Monday, February 15, 2010

நாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -7

Visit BlogAdda.com to discover Indian blogs

கருடனின் தவம்


ப்ரகலாதாழ்வான் சொன்ன வார்த்தையை மெய்பிக்க பெருமாள் அதே நொடியில் ஹிரண்யனின் அரண்மணை தூணில் அவதாரம் செய்ததால் அவர் கருடன் மேல் எழுந்தருளி வராமல், கருடனை விடுத்து தனியாக வந்தார். அதனால் மிகவும் துக்கம் கொண்ட கருடன், பெருமாளிடம் தனக்கு நரசிம்ம அவதார சேவையை காட்டி அருளுமாறு வேண்டினான். கருடனின் பெருமையை உலகத்தோர்க்கு அறிய செய்ய திருவுளம் கொண்ட பெருமாள் நீ அஹோபிலம் சென்று தவம் செய் தக்க சமயத்தில் நான் வந்து சேவை சாதிக்கின்றேன் என்று அருளினார்.

பெருமாள்கூடாவிரணியனைக் கூருகிரால மார்பிட” அவதாரம் செய்த புண்ணிய பூமியாகிய அஹோபிலத்தில் வந்து கருடன் பெருமாளின் தரிசனம் வேண்டி தவம் செய்ய ஆரம்பித்தான். அவ்வளவு கடுமையாக தவம் செய்தான் கருடன், அவனுடைய தவத்தீயால் பூலோகம் ஸ்தம்பித்தது, தேவலோகத்தையும் அது விடவில்லை . தேவேந்திரனுக்கு பயம் பிடித்துக் கொண்டு விட்டது, ஒரு காலத்தில் தேவ லோகம் வந்து தேவர்கள் அனைவரையும் தோற்கடித்து அமிர்தத்தை எடுத்து சென்றவனல்லாவா கருடன்? எனவே எப்படியாவது அவனது தவத்தை கலைத்து தனது இந்திர பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறியாமையால் இந்திரன் , நான்கு பக்கங்களிலும் கண்ணைச் செலுத்தினான். அழகாலே எல்லாரையும் மயக்கும் இயல்பு பெற்றுக் கர்வம் கொண்ட ஊர்வசி அவனருகில் நின்றாள். அவளைப் பார்த்தும் மனத்தில் ஒரு தீர்மானத்துக்கு வந்த இந்திரன், "ஊர்வசியே! தேவர்களின் நன்மைக்காக உடனடியாக ஒரு தந்திரம் செய்ய வேண்டும். கருடன் முனிவேடம் தரித்து அஹோபிலத்தில் தவம் புரிவது உனக்குத் தெரிந்ததே. அங்கே சென்று பல விலாசங்களைக் காட்டி அவனை உன்மீது மையல் கொள்ளச் செய்யவேண்டும். அவனது தவத்தைக் கெடுக்க வேண்டும். மகரிஷிகளும், உன் மோக வலையில் சிக்கினவர்கள். கருடனும் உன் மீது மோகம் கொள்வான் என்பதில் சந்தேகம் இல்லை, என்று சொல்லி அனுப்பினான்."


அஹோபிலம் பாவன நரசிம்மர் சன்னதி கருடாழ்வார்

ஊர்வசியும் இந்திரனின் உத்திரவின்படி பல அப்ஸர ஸ்த்ரீகளுடன் அஹோபிலம் என்னும் மலைக்கு வந்து சேர்ந்தாள். மதுரமான வார்த்தைகளை பேசத்தொடங்கினாள். அழகிய கீதங்களையும் பாடினாள். தன்னுடன் வந்த பெண்மணிகளோடு நர்த்தனம் செய்யவும் ஆரம்பித்தாள். கருடன் அவளை பார்க்கவும் இல்லை. மதிக்கவும் இல்லை. 'இந்திரன் அனுப்பி வந்தவள் நான். ஊர்வசி என்பது என் பெயர். ஒரே கணத்தில் எல்லோரையும் என்வசமாக்க சக்தி உடையவள். என் கண்ணுக்கு இலக்கானவர்கள் எல்லோருமே எல்லா துன்பங்களிலிருந்தும் விடுபட்டவர்கள் ஆவார்கள்.

எவன் ஒருவன் பெண் அமுதத்தை விட்டு இதைக்காட்டிலும் உயர்ந்த பொருள் உண்டு என்று நினைக்கிறானோ, அவன், தன் கையில் கிடைத்த பொருளை விட்டுவிட்டு பூமியில் புதையல் இருக்கிறது என்று தேடுகிற மூடனுக்கு சமானமாவான். ஐயோ! இது பெருந்துயரத்தைக் கொடுக்கக் கூடியது. ஜனங்கள் விபரீதமான செயலில் ஈடுபடுகின்றனர். சுகத்தையும் துக்கத்தையும் நன்கு அறியாமல் கஷ்டத்தை விளைவிக்கக் கூடிய வேள்வி, தவம் முதலியவற்றை செய்யத் தொடங்குகின்றனர். பெண்ணின் உருவத்தை நேரில் பார்த்ததும், அதை ஆதரிக்காமல் வேறு பொருளை விரும்புகிறவன் மிக்க தாகத்தோடு இருந்தும் கையில் கிடைத்திருக்கும் தண்ணீரைவிட்டு ஆகாயத்தில் உள்ள மேகத்தை எதிர்பார்ப்பவனுக்கு சமானமாகிறான்' என்று பரிவுடன் கூடிய ஆயிரக்கணக்கான வார்த்தைகளால் கச்யபருடைய புதல்வனான கருடனை ஏமாற்ற முயன்றாள்.

"இத்தகைய அபத்தமான கேவல ஆடம்பரம் உபயோகமற்றது. தீமையைக் கொடுக்கக்கூடியது. கேட்பவர்களுக்கும் முரணானது' என்று நினைத்து முதலில் கருடன் பேசாமல் இருந்துவிட்டான். பிறகு மறுபடியும் இரக்கத்தால் கருடன் சில வார்த்தைகளைச் சொல்லத் தொடங்கினான்; "ஏ ஊர்வசியே! கொடிய பெண்ணே! நீ உன் இருப்பிடம் செல். உன்னுடைய விருப்பம் என்னிடத்தில் பயன் பெறாது. கொட்டு மழையால் தாக்குண்டாலும் மலைகள் எப்படித் துன்பத்தை அடைவதில்லையோ அது போல பகவானிடத்தில் மனத்தைச் செலுத்தியவர்கள் எந்தவிதத்திலும் துன்பப்படமாட்டார்கள். அச்சுதனிடத்தில் ஈடுபட்ட மஹா மனஸ்விகளின் உயர்ந்த குணம் எங்கே? பெண், புதல்வன், மனைவி, பணம் இவ்விஷயத்தில் அறிவிலிகள் கொள்ளும் பற்றுதல் எங்கே? தம் விருப்பப்படி இந்தப் பூலோகத்தில் ஏற்படும் இன்பங்களில் ஈடுபட்டு நன்மை தீமை ஒன்றும் அறியாத ஆண்களுக்குத் தீங்கும் இன்பமாகப் படுகிறது. கையில் சிரங்கு வந்த போது அதை சொறிந்தால் மேல் தீமை ஏற்படும் என்றறிந்தும் தற்காலத்தில் உண்டாகும் இன்பத்துக்கா சொறிவது போல் உள்ளது மக்களின் செயல். ஆக தீங்கும் இன்பமாகத் தோன்றும். "பவவ்யதா ஸுகாயதே" ஆகையினாலன்றோ மாமிசம், ரத்தம் முதலியவற்றின் சேர்க்கையைப் பெற்ற கொடிய அழுக்கு உடம்பினிடம் மூடர்கள் ஆசை காட்டுகின்றனர்! இப்படிப் பட்டவர்கள் நரகத்திடமும் ஈடுபாடு கொள்வார்கள். வெறுப்புக் காட்டமாட்டார்கள். பெண்கள் சிலரிடத்தில் சிநேகம் பாராட்டுவார்கள். சிலரை மயக்குவார்கள்; ஓரிடத்திலும் நிலையுடன் இருக்கமாட்டார்கள். இவர்களுடைய மனத்திலேயே ஒரு நிச்சயமும் ஏற்படாது. இப்படிப் பலவகையில் விநதையின் சிறுவனான கருடன் ஊர்வசியை கடிந்து கூறி,
மீண்டும் பெருமாளை ந்ருஸிம்ஹராய் தரிசிக்க வேண்டி ஒரே மனதுடன்

ஆடியாடி அகம்கரைந்து இசை

பாடிப்பாடிக் கண்ணீர் மல்கி எங்கும்

நாடிநாடி நரசிங்கா!


என்று ஊனும் உள்ளமும் உருக கடும் தவத்தை தொடர்ந்தான் வைனதேயன்.


ஊர்வசியும் வெட்கத்தால் முகந்தாழ்ந்து தேவேந்திரனிடம் திரும்பிச் சென்றாள். இந்திரனைப் பார்த்து "ஓ புரந்தரா! முன்பு பலஇடங்களுக்கு என்னை அனுப்பியிருக்கிறாய். தபோ லோகத்திலோ, ப்ரம்ம லோகத்திலோ, அதற்கும் மேலான உலகத்திலோ, பாதாளம் முதலிய உலகங்களிலோ, என்னுடைய திறமையைக் காட்டி உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறேன். ஆனால் இந்த கருடனிடம் என் முயற்சி பலன் அளிக்கவில்லை. மதங்கொண்ட யானையைத் தாமரைத் தண்டின் நூலால் எப்படிக் கட்ட முடியாதோ, உக்ரமான க்ரணங்களை உடைய சூரியனை இருட்டால் எப்படி அழிக்க இயலாதோ, சமுத்ர ஜலத்தால் பாடவாக்கினியை (வடவைக் கனலை) எப்படி அணைக்க முடியாதோ, சமுத்ரத்தின் ஒலியை தவளையின் கூச்சலால் எப்படி அடக்கமுடியாதோ, அவ்வாறே பகவானிடத்தில் எல்லா புலன்களையும் செலுத்தி பேரறிவைப்பெற்ற மகான்களின் மனத்தை அழிக்க முடியாது" என்றாள்.

மேலும், "கருடன் தேவ லோகத்தையோ உன்னுடைய பதவியையோ ப்ரம்மாவின் ஸ்தானத்தையோ விரும்பித் தவம் புரியவில்லை. பகவானின் திருவடித்தாமரைகளை காணவேண்டும் என்று விரும்பியே தவம் புரிகின்றான். இதை நான் நன்கு அறிவேன்" என்று சொல்லி இந்திரனுடைய பயத்தை ஒருவாறு போக்கினாள் ஊர்வசி.


அலகு இரு இறக்கைகள் என மூன்று சிகரங்களாக காட்சி அளிக்கும் கருடாத்ரி


கருடனின் திட பக்தியைக் கண்டு மகிழ்ந்த பெருமாள் சத்திய சொரூபனாய் மலைக்குகையில் நெருப்பின் உக்ரத்தோடு அவன் விரும்பியபடியே உக்ர நரசிம்மராய் அன்று எவ்வாறு இருந்தாரோ அது போலவே சேவை சாத்தித்தார். பிரகலாதன் கை கூப்பி நிற்க ஹிரணியணை மடியில் போட்டுக் கொண்டு உக்ரமாய் அவனது மார்பைப் பிளக்கும் கோலத்தில் முன் நரசிங்கமதாகி அவுணன் முக்கியத்தை முடிப்பான் என்ற படி பெருமாள் கருடாழ்வாருக்கு சேவை சாதித்தார். சங்கம், சக்கரம், கதை முதலிய ஆயுதங்களை தரித்தவரும், நான்கு கைகளை உடையவரும், இந்திரன் முதலிய தேவ கணங்களால் பூஜிக்கப்பட்டு நீர் கொண்ட மேகத்திற்கு ஒப்பானவரும் செந்தாமரைக்கண்ணை உடையவரும் ஒரே சமயத்தில் உதித்த கோடிக்கணக்கான சூரியர்களின் ஒளியைப் பெற்ற க்ரீடத்தால் விளங்கியவரும், அழகிய உன்னதமான மூக்குடன் கூடியவரும் கருத்த கேசங்களுடன் கூடியவரும் அழகிய தளிர் போன்றவரும், குண்டலதாரியாய் கெளஸ்துபம் உடையவரும், பீதாம்பரதாரியுமான பகவானை கருடன் தன் கண்களால் கண்டு ஆனந்த பரவசனாய் நின்றான். நக்ஷத்திர மண்டலத்தோடு கூடிய சந்திரன் போலவும், மேருமலையின் நடுவிலுள்ள சூரியன் போலவும், அநந்தன் முதலிய சுரகணங்களோடு சேவை அளிக்கும் பகவான், கருடனின் முன் வந்து அழகிய வார்த்தை சொல்லத் தொடங்கினார். "குழந்தாய்! விநதையின் மனத்துக்கு இனியவனே! உனது உக்கிரமான தவத்தால் மகிழ்ச்சியுற்றேன். எழுந்திருப்பாய். உன் விருப்பம் என்ன? நான் அதை நிறைவேற்றுகிறேன்" என்றார். இதைக் கேட்டதும் கருடன் பலதடவை பகவானை வணங்கி அபூர்வமான அவரது ரூபத்தைக் கண்டு மலர்ந்த கண்களைப் பெற்றவனாய் உடல் முழுவதும் மயிர்க்கூச்சலடைந்தவனாய் கடவுளை துதி செய்ய ஆரம்பித்தான்.

"எல்லா உலகத்தையும் ஆக்கவும், நிலைபெறுக்கவும், அழிக்கவும், திறமைப்பெற்ற உன்னை நமஸ்கரிக்கிறேன். காரிய காரண ரூபனான உன்னை நமஸ்கரிக்கிறேன். பல ரூபங்களை எடுத்து எங்கும் வியாபித்த உன்னை வணங்குகிறேன். சார்ங்கம் முதலிய ஆயுதங்களை ஏந்திய உன்னை வணங்குகிறேன். அடியவர்களிடத்தில் இரக்கமுள்ளவனே! உன் மகிமையைச் சொல்லி துதிசெய்ய யாருக்குத்தான் சக்தி உண்டு? ஜகத்குருவே! மந்தமதியுள்ளவனான நான் எப்படித் துதிப்பேன்? என் நாக்கு எப்படி முன் வரும் ?. என்று கருட பகவான் துதி செய்து விநயத்துடன் நின்றான்.

மிகத் தெளிவு பெற்ற முகத்துடன் பகவான் கருடனைப் பார்த்து சொல்லத் தொடங்கினான்: "விநதையின் புதல்வா! நான் உன் தவத்தை மெச்சுகிறேன். உனக்கு எல்லா மங்களங்களும் உண்டாகட்டும். உன் விருப்பம் என்ன? சொல்லாய்! அதை நான் நிறைவேற்றி வைக்கிறேன்." என்றார்.


கருடாழ்வரின் கூப்பிய கரங்கள்


கருடன் "தேவ தேவா! நான் பூமியிலோ மூன்று உலகங்களிலோ ஜயம் பெற விரும்பி தவம் புரியவில்லை. இன்று முதல் வாகனமாக எனது தோளில் தேவரீர் அமர வேண்டும். இதுதான் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியது. எல்லாவற்றுக்கும் ஆதாரனான உனக்கு நான் ஆதாரமாக வேண்டும். இந்த மகிமை எவற்கும் கிடைக்கத் தகுந்ததன்று. இந்த பெரும் பாக்கியம் எனக்கு கிட்டவேண்டும்" என்றான். பின்பு அவன் மேலும் சொல்லத் தொடங்கினான். "புருஷோத்தமா! இந்த மலையில் இருந்துகொண்டு நான் கடும் தவம் புரிந்தேன். இங்கே என் தவம் வெற்றி அடைந்தது. உன்னை தரிசிக்கும் பாக்யத்தை கொடுத்தபடியால் இந்த மலைக்கு ஒரு பெருமை ஏற்பட்டுள்ளது. எனவே, இதற்கு கருடமலை என்ற பெயர் வழங்க வேண்டும் தாங்களும் இந்த கருடாசலத்தில் எனக்கு சேவை சாதித்தது போலவே எப்போதும் சேவை சாதிக்க வேண்டும் . இந்த இரு வரங்களையும் கொடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டான்.

பகவான், "கருடா! நீ இளம்பிராயம் உள்ளவனாக இருந்த போதிலும் புத்தியால் பெரியவனாக விளங்குகிறாய். உன்னைக்காட்டிலும் உயர்ந்தவன் யாரும் இல்லை. பல முனிவர்கள் தவம் புரிந்தனர். நானும் அவர்களுக்கு ஸேவை தந்தேன். அவர்கள் வேறு எதையோ பலனாக விரும்பி வேண்டிக் கொண்டார்களே தவிர தங்களை எனக்கு வாகனமாக்கிக் கொள்ள விரும்பவில்லை. நீ விரும்பியபடி இரு வரமும் தந்தேன். உன்னை கருடன் என்றும், ஸர்ப்பங்களுக்கு சத்ரு என்றும், வேத ஸ்வரூபி என்றும், பக்ஷீராஜன் என்றும், நாராயண ரதம் என்றும் சொல்லி அழைப்பார்கள்" என்று சொல்லி, பகவான் அங்கேயே அந்தர்த்தியாமானார்.

இன்றும் கருடாத்ரியில் ஒரு குகையில் பெருமாள் அஹோபில நவ நரசிம்மர்களுள் முக்கியமானவராக அஹோபில நரசிம்மராக, உக்ர நரசிம்மராக இன்றும் சேவை சாதிக்கின்றார். குகையில் பெருமாளுக்கு எதிரே கருடன் தவ நிலையில் சேவை சாதிக்கின்றார். இவ்வாறு பெருமாள் அவதாரம் செய்த தலத்தில் நாம் எல்லோரும் உய்ய பெருமாள் கோவில் கொள்ள காரணமாக இருந்தார் கருடன். இவ்வறு மாறாத பக்தி கொண்டு பகவான் சேவையே பிரதானம் என்று அவரிடம் பூரண சரணாகதி அடைந்ததால் அவரது திருவடிகளைத் தாங்கும் பேறு பெற்றதால் , கருடாழ்வார் என்று போற்றப்படுகின்றார் விநதையின் சிறுவன்.

பெருமாள் அவதாரம் செய்த உக்ர ஸ்தம்பத்திலிருந்து கருடாத்ரியைப் பார்த்தால் அப்படியே கருடன் தன் இரு சிறகுகளையும் விரித்து மத்தியில் உயர்ந்த அல்குடனும் மூன்று பகுதிகளாகவும் அஞ்சலி ஹஸ்தத்துடன் ( கை கூப்பிய நிலையில்) நிற்பதை இன்றும் காணலாம். அஹோபிலத்தில் இன்று கருடாத்ரிக்கும் வேதாத்ரிக்கும் இடையே பிறவிப் பிணியை நீக்கும் பவ நாசினி ஆறு ஓடுகின்றது. கருடாத்ரியில் தான் நவநரசிம்மரில் இன்னொரு நரசிம்மரான பாவன நரசிம்மரும் தாயார் செஞ்சு லக்ஷ்மித்தாயாருடன் லக்ஷ்மி நரசிம்மராக சேவை சாதிக்கின்றார்.

இதுவரை ஸ்ரீமந் நாராயணின் இன்றியமையா பண்புகளையும், பெருமாள் எடுத்த நரசிம்ம அவதாரத்தின் மகிமையையும் கருடன் செய்த தவத்தின் காரணமாக பெருமாள் வந்து அஹோபில நரசிம்மராக கோவில் கண்டதையும் கண்டோம். இனி இத்திவ்ய தேச யாத்திரையைப் பற்றி காண்போம்.

Labels: , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home