Saturday, May 2, 2009

நீர்வண்ணர் கருடசேவை -2

Visit BlogAdda.com to discover Indian blogs


இந்த திருநீர்மலை திவ்ய தேசத்தில் பெருமாளை சேவித்தால் நான்கு திவ்ய தேசப்பெருமாள்களை சேவித்ததற்க்கு சமம் என்று நான் சொல்லலீங்க திருமங்கையாழ்வார் சொல்லறாருங்க, அது ஏன்னு பார்க்கலாங்களா?


அன்றாயர் குலக்கொடியோடு

அணிமாமலர்மங்கையொடு அன்பளவி அவுணர்க்கு


என்தானும் இரக்கமிலாதவனுக்கு

உறையுமிடமாவது இரும்பொழில்சூழ்


நன்றாய புனல்நறையூர்திருவாலி குடந்தை

தடம்திகழ் கோவல்நகர்


நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம்

மாமலையாவது நீர் மலையே.


ஆமாம் தோத்தாத்ரி என்றழைக்கப்பட்ட

இந்த திவ்ய தேசத்தில் பெருமாள் மலை அடிவாரத்தில் தனிக்கோவிலில்

அணிமாமலர் மங்கை சமேத நீர் வண்ணராகநின்ற கோலத்திலும்,


மலை மேல் சாந்த நரசிம்மராக இருந்த கோலத்திலும்,


அரங்க நாயகி சமேத அரங்கநாதராய் அரவணையில் மாணிக்க சயனத்தில் சதுர் புஜங்களுடன் கிடந்த கோலத்திலும்,


திரிவிக்ரமராக நடந்த கோலத்திலும் சேவை சாதிக்கின்றனர்.


அதாவது நின்றான் திருநறையூர் நம்பியையும், இருந்தான் திருவாலி நரசிம்மரையும், கிடந்தான் திருக்குடந்தை கிடந்த ஆராவமுதனையும், நடந்தான் திருக்கோவலூர் கோபாலனையும் சேவித்த பலனை நல்குகின்றனர்.

தோ என்றால் தண்ணீர் த்ரி என்றால் மலை அதாவது தண்ணீர் சூழ்ந்த மலை. ஸ்தலாதிபதி நீர்வண்ணப் பெருமாள். அரங்கநாதர் சுயம்பு திருமேனி எனவே அவருக்கு திருமஞ்சனம் கிடையாது தைலக்காப்பு மட்டும் தான். சங்கு சக்கரத்துடன் கூடிய சதுர் புஜத்துடன் எழிலாக சேவை சாதிக்கின்றார் அரங்கர். அரங்கநாதராக பெருமாள் சேவை சாதிப்பதால் மத்ய அர‘ங்கம் என்றும் அழைக்கப்படுகின்றது 2000 வருடங்களுக்கும் முற்பட்ட இத்தலம்.

மாணிக்க சயனத்தில் சதுர்புஜ அரங்கநாதர்

மலைக்கோவிலுக்கு செல்ல சுமார் 200 படிகள் ஏறிச்செல்ல வேண்டும் சிறு குன்றின் மேல் அருமையான கோவில். விமானம் தோயகிரி விமானம். கல்கி மண்டபம் கொடி மரம், மூன்று நிலை இராஜ கோபுர என்று எழிலாக விளங்குகின்றது மலைக் கோவில். பெருமாள் இத்தலத்தில் பிருகு, மார்க்கண்டேயர், வால்மீகி, தொண்டைமான் ஆகியோருக்கு பிரத்யக்ஷம்.

விமானம்: தோயகிரி விமானம்.

தீர்த்தம் : மணிகர்ணிகா தடாகம், க்ஷீர புஷ்கரிணி, காருண்ய புஷ்கரிணி, ஸித்த புஷ்கரிணி, ஸ்வர்ண புஷ்கரிணி.


மலைக்கோவில் படிகள் ஆரம்பம்

மலைக்கோவில் தோற்றம்

இனி எம்பெருமானை நீராக ஏன் உருவகப்படுத்தியுள்ளார்கள் தெரியுமா? நீர் பள்ளம் நோக்கி ஓடும் இயல்புடையது. மனதில் ஆணவம் புகுந்தால் அது மேடாகின்றது அதுவே பக்தி நிறைந்தால் பள்ளம் ஆகின்றது. ஆகவே பக்தி நிறைந்தவர்களிடம் ஓடி வருபவன் பெருமாள் என்று உணர்த்துகின்றது.


மலை மேலிருந்து புஷ்கரிணி

மலை மேலும் அடிவாரத்திலுமாக இரு கோவில்கள் இருக்க காரணம் யார் தெரியுமா? இராமாயணம் எழுதிய வால்மீகி முனிவர் தாங்க. அரங்கநாதரை தரிசனம் செய்து விட்டு கீழே வந்த வால்மீகி முனிவர் தனக்கு இராமராக சேவை சாதிக்கவேண்டுமென்று வேண்ட, அரங்க நாதர் இராமராகவும், அரங்கநாயகித் தாயார் சீதா பிராட்டியாகவும், ஆதி சேஷன் இலக்குவனாகவும், சங்கு சக்கரங்கள் பரத சத்ருகனராகவும், கருடன் ஹனுமாராகவும் சேவை சாதித்தனர். நீர் சூழ்ந்து இருந்ததால் இவருக்கு நீர் வண்ணர் என்று திருநாமம், நீல முகில் வண்ணர் என்றும் இன்னொரு திருநாமம்.

நீலமுகில்வண்ணர்


திருநீர்மலை முதல் பாசுரத்தில் தாயாரை அணிமாமலர் மங்கை என்று மங்களாசாசனம் செய்த ஆழ்வார் ஐந்தாம் பாசுரத்தில்
மாலும் கடலார மலைகுவடிட்டு அணைகட்டி
வரம்புருவ மதிசேர்
கோலமதிலாய இலங்கைகெடப் படை
தொட்டு ஒருகால் அமரிலதிர
காலமிதுவென்று அயன் வாளியினால்
கதிர்நீள்முடி பத்தும் அறுத்தமரும்
நீலமுகில்வண்ணனெமக்கிறைவர்க்கு
இடம்
மாமலையாவது நீர்மலையேஎன்றும் மங்களாசாசனம் செய்கின்றார். கருவறையில்

வால்மீகி முனிவர் அஞ்சலி ஹஸ்தத்துடன் நீர் வண்ணருடன் சேவை சாதிக்கின்றார்.
வருடத்தில் இரண்டு பிரம்மோற்சவங்கள். பங்குனி திருவோண நாளை தீர்த்த நாளாகக் கொண்டு பிரம்மோற்சவம் நீர்வண்ணருக்கு, சித்திரை திருவோண நாளை தீர்த்த நாளாக கொண்டு பிரம்மோற்சவம் அரங்கநாதருக்கு. பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு தங்க கருட சேவை நீர்வண்ணரின் கருட சேவையை இப்பதிவில் சேவிக்கின்றீர்கள் அன்பர்களே.பௌர்ணமி தோறும் கிரிவலம் நடைபெறுகின்றது. கிரி வலம் செய்து பயன் பெற்றோர் ஆயிரம்.

சொர்ண கருடனின் அந்த கம்பீரமும், பணிவும், கண்களில் தெரியும் பணிவும் அப்படியே மெய் சிலிர்க்க வைக்கின்றது. அற்புதமான சேவை.கன்றின்பின் ஓடி வரும் தாய்ப்பசு போல பக்தர் துயர் தீர்க்க கருடன் மேல் பறந்து வரும் நீல முகில் வண்ணர்.


படங்களை கிளிக்கி பெரிதாக்கி முழுமையாக சேவிக்கவும் வேதசொரூபனில் பவனி வரும் வேத முழுப்பொருளை.என்னங்க பெருமாளின் எழில் கண்டு உடனே திருநீர் மலை செல்ல வேண்டுமென்று அவா எழுகின்றதா? சென்னை வரும் போது அவசியம் சென்று சேவியுங்கள்.

எப்போதும் போல் புகைப்படங்கள் உதவி திரு. தனுஷ்கோடி அவர்கள். நன்றிகள் அவரை கருட சேவைக்கு அழைத்து சென்ற திருமலை சுவாமிகளுக்கும்.


2 Comments:

Blogger துளசி கோபால் said...

அருமையான தரிசனம்.

சேவிச்சாச்சு. படங்களையும் சேமிச்சாச்சு.

நன்றி கைலாஷி.

May 3, 2009 at 1:33 AM  
Blogger Kailashi said...

நன்றி துளசி டீச்சர் அடுத்து வரும் கருட சேவை வைத்திய வீரராகவருடையது அதையும் வந்து சேவியுங்க.

May 3, 2009 at 4:59 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home