அஹோபில யாத்திரை
காரஞ்ச நரசிம்மர்
( கையில் வில், முக்கண், ஆதிசேஷன் குடையுடன் சேவை)
மேல் அஹோபிலம் செல்லும் வழியில் அமைந்துள்ளது துர்வாச முனிவரால் சபிக்கப்பட்ட கபில முனிவர் வழிபட்ட காரஞ்ச நரசிம்மர் ஆலயம். ஞானம் பெற இவரை வணங்க வேண்டும். இத்தலத்தில் உயர்ந்த ந்ருஸிம்ஹ மந்திரத்தை ஜபிக்கின்றவர்களுக்கு வேண்டிய பலன் கிடைக்கும் என்பது பெருமாள் வாக்கு. மேல் அஹோபிலம் செல்லும் போது பவநாசினி ஆற்றை ஒட்டி செல்லும் பாதையின் மறுபுறம் கோயில் அமைந்துள்ளது. இங்கு பவநாசினி ஆற்றில் குளிப்பவர்கள் அல்லது குளிக்க நினைப்பவர்கள் விரும்பிய பலனைப்பெறுவர்.
நரசிம்மராக புங்க வனத்தில் சிறிய திருவடியான அனுமன் தவம் செய்ய அவருக்காக நரசிம்மர் இங்கே சேவை சாதித்தார். ஆனால் இராம நாமம் எப்போதும் தன் காதில் ஒலிக்க வேண்டும் என்பதற்காகவே பூலோகத்தில் தங்கிய அனுமன் இராமராக சேவை சாதிக்க வேண்டும் என்று வேண்ட வில் அம்புகளுடன் இராமராகவும், சிம்ம முகம் மூன்று கண்களுடன் நரசிம்மராகவும், ஒற்றைத்தலை நாகம் குடைப் பிடிக்க விஷ்ணு ரூபராகவும் ஒரே சமயத்தில் சேவை சாதிக்கின்றார் காரஞ்ச நரசிம்மர். பெருமாளுக்கு எதிரே கருடன் எப்போதும் போல் அஞ்சலி ஹஸ்தத்துடன் சேவை சாதிக்கின்றார்.
அருகே அனுமனுக்கு ஒரு தனி சன்னதி அதில் அனுமன் சங்கு சக்ரங்களுடன் சேவை சாதிக்கின்றார். ஆனால் இரண்டும் இடம் மாறியிருக்கின்றனவே, இராவண வதத்திற்காக ஸ்ரீநரசிம்ம மூர்த்தி ஆலிங்கனம் செய்ததால் பெருமாள் கையில் இருந்த சங்கு சக்ரங்கள் இப்படி நமக்கு காட்சி அளிக்கின்றன. சந்திரன் வழிபட்ட பெருமாள், நவந்ருஸிம்ஹர்களில் ஐந்தாமவர் இவர். அனுமனை
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்றாராக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்குகண்டயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்
பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவின் திருக்குமாரன் சுந்தரன் அனுமன், பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாய மார்க்கத்தில், பஞ்ச பூதங்களில் ஒன்றான கடலைக் கடந்து, பஞ்ச பூதங்களில் ஒன்றான பூமிப்பிராட்டியாரின் திருமகளான சீதாப்பிராட்டியை கண்டு, பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியை வைத்தான், அப்படிப்பட்ட பெருமையுடைய மாருதி நம்மை எல்லாம் காக்கட்டும். முக்கூர் சுவாமிகள் இவ்வாறு கூறுவார் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவின் புதல்வன் மாருதி, பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவை தன்க்கு அதிதேவதையாகக் கொண்ட சுவாதி நட்சத்திரத்தில் அவதாரம் செய்தவர் ஸ்ரீ நரசிம்மர், பஞ்ச பூதங்களில் ஒன்றான கடலைக் கடந்தவர் மாருதி, பஞ்ச பூதங்களில் ஒன்றான கடலைக் கடைந்து, அக்கடலை தனக்கு இருப்பிடமாக கொண்டவர் ஸ்ரீநரசிம்மர், பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாயத்தில் பறந்தவன் மாருதி, அவ்வாயுவுமானவர் ஸ்ரீநரசிம்மர், பஞ்ச பூதங்களில் ஒன்றான மண்ணில் தோன்றிய சீதையைக் கண்டவன் சுந்தரன், அம்மண் மடந்தை மணாளன் ஸ்ரீ நரஹரி, பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியை இலங்கையில் வைத்தவன் மாருதி அந்த அக்னியையே தனது நெற்றியில் கண்ணாகக் கொண்டவர் ஸ்ரீந்ருகேஸரி என்று முக்கூரர் அருமையாக கூறுவார் இங்கு காரஞ்ச நரசிம்மர் ஆலயத்தில் இருவரையும் ஒன்று சேர தரிசித்த போது இது மனதில் தோன்றியது.
மாருதியை வணங்கிக் கொண்டிருக்கும் போதே இந்த முதல் நாள் எங்களை தொடர்ந்து கொண்டிருந்த மழை மீண்டும் பெய்ய ஆரம்பித்து விட்டது. அனைவரும் வேகமாக ஒடி வேனில் ஏறி கொண்டு அந்த கொட்டும் மழையில் மேல் அஹோபிலம் சென்று சேர்ந்தோம். செல்லும் வழியில் நல்ல மலையே ஹிரண்யன் கோட்டை போல காட்சியளிப்பதைக்கண்டோம். இம்மலையில் ஏறிச்சென்றுதான் மற்ற நரசிம்மர்களை தரிசிக்க வேண்டும் என்று சுவாமிகள் கூறினார். இது வரை கீழ் அஹோபிலத்தில் உறையும் நரசிம்மர்களின் தரிசனம் கண்டோம் இனி மேல் அஹோபில வைபவம் தொடரும்.
கீழ் அஹோபில எம்பெருமான்களை தரிசித்த மகிழ்ச்சியில் மங்கை வேந்தனின் ஐந்தாவது சிங்கவேள் குன்ற பாசுரம் சேவிப்போமா?
மென்றபேழ்வாய் வாலேயிற்றோர் கோளரியாய் அவுணன்
பொன்ற ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்
நின்ற செந்தீ மொண்டு சூறை நீள்விசும்பூதிரியச்
சென்று காண்டற்கரிய கோயில் சிங்கவேள் குன்றமே. (5)
மெல்லா நின்றுள்ள பெரிய வாயையும் வாள் போன்ற பற்களையும் மிடுக்கையும் உடைய அற்புத நரஸிம்ஹமாய் அவ்வடிவைக் கண்டு போதே நடுங்கிய அசுரனான ஹிரண்யனுடைய சரீரத்தை கூரிய வஜ்ர நகங்களாலே இருபிளாவாகும்படி பண்ணிய சர்வேஸ்வரன் எழுந்தருளியிருக்கின்ற இடமானது, குறைவற்றுக்கிடக்கின்ற சிவந்த தீயை சுழல் காற்றானது முகந்து கொண்டு பரந்த ஆகாயத்தில் கொண்டு சென்று சிதற அடிக்கையில், அருகே சென்று காண இயலாத சிங்கவேள் குன்றமாகும்.
Labels: அனுமன் தவம், காரஞ்ச நரசிம்மர், கீழ் அஹோபிலம்
5 Comments:
சர்வேஸ்வரன் எழுந்தருளியிருக்கின்ற இடமானது, குறைவற்றுக்கிடக்கின்ற சிவந்த தீயை சுழல் காற்றானது முகந்து கொண்டு பரந்த ஆகாயத்தில் கொண்டு சென்று சிதற அடிக்கையில், அருகே சென்று காண இயலாத சிங்கவேள் குன்றமாகும்.:)))
ஆழ்வார் ஏக்கமுடன் பாடுகிறார்!
இன்று நாம் போகும் போதே கல்லும் மேடும் என்று நடைபாதையில்
இருப்பதால் தவிக்குறோம்.
1000 வருடங்களுக்கு முன்பு எப்படித்தான் இத்தனை கோவில்களை கண்டு
பிடித்து .....
அதுவும் அஹோபிலம் அன்று எப்படி இருக்கும் . அடர்ந்த காடு .
ஆழ்வார்களின் பெருமாள் கோவில்களை தேடி அலைந்து தரிசித்தது... இதெல்லாம் புரியாத புதிராகவே உள்ளது.
இங்கு பவநாசினி ஆற்றில் குளிப்பவர்கள் அல்லது குளிக்க நினைப்பவர்கள் விரும்பிய பலனைப்பெறுவர்.::))
குளிக்க நினைப்பவர்களும் விரும்பிய பலனை பெறுவார்கள் என்பது
ஆச்சர்யம் தான்.
//அதுவும் அஹோபிலம் அன்று எப்படி இருக்கும் . அடர்ந்த காடு . //
அத்தனையும் உண்மை எந்த வண்டி வாகன வசதியும், சாலை வசதிகளும் இல்லாத காலத்தில் இறைபக்தி ஒன்றை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு எவ்வளவு திருக்கோவில்களை சேவித்து நாம் எல்லோரும் உய்ய பாசுரங்கள் பாடிச்சென்ற கருணையை என்னவென்று சொல்ல.
காரஞ்ச நரசிம்மரை உங்கள் பதிவில் தரிசிக்கும் வாய்ப்பு இன்றே கிடைத்தது.
நன்றி குமரன் ஐயா.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home