Tuesday, November 15, 2011

நவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -2

Visit BlogAdda.com to discover Indian blogs


நாங்கள் முதலில் சென்று தரிசித்த தலம் நவபிருந்தாவனம் ஆகும் , அகிலமே புகழும் நவநிதி நல்கும் நவ பிருந்தாவனம் பாரத தேசத்தில், கர்நாடக மாநிலத்தில், கொப்பல் மாவட்டத்தில், கங்காவதி தாலுக்காவில் ஆனேகுந்தியில் துங்கபத்ரை ஆற்றின் நடுவில் உள்ள ஒரு திட்டில் அமைந்துள்ளது. நினைத்தாலும், துதித்தாலும் நமது மனக்குறைகளை நீக்கி நன்மைகளை வழங்கி நமது பிரார்த்தனைகள் நிறைவேற செய்யும் நவபிருந்தாவான மஹான்கள் யார் என்று முதலில் காணலாமா அன்பர்களே?

(கீழே உள்ள மகான்களின் குறிப்புகள் எல்லாம் அம்மன் சத்தியநாதன் நூலில் உள்ளவை, சுருக்கி கொடுத்துள்ளேன், முழுதும் தெரிந்து கொள்ள விழையும் அன்பர்கள் அவர் நூலை வாங்கிப் படித்துக் கொள்ளலாம்.)

இவர்கள் அனைவரும் தர்மத்தை நிலைநாட்டிட ஸ்ரீஹரி அவதாரம் செய்த போது அவருடன் அவதாரம் செய்த வாயு பகவானின் அம்சமான மத்வாச்சாரியாரின் சீடர்கள் ஆவார்கள். த்ரேதா யுகத்தில் ஸ்ரீராமனுடன் அனுமனாகவும், த்வாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணருடன் ஸ்ரீபீமனாகவும், கலியுகத்தில் ஸ்ரீ வியாசருடன் ஸ்ரீமத்வராகவும் அவதாரம் செய்துள்ளார் வாயு பகவான்.

1. ஸ்ரீ பத்மநாப தீர்த்தர் (1317-1324) . நவபிருந்தாவனத்தில் முதல் பிருந்தாவனம் கொண்ட ஸ்ரீமத்வமதயதி. காகதீய ராஜனின் அமைச்சராக இருந்த ஸோபன பட்டர் வியாகரணம், தர்க்கம் போன்றவற்றில் மிகச்சிறந்து விளங்கினார். ஒரு தடவை மத்வாச்சாரியார் காகதீய அரசவைக்கு வந்த போது மத்வர் இவரை வாதத்தில் வென்றார் அதன் பின் இவர் மத்வரின் சீடரானார். மத்வாச்சாரியாரின் பிரதான சீடர்கள் நால்வரில் இவர் முதல்வர்.

(அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ள காலம் இந்த மகான்கள் பீடத்தில் இருந்த காலங்கள் ஆகும்)2. ஸ்ரீ ஜய தீர்த்தர் (1365 -1388) / ஸ்ரீ ரகுவர்யர் (1502 – 1537): இரண்டாவது பிருந்தாவனம் ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தரின் ( மத்வாச்சாரியாரின் நான்கு சீடர்களுள் ஒருவர்) சீடரான ஸ்ரீ ஜய தீர்த்தருடையதா? அல்லது ஸ்ரீ ரகுவர்யரின் பிருந்தாவனமா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. நாம் இரண்டு மகான்களையும் மனதில் தியானித்து இரட்டிப்பு நன்மை அடைவோமாக. இதில் ஸ்ரீ ஜய தீர்த்தர் மத்வாச்சாரியாரின் காலத்தில் கிரந்தங்களை சுமக்கும் எருதுவாக இருந்து அடுத்த பிறவியில் தோண்டு பந்த் என்னும் அரசகுமாரனாக பிறந்து அக்ஷோப்ய தீர்த்தரின் சீடராகி மத்வாச்சாரியாரின் ஸர்வ மூல கிரந்தங்களுக்கு உரையெழுதிய மகான் ஆவார்.
3. ஸ்ரீ கவீந்த்ர தீர்த்தர் (1392 – 1398): மூன்றாவதாக இங்கு பிருந்தாவனம் கொண்ட இவர் ஸ்ரீ ஜய தீர்த்தரின் சீடரான ஸ்ரீ வித்யாதிராஜரின் சீடர் ஆவார், இவரது பாண்டியத்தையும் ஞானத்தையும் கண்டு ஸ்ரீ வித்யாதிராஜர் இவருக்கு ஸன்யாசமளித்து பீடாதிபதியாக்கினார்.4. ஸ்ரீ வாகீச தீர்த்தர் (1398 – 1406) : இவர் கவீந்த்ர தீர்த்தரின் சீடர். தனது குருவைப்போலவே பாண்டித்யம் கொண்டவர். இவர் தனது குருவின் அருகிலேயே நவபிருந்தாவனத்தில் பிருந்தாவனஸ்தராகி அருளுகின்றார்.
5. ஸ்ரீ வியாஸராஜர் (1447 – 1539) : நவபிருந்தாவனத்தில் நடு நாயகமாக ஸ்ரீ பிரகலாதர் தவம் செய்த அதே இடத்தில் பிருந்தாவனம் கொண்டவர் இவர். முன் அவதாரத்தில் இவரே பிரகலாதன், பின்னர் இவரே நாம் எல்லோரும் உய்ய இராகவேந்திரராக திருஅவதாரம் செய்தார். ஸ்ரீ வியாஸராஜரின் காலம் விஜய நகர சாம்ராஜ்யத்தின் பொற்காலமாகும். நரஸப்பன், வீர நரசிம்மன், கிருஷ்ண தேவராயர் மற்றும் அச்சுதராயர் என்னும் நான்கு அரசர்களுக்கு ராஜகுருவாக இருந்தவர் இவர். கிஷ்கிந்தை பகுதியான ஹம்பியில் சுக்ரீவரை முதன் முதலாக சந்தித்த துங்கபத்ரா நதியின் சக்ர தீர்த்தக் கரையில் ஸ்ரீ கோதண்டராமர் சீதாவுடனும், இளவல் இலக்குவனுடனும் அனுமன் இல்லாமல் சுக்ரீவனுடன் சேவை சாதிக்கும் திருக்கோவிலின் அருகில் யந்ரோத்ர ஹனுமனை நாம் எல்லோரும் உய்ய பிரதிஷ்டை செய்த மகான். அவர் பாரத தேசமெங்கும் மொத்தம் 731 ஹனுமனை பிரதிஷ்டை செய்தவர் ஆவார். ஒரு சமயம் கிருஷ்ணதேவராயர் ஆண்டு கொண்டிருந்த போது அரச பதவியில் இருப்பவர்களை தாக்கும் குஹ யோகம் நெருங்கியது. விஜயநகர சாம்ராஜ்யத்தை தனது அருளாசியின்படி ஆண்டுவரும் கிருஷ்ணதேவராயருக்கு குஹ யோகத்தினால் ஏதும் தீங்கு ஏற்படக்கூடாது என்று ஸ்ரீ வியாஸராஜர் ஒரு நாளில் சிம்மாசனம் ஏறி குஹ யோகமாக வந்த சர்ப்பத்தின் மீது தனது கஷாய வஸ்திரத்தை வீசி குஹ யோகத்திலிருந்து கிருஷ்ணதேவரையும் மாபெரும் இந்து சாம்ராஜ்ஜியத்தையும் காப்பாற்றிய மகான் ஆவார். மேலும் சீனப்ப நாயக் ஆக இருந்தவர் ஸ்ரீஹரி அருளினால் மனம் மாறி வந்த போது அவரை புரந்தரதாசராக்கி தாச கூட்த்தையும் வளர்த்தவர் இவர். இவரது பிருந்தாவனம் நவபிருந்தாவனத்தில் நடு நாயகமாக அமைந்துள்ளது மேலும் இவரது பிருந்தாவனத்திற்கு முன்னர் அலங்கார தூண்கள் அமைந்துள்ளன. இவருக்கு காட்சி அளித்த வண்ணம் உள்ளார் ஸ்ரீ அவதாரத்ரய ஹனுமார்.
6. ஸ்ரீ ஸ்ரீநிவாஸ தீர்த்தர் (1539 – 1564): இவர் ஸ்ரீ வியாஸராஜ சுவாமிகளின் பூர்வாச்ரம தமக்கையின் மகன் மற்றும் சீடர் ஆவார். இன்றைக்கு ஸ்ரீ வியாஸராஜரைப் பற்றிய பல செய்திகளை நாம் அறிந்து கொள்ள உதவியாக இருப்பது இவர் எழுதிய ஸ்ரீவியாஸ விஜயம் என்னும் நூல்தான்.7. ஸ்ரீ ராமதீர்த்தர் (1564 – 1584) : இவர் ஸ்ரீ ஸ்ரீநிவாஸ தீர்த்தருக்குப் பின் பட்டத்திற்கு வந்தார். இவர் வியாஸராஜர் அருளிய கிரந்தங்களை போதிப்பதிலும், பிரவசனம் செய்வதிலும் பெரும் பங்காற்றினார். ஸ்ரீ வியாஸராஜர், ஸ்ரீ ஸ்ரீநிவாஸ தீர்த்தர், ஸ்ரீ இராம தீர்த்தர் மூவரும் அடுத்தடுத்து பட்டத்திற்கு வந்து நவபிருந்தாவனத்தில் “ ஃ ” வடிவில் பிருந்தாவனஸ்தராகி இருப்பது வெகு சிறப்பு.

8. ஸ்ரீ ஸுதீந்த்ர தீர்த்தர் (1614 – 1623) : காமதேனுவாய், கற்பக விருக்ஷமாய் திகழும், இன்றைக்கு பூலோகமே மெய்மறந்து கொண்டாடும் ஸ்ரீஸ்ரீ ராகவேந்த்ர ஸ்வாமிகளை நமக்கு தந்தருளியவர் ஸ்ரீஸுதீந்த்ர தீர்த்தர். ஆம் இவர்தான் ஸ்ரீஇராகவேந்திர்ரருக்கு சன்யாசம் அளித்தவர். ஸ்ரீஇராகவேந்திரரின் அவதார ரகசியத்தை அறிந்து கனவில் ஸ்ரீஇராமபிரான் கட்டளையிட்டபடி வேங்கடநாதனாக இருந்த போது மறுத்தவரை விடாப்பிடியாக எடுத்துரைத்து தன் குருவின் அவாவை நிறைவேற்றியவர் இவர். இவரை வணங்க நமது தேவைகள் எல்லாம் இவர் அருளால் நிறைவேறும்.

9. ஸ்ரீ கோவிந்த ஓடயர் (1534): இவர் ஸ்ரீவியாஸராஜரின் சமகாலத்தவர், அவருக்கு முன்பே இங்கு பிருந்தாவனஸ்தரானவர். ஆயினும் பட்டியலில் ஐந்தாவதாக வரவேண்டிய இவரை கடைசியில் கூறுவது இவர் பட்டத்திற்கு வராததால் இருக்கலாம். கிருஹஸ்தராக இருந்து குடும்பத்திற்குண்டான கடமைகளை செய்யாமல் சுற்றித் திரிந்தவரை பக்குவப்படுத்தி சன்யாசம் அளித்தவர் ஸ்ரீவியாஸராஜர்.

இப்பதிவில் உள்ள படங்கள் எல்லாம் இவர்கள் யாத்திரை சென்ற போது எடுத்த படங்கள். திரு.A.P. வெங்கட்ராஜ் அவர் புத்திரன் V.ஹரிஷ். (பிருந்தாவனங்கள் மாறி இருக்கலாம், மன்னிக்கவும்)

இவ்வாறு சுமார் 300 ஆண்டுகள் இடைவெளியில் நவபிருந்தாவனம் உருவாகியது. இந்த நவ பிருந்தாவன நாயகர்களை நம்பிக்கையுடனும், நிஜ பக்தியுடனும் வழிபட அவர்களின் பரிபூரண அருள் நமக்கு கிட்டும். நாம் பல ஜென்மங்களில் செய்த புண்ணியத்தின் பலனால்தான் நமக்கு இந்த பாக்கியம் சித்திக்கும்.

Labels: , ,

2 Comments:

Blogger மாதேவி said...

நவபிருந்தாவனம் தர்சிக்கக் கிடைத்தது. மகிழ்ச்சி.

தொடர்கின்றேன்.

November 24, 2011 at 4:17 AM  
Blogger Kailashi said...

மிக்க நன்றி மாதேவி

November 24, 2011 at 4:43 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home