Thursday, July 8, 2010

கள்வனை திருத்திய கருட சேவை

Visit BlogAdda.com to discover Indian blogs
வேடுபறி உற்சவம்

பன்னிரு ஆழ்வார்களுள் கடைகுட்டி திருமங்கையாழ்வார், அதிகமான திவ்ய தேசங்களில் உள்ள அர்ச்சா மூர்த்திகளை மங்களாசாசனம் செய்த பெருமை இவருக்கு உண்டு, அதல்லாமல் மற்ற ஆழ்வார்களைப் போல் இல்லாமல் இவருக்கு உள்ள ஒரு தனி சிறப்பு பெருமாளிடமே திருமந்திர உபதேசம் பெற்றதுதான், இவ்வைபவம் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தின் போது வேடுபறி உற்சவம் என சிறப்பாக திருவாலி திருநகரி திவ்ய தேசத்தில் சிறப்பாக நடைபெறுகின்றது. இந்த அற்புத வைபவத்தின் சில காட்சிகள் இப்பதிவில் கண்டு களியுங்கள்.



முழுக்கதையையும் படிக்க இங்கே செல்லுங்கள் வேடுபறி உற்சவம்





திருவாலி-திருநகரி இரண்டும் தனித் தனி ஆலயங்கள் என்றாலும் இரண்டும் இனைந்து ஒரு திவ்ய தேசமாக கருதப்படுகின்றது. ஆலிங்கனபுரம் என்று அழைக்கப்படும் திருவாலியில் பெருமாள் லக்ஷ்மி நரசிம்மராக சேவை சாதிக்கின்றார். இத்தலம் பஞ்ச நரசிம்ம ஷேத்திரங்களில் ஒன்று. இத்தலத்தில் வலத்தொடையில் பெருமாளை வணங்கிய கோலத்தில் பெரிய பிராட்டியார் சேவை சாதிக்கும் அற்புத தரிசனத்தை சுதை வடிவில் காணுகின்றீர்கள் இங்கே.


திருநகரியில் இருந்து கல்யாண ரங்கநாதரும் அம்ருதவல்லித்தாயாரும் கள்வனாக இருக்கும் திருமங்கை மன்னனை திருத்திப் பணிகொள்ள திருவாலிக்கு திருமணக் கோலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அழகு. வேடுபறி உற்சவத்தின் ஒரு முக்கிய நிகழ்ச்சி திவ்ய தம்பதியரின் திருக்கல்யாணம் தான்.

திருக்கல்யாண கோலத்தில் திவ்ய தம்பதிகள்

பெருமாளின் பின்னழகு

திருவாலியில் சிறப்பாக நாம் எல்லோரும் உய்ய திருக்கல்யாணம் நடைபெறுகின்றது. புது திருமாங்கல்யத்துடன் அமிர்தவல்லித் தாயார் சேவை சாதிக்கும் அழகு.


பங்குனி உற்சவ திருவிழா 10 நாள் திருவிழாவாக நடைபெறுகின்றது. இத்திருவிழாவின் 9ம்நாள் இரவு வேடுபறி உற்சவம். பகலில் திருவாலியில் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது. இரவு வேடுபறி உற்சவம். மறுநாள் காலையில் பங்குனி உத்திரத்தன்று பெருமாளும் ஆழ்வாரும் தனித்தனித் தேரில் சேவை சாதித்தருளுகின்றனர் பின் தீர்த்தவாரி கண்டருளுகின்றனர் .


பல்லக்கில் புதுமணக்கோலத்தில் திவ்ய தம்பதிகள்

திருக்கல்யாணம் முடிந்து பல்லக்கில் உடல் மறைத்து முகமண்டலம் மட்டும் காட்டி கள்வனிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள ( கள்வனாக உள்ள நீலனைத் திருத்திப் பணி கொள்ள அல்லவா?) பெருமாளும் தாயாரும் தங்கள் திருப்பாதம் பூமியில் பட நடந்து வந்தனர், இன்று அவர்கள் பல்லக்கில் வரும் காட்சி. பெருமாள் வேதராஜ புரம் என்னும் கிராமத்தில் வந்து தங்குகின்றார்.

இங்கே திருநகரியில் கருடசேவைக்காக தங்க கருடன் தயாராக உள்ளான் அதே சமயம் திருமங்கை மன்னர் தமது ஆடல்மா என்னும் பஞ்ச கல்யாணி குதிரையில் காட்டு வழியில் வருபவர்களை கொள்ளையடிக்க தயாராக உள்ளார்.

திருநகரி தங்க கருடன்


நள்ளிரவில் திருமங்கை மன்னனின் தோழர்களான நீர் மேல் நடப்பான், நிழலிலொதுங்குவான், தாளூதுவான், தோலாவழக்கன் ஆகிய நால்வரும் புதுமணத்தம்பதிகள் நிறைய நகைகளுடன் வந்து கொண்டிருப்பதை தயாராக காத்திருக்கும் நீலனிடம் வந்து இவ்வாறு கூறுகின்றார்.

ஜெயவியி பவா, ஆலி நாடா பராக், மங்கை மன்னா பராக், குமுத வல்லி மனதிற்கு பிரியமானவரே, மங்கை மன்னரே காட்டு வழியில் புதுமணத்தம்பதிகள் நிறைய வைணவர்களுடன் வந்து தங்கியுள்ளனர் . அவர்கள் மேனி முழுவதும் தங்க நகைகளாக மின்னுகின்றது, தாங்கள் வந்து கொள்ளையடித்தால் ததியாரதனைக்கு ஆகும் என்று தூது கூறுகின்றனர்.


ஆடல்மாவின் முன்னழகு

உடனே ஆயிரக்கணக்கான தீவட்டிகளின் ஒளியில் ஆடல்மாவில் கொள்ளைக்கு திருமங்கை மன்னர் புறப்படுகின்றார். திருநகரி கிராம இளைஞர்கள் அனைவரும் தீவட்டி தாங்கி, ஆ! ஆ! ஊ! ஊ! என்று சத்தம் எழுப்பிக் கொண்டு முன் செல்ல பின்னர் கையில் ஈட்டி தாங்கி பின் செல்கின்றார் மங்கை மன்னர்.

வித விதமான தீவட்டிகள் முன் செல்கின்றன.

திருமங்கை மன்னரின் வடிவழகு

அணைத்த வேலும், தொழுத கையும், அழுந்திய திருநாமமும்,

ஓம் என்ற வாயும், உயர்ந்த மூக்கும், குளிர்ந்த முகமும்,

பரந்த விழியும், பதித்த நெற்றியும், நெறித்த புருவமும்

சுருண்ட குழலும், வடிந்த காதும் அசைந்த காது காப்பும்,

தாழ்ந்த செவியும், சரிந்த கழுத்தும், அகன்ற மார்பும்,

திரண்ட தோளும் நெளித்த முதுகும், குவிந்த இடையும்,

அல்லிக்கயிறும், அழுந்திய சீராவும், தூக்கிய கருங்கோவையும்

தொங்கலும் தனி மாலையும், தளிருமிளிருமாய் நிற்கிற நிலையும்

சாற்றிய திருத்தண்டையும், சதிரான வீரக்கழலும்,

தஞ்சமான தாளினையும், குந்தியிட்ட கனைக்காலும்,

குளிர வைத்த திருவடி மலரும், வாய்த்த மணங்கொல்லையும்,

வயலாளி மணவாளனும், வாடினேன் வாடி (என்று)

வாழ்வித்தருளிய , நீலிக்கலிகன்றி, மருவலர்தம் உடல் துணிய

வாள் வீசும் பரகாலன், மங்கை மன்னனான வடிவே.


ஆடல் மாவில் ஆலி நாடரின் அற்புத சேவை

ஆடுகின்றதா ஆடல்மா??

ஆழ்வாரை ஏழப்பண்ணும் அன்பர்கள் அப்படியே குதிரையில் டக் டக் என்று ஆழ்வார் செல்வது போலவே பரிகதியில் ஏழப்பண்ணும் அழகை சொல்வதா, ஆயிரக்கணக்கான தீவட்டிகள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து செல்லும் அழகைச் சொல்வதா? பட்டர்கள் இருவர் ஆழ்வாருக்கு கவரி வீசும் அழகைச் சொல்வதா? ஆழ்வார் ஆடி வரும் அழகை வார்த்தைகளில் வர்ணிப்பது சாத்தியமல்ல நேரில் சென்று தரிசித்தால் தான் அந்த அற்புத உணர்வைப்பெற முடியும். அப்படியே குதிரை ஒடும் போது எப்படி முன்னும் பின்னும் அதில் அமர்ந்திருப்பவர் ஆடுவாரோ அது போல முழு நிலவு மேலே தனது பதினாறு கலைகளுடன் ஒளிர ஆயிரம் தீவட்டிகளின் ஒளியில் முகம் சிவந்து ஒய்யாரமாக வருகின்றார் மங்கை மன்னர் .

ஆடல்மாவின் பின்னழகு


ஆழ்வாரின் பின்னழகு

அந்த கொண்டையும், சடையும் அதில் மலர்களும். மேலங்கியின் அழகும், அற்புத நவரத்ன நகைகளும் இடையில் வாளும், கட்டாரியும், முதுகில் கேடயமும். கையில் வில்லும், திருப்பாதங்களில் இராஜ பாதுகைகளும் விளங்க, ஒரு கரத்தில் பஞ்ச கல்யாணிக் குதிரையை செலுத்தும் பாங்கும், மறு கையில் ஈட்டியும் விளங்க, நீல நிற ரத்ன அங்கியில் நீலன் வரும் அழகை எப்படி வர்ணிப்பது. தாங்களே பார்த்து அனுபவியுங்கள் என்று எல்லா கோணங்களிலும் படும் எடுத்து தந்துள்ளார் அன்பர், அடியேன் நண்பர் திரு தனுஷ்கோடி அவர்கள்.

அற்புதமாக ஆடல்மாவில் ஆலிநாடன் வந்து கொண்டிருக்கும் போது அங்கே வேதராஜபுரம் என்னும் இடத்தில் ஒரு பெரிய மைதானத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் பெருமாளும் தாயாரும் கருடனும் காத்திருக்கின்றனர். கூடவே திருமாலடியார்களின் கூட்டமும் வழி மேல் விழி வைத்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர் எப்போது ஆழ்வார் வருவார் என்று.


நகைகளை மறைக்க முகம் மட்டும் காட்டும்
திவ்ய தம்பதிகள்




திவ்ய தம்பதிகள் தங்கியிருக்கும் தற்போதைய வேதராஜபுரத்தை ( அன்று திருமணங்கொல்லை) அடைய அடைய ஆலி நாடனின் வேகம் அதிகமாகின்றது, மைதானத்தில் நுழையும் போது அப்படியே ஒரு புயல் வேகத்தில் வருகின்றார் மங்கை மன்னன். வேக வேகமாக பெருமாளை சுற்றத் தொடங்குகிறார். உடனே அருமையான வாணவேடிக்கைகள் ஆரம்பமாகின்றது. மிக வேகமாக இரண்டாவது சுற்று வரும் போது பெருமாள் மண்டபத்தில் இருந்து இறங்கி வந்து மந்திரோபதசம் தர இறங்கி வருகின்றார். மூன்று சுற்றுகள் முடித்ததும் நடந்தது என்ன என்று பார்ப்பதற்கு முன் அன்று என்ன நடந்தது என்று பார்ப்போமா?



புது மணத்தம்பதிகளாக திருமேனி முழுவதும் நகைகளுடன் மற்ற சுற்றத்தார்களுடன் திருப்பாதம் மன்ணில் பட பெருமாளும் பெரிய பிராட்டியாரும் நடந்து வரும்போது ஆடல்மாவில் வேகமாக வந்த ஆலி நாடன் வாள் கொண்டு அவர்களை மிரட்டுகின்றார். எல்லா நகைகளையும் கழற்றிக்கொடுக்குமாறு, மங்கை மன்னரின் மிடுக்கையும் மிரட்டும் தொனியையும் கண்டு பயந்தவர் போல் பெருமாள் எல்லா நகைகளையும் கழற்றிக் கொடுத்து தன் மனைவியையும் அவ்வாறே செய்யச் சொல்கின்றார். பெருமாள் கால் விரலில் உள்ள மெட்டி மட்டும் அப்படியே இருக்கின்றது, அதையும் விட மனமில்லாமல் கழற்றிக் கொடுக்க ஆனையிடுகின்றார். மணமகனோ, நீயே கழற்றிக் கொள் என்று கூற கையால் கழற்ற முடியாத்தால் வாயால் கடித்து கழற்றுகிறார். அதைக் கண்டு பெருமாள் அவரை கலியன் என்று அழைக்கிறார் ஆலி நாடருக்கு பெருமாளின் திருவடி சேவையும் கிட்டுகின்றது. பின் எல்லா நகைகளை மூட்டையாகக் கட்டி தூக்க முயன்ற போது அவரால் தூக்க முடியவில்லை என்பதால் . மணமகனை பார்த்து என்ன மந்திரம் போட்டாய்? என்று வெருட்ட மந்திரம் உபதேசம் செய்யத்தானே வந்திருக்கின்றேன் என்று அவர் காதில் "ஓம் நமோ நாராயணா" என்னும் அஷ்டாத்திர மந்திரத்தை உபதேசிக்கின்றார் பெருமாள். மந்திரோபதசம் பெற்ற கள்வன் ஆழ்வாராக மாறுகின்றார். அன்றிலிருந்து பெருமாளுக்கு தன் சேவையை தொடங்குகின்றார். திவ்ய தேசங்கள் தோறும் சென்று பெருமாளை மங்களாசாசம் செய்யத் தொடங்குகின்றார். ஆழ்வாருக்கு அர்ச்சாவதாரத்திலே மிகவும் ஈடுபாடு.




மங்கை மன்னன் இரண்டாம் சுற்று வரும் போது பெருமாள் மண்டபத்தில் இருந்து இறங்கி மைதானத்தின் நடுவே வந்து நிற்கின்றார். வேக வேகமாக சுற்றி வந்த ஆலி நாடன் வாள் கொண்டு வெருட்டுவது போல முன்னும் பின்னும் ஆவேசமாக செல்கின்றார். மூன்றாவது இவ்வாறு செல்லும் போது பல்லக்கிடம் அப்படியே சிறிது குனிந்து மந்திரோபதேசம் பெறுகின்றார் ஆழ்வார். பின்னர் ஆழ்வார் ஒரு மண்டபத்திற்கு சென்று பெருமாள் கருடனில் வருவதற்காக காத்திருக்கின்றார்.

கள்வனைத் திருத்திய கருட சேவை

இந்த வேடுபறி உற்சவ கருட சேவையின் ஒரு தனி சிறப்பு தாயாரும் பெருமாளும் ஒன்றாக சேர்ந்து திருகல்யாணக் கோலத்தில் சேவை சாதிப்பதுதான். முதல் தடவையாக அடியேன் தாயார் மற்றும் பெருமாளின் கருட சேவையை கண்டு மகிழ்ந்தேன் இதைக் காணும் தாங்களும் பேறு பெற்றவர்கள் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.

திவ்ய தம்பதிகளின் திவ்ய கருட சேவை

பெருமாளை கருட வாகனத்தில் ஏழப்பண்ணி அலங்காரம் செய்யும் நேரத்தில் ஆழ்வார் ஒரு தனி மண்டபத்தில் சென்று தங்குகின்றார். மைதானத்தில் இருந்த திருமாலடியார்கள் அங்கு சென்று ஆழ்வாரை சுற்றி வந்து சேவித்து ஆழ்வாரின் சௌந்தர்யத்தில் திளைக்கின்றனர். தாங்கள் கீழே காணும் ஆழ்வாரின் திருக்காட்சிகள் மண்டபத்தில் எடுக்கப்பட்டவை. ஆழ்வாரின் திருமுக மண்டலத்தில் சாந்த ஸ்வரூபம் இப்போது தெரிகின்றதா?



பெருமாள் கருடவாகனத்தில் தாயாருடன் சேவை சாதித்து வரும் போது ஆழ்வார் அன்ன நடை போட்டு அவர்களை சுற்றி வந்து சேவித்து நிற்கின்றார். இப்போது அவர் திருமுக மண்டலம் சாந்தமாக விளங்குவதைக் கண்கூடாகக் காணலாம். முன்பு வேக வேகமாக பாய்ந்து ஆடல்மாவில் வந்த ஆழ்வார் இப்போது மெதுவாக வருகின்றார். தாம் இந்த பூவுலகில் வந்த நோக்கத்தை தானே தந்து திவ்ய தம்பதிகள் உணர்த்திய பிறகு மெய்ப்பொருளுணர்ந்து

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்

பெருந்துயரிடும்பையில் பிறந்து

கூடினேன் கூடி இளையவர் தம்மோடு

அவர்தரும் கலவியே கருதி

ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்

உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து

நாடினேன் நாடிக் கண்டு கொண்டேன்

நாராயணாவென்னும் நாமம்

என்று பாசுரங்கள் பாடத் தொடங்கி வடமொழி வேதங்கள் நான்குக்கொப்பான நம்மாழ்வாரின் அருளிச் செயல்களுக்கு ஆறு அங்கங்கள் போன்று பெரிய திருமொழி, திருகுறுந்தாண்டகம், திடுநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் என்னும் ஆறு திவ்விய நூல்களை அருளினார்.

ஆகவே வைணவர்கள் அனைவரும் ஆழ்வாரின் முதல் பாசுரத்திலிருந்து தொடங்கி சேவித்துக்கொண்டே திருநகரி வந்தடைகின்றனர். இவ்வாறு வேடுபறி உற்சவம் ஆண்டு தோறும் சிறப்பாக பத்து நாள் திருவிழாவாக சிறப்பாக திருவாலி- திருநகரியில் நடைபெறுகின்றது. தங்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் சென்று வேடுபறி சேவித்து விட்டு வாருங்கள் நிச்சயம் அந்த தெய்வீக உணர்வை தங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டீர்கள்.

திருத்தேரில் பரிமள ரங்கநாதர்.

வேடு பறி உற்சவத்திற்காக எங்களை அழைத்து சென்றவர் சென்னை நங்கநல்லூரை சேர்ந்த திருமலை சுவாமி இராமானுஜ தாசர் அவர்கள். வேடுபறி அன்று அதிகாலை சென்னையிலிருந்து கிளம்பி புவனகிரியில் இராகவேந்தரின் அவதார ஸ்தலத்தை சேவித்து பின் தில்லை சித்ரக்கூடத்தில் தில்லை கோவிந்தர், பார்த்த சாரதி, சித்ரகூடத்துள்ளனை திவ்யமாக சேவித்து, சீர்காழியில் தடாளனை ( சேவிக்க முடியவில்லை) திவ்ய தேசம் சென்று பின் திருநகரி அடைந்து இராமானுஜ கூடத்தில் அமுதுண்டு திருவாலியில் லக்ஷ்மி நரசிம்மரை சேவித்து. வயலாளி மணவாளன் அம்ருதவல்லித் தாயார் திருக்கல்யாணம் சேவித்து அங்கிருந்து திருத்தேவனார்தொகைசென்று மாதவப்பெருமாளை சேவித்து, அடுத்து வெள்ளக்குளம் சென்று அண்ணன் பெருமாளை சேவித்து பின்னர் திருமங்கையாழ்வார் நாள் தோறும் ஆயிரம் வைணவர்களுக்கு ததியாராதனம் செய்த மங்கைமடம் வந்து உபய நாச்சியார்களுடன் சேவை சாதிக்கும் வீரநரசிம்மரை சேவித்து அங்கே வாளும், கேடயமும் கொண்டு வீராவேசமாக சேவை சாதிக்கும் ஆழ்வாரையும் சேவித்து. பின் அங்கிருந்து ஆழ்வாரின் அவதார ஸ்தலமான திருக்குறையலூர் சென்று அங்கு ஆஹ்வான முத்திரையுடன் நம்மை அழைத்து நம் குறைகளை களையும் உக்ர நரசிம்மரையும் சேவித்து பின் திரு நகரி வந்து அங்கு சேவை சாதிக்கின்ற ஆழ்வார் ஆராதித்த ஹிரண்ய நரசிம்மரையும், யோக நரசிம்மரையும் சேவித்து பஞ்ச நரசிம்ம தரிசனம் ஒரே நாளில் கண்டோம். நள்ளிரவில் வேடுபறி சேவை சேவித்து, பின் மாயவரம் வந்து தங்கினோம்.

மறுநாள் காலை திருஇந்தளூரில் பரிமள ரங்கநாதரை திருத்தேரில் சேவித்து, அங்கிருந்து கிளம்பி தேரழுந்தூர் வந்து ஆமருவியப்பன் சௌந்தரியம் கண்டு சேவித்து அங்கிருந்து நாச்சியார் கோவில் வந்து திருத்தேரோட்டம் சேவித்து அங்கிருந்து பஞ்ச சார ஷேத்திரமான திருச்சேறை சென்று சாரநாதரை சேவித்து திரும்பிவந்து ஒப்பிலியப்பனின் திவ்ய தரிசனமும் பெற்று பின் திருவரங்கம் கிளம்பினோம்.

உபய நாச்சியார்களுடன் பரிமளரங்கநாதர்

ஒப்பிலியப்பன் கோவில் தங்க கருடன்

நாச்சியார் கோவில் திருத்தேர்

திருவரங்கத்தில் பங்குனி உத்திரத்தன்று ஒரு முக்கியமான உற்சவம் நடைபெறுகின்றது. அது வருடத்தில் ஒரு நாள் மட்டுமே கிடைக்கும் பெருமாள் தாயார் சேர்த்தி சேவை. திருவரங்கத்தில் நம்பெருமாள் அரங்கநாயகித்தாயார் சேர்த்தியையும் திவ்யமாக மிக அருகில் சென்று சேவித்து அன்றிரவே சென்னை திரும்பினோம். கீழே சில சேர்த்தி படங்கள்











இவ்வாறு பஞ்ச நரசிம்மர் தரிசனம், வேடுபறி உற்சவம் திருவரங்கம் சேர்த்தியுடன் ஒரு சிறிய சோழநாட்டு திருப்பதிகளின் திவ்ய யாத்திரையும் அமைத்துக் கொடுத்த திருமலை நம்பி சுவாமிகளுக்கும், அதை படங்களில் அழகாக பிடித்துக்கொடுத்த தனுஷ்கோடி அவர்களுக்கும், சேர்த்தி படங்கள் கொடுத்து உதவிய திரு. S.A. நரசிம்மன் அவர்களுக்கும் இதையெல்லாம் வந்து சேவித்த தங்களுக்கும் மிக்க நன்றிகள். வரும் பதிவில் இன்னொரு கருட சேவையுடன் சந்திப்போம்.

Labels: , , ,

4 Comments:

Blogger குமரன் (Kumaran) said...

ஆகா. திவ்ய தேச யாத்திரை மிக அருமை. எல்லா விவரணங்களுடன் சொன்னதற்கு நன்றி ஐயா. தாயாருடன் பெருமாள் வரும் கருட சேவையை அடியேனும் இன்று தான் கண்டேன்.

July 8, 2010 at 4:01 PM  
Blogger S.Muruganandam said...

பங்குனி உத்திரம் என்றாலே சேர்த்திதானே? திவ்ய தம்பதிகளின் அருள் அனைவருக்கும் கிட்ட பிரார்த்தனை செய்வோம் குமரன் ஐயா.

July 9, 2010 at 1:21 AM  
Blogger ராம்ஜி_யாஹூ said...

many many thanks for sharing

could you please write about Nanaganalur, madippakkam, keelakatalai perumal koils too

July 9, 2010 at 3:53 AM  
Blogger S.Muruganandam said...

Adiyen will write about these temples when adiyen get a chance to visit these temples.

you can see the Garuda Sevai photos of these temples here

Nanganallur Garuda Sevai

July 9, 2010 at 9:44 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home