Thursday, January 28, 2010

நாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -5

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ நரசிம்ம அவதாரம் -1




ஓம் நமோ நாராயணா என்னும் நாமத்தை நிலை நிறுத்திய அவதாரம்தான் நரசிம்ம அவதாரம். பிரகலாதனின் அசஞ்சல பக்தியை உணர்த்திய அவதாரம் நரசிம்ம அவதாரம் இது நடந்தது இந்த அஹோபில ஷேத்திரத்தில் இப்போது மலையாக உள்ள இடம் தான் ஹிரண்யனின் கோட்டையாக இருந்தது. இன்றும் பெருமாள் தோன்றிய தூண் உக்ர ஸ்தம்பமாக விளங்குகின்றது ஆகவே முதலில் நரசிம்ம அவதாரத்தைப்பற்றி பார்ப்போமா அன்பர்களே.

ஹிரண்ய கசிபுவின் கோட்டைதான் இன்று மலை


பிரம்ம தேவரின் மானஸ புத்திரர்களான சனகாதி முனிவர்கள் சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனாதனர் ஆகிய நான்கு பேர்களும் எங்கு வேண்டுமென்றாலும் தடையற்று செல்பவர்கள். அவர்கள் ஒரு சமயம் வைகுண்டம் வந்த் போது வைகுண்டத்தின் துவார பாலகர்களான ஜெய, விஜயர்கள் அவர்களை தடை செய்தனர். அதனால் கோபம் கொண்டு ஸனகாதி முனிவர்கள் இவர்களை சபித்து விட்டனர். "எதிலும் ஆசையற்றுப் பகவானையே தியானம் செய்யும் எங்களை காரணமின்றி ஏன் தடுத்தீர்கள்? கெட்ட அபிப்பிராயத்துடன் வருபவர்களைத் தடுப்பதற்கன்றோ உங்களை இந்த ஸ்தானத்தில் வைத்திருப்பது? குற்றமற்ற எங்களை நீங்கள் தடுத்தபடியால் பெரிய பாவம் செய்தவர்களாகிவிட்டீர். எனவே அசுரப் பிறவியை அடைந்து துன்புற வேண்டும்" என்று சபித்தனர். பின் பெருமாளே ஏழு பிறவிகள் எனது பக்தர்களாகவோ அல்லது மூன்று பிறவிகள் எனக்கு எதிரிகளாகவோ பிறந்து பின் வைகுண்டம் வந்தடையலாம் என்று கூற இருவரும் மூன்று பிறப்புகளில் பெருமாளுக்கு எதிரியாக பிறக்க விருப்பம் தெரிவிக்க முதல் பிறப்பில் இரணியாக்ஷன், இரணிய கசிபு ஆகவும், இரண்டாவது பிறப்பில் இராவணன் கும்பகர்ணனாகவும், மூன்றாவது பிறப்பில் சிசுபாலன் தந்தவக்ரன் எனப் பிறந்து பெருமாள் கரத்தாலேயே வதம் செய்யப்பெற்று சாப விமோசனம் அடைந்து முன் போல வைகுண்டத்தின் துவார பாலகர்களாக பெருமாளுக்கு சேவை செய்து வருகின்றனர்.

காச்யபருக்கு இரு மனைவிகள் அதிதி மற்றும் திதி, இதில் அதிதி மஹாவிஷ்ணுவையே மகனாக பெற வேண்டும் என்று கடும் தவம் செய்து வந்தாள். ஆனால் திதியோ தேவர்களையும் வெல்லும் மகன்கள் வேண்டும் என்று சூரியன் மறையும் நேரத்தில் தன் மணாளணை கூட அழைக்க , விதியின் வழிப்படியே எல்லாம் நடக்கும் என்று காச்யபர் சம்மதிக்க பிறந்தவர்களே ஹிரண்யாக்ஷன் மற்றும் ஹிரண்ய கசிபு. அசுரர்களான அவர்கள் உலகத்தை நடுங்க செய்தனர். பயங்கரமான ரூபத்தை பெற்றனர். தேவர்களைக் கலங்க செய்தனர். பிரம்மாவை தவத்தினால் ஆராதித்தனர். அவர் கொடுத்த வரத்தினால் கர்வம் கொண்டனர். ஹிரண்யாக்ஷன் மிகவும் பலவானாக இருந்தான் ஒரு சமயம் ஆணவத்தினால் பூமி தேவியை எடுத்து சென்று பாதாளத்தில் ஒளித்து வைத்துவிட பெருமாள் வராகரூபம் எடுத்து பகவான் அவனை கொன்று பூமிதேவியை மீட்டார்.

வராக அவதாரம்

ஹிரண்யகசிபு என்பவன் மிக்க புத்திமானாக இருந்து, பிரம்மாவை ஆராதித்து வரம் பெற்று, எல்லோரையும் அடக்கினான். அவனது பலத்தைக் கண்டு அனைவரும் அஞ்சினர். அவன் மூன்று லோகத்தையும் வென்றான். தேவர்களையும் அசுரர்களையும் கந்தர்வர்களையும் அடக்கி ஆண்டான். ஆணவம் கொண்ட அவுணன் சொன்னான் -- "நானே ஈச்வரன், எல்லாப் போகங்களையும் நானே அநுபவிப்பவன். சித்தியைப் பெற்றவனும் நானே. மிக்க பலம் கொண்டவனும் நானே. விஷ்ணு, பிரம்மா, சிவன் எல்லாம் நானே. படைப்பதும், காப்பதும், அழிப்பதும் எல்லாம் என்னுடைய தொழில். நமக்கு எல்லாவிதத்திலும் திறமை இருக்க பிறரை ஏன் துதிக்க வேண்டும்? மற்றொரு தேவதையை முன்னிட்டு அக்னிஹோத்ரம் முதலியவற்றை செய்ய வேண்டாம். வேதாத்யயனம், வஷட்காரம், வேள்வி முதலியவற்றை யாரும் செய்யக்கூடாது. என்னை உத்தேசித்தே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். வேள்விகளில் கொடுக்கும் ஹவிர்பாகத்தை நானே பெறுவேன். பயனைக் கொடுப்பவனும் நானே. பகவானையோ, நான்முகனையோ, பரமசிவனையோ ஆராதிக்க விரும்பி வேள்விகளைச் செய்பவர்களை விரட்டியடிக்க வேண்டும் என்று கொக்கரித்தான்"

இப்படி சொல்லி, இந்த அசுரன் பூமி அனைத்தையும் ஆண்டு வந்தான். இவனது பயத்தால் தேவதைகளும், இந்திரனும் மனம் கலங்கித் தங்கள் குருவான பிருகஸ்பதியை சரணமடைந்தனர். குலகுருவான பிருகஸ்பதி இந்திரனை பார்த்து "பாற்கடலின் கேசவன் எழுந்தருளியிருக்கிறார். அந்த மகாவிஷ்ணுவை நீங்கள் எல்லோரும் சேர்ந்து துதிப்பீர்களாக. உங்களது துதிக்கு மகிழ்ந்து அவர் அந்த அசுரனை கொல்ல வழி வகுப்பார்" என்றார்.தேவர்கள் இதை கேட்டு சந்தோஷித்து பாற்கடலுக்கு சென்றனர். பலவிதமான ஸ்தோத்திரங்களினால் பகவானை பூஜித்தார்கள். பரமசிவனும் மிக்க பக்தியுடன் பகவானான ஜனார்த்தனனை புண்ணிய நாமங்களை கொண்டு ஸ்தோத்திரம் செய்தார். ஹிரண்யகசிபுவை நான் ஸம்ஹரிக்கிறேன். தேவர்களும் அவரவர்களின் இடத்தை அடையட்டும். தேவசத்ருவான அந்த அசுரனை ஸம்ஹரிக்க நான் வழி வகுக்கிறேன்" என்று பெருமாள் அபயம் அளித்தார். தேவர்களும் மகிழ்ச்சியுடன் தங்கள் லோகம் திரும்பினர்.

பழைய சீவரம்
லக்ஷ்மி நரசிம்மப் பெருமாள்


ஹிரண்யனுக்கு நான்கு புதல்வர்கள் உண்டானார்கள். அநுக்ஹ்லாதன், ஹ்லாதன், ஸம்ஹ்லாதன், ப்ரஹ்லாதன் என்று. சரீர பலத்தாலும், மனோ பலத்தாலும், மற்றக் குணங்களாலும் இவர்கள் உயர்ந்தவர்களாக இருந்தனர். ப்ரஹ்லாதன் இவர்களில் எல்லா விதத்திலும் மேன்மை பெற்றவன்; தர்மம் அறிந்தவன், நீதி மார்க்கத்தில் செல்பவன், அசுர வம்சத்தை மேல் மேல் சந்ததிகளால் வளர்த்தவன். எல்லோரிடத்திலும் சமமான பற்றுதலை உடையவன். பகவானிடத்தில் பக்தியை செலுத்துபவன். அவன் பால்யத்திலேயே விவேகமுள்ளவனாக இருந்தான்.

இவன் கயாதுவின் கர்பத்தில் இருந்தபோதே நாரத முனிவர் இவனுக்கு அஷ்டாக்ஷர மந்திர உபதேசம் அளித்து சிறந்த ஹரி பக்தனாக மாற்றி இருந்தார். எனவே அவன் குரு சொல்வதை பின்பற்றவில்லை, எப்போதும் ஹரி நாமத்தையே ஜபித்துக் கொண்டிருந்தான் , மற்ற ஆசிரம பிள்ளைகளையும் அவ்வாறே மாற்றினான்.

சில காலம் சென்றதும் குருவுடன் ப்ரஹ்லாதன் தந்தையின் வீட்டிற்குச் சென்றான்; குடிவெறியினால் மதம் பிடித்த தந்தையின் கால்களில் விழுந்து வணங்கினான். தந்தை புதல்வனைக் கைகளால் அணைத்து நிற்க வைத்தான். பிறகு தர்மம் அறிந்த பிரஹ்லாதனைப் பார்த்து, "குழந்தாய்! இது வரையில் உன் ஆசார்யன் கற்பித்த விஷயங்களில் எது மிகவும் சாரமானதோ அதை எனக்கு சொல்ல வேண்டும்" என்று கேட்டான்.

ப்ரஹ்லாதன், "தந்தையே! உமது உத்தரவின் பேரில் நான் அறிந்த சாரத்தைக் கூறுகிறேன். வெகு நாளாக என் மனத்திலேயே நிலையாக இருந்து வந்தது இதுதான். ஆதியும், நடுவும், அந்தமும் இல்லாததும், அழிவற்றதும், ஏற்றச் சுருக்கம் இல்லாததும், எல்லா உலகத்துக்கும் முதற் காரணமுமானதும், எப்பொழுதும் ஆனந்த ரூபமுமான பரப்ரஹ்மத்தை வணங்குகிறேன்." என்றான்.

இதைக் கேட்டதும் ஹிரண்யன் கோபத்தால் கண்கள் சிவக்க, உதடுகள் துடிக்க, எதிரில் வணக்கத்தோடு நின்ற குருவைபார்த்து, "ஆசார்யரே! என்ன அநியாயம்? மூடனான என் புதல்வன் எனக்கு எதிரியான ஹரியின் நாமத்தை சொல்லி புகழ்கிறானே! எப்பொழுதும் சிறு குழந்தைகள் அறிவில்லாமையால் மூடர்களாக இருப்பர். உம்மால் சிக்ஷிக்கபட்டு அவன் பெருமூடனாகிவிட்டான்" என்றான்.


குறையொன்றுமில்லாத கோவிந்தன்

குரு-அசுரசிரேஷ்டரே! காரணமில்லாமல் என்னிடத்தில் கோபம் கொள்ள வேண்டாம். நான் பள்ளியில் சொல்லும் வார்த்தைகளில் எதையும் உமது புதல்வன் சொல்வதில்லை.

ஹிரண்யன் - ப்ரஹ்லாதனே! உன் குரு என்னால் கற்பிக்கப் பட்டதன்று இந்த வார்த்தை என்கிறார். அப்படியிருக்க யார் உனக்கு இதை கற்பித்தது?

ப்ரஹ்லாதன் - எல்லா உயிர்களுடைய உள்ளத்திலும் பகவானான நாராயணன் வாஸம் செய்கிறான். அந்த பரம்பொருளைத் தவிர வேறு யாரால் எவன்தான் கற்பிக்கப்பட முடியும்? அந்த பகவானை விட்டு எவனும் ஒருவராலும் பூஜிக்கப் பெறமாட்டான். அவனை அல்லவா நாம் ஆராதிக்க வேண்டும்?

ஹிரண்யன்-மூவுலகுக்கும் ஈச்வரனாக நான் இருக்க, என்னை விட்டு விஷ்ணு என்று ஒருவன் உள்ளதாக ஏன் வீணாக நினைத்துக் கொண்டிருக்கிறாய்?

ப்ரஹ்லாதன்- எல்லாம் அறிந்தவனும், எங்கும் பரவியவனும், ஒருவராலும் அறியப்படாதவனும், தன்னையே தரும் கற்பகம் போன்றவனும் சொற்களால் சொல்லப்படாதவனும் உலகங்கள் எல்லாவற்றிலும் பரந்து இருப்பவனுமான பகவானே மகாவிஷ்ணு. அவன் தான் ஈச்வரன். கோபம் கொண்டு குருவை மிரட்டிய ஹிரண்யன் மீண்டும் குருகுலம் சென்று சரியாக கற்று தருமாறு அனுப்பினான்.

Labels: , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home