Sunday, February 1, 2009

இரத சப்தமி

Visit BlogAdda.com to discover Indian blogs

தை மாதத்தின் வளர்பிறை சப்தமி என்னும் ஏழாம் நாள் இரத சப்தமி என்றும் சூரிய ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகின்றது இந்நாளின் சிறப்புகளை இப்பதிவில் காண்போம்.



சூரிய பிரபையில் அகல்கில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை
உறை மார்பன் திருப்பதி மலையப்ப சுவாமி


உத்தராயண புண்ணிய காலம்:
தைமாதம் முதல் நாள் முதல் ஆனி மாதம் நிறைவு நாள் வரையான காலம் உத்தராயணம் என்று அழைக்கப்படுகின்றது. கோவில் கும்பாபிஷேகம் முதலான புண்ணிய காரியங்களுக்கும். கல்யாணம் முதலிய சுப நிகழ்ச்சிகளுக்கும் உகந்த காலம். மறுமைப் பேறு, நற்கதி அடையவும் உகந்த காலம், வைகுண்டத்தின் கதவுகள் திறந்திருக்கும் காலம் என்பது ஐதீகம். உத்தராயணத்தின் முதல் நாள் மகர சங்கராந்தி தலை சிறந்த புண்ணிய நாள். யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத சபதம் செய்து காலம் முழுவதும் நைஷ்டிக பிரம்மச்சாரியாக வாழ்ந்த பீஷ்ம பிதாமகர், தம் தந்தை அளித்த வரத்தின் படி மோக்ஷம் பெற காத்திருந்த காலம் உத்தராயண புண்ணிய காலம்.


இரத சப்தமி:
உத்தராயண புண்ணிய காலத்தின் முதல் மாதமான தை மாத வளர்பிறை ஏழாம் நாள் அதாவது சப்தமி சூரியனுக்கு உரிய இரத சப்தமி என்று கொண்டாடப்படுகின்றது. இந்நாளை சூரிய ஜெயந்தி என்பாருமுண்டு.

இரத சப்தமியன்று அருணன் சாரதியாக இருந்து செலுத்தும் ஏழு குதிரைகள் பூட்டிய சூரிய நாராயணரின் இரதம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி திரும்புவதாக ஐதீகம். சூரியன் தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறும் நாள் என்பாரும் உண்டு. வெள்ளை ஒளியில் ஏழு நிறங்கள் அது போலவே சூரிய இரதத்தில் ஏழு குதிரைகள். எனவேதான் ஏழாம் நாள் என்பதால் சூரியனுக்கு உரிய நாளாக அமைத்தனரோ முன்னோர். இரத சப்தமி என்னும் இந்நாளில் சூரியனுக்கு விசேஷ ஓளி பிறப்பதாக புராணங்கள் கூறுகின்றன.

இரதத்தை எப்படி செழுமையாக செலுத்த வேண்டுமோ அது போல ஐம்புலன்களால் பல் வேறு திசைகளில் இழுக்கப்பட்டு தடுமாறும் மனத்தை இறைவனிடம் செழுத்தவேண்டும் என்பதை உணர்த்தும் நாள் இரத சப்தமி நாள்.

எருக்கம் இலை:
தலையில் ஏழு எருக்கம் இலைகள் வைத்து குளிக்கும் நாள். இவ்வாறு சூரிய ஒளி நம் மேல் பட நீர் நிலைகளில் குளிப்பது ஞானம் பெற இது உதவுதாக ஐதீகம். பீஷ்மர் அம்பு படுக்கையில் இருந்து உத்தராயண காலத்திற்கு காத்துக் கொண்டு இருந்த போது வியாசர் அங்கே வர, தான் இவ்வாறு அம்பு படுக்கையில் கிடந்து அல்லல் படுவதற்கான காரணத்தை வினவ. வியாசர் பதிலிறுக்கின்றார், துரியோதனன் சபையில் பாஞ்சாலியை அவமானப்படுத்த துச்சாதானன் முயன்ற போது பிரம்ம்ச்சரிய விரதம் பூண்ட நீதிமானான தாங்கள் தடுக்காததால் ஏற்பட்ட பாவத்திற்க்கான தண்டனை இது என்றார். ஆம் என்று ஆமோதித்த கங்கை மைந்தர் என்ன்டைய தேகத்தை சூரிய கதிரினால் எரித்து சுத்தம் செய்யுங்கள் என்று வேண்ட எருக்கம் இலைகளால் உடல் முழுவதும் தடவி சுத்தம் செய்தார் வியாசர்.

எருக்கம் இலை அர்க்க பத்திரம் என்று அறியப்படுகின்றது. அருக்கன் என்றால் சூரியன். எருக்கம் இலையில் சூரியனின் சாரம் உள்ளது. என்வேதான் சந்திரனை ஜடாமுடியில் தாங்கும் சிவ பெருமான் எருக்கை சூரியனாக அணிகின்றார்.

ஏழு சுரங்கள் கொண்ட இசை எவ்வாறு மனதை ஒருமைப்படுத்துகின்றதோ அது போல ஏழு நிறங்களால் ஆன சூரியனின் கிரணங்களை எருக்கம் இலை ஈர்த்து மனதை ஒருமைப்படுத்துகின்றது, எனவே இறைவன் திருவடியில் ஒன்றலாம் என்பதை உணர்த்தும் நாள்.

பீஷ்மருக்கு தர்ப்பணம் செய்யும் நாள்: ( பீஷ்மாஷ்டமி)
பீஷ்மர் முக்தியடைந்த போது தர்மர் மைந்தனில்லாத நைஷ்ட்டிக பிரம்மசாரியான பீஷ்மருக்கு யார் தர்ப்பணம் செய்வது என்று வினவ, உலக மாந்தர் அணைவரும் இரத சப்தமியன்று தலையில் எருக்கம் இலை வைத்து கிழக்கு நோக்கி நீராடி பீஷ்மருக்கு தர்ப்பணம் செய்வார்கள் அதனால் அவர்கள் உடலால் செய்த பாவங்கள் எல்லாம் விலகும் என்று வியாசர் அருளினார். பீஷ்மாஷ்டமி இரத சப்தமிக்கு அடுத்த நாள்.

சூரிய நாராயணர்:
சகல ஜீவராசிகளையும் தன் ஒளிக் கதிரால் வாழ்விப்பவன் சூரியன், அது போல சகல ஜீவராசிகளையும் காப்பவர் நாராயணன். எனவே சூரியனுக்கும் விஷ்ணுவுக்கும் வித்தியாசம் இல்லை. எனவே சூரிய பகவான் சூரிய நாராயணன் என்றும் அழைக்கப்படுகின்றார். இவ்வாறு அழைக்கபப்டுவதற்கு ஒரு காரணமும் உண்டு பெருமாளின் வாகனம் வேத சொரூபி கருடன். கருடன் சிறந்த அழகு பொருந்திய சிறகுகளை உடையவன் ஆதலால் கருத்மான் என்றும் அழைக்கப்படுகின்றான். கருடனுடைய இரு சிறகுகள் உத்திராயணம் மற்றும் தக்ஷிணாயனம் ஆகும். அவன் பறக்கும் போது பகலும் இரவும் மாறி மாறி உண்டாகிறது. இவ்வாறு கால புருஷனை நடத்துபவர் விஷ்ணு. இவர் கருட வாகனத்தில் வருவதால் சூரியன் சூரிய நாராயணன் என்றும் அழைக்கப்படுகின்றார். எனவே தான் விஷ்ணுவுக்குரிய சங்கும் சக்கரமும் ஏந்தி சூரியனும் அருள் பாலிக்கின்றார். சூரியனும் வேத சொரூபம் காலையில் ரிக் வேதமாகவும், நன்பகலில் யஜுர் வேதமாகவும், மாலையில் சாம வேதமாகவும் ஒளிர்கின்றார் சூரிய நாராயணர்.

பெருமாள் ஏழு வாகனங்களில் சேவை சாதிக்கும் நாள்:
தென் இந்தியாவில் அனைத்து வைணவத் திருதலங்களிலும் பெருமாள் அதிகாலை சூரிய உதயம் தொடங்கி, சூரிய அஸ்தமனம் வரை பல்வேறு வாகனங்களில் சேவை சாதிக்கும் நாள். சூரியன் தனது வடக்கு நோக்கிய பயணத்தை துவக்கும் நாளில் சூரியன் பெருமாளை வணங்கி தன் பயணத்தை தொடங்க பெருமாள் சேவை சாதிப்பதாக ஐதீகம். திருமலையில் அதிகாலையில் மலையப்பசுவாமி சூரியப் பிரபையில் சேவை சாதிக்கின்றார், பின் சேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், கற்பக விருட்ச வாகனம், சர்வ பூபாள வாகனம், நிறைவாக சூரிய அஸ்தமன காலத்தில் சந்திரப் பிரபை வாகனத்தில் சேவை சாதித்து வைர வைடுரிய நகைகள் மின்ன சர்வ அலங்காரத்தில் சேவை சாதிக்கும் நாள்.
சந்திரப் பிரபையில் மலையப்பசுவாமி
அடியேன் இரத சப்தமியன்று தரிசித்த சில வாகன சேவைகள் தாங்களும் கண்டு ஆனந்தம் அடையுங்கள்

திருமயிலை மாதவப்பெருமாள் சூரியபிரபை வாகனம்




திருமயிலை ஆதிகேசவப்பெருமாள் வெள்ளி கருட வாகனம்





திருப்பதி மலையப்ப சுவாமி ஹனுமந்த வாகனம்
சூரியனை வழிபட உகந்த நாள். ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்ய மிகவும் நல்லது. நலம் பல தரும் ஆதித்ய ஹ்ருதயம் பற்றி அறிந்து கொள்ள சொடுக்குக இங்கே ஆதித்ய ஹ்ருதயம்

8 Comments:

Blogger CA Venkatesh Krishnan said...

Nice Post. Informative one.

Thanks.

February 1, 2009 at 8:22 PM  
Blogger மெளலி (மதுரையம்பதி) said...

வணக்கம் கைலாஷி ஐயா.

மிக அழகாக வந்திருக்கிறது பதிவு. நன்றி.

ஒரு சிறு திருத்தம், தவறாக நினைக்க மாட்டீர்கள் என்ற எண்ணத்துடன் சொல்கிறேன்..

//உலக மாந்தர் அணைவரும் இரத சப்தமியன்று தலையில் எருக்கம் இலை வைத்து கிழக்கு நோக்கி நீராடி பீஷ்மருக்கு தர்ப்பணம் செய்வார்கள் //

ரத சப்தமியன்று எருக்கு இலை வைத்து நீராடலும், பித்ரு தர்பணம் (வைவஸ்வத மன்வாதி என்பதற்காக) மட்டுமே. பீஷ்மாஷ்டமி (நாளை) அன்றே பீஷ்மருக்கான தர்பணம். பீஷ்மருக்குச் செய்வது பிரம்மச்சாரி, கிருஹஸ்தன், தாய்-தந்தை உள்ளவர் என்று எல்லோரும் எல்லோரும் செய்வது.

February 1, 2009 at 8:45 PM  
Blogger மெளலி (மதுரையம்பதி) said...

இன்னும் ஒரு செய்தி, ரதசப்தமி தினத்தன்று சூரியனது தேரை போன்ற (ஒரே சக்கரம்) கோலம் போடுவர்.

February 1, 2009 at 8:48 PM  
Blogger S.Muruganandam said...

Welcome Illaya Pallavan.

February 2, 2009 at 1:26 AM  
Blogger S.Muruganandam said...

//பீஷ்மாஷ்டமி (நாளை) அன்றே பீஷ்மருக்கான தர்பணம். பீஷ்மருக்குச் செய்வது பிரம்மச்சாரி, கிருஹஸ்தன், தாய்-தந்தை உள்ளவர் என்று எல்லோரும் எல்லோரும் செய்வது.//


திருத்தியதற்கு நன்றி மதுரையம்பதி ஐயா, பதிவில் மாற்றி விடுகின்றேன்.

February 2, 2009 at 1:28 AM  
Blogger S.Muruganandam said...

//இன்னும் ஒரு செய்தி, ரதசப்தமி தினத்தன்று சூரியனது தேரை போன்ற (ஒரே சக்கரம்) கோலம் போடுவர்.//


தகவலுக்கு நன்றி மதுரையம்பதி ஐயா.

February 2, 2009 at 1:33 AM  
Blogger குமரன் (Kumaran) said...

இரத சப்தமியைப் பற்றிய அரிய தகவல்களுக்கு மிக்க நன்றி கைலாஷி ஐயா.

February 4, 2009 at 3:35 AM  
Blogger S.Muruganandam said...

மிக்க நன்றி குமரன் ஐயா.

February 20, 2009 at 8:35 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home