Tuesday, March 24, 2009

ஒப்பிலியப்பன் திருவடிகளே சரணம்

Visit BlogAdda.com to discover Indian blogs
தன் ஒப்பாரில்லப்பன்
பூமிதேவி நாச்சியார் - ஒப்பிலியப்பன் - மார்க்கண்டேயர்

என்னப்பனெனக்காயிருளாய் னென்னைப்பெற்றவளாய்

பொன்னப்பன்மணியப்பன்முத்தப்பன் என்னப்பனுமாய்

மின்னப்பொன் மதிள்சூழ் திருவிண்ணகர்சேர்ந்தவப்பன்

தன்னொப்பாரில்லப்பன்தந்தனன் தனதாள்நிழலே.


அன்று வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் திருவிண்ணகரப்பனை பொன் மதில் சூழ் என்னப்பன், பொன்னப்பன்(ஹேம), மணியப்பன்(மணி), முத்தப்பன்(முத்த), தன்னொப்பாரில்லாவப்பன் (வ்யோம புரீசன்) என்று சேவித்து பாசுரம் பாடினார். இன்று அப்பொன்னப்பன் மின்னும் பொன் விமானத்தின் கீழ் சேவை சாதிக்கின்றார், ஆமாம் மார்ச் 4ம் நாள் நடைபெற்ற சம்ப்ரோக்ஷணத்தின் போது தங்க விஷ்ணு விமானத்திற்க்கு சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது அந்த அற்புத காட்சியை கண்டு களித்த அன்பர் திரு. மனோகரன் காரைக்காலிலிருந்து அடியேனுக்கு அக்காட்சிகளை அனுப்பி இருந்தார், "யான் பெற்ற இன்பம்பெருக இவ்வையகம்" என்றெண்ணி அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் சேவித்து அருள் பெறுங்கள்.

புதுப்பொலிவுடன் இராஜ கோபுரம் வெளிப்புற தோற்றம்


திருவிண்ணகர் என்று ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த திவ்ய தேசத்தில் பெருமாள் ஒப்பற்றவனாய் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்துடன் ஸ்ரீநிவாசனாய், பூமி தேவி நாச்சியார் வலப்பக்கம் மண்டியிட்டு வடக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் வணங்கும் திருக்கல்யாணக் கோலத்துடனும், இடப்பக்கம் மார்க்கண்டேய முனிவர் மண்டியிட்டு கன்னிகாதானம் செய்து தரும் கோலத்திலும் திவ்யமாக சேவை சாதிக்கின்றார். திருமலை திருவேங்கடத்தானுக்கு தமையனாராக இவர் கருதப்படுகின்றார். எனவே திருப்பதிக்கு வேண்டிக்கொண்ட வேண்டுதல்களை இங்கே நிறைவேற்றலாம். எனவே பூலோக வைகுந்தமான திருவிண்ணகரை தென் திருப்பதி என்றும் அழைப்பர். மேலும் ஆகாச நகரம் என்றும் அறியப்படுகின்றது இத்திவ்ய தேசம் (விஷ்ணு க்ருஹமே அதாவது திருமாலின் இல்லமே விண்ணகர் ஆனது. )



தங்கக் கொடிமரம்

மூலவர், பூமி தேவி நாச்சியார், மார்க்கண்டேயர் ஆகியவர்களுக்கு சொர்ண கவசம், தங்கவிமானம், தங்கக் கொடிமரம், தங்க பலிபீடம் என்று வெகு சிறப்பாக சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது மேலே தங்க கொடி மரத்தின் அற்புத காட்சி.


பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்

கொண்டங்குறைவார்க்குகோயில்போல் - வண்டு

வளங்கிளரும் நீள்சோலை வண்பூங்கடிகை

இளங்குமரன்தன் விண்ணகர்

வைகுண்டத்தின் திருமால் அடியாருக்கு அருள் புரியும் பொருட்டு திருவேங்கடம், திருவரங்கம், திருப்பாற்கடல், அழகிய மலர்களில் வண்டுகள் தேனைக் கிளரும் திருக்கடிகை, திருவிண்ணகர் ஆகிய திவ்ய தேசங்களில் இளமை குன்றாது சேவை சாதிக்கின்றான் என்று பாடுகின்றார் பேயாழ்வார்.

பேயாழ்வார் 2 பாசுரங்கள், நம்மாழ்வார் 11 பாசுரங்கள், மற்றும் திருமங்கையாழ்வார் 34 பாசுரங்கள் பாடியுள்ளனர் விண்ணகர் ஒப்பிலியப்பன் மேல்.

இராஜகோபுரத்தின் உள் அழகு


திருவிண்ணகர், திருவேங்கடம், திருவல்லிகேணி ஆகிய தலங்களில் பெருமாள் தான முத்திரையில் சேவை சாதிக்கின்றார். அதாவது வலது திருக்கரத்தால் தனது திருவடித்தாமரைகளை காட்டுகின்றார். சரம ஸ்லோகத்தில் கூறியபடி என்னை சரணடை நான் உன்னை காப்பாற்றுவேன் என்று காட்டுகின்றார் பெருமாள். திருவிண்ணகரில் " மாம் ஏகம் சரணம் வ்ரஜ" என்னும் அந்த வாக்கியம் வைரங்களினால் மின்னுகின்றது ஒப்பிலியப்பனின் வலது திருக்கரத்தில்.

(இன்னும் சிறிது அருகில் சென்றால்)
இராஜ கோபுரத்தின் உள்ளழகு

ரத்ன அங்கியில் பூமிதேவி சமேத தன்னொப்பாரில்லப்பன்

ஸ்ரீவில்லிபுத்தூரிலே ஆண்டாள், திருநறையூரிலே வஞ்சுளவல்லித்தாயார் போல திருவிண்ணகரிலும் பூமி தேவி நாச்சியாருக்கே முக்கியத்துவம் அதிகம். தாயாருக்கு தனி சன்னதி இல்லை பெருமாளுடன் தான் சேவை சாதிக்கின்றாள். அது போலவே உற்சவ காலங்களில் இருவரும் சேர்ந்தே சேவை சாதிக்கின்றார். தாயார் இல்லாமல் பெருமாள் தனியாக எழுந்தருளுவது இல்லை. மற்ற திவ்ய தேசங்களை போல் அல்லாமல் உபய நாச்சியார் இல்லாமல் உற்சவர் ஸ்ரீநிவாசர் தாயார் பூமி தேவி நாச்சியாருடன் மட்டும் சேவை சாதிப்பது இத்திவ்ய தேசத்தின் ஒரு தனி சிறப்பு.

யானை வாகனத்தில் ஸ்ரீநிவாசர் பூமி தேவி நாச்சியார்


வெள்ளியன்று பல்லக்கில் திருவிண்ணகர் திவ்ய தம்பதியர்

துளசி், திருமகளைப் போல் தனக்கும் பெருமாளின் மார்பில் எப்போதும் இருக்கும் பாக்கியம் வேண்டும் என்று பெருமாளை வேண்டி நின்றாள், பெருமாள் லக்ஷ்மி தேவி பல ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தே என் மார்பில் நித்ய வாசம் செய்யும் பேறு பெற்றாள், நீயும் அது போல திருவிண்ணகரில் சென்று தவம் செய் மஹாலக்ஷ்மி உனது அடியில் திருஅவதாரம் செய்வாள் அவளை நான் திருமணம் செய்து கொள்ளும் போது உனக்கு நான் வரம் தருவேன் என்று அருளினார் பெருமாள் . எனவே திருவிண்ணகரில் வனமாக வந்து தவம் செய்ய ஆரம்பித்தாள் துளசி்.

மிருகண்டு முனிவரின் புதல்வரான மார்க்கண்டேயருக்கு திருமகள் தனது மகளாகவும், திருமால் தனது மருமகனாகவும் வேண்டும் என்ற அவா பிறந்தது அதற்காக அவர் இந்த துளசி வனத்தில் ( பிருந்தாரண்யத்தில்) தவம் செய்தார். ஒரு நாள் துளசி செடியின் அடியில் மஹாலக்ஷ்மித் தாயார் சிறு குழந்தையாக திருஅவதாரம் செய்தாள். வாராமல் வந்த திருவை உச்சி முகர்ந்து எடுத்து கொஞ்சி, பூமி தேவி என்னும் திருநாமமிட்டு வளர்த்து வந்தார் மார்க்கண்டேயர். தக்க சமயத்தில் திருமால் ஒரு கிழவர் வேடத்தில் வந்து மார்க்கண்டேயரிடம் தமது திருப்புதல்வியை தமக்கு திருமணம் செய்து தர வேண்டும் என்று வேண்டி நின்றார். வயதில் முதியவரான அவருக்கு தனது திருமகளை மணம் முடித்துக் கொடுக்க விரும்பாத மார்க்கண்டர், அவள் இன்னும் சின்னப் பெண் உப்பு போட்டுக் கூட தளிகை பண்ணத்தெரியாதே என்று பதிலளித்தார். அதற்கு கிழ வேடத்தில் வந்த பெருமாள் தங்கள் மகள் உப்பில்லாமல் செய்தாலும் அது எனக்கு சம்மதமே என்று பதிலளித்தார். ஒன்றும் புரியாமல் மார்க்கண்டர் சிறிது நேரம் ஸ்ரீமந் நாராயணனை தியானி்த்து கண் திறந்து பார்த்த போது பெருமாள் சங்கு சக்ர தாரியாய் பட்டு பீதாம்பரங்களுடன் திவ்ய தரிசனம் தந்தருளினார். பின் உப்பில்லாமல் உணவை ஏற்றுக்கொள்வேன் என்று சொன்ன உப்பிலியப்பனுக்கும் பூமி தேவி நாச்சியாருக்கும் திருமணம் நடைபெற்றது. அதற்கு முன் துளசியை தனது மார்பில் ஏற்றுக் கொண்டார் திருமால். இன்றும் பெருமாளுக்கு படைக்கப்படும் நைவேத்தியத்தில் உப்பு சேர்ப்பதில்லை. கருடனைத் தாண்டி உப்பிட்ட பண்டங்களை எடுத்து செல்வதும் தவறானது.

துளசியும் பெருமாளின் மார்பில் எப்போதும் விளங்கும் வரம் பெற்றாள். இத்தலத்தில் பெருமாளை துளசி கொண்டு அர்ச்சனை செய்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் பெறுவர்.

மேலும் பெரிய திருவடி, காவேரி, தர்ம தேவதை, நம்மாழ்வார் ஆகியோருக்கு இத்தலத்தில் பெருமாள் பிரத்யக்ஷம்.



இன்னும் அருகில் இராஜ கோபுரம்

ஐப்பசி சிரவணத்தன்று தொடங்கி திருக்கல்யாண உற்சவமும், பங்குனி சிரவணத்தை ஒட்டி பிரம்மோற்சவமும், இராம நவமியை ஒட்டி ராம நவமி உற்சவமும் சிறப்பாக இத்திவ்ய தேசத்தில் சிறப்பாக நடைபெறுகின்றது. மேலும் திருவோணத்தன்று சிரவண தீபம் ஏற்றப்படுகின்றது. தீபம் ஏந்தி வருபவர் மூலம் பெருமாள் பக்தர்களின் குறைகளை தீர்க்கின்றார். திருவோணத்தன்று மூலவர் நில மாலையிலும், உற்சவர் ரத்ன அங்கியிலும், பூமி தேவி நாச்சியார் ரத்ன கொண்டை, மரகத கிளி, ரத்ன சடை அலங்காரத்தில் சேவை சாதிப்பதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு அருள் பெறுகின்றனர். கட்டளை பிரம்மோற்சவம் இத்திவ்ய தேசத்தின் ஒரு சிறப்பு.




திருவிண்ணகரின் விமானம் சுத்த, ஆனந்த, சுத்த தத்வ, விஷ்ணு விமானம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த விமானம் தங்கக் கவசம் பூண்டது. விமானத்தின் காட்சி தூரத்தில் இருந்து.


அண்ணல்செய்து அலைகடல் கடைந்து அதனுள்

கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே!
விண்ணவரமுதுண அமுதில்வரும்
பெண்ணமுதுண்ட எம்பெருமானே!

ஆண்டாய்! உன்னைக்காண்பதோர் அருளெனக்கருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே!

என்று திருமங்கையாழ்வார் திருவிண்ணகரப்பனை சரண் புகுகின்றார்.

பெண் என்பவளே குடும்ப தனம்! குல தனம்! அதனால் பெண்ணும் உட்கார்ந்து இருக்க, பெண்ணைப் பெற்ற சிவனடியார் மார்க்கண்டேய மகரிஷியும் உட்கார்ந்திருக்க....

பாவம் மாப்பிள்ளை, சர்வ லோக சரண்யன், எம்பெருமான் நின்று கொண்டு கன்னிகா தானம் வாங்கிக் கொள்கிறான்! :))))

பொதுவாக புண்ணிய ஷேத்திரங்களில், இரவில் தேங்கிய நீரில் நீராடக் கூடாது! ஆனால் ஒப்பிலியப்பன் கோயில் குளத்தில் மட்டும் எந்த வேளையும் நீராடலாம்! அதற்கு பகலிராப் பொய்கை (அஹோராத்ர புஷ்கரிணி) என்றே பெயர்!

இங்கு பெருமாள் இராமனாகவும், கண்ணனாகவும் ஒரே நேரத்தில் சேவை சாதிக்கின்றான்! (திருவேங்கடம் போலவே)!

* ஒரு மனை நோன்பனாக (ஏக பத்னி விரதனாக), பூமிதேவித் தாயார் மட்டும் = இராமன்!
* மாம் ஏகம் சரணம் வரஜ (என் ஒருவனையே சரணம் எனப் பற்று) என்னும் கீதை சொன்ன = கண்ணனாக!

ஒப்பிலியப்பன் ஆலயப் பசுமை மனத்துக்கு நிறைவாக இருக்கும்!
அதை விட அருகிலேயே திருநாகேச்சரம்! சிவபெருமான் ராகு ஸ்தலத்தில் எழுந்தருளி இருப்பது! உற்சவ காலங்களில் பெருமாளும் ஈசனும் பரஸ்பரம் மாலை மாற்றிக் கொள்ளும் வழக்கமும் உண்டு!

பதிவில் ஸ்வாமி தேசிகன் பற்றிய குறிப்பு இல்லாததால், பின்னூட்டத்தில் பதிக்கிறேன்! தேசிகன் மிகவும் உகந்த தலம் ஒப்பிலியப்பன் கோயில்! இன்றும் தாயாரும் பெருமாளும் எழுந்தருளும் போதெல்லாம், தேசிகனும் உடன் எழுந்தருளுவார்!
(இந்த குறிப்புகள் எல்லாம் அன்பர் KRS பின்னூட்டமாக இட்டவை)

அருகில் விஷ்ணு விமானத்தின் தோற்றம்


இத்தலத்தின் சிறப்பு அஹோராத்ர புஷ்கரணி. பிராமணன் ஒருவன் தன் குருவின் மகளிடம் தவறாக நடந்து கொண்டதால் பறவையாக மாற சாபம் பெற்றான். பின் இப்புஷ்கரணியின் அருகில் உள்ள மரத்தில் இருந்த அப்பறவை ஒரு நாள் நள்ளிரவில் புயல் அடிக்க புஷ்கரணியில் விழுந்து சாப விமோசனம் பெற்றதால் இப்புஷ்கரணியில் இரவிலும் நீராடலாம் எனவேதான் இப்புஷ்கரணி அஹோராத்ர புஷ்கரணி என்று அழைக்கப்படுகின்றது. மேலும் நட்டாறே விரஜா நதி என்பது ஐதீகம்.

நேரில் சென்று திருவிண்ணகர் சம்ப்ரோக்ஷணம் காணும் பேறு பெற்ற அன்பர் யார் என்று காணுங்கள் அன்பர்களே.

நன்றிகள் மனோகரன்

Labels: , ,

12 Comments:

Blogger VSK said...

ஒப்பில்லா அப்பனின் ஆலயச் சுற்றுலா
அழகுமிகுக் கோலம்!

நன்றி ஐயா!

March 25, 2009 at 7:49 PM  
Blogger ஜீவி said...

ஆம்! ஒப்பிலியப்பன் திருவடிகளே சரணம்!

தரிசன காட்சிகள் காணப் பேறு பெற்றமைக்கு மிக்க நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

March 25, 2009 at 8:20 PM  
Blogger dondu(#11168674346665545885) said...

தன் மனைவியால் முடியாது என நினைத்த காரியத்தையே தனக்கு தேவையில்லை என்று கூறிய திருமாலின் அருள் அளவற்றது. மார்க்கண்டேயருக்கு இல்லாத ஞானமா? ஆனால் பாருங்கள் அவரும் தன் பெண் எப்போதும் குழந்தை என்ற அஞ்ஞானத்தில் இருந்திருக்கிறார். அதுவும் எப்படிபட்டப் பெண்? உலகத்துக்கே உணவு அளிக்கும் அன்னபூரணி அல்லவா அவள்! ஒரு பெண்ணின் தகப்பனின் மன நிலையை என்னைப் போன்ற பெண்ணின் தகப்பன் புரிந்து கொள்ளவில்லையென்றால் எப்படி?

எனது அனுபவத்தை பற்றி நான் போட்ட பதிவு: http://dondu.blogspot.com/2005/06/blog-post_112014704092368631.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

March 25, 2009 at 9:26 PM  
Blogger S.Muruganandam said...

மிக்க நன்றி VSK ஐயா. அவர் அனுப்பி வைத்தார் நண்பர் மூலமாக அது மலராக ப்ரிமளிக்கின்றது.

March 26, 2009 at 2:11 AM  
Blogger S.Muruganandam said...

ஆம்! ஒப்பிலியப்பன் திருவடிகளே சரணம்!


நன்றி ஜிவி ஐயா.

March 26, 2009 at 2:12 AM  
Blogger S.Muruganandam said...

வாருங்கள் DONDU ஐயா, முதல் முறை வருகின்றீர்கள்.


//ஒரு பெண்ணின் தகப்பனின் மன நிலையை என்னைப் போன்ற பெண்ணின் தகப்பன் புரிந்து கொள்ளவில்லையென்றால் எப்படி?//

அடியேனும் அப்படியே.

//மார்க்கண்டேயருக்கு இல்லாத ஞானமா? ஆனால் பாருங்கள் அவரும் தன் பெண் எப்போதும் குழந்தை என்ற அஞ்ஞானத்தில் இருந்திருக்கிறார். அதுவும் எப்படிபட்டப் பெண்? உலகத்துக்கே உணவு அளிக்கும் அன்னபூரணி அல்லவா அவள்!//

நம்மை மாயையில் அழுத்துவதுதானே அவர் வேலை எல்லாம் அவன் திருவிளையாடல், நேராக சங்கு சக்கரத்துடன் சேவை சாதிக்காமல், கிழ வேடத்தில் வந்து மார்க்கண்டருடன் விளையாடியுள்ளார்.

தங்கள் பதிவைப் படித்தேன், திருக்கல்யாணம் நடத்தி வைக்க வாய்ப்பு கிடைத்ததற்க்கு வாழ்த்துக்கள்.

March 26, 2009 at 2:19 AM  
Blogger குமரன் (Kumaran) said...

மார்கண்டேய மகரிஷி கோத்திரத்தில் பிறந்தவன் அடியேன். அதனால் சிறுவயதில் (ஏழெட்டு வயதில்) இத்திருக்கோவிலுக்குச் சென்ற போது 'இவர் மார்கண்டேய மகரிஷி' என்று பட்டர் தீபத்தைக் காட்டிச் சொன்ன போது விழி விரியப் பார்த்தேன். பெருமாள் கோவிலில் அவரைப் பார்த்த வியப்பும் கூட. :-)

அந்த வயதில் பார்த்தவற்றில் சில இன்னும் நினைவில் இருக்கிறது. கொடிமரத்திற்கு முன்னர் கொட்டிக் கிடந்த உப்பும், உப்பு சேர்த்த எந்த உணவுப் பொருளும் கொடி மரத்திற்கு அப்பால் கொண்டு செல்லப்படக் கூடாது என்று சொல்லப்பட்டதும், ஒப்பிலியப்பனின் திருக்கரத்தில் 'மாம் ஏகம் சரணம் வ்ரஜ' என்று எழுதியிருந்தது சொலித்ததும், அங்கே வாங்கிய பிரசாதம் உப்பில்லாமல் இருந்ததும் நினைவில் நிற்கின்றன.

எங்களையும் திருவிண்ணகருக்கு அழைத்துச் சென்றதற்கு நன்றி கைலாஷி ஐயா.

March 26, 2009 at 3:18 PM  
Blogger S.Muruganandam said...

//எங்களையும் திருவிண்ணகருக்கு அழைத்துச் சென்றதற்கு நன்றி கைலாஷி ஐயா//

அவர் அடியேன் நண்பர் மூலமாக படங்களை அனுப்பி வைத்தார். அனைத்தும் அவர் செயல்.

March 27, 2009 at 8:53 AM  
Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

என்னப்பன், பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், தன் ஒப்பார் இல் அப்பன்.....ஒப்பிலியப்பன் திருவடிகளே சரணம்!

சம்ப்ரோட்சண வைபவத்துக்கு அடியோங்களை அழைத்துச் சென்றமைக்கு நன்றி கைலாஷி ஐயா!

அம்மா அப்பாவின் மணிவிழாவுக்கு சென்ற அக்டோபர் மாதம் திருக்கடையூர் சென்ற போது, திருச்சி வரும் வழியில் இங்கும் நிறுத்தினோம்! இனிமையான சேவை! அப்போது பணிகள் நட~ண்து கொண்டு இருந்தன! புதுப் பொலிவில் உங்கள் படங்களில் கண்டு கொண்டேன்!

March 27, 2009 at 10:01 AM  
Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

பெண் என்பவளே குடும்ப தனம்! குல தனம்! அதனால் பெண்ணும் உட்கார்ந்து இருக்க, பெண்ணைப் பெற்ற சிவனடியார் மார்க்கண்டேய மகரிஷியும் உட்கார்ந்திருக்க....

பாவம் மாப்பிள்ளை, சர்வ லோக சரண்யன், எம்பெருமான் நின்று கொண்டு கன்னிகா தானம் வாங்கிக் கொள்கிறான்! :))))

பொதுவாக புண்ணிய ஷேத்திரங்களில், இரவில் தேங்கிய நீரில் நீராடக் கூடாது! ஆனால் ஒப்பிலியப்பன் கோயில் குளத்தில் மட்டும் எந்த வேளையும் நீராடலாம்! அதற்கு பகலிராப் பொய்கை (அஹோராத்ர புஷ்கரிணி) என்றே பெயர்!

இங்கு பெருமாள் இராமனாகவும், கண்ணனாகவும் ஒரே நேரத்தில் சேவை சாதிக்கின்றான்! (திருவேங்கடம் போலவே)!

* ஒரு மனை நோன்பனாக (ஏக பத்னி விரதனாக), பூமிதேவித் தாயார் மட்டும் = இராமன்!
* மாம் ஏகம் சரணம் வரஜ (என் ஒருவனையே சரணம் எனப் பற்று) என்னும் கீதை சொன்ன = கண்ணனாக!

March 27, 2009 at 10:12 AM  
Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஒப்பிலியப்பன் கோயிலில் மாதா மாதம் ச்ரவண தீபம் பற்றிச் சொன்னமைக்கு நன்றி கைலாஷி ஐயா!

காரைக்கால் மனோகரன் அவர்களுக்கும் எங்கள் நன்றி!

ஒப்பிலியப்பன் ஆலயப் பசுமை மனத்துக்கு நிறைவாக இருக்கும்!
அதை விட அருகிலேயே திருநாகேச்சரம்! சிவபெருமான் ராகு ஸ்தலத்தில் எழுந்தருளி இருப்பது! உற்சவ காலங்களில் பெருமாளும் ஈசனும் பரஸ்பரம் மாலை மாற்றிக் கொள்ளும் வழக்கமும் உண்டு!

பதிவில் ஸ்வாமி தேசிகன் பற்றிய குறிப்பு இல்லாததால், பின்னூட்டத்தில் பதிக்கிறேன்! தேசிகன் மிகவும் உகந்த தலம் ஒப்பிலியப்பன் கோயில்! இன்றும் தாயாரும் பெருமாளும் எழுந்தருளும் போதெல்லாம், தேசிகனும் உடன் எழுந்தருளுவார்!

சம்ப்ரோக்ஷணம் முடிந்து மண்டலாபிஷேகம் போல் உங்கள் பதிவுக்கு வந்த புண்ணியம் எங்களுக்கு! நன்றி கைலாஷி ஐயா!

March 27, 2009 at 10:20 AM  
Blogger S.Muruganandam said...

மிக்க நன்றி KRS ஐயா, பல தகவல்களை அளித்துள்ளீர்கள் தங்கள் அனுமதியுடன் அவற்றை பதிவில் சேர்த்துக்கொள்கின்றேன்.

குறிப்பாக மனோகரன் அவர்களுக்கு நன்றிக்கு மிக்க நன்றி.

எப்போது சென்றாலும் ஒரு ஆனந்த அனுபவத்தை தரும் தலம் தான் ஒப்பிலியப்பன் கோவில். அடியேன் காரைக்காலில் இருந்த போது ஒரிரண்டு தடவை சென்றுள்ளேன். மஞ்சக் கிழங்கை படிகாரத்தில் ஊற வைத்து பிரகாரமெங்கும் காய வைத்திருப்பார்கள். திருக்கோவில் முழுவதுமே அற்புதமான மணமாக இருக்கும். ஒரு தடவை ஒப்பிலியப்பனின் திருமஞ்சனம் காணும் வாய்ப்பும் கிட்டியது.

தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்க்கு மிக்க நன்றி .

இன்று திருக்கச்சி நம்பிகளின் 1000 வது நட்சத்திர தினம் ஒரு பதிவு இட யோசித்துள்ளேன், இட்ட பின் தங்களுக்கு தெரிவிக்கின்றேன் வந்து தரிசனம் பெறுங்கள்.

March 28, 2009 at 3:29 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home