Sunday, May 25, 2008

எங்கே வரதர்? எங்கே வரதர்?

Visit BlogAdda.com to discover Indian blogs
காஞ்சிபுரம் கருடசேவை (தொட்டாச்சாரியார் சேவை)



வரதராஜப்பெருமாளாய், தேவாதிதேவனாய், பேரருளாரராய் பெருமாள் எழுந்தருளி அருள் பாலிக்கும் கச்சியம்பதி என்னும் காஞ்சியின் கருட சேவை மிகவும் பிரசித்தி பெற்றது.


ஏனென்றால் தன் அன்பன் ஒருவனுக்காக கச்சி வரதர் நடத்திய ஒரு அற்புதம்.
அது என்ன என்பதை பார்ப்போமா?

தடம் சுழ்ந்து அழகாய் கச்சி
ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி
மணி மாடங்கள் சூழ்ந்து அழ்காய கச்சி
கல்லுயர்ந்த நெடுமதிள் சூழ் கச்சி


என்று ஆழ்வார்கள் பாடிப்பரவிய சத்யவ்ரத ஷேத்திரத்தில், அன்று காலை வைகாசி திருவோண பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள், அன்றைய தினம் பராங்குசர், சடகோபன், காரி மாற பிரான், வகுளாபரணர், வேதம் தமிழ் செய்த மாறன் என்றெல்லாம் போற்றப்படும் நம்மாழ்வாரின் அவதாரத்திருநாளும் இனைந்து வந்ததினால் கூட்டம் தாங்க முடியவில்லை. லட்சத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் அங்கு கூடியிருந்தனர்.




கருட சேவைக்கு முதல் நாளே மக்கள் கூட்டம் காஞ்சியில் குவியத் தொடங்கியது. அத்தி வரதா உன் தங்க கருட சேவை காணும் பாக்கியம் பெறப்போகிறோம் உனது கருணையே கருணை என்று ஆனந்த பரவசத்துடன் பக்தர் குழாம் கோவிந்த நாமம், விட்ட்லா, விட்டலா, பாண்டுரங்கா, பண்டரிநாதா, கண்ணா கார் மேக வண்ணா என்று பல வகையிலும் பஜனைப் பாடல்கள் பாடிக்கொண்டு காத்திருந்தனர். இரவும் மெள்ள மெள்ள வளர்ந்து அருணோதய காலம் வந்ததும் கோபுர வாசலின் முன் பக்தர்கள் கூடத் தொடங்கினர். அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர் எப்போது கோபுர வாசல் கதவு திறக்கும் கச்சி வரதரின் மோட்சமளிக்கும் கருட சேவையைக் காணலாம் என்று சூரியனை எதிர்பார்த்து மலர காத்திருக்கும் தாமரை மலர் போல லட்சக்கணக்காண மக்கள் காத்துக்கொண்டிருந்தனர்

கச்சிபதியெங்கும் ஒரே ஆரவாரம் மற்றும் மகிழ்ச்சி ஆனால் சோழ சிம்மபுரம் என்னும் திருக்கடிகையில், பெருமாள் யோக நரசிம்மராய் மலை மேலும், ஆக்வான முத்திரையுடன் பக்தோசிதராய் மலை அடிவாரத்திலும் எழுந்தருளி அருள் பாலிக்கும் சோளிங்கரில் மட்டும் ஒரு பக்தர் துடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு வயதாகி விட்டதால் காஞ்சி செல்ல முடியவில்லை தள்ளாமை அவரை சாய்த்து விட்டது, நினைவு தெரிந்த நாளிலிருந்து காஞ்சி வரதரின் கருட சேவையை தவறவிட்டதில்லை அவர், சோழ சிம்ம புரத்திலிருந்து வருடம் தவ்றாமல் நடந்து சென்று கருட சேவையை தரிசித்து வந்தவ்ர். . ஆனால் இவ்வருடம் அவரால் நடந்து செல்ல முடியவில்லை, மதில் சூழ் அழகார் கச்சி செல்ல முடியவில்லை ஆனால் அவ்ர் மனம் முழுவதும் அந்த வரதர்தான் நிறைந்திருந்தார். அவருடைய கருட சேவை கிடைக்கவில்லையே என்று ஏங்கிக் கொண்டிந்தார் "தொட்டாச்சாரியார் "என்னும் அந்த பரம பக்தர். .

ஆற்றாமையால் அந்த அன்பர் கதறிக்கொண்டிருந்தார்.,

பிரம்மா அன்று நடத்திய வேள்வியில் தோன்றிய பிரபுவே இன்று ஏன் இந்த நாயேனை இவ்வாறு செய்து விட்டீர்?

கோபம் கொண்டு நதியாக ஓடி வந்த சரஸ்வதியின் குறுக்கே சேதுவாக படுத்த அவளது கோபத்தை அடக்கிய திருவெஃகா சொன்ன வண்ணம் செய்த பெருமாளே ஏன் இந்த சோதனை உன் அன்பனுக்கு?

திருமங்கை மன்னன் மன்னனுக்கு கட்ட பணம் இல்லாமல் தவித்த போது பொருள் காட்டி அவர் துயர் தீர்த்த பேரருளாளரே! இன்று மட்டும் ஏன் ஐயா தங்கள் மனம் உருகவில்லை?


இராமனுஜரை காக்க காட்டுக்குள்ளே பெருந்தேவித்தாயாருடன் வேடுவ உருவில் சென்று காத்து இரட்சித்த கருணைக் கடலே என் தேவாதி தேவா! என் கூக்குரல் உன் காதில் விழவில்லையா ஐயனே உன் சித்தம் இரங்காதா?

திருகச்சி நம்பிகளுடன் பேசி இராமானுஜர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் தந்த அத்திகிரி வரதா! எனக்கு மட்டும் பதில் தர மனம் வரவில்லையா?

கேட்டவ்ர்க்கு கேட்ட வரம் அருளும் திருவரதா! களிற்றுக்குகு அன்று அருள் புரிய கடுகி கருடனில் வந்த பிரபோ! என்னை உன் தரிசனம் காண அந்த கருடனை அனுப்பி தூக்கிச்செல்ல சொல்லக் கூடாதா?

என்றெலலாம், அழுது துவள்ந்து கிடந்தார் சோளிங்கரில் தொட்டாச்சாரியார்.

காலை நான்கு மணி வெளியே நின்று கொண்டிருந்த பக்தர்களுக்கு பகவான் கருட வாகனத்தில் புறப்பட்டதற்கு அறிகுறியாக மேள சத்தமும், திவ்ய பிரபந்த ஒலியும், வேத ஒலியும் காதில் இன்ப நாதமாக வந்து விழுந்தது, தூங்கிக் கிடந்தவர்களை எல்லாம் எழுப்பினார்கள். எங்கும் வரதா, கோவிந்தா, கண்ணா, பெருமாளே என்ற சத்தம் அலை கடல் சத்தம் போல ஒலித்தது. ஆழ்வார் சுற்றில் வலம் வந்து ஆழ்வார்களுக்கு மரியாதை செய்த வரதர் கோபுர வாசலுக்கு வந்தார்.

மெதுவாக கோபுர வாசல் கதவுகள் திறந்தன எங்கும் அல்லோலகல்லம் சென்னியில் அஞ்சலி கூப்பி கச்சி வரதா! அத்தி வரதா! சத்ய வரதா! என்று மெய் புளகாங்கிதம் அடைந்து கண்ணில் நீர் சோர பக்தர் குழாம் நின்றிருந்த போது தான் அந்த அதிசயம் நடந்தது.

திடீரென்று வரதர் மாயமாய் மறைந்து விட்டார்.

அப்போது தான் முதலில் நாம் கேடட எங்கே வரதர்? எங்கே வரதர் என்ற கூக்குரல்கள் கிளம்பின. அன்பர்கள் அனைவரும் திகைத்து நின்றனர். யார் என்ன அபசாரம் செய்தோமோ? இவ்வாறு நடந்தது என்று அவர்கள் மயங்கி நின்ற வேளையில்...



அங்கே சோளிங்கரில் இது வரை நடக்க முடியாமல் படுக்கையில் கிடந்த தொட்டாச்சாரியார் எழுந்து ஓட ஆரம்பித்தார் தக்கான் குளத்தை நோக்கி, அங்கே அவருக்காக வரதராஜப் பெருமாள் காத்திருந்தார் கருட வாகனத்தில், என் அன்பனே, நீ வர முடியாவிட்டால் என்ன, நானே வந்து விட்டேன் உனக்காக என்று பறவை ஏறும் பரம்புருடன் சேவை சாதித்தான். தொட்டாச்சாரியார் தண்டனிட்டு பெருமாளை வணங்கி, கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய பெருமாளே, எமக்காக நீர் இவ்விடம் வந்தீரே உமது கருணையே கருணை நீர் உண்மையில் ப்கத வத்சலன் தான், பக்தோஷிதன் தான், பேரருளாளர் தான் என்றும் பலவாறு துதி செய்து போற்றினார். அடுத்த கணம் ....





காஞ்சியில் முன் போல் வரதர் ஒய்யாரமாக நின்றார். தனது அன்பரின் தூய பக்திக்காக தாம் சோளிங்கர் சென்று சேவை சாதித்ததை உணர்த்தினார் பெருமாள். பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்தில் தெண்டனிட்டி வீழ்ந்து வணங்கினார் தேவராஜரின் கருணையை எண்ணி. எனவே இன்றும் கருட சேவையன்று கோபுர வாசல் சேவை முடிந்தவுடன் பெருமாளை வஸ்திரம் கொண்டு மறைக்கின்றனர். இச்சேவை "தொட்டாச்சாரியார் சேவை" என்று அழைக்கப்படுகின்றது.


வரதராஜப்பெருமாளின் இந்த எளி வந்த கருணையை உணர்த்தும் வகையில் சோளிங்கரில் தக்கான் குளக்கரையில் கருடன் மேல் அமர்ந்த கோலத்தில் வரத ராஜப் பெருமாளாக சேவை சாதிக்கும் ஒரு ஆலயம் கட்டப்பட்டுள்ளது.




கோபுர வாசல் தரிசனம் முடித்து ஓடி புள்ளேறி சேவை சாதிக்கும் பேரருளாளர் 6 கி.மீ தொலைவில் பெரிய கஞ்சிபுரத்தில் பாண்டவ தூதர் திருக்கோவிலுக்கு அருகில் உள்ள கங்கை கொண்ட சோழன் மண்டபம் சென்று மண்டகப்படி கண்டருளி மெள்ள நடையிட்டு திருக்கோவிலுக்கு திரும்பி வருகின்றார். கோவிலுக்குள் பெருமாள் நுழையும் அந்த நடையழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. முடிந்தால் காஞ்சி சென்று தேவாதி தேவரின் கருட சேவையை கண்டு களியுங்கள்.
ஆவியே! ஆரமுதே! என்னையாளுடை
தூவியம்புள்ளுடையாய்! சுடர்நேமியாய்!
பாவியேன்நெஞ்சம் புலம்பப்பலகாலும்
கூவியும்காணப்பெற்றேன் உனகோலமே.


காஞ்சிபுரம் செல்ல முடியாத நிலையில் எனது நண்பர் திரு. தனுஷ்கோடி அவர்களை, காஞ்சி சென்று கருட சேவை தரிசித்து புகைப்படங்கள் வழங்குங்கள் என்று வேண்டினேன். அவரும் அவ்வாறே செய்தார். அவருக்கு ஆயிரம் நன்றிகள் .

Labels: , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home