Sunday, July 13, 2008

கருட கம்பம்

Visit BlogAdda.com to discover Indian blogs

முந்நீர் ஞாலம் படைத்த முகில் வண்ணன், பூமன்னு மாது பொருந்திய மார்பன், மாமலர் மன்னிய மங்கை மகிழ்ந்துறை மார்பன், விஷ்ணு பகவானின் வாகனமான கருடனுக்கு மட்டும் ஒரு தனி சிறப்பு உண்டு அது என்னவென்றால வைஷ்ணவ ஆலயங்களில் கொடி மரம் கருட கம்பம் என்று அழைக்கப்படுகின்றது. பெருமாள் ஆலயங்களில் துவஜஸ்தம்பங்களில் பெரிய திருவடி நித்ய வாஸம் செய்வதால் அவை கருடஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகின்றன என்பது ஐதீகம் . பெருமாள் கருடனை வாகனமாக ஏற்ற போது வெற்றிக்கு அறிகுறியாக நீ எனது கொடியிலும் விளங்குவாய் என்று வரக் கொடுத்தார் எனவே எம்பெருமானின் கொடியிலும் கருடனே விளங்குகின்றான்.
மேலும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதை அறிவிக்கும் ஆற்றலும் கருடனுக்கே உள்ளது. கருட தரிசனம் மங்களகரமானது என்று கருடனின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.


சபரி மலையில் மகர ஜோதிக்காக ஐயப்பனுக்கு அணிவிக்க பந்தள இராஜா அர்பணித்த திருவாபரணங்கள் கொண்டு வரப்படும் போது கருடன் வட்டமிட்டு வருவதை எல்லோரும் அறிவோம். அது போலவே பெரிய திருக்கோவில்களின் கும்பாபிஷேகம் நடக்கும் போது கருடன் வந்து வட்டமிடும் என்பது உண்மை. ஒரு முறை திருமயிலை கபாலீச்சுரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றவுடன் மூன்று கருடன் வந்து இராஜ கோபுரத்தின் உயரே கருடன் வந்து வட்டமிட்டதை அடியேன் அனுபவித்துள்ளேன். இவ்வாறு மங்கள்த்திற்கு அறிகுறியாக விளங்குபவர் கருடன்.


மய்யோ! மரகதமோ, மறிகடலோ, மழை முகிலோ ஐயோ! இவன் வடிவழகென்பதோர் அழகுடைய எம்பெருமானின் எதிரே சேவை சாதிப்பவர் தான் கருடன். எவ்வாறு நிலைக் கண்ணாடி தன் எதிரே உள்ள பிம்பத்தை பிரதிபலிக்கின்றதோ அது போல எம்பெருமானின் திவ்ய சொரூபத்தை, திவ்ய கல்யாண குணங்களை காட்டியருள்பவர் கருடன்.


ஆகமம் என்றால் வருகை என்று பொருள். உபதேச வழியாக வருபவை அவை. ஆன்மாக்கள் மோட்சம் அடைய மல நாசம் செய்பவை ஆகமங்கள். திருக்கோவில் கட்டுவதற்கு நிலம் தேர்ந்தெடுப்பது முதல் பூஜை முறைகள் முடிய அனைத்தும் ஆகமங்களில் கூறப்பட்டுள்ளன. ஆகமங்களின் படி ஐந்து நாட்களுக்கு மேற்பட்ட திருவிழாக்களின் போது கொடியேற்றம் அவசியம். எனவே வைணவத்தலங்களில் பிரம்மோற்சவத்தின் போது என்பெருமானுடைய கொடியாகிய கருடக்கொடி ஏற்றப்படுகின்றது. அது ஏற்றப்படும் கொடிக்கம்பம் கருட கம்பம் என்றும் அழைக்கப்படுகின்றது. திருமலையில் அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உரை மார்பன் மலையப்ப சுவாமியின் பிரம்மோற்சவத்தின் முதல் நாள் கருடக்கொடி கருட கம்பத்தில் ஏற்றும் அழகைக் காணுங்கள்.




சில தலங்களில் இராஜ கோபுரத்திற்க்கு வெளியே எந்தப் பறவையும் பறக்க முடியாத உயரத்தில் பறக்கும் கருடனுக்கு ஒரு ஸ்தம்பத்தின் மேல் உயர்ந்த சன்னதி அமைக்கின்றனர். இவையும் கருட கமபம் என்றே அழைக்கப்படுகின்றன. இவ்வாறு அமைக்கப்பட்ட இரண்டு உயர்ந்த கருட கம்பங்களை தரிசனம் செய்யலாம்.



பூவராகர் - ஸ்ரீமுஷ்ணம்


மிக உயர்ந்த கருட கம்பத்தை நாம் ஸ்ரீ முஷ்ணத்தில் தரிசிக்கலாம். நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன், பந்திருக்கும் மென் விரலாள் பனி மலராள் வந்திருக்கும் மார்பன், எம்பெருமான் பூவராகராக எழுந்த்ருளி அருள் பாலிக்கும் அபிமான ஷேத்திரம்தான் ஸ்ரீமுஷ்ணம். இரண்யாக்ஷனை வதைத்து பூமி பிராட்டியாரை மீட்ட பெருமாள் இங்கே முஸ்லீம்களும் வணங்கும் பெருமாளாய் சேவை சாதிக்கின்றார் இத்தலத்தில். பெருமாளையும் ஏழு நிலை இராஜ கோபுரத்தின் உயரத்திற்கு இனையாக ஓங்கி உயர்ந்திருக்கும் கருட கம்பம்.




அதன் உச்சியில் உள்ள கருட மண்டபத்தில் கருடன் சேவை சாதிக்கின்றார். அந்த கருட கம்பத்தின் அழகைத்தான் கண்டு களியுங்களேன்.




சிறிய திருவடியான ஆஞ்சனேயர் ஸ்ரீஇராமாவதாரத்தின் போது இராமரின் தூத்ராக இலங்கைக்கு ஸ்ரீ சீதா பிராட்டியாரிடம் சென்றது போல, பெரிய திருவடியான ஸ்ரீ கருடன் கிருஷ்ணாவதாரத்தில் தாயாரான ஸ்ரீ ருக்மணி பிராட்டியார் எழுதிக் கொடுத்த ஓலையை எடுத்துக் கொண்டு எம்பெருமானான ஸ்ரீ கிருஷ்ணனிடம் தூது சென்றவன் கருடன்.




பெருமாள் ருக்மிணி பெருமாட்டியாருடன் ஸ்ரீ வித்யா இராஜ கோபாலராய் கையில் செண்டாயுதம் ஏந்தி ஒய்யாரமாய் எழில் கொஞ்சும் குழந்தையாக எழுந்தருளி சேவை சாதிக்கும் இராஜ மன்னார்குடி அபிமான ஷேத்திரத்தில் உள்ள கருட கம்பம் இரண்டாவது உயரமான கருட கம்பம் ஆகும்.


மன்னார்குடி கருட கம்பத்தையும் கண்டு களியுங்கள்.


பாடும் குயில்காள்! ஈதென்ன பாடல்? நல்வேங்கட


நாடர்நமக்கொருவாழ்வு தந்தால் வந்துபாடுமின்


ஆடும்சுருளக்கொடியுடையார் வந்தருள் செய்து


கூடுவாராயிடில் கூவி நும்பாட்டுக்கள் கேட்டுமே.


அடுத்த பதிவில் கருடன் கருடாழ்வான் ஆன சரிதத்தைக் காண்போம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home