிக்கும் தலம் தான் அஹோபிலம். திருமங்கையாழ்வார் தம் பாசுரத்தில் ஒரு பாடலில் "தெய்வங்களால் மட்டுமே சென்று தரிசிக்க முடியும்" என்று சிங்கவேள் குன்றம் என்று பாடிய தலம். காசியில் ஆயிரம் யுகங்கள், ப்ரயாகையில் இருபது யுகங்கள், கயையில் நூறு யுகங்கள் வாழும் பயனை அஹோபில ஷேத்திரத்தில் ஒரு நாள் வாசம் செய்தால் கிட்டும் எனது அஹோபிலத்தின் சிறப்பு. இராமாவாதாரத்தில் இராமருக்கு இளையவராக பிறந்து அவர் சேவை ஒன்றையே எப்போதும் சிந்தித்து இராமரை இணை பிரியாது எப்போதும் தொண்டு செய்து பின் கிருஷ்ணாவதாரத்திலே அவருக்கு மூத்தவராக பலராமராக அவதாரம் செய்து, இக்கலிகாலத்தில் இராமானுஜராக அவதாரம் செய்த பெருமாளின் பாம்பணையாம் அயிரம் பணங்களார்ந்த ஆதி சேஷன் இளையாழ்வான் என்று கொண்டாடபப்டுகிறான். மேற்கு தொடர்ச்சி மலையே ஆதி சேஷன் என்பது ஐதீகம். அந்த ஆதிசேஷனின் தலை - திருவேங்கடம், முதுகு- ஸ்ரீ சைலம் வால்- அஹோபிலம் ஆகும்.

மேலும் அஹோபில திவய தேசத்தின் தரிசன்ம் பெற இங்கே செல்க

அஹோபிலம் யாத்திரை

இனி கஜேந்திராழ்வானைப் பற்றி ஒரு சிறு குறிப்பு ஆயிரம் வருடங்கள் தன் பலத்தின் மீதும் மற்ற தன் கூட்டத்தின் மீதும் நம்பிக்கை வைத்து போராடிக்கொண்டிருந்த போது அவனுக்கு பெருமாள் உதவ முன்வரவில்லை. ஆனால் அதையெல்லாம் விடுத்து எப்போது அவன் அந்த ஆதிமூலத்திடம் பூரண சரணாகதி அடைந்த போது அடுத்த நொடியே கருடன் மேல் ஆரோகணித்து வந்து கஜேந்திரனுக்கு அருளினார் பெருமாள். எனவேதான் பராசர பட்டர் தமது போற்றியில் தங்களது கருணையை விட தங்களது அந்த வேகத்திற்காக தலை வணங்குகின்றேன் என்று பாடுகின்றார்.

இவையனைத்திலும் நாம் கற்கும் பாடம் கண்னன் கீதையிலே கூறிய படி

ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ


அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ் யாமி மாசுச


அதாவது மோடசத்திற்கு உதவும் மற்ற எல்லா தர்மங்களையும் விடுத்து என்னை மட்டுமே உபாயமாக பற்றினால் உன்னை சகல பாவங்களிலும் விடுத்து உன்னை கடைத்தேற்றுவேன் என்று அருளிய படி பூரண சரணாகதி ஒன்றே நாம் உய்யும் வழி.

ஓம் நமோ நாராயணாய.

2 Comments:

Blogger ramesh sadasivam said...

நன்றாக இருக்கிறது. உங்கள் அத்தனை தளங்களையும் பாராட்டுகிறேன். திருப்பாவை பற்றி தனியாக ஒரு தளம் ஆரம்பிக்கலாமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நீங்கள் அதை சிறப்பாய் செய்திருப்பதால் மகிழ்ச்சியாக அந்த எண்ணத்தை கைவிடுகிறேன். இறைவனுக்கு நீங்கள் செய்யும் இந்த தொண்டு மென்மேலும் சிறப்படைய இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்.

July 21, 2008 at 9:54 AM  
Blogger S.Muruganandam said...

வாருங்கள் ரமேஷ் சதாசிவம் அவர்களே.

நன்றி.

வரும் நாட்களிலும் வந்து தரிசனம் செய்ய வேண்டூகிறேன்.

July 23, 2008 at 1:17 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home